பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Friday, December 14, 2012

புறநானூற்றில் நீர்நிலைச் சிறப்புகள்


புறநானூற்றில் நீர்நிலைச் சிறப்புகள்


முன்னுரை

          புறம் என்ற சொல்லாட்சிக்குத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புப் பொருளுண்டு. புறம் இடம், ஏழாம் வேற்றுமை உருபு, சுற்று, பக்கம், பின்புறம், மதில், முதுகு, வீரம் வெளிவளம் எனுமாறு பொருள் விளக்கங்களைத் தமிழ் மொழி அகராதி கூறுகின்றது. குறிப்பாக வீரம் என்ற பொருளிள் சங்கப் பாடல்களில் நானூறு பாடல்கள் புறநானூறு என அடையாளமிட்டு வழங்கப்படுகின்றன. 1894 இல் உ.வே.சா முயற்சியால் வெளிக்கொணரப்பட்ட தமிழர் வாழ்வியல் விளக்கம் புறநானூறு ஆகும். போருக்கு நிகராக வள்ளண்மை, நட்பு, தமிழர் தம் உயரிய கொள்ளை எனப் பலவும் சிறப்பாகப் பதியன் பெற்றுள்ளன. அவ்வகையில் புறநானூற்றில் காணலாகும் நீர் நிலைகள் குறித்த சிறப்புச் செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
வாழ்வியலில் நீர் நிலைகள்

          பொதுவாக, உயிரிகளின் உணவுத் தேவைக்கும் உடல் பராமரிப்பிற்கும் அடிப்படையாக நீர் நிலைகள் அமைகின்றன. அகப்பாடல்களில் களவுப் புணர்ச்சி நிகழ்தலுக்குரிய களமாகவும் இன்புறுவதற்குரிய நிலையங்களாகவும் நீர் நிலைகள் இலக்கியங்களில் காட்டப்படுகின்றன. வளமை உணர்த்தும் வாக்கிலும் அவைகள் சுட்டப்படுகின்றன. புற உலகம் அரசியல் உந்துதல்களால் இயக்கமாகும் தம்மையுடையதாகும். எனவே, புற உலகில் நீர் நிலைகளுக்கான அடையாளம் வேறு வடிவினத்ததாய் கையாளப்பட்டு உள்ளது.

புறநானூற்றில் நீர்  நிலைகள்

          புறத்தில் நீர் நிலைகளின் இன்றியமையாமை, போர்க்காலங்களில் நீர் நிலைகட்க உண்டாகும் நிலைகள், நீரக மேலாண்மை, நீர்நிலைப் பாதுகாப்பு, நீரின் ஆற்றல் எனப் பல்வேறு கோணங்களில் நீர் நிலைகள் ஆராய்ந்து அணுகப்பெற்றுள்ளது.

நீர்நிலைகளின் இன்றியமையாமை

          ஒரு பொருள் குறித்த மீஎண்ணங்கள் அப்பொருள் இல்லாதபோதே இருக்கும். இவ்வகையிலே, வறட்சியான இடம் குறித்த கருத்துக்கள் வருமாறெல்லாம் நீரின் இன்றியமையாமை அழுத்தமுறப் புறநானூற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அதனை,

       ‘‘ஊரி இல்ல, உயவு அரிய
       நீர் இல்ல, நீள் இடைய’’
                                                 -        புறம்., 3, 17 – 18

எனும் வரிகளால் அறியலாம். பாலைநில வழியானது எவ்வித ஊர்களும் இடையில் இல்லாது வழியில் தாகம் தீர்க்க நீர்நிலைகளும் அற்ற தன்மையில் இருக்கும் என இப்பாடல் குறிப்பிடுகின்றது. குடியிருப்புகள் அவ்வழியில் இல்லாமைக்கு நீரின்மை இன்றியமையாமைக் காரணமாகக் கருதவும் இடமுண்டு. உயிர் வாழ அடிப்படையான நீர் இல்லாத இடத்தில் வாழ்வவு நடைபெற வாய்ப்பு இராது. நீர் வாழிடக் காரணியாகப் புலவர்கள் உணர்ந்ததால் இவ்வாறான வறண்ட நிலம் பற்றிய கூற்று நீர் நிலைகள் குறித்த புலப்பாடுகள் மேலோங்குகின்றன.

நீர்நிலை - எல்லைகள்

          ஆட்சிப்பரப்பில் நில எல்லை, நீர் எல்லை என இருவேறு எல்லைகள் இருந்தன. பரந்துபட்ட நீர் எல்லைகள் மிக அதிகமான அளவில் பராமரிப்பிற்குரியவைகளாகச் சங்க காலத்தில் திகழ்ந்துள்ளன. கடற்போர், கடம்பர்கள் எனும் இனத்தவர் கடல் கொள்ளையில் ஈடுபட்டமை குறித்த பல்வேறு செய்திகளை நம் இலக்கியங்களில் இருந்து அறியலாம். கடல்போர்ச் சிறப்பினால் ‘கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என வேந்தன் ஒருவன் புகழப்பட்டதன் அடிப்படையிலும் கடல் எல்லைகளின் முக்கியத்துவத்திலும் அறியலாம். இதனைப் புறநானூற்றின்,

          ‘‘ஒவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
           நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற’’
                                                                           -        புறம்., 3,  1 – 2

எனும் வரிகளால் அறியலாம். ‘நிலவுக்கடல் என்னும் சொல் நிலைத்த கடல் பரப்பை குறிக்கிறது. நில எல்லைகளைப் பாழ்படுத்தலாம். கடல், கடல் எல்லை என்பன வலியவைகள் ஆகும். எனவே, இவ்விடத்தில் ‘நிலவூக்கடல் என்ற சொல்லாட்சி கடலின் சிறப்புத் தன்மையோடு குறிப்பிடப்படுகின்றது. பண்டைத் தமிழகமும் ‘வடவேங்கம் தென்குமரி ஆயிடைநல் தமிழ்கூறு நல்லுலகத்து எனுமாறு தொல்காப்பியத்தில் கடல் எல்லையால் சுட்டப்பெற்றிருக்கும்.

          இவ்வுலகமே கடலினை எல்லைப்பரப்பாகக் கொண்டது என்று புறநானூறு சுட்டுகின்றது. அதனை, 

         ‘‘………………… இமிழ்திரைப்
          பௌவம் உடுத்த இப்பயம்கெழு மாநிலம்’’
                                                                                    -        புறம்.,58, 20 – 21

எனும் அடிகளில் வழித் தெளிய உணரலாம். புறநானூற்றின் பல இடங்களில் இக்கருத்தினை ஒத்த பாடல் அடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தமை குறித்து (புறம் - 9) பேசுகின்றது.

நீரின் ஆற்றல்
         
          பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கூறப்படும் நீரானது நிலம் என்னும் கூறுடன் இணைவுற்ற தன்மையில் உள்ளது. நீரின் தன்மை தண்மை ஆகும். எனினும் அதன் வலிமை மிகவும் பெரிய ஒன்றாகும். வெள்ளப்பெருக்குக் காலங்களில் அதன் வலிமையைக் கண்கூடாகப் பார்த்திருப்போம். அவ்வடிப்படையில், நீர்ப்பெருக்கு மிகுமானால் அதனை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது என்பதை,

         ‘‘நீரிமிகின் சிறையும் இல்லை………..’’
                                                                       -        புறம்.,51, 1

என்ற ஐயூர் முடவனாரின் அடியின் வழி உணரலாம். 

          நீர் நிலைகள் பழக்கமில்லாதவர்க்கு ஆபத்து நிறைந்ததாகும். அவற்றைக் கடப்பதற்குத் திறனும் துணிவும் இன்றியமையாமை ஆகும். அத்தகு ஆபத்துத் தன்மையுடைய நீர்த்துறை, வேந்தனது வீரத்திற்கு இணையாக நக்கண்ணையாரால் பேசப்பட்டதை,

         ‘‘ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
          உமணர் வெரூஉம் துறையன்னன்னே’’
                                                                                   -        புறம்.,84, 4 – 5 

என்ற அடிகளால் அறியலாம். உப்பு வாணிகம் செய்யும் உமணர்க்கு அச்சம் தரும் நீர்த்துறையானது இவ்விடத்தில் தலைவனுக்கு உவமையாக வந்துள்ளது.

நீர் - மருந்து

          பசியினைப் பிணி என்று மணிமேகலை பகரும். அப்பிணி தீர்க்கும் அரு மருந்தாக நீர் அமைகின்றது. நீரினையும் உணவினையும் ‘இரு மருந்து என்று சங்க காலத்திலிருந்து குறிப்பிட்டுள்ளமையை இக்கருத்தோடு பொருத்திப்பார்க்கலாம். தற்போது உடல் பிணி போக்கும் மருந்திற்கு நிகரான தன்மை உண்டு என மேலை நாட்டு மருத்துவமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், சர்.சி.வி.இராமன், ~~Water is the elixir of life||  என்ற கட்டுரையில் நீரின் தன்மைகளைக் கூறி வியப்பார்.  பழங்காலத்தில் இருந்தே நீரானது மருந்தாக மதிக்கப்பெற்றதை,

         ‘‘அடுதீ அல்லது சுடுதீ அறியாது
          இருமருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்’’
                                                                       -        புறம்., 70, 8 – 9

என்ற அடிகளால் அறியலாம். சோழன் கிள்ளி வளவனது நாடானது உணவிற்காக ஏற்படுத்தப்படும் நெருப்பினைத் தவிர வேறு நெருப்பினை அறியாதது, தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்துகளைப் பசிப்பிணிக்குத் தரும் தலைவன் என்று நீர்க்கொடையால் சோழன் புகழப்படுவதும் இங்கு சிறப்புடையதாகும்.

போர்க்காலத்தில் நீர்நிலை

          நீர்நிலைகள் நாட்டின் வளத்தினை முடிவு செய்யும் காரணியாக இருப்பதால் போர்க்காலங்களில் மிகுதியான ஆபத்துக்களைச் சந்தித்தன.
                   புறப்பொருள்வெண்பாமாலையில், ‘மழபுலவஞ்சி எனும் துறையில் எதிரி நாட்டை அழிக்கும் பொருட்டு  நீர் நிலைகளை அழிப்பது குறிப்பாகக் காட்டப்படும்.

          போர்க்காலத்தில் நீர்நிலைகள் யானைகளால் அழிக்கப்பட்டமை குறித்து,

          ‘‘ஒளிறு மருப்பின் களிறு அவர
          காப்பு உடைய கயம் படியினை’’
                                                                     -        புறம்., 15, 9 – 10 

என்ற அடிகளால் அறியலாம். இப்போர்க்கால நிகழ்வே ‘மழபுல வஞ்சி என்ற துறையினுள் பிற்காலத்தில் இடம்பெற்றமையை அறியலாம்.

நீர்நிலைப் பாதுகாப்பு

          புற அரசியலில் எல்லைகளாகக் கருதப்பட்ட நீர்நிலைகளைப் பராமரிக்கக் காவலர்கள் பணியமார்த்தப்பட்டிருந்தனர். அகநானூற்றில், ஓரிடத்தில் இரவுக்குறிக்குத் தடையாகத் துயிலாது இருக்கும் அன்னையைத் தலைவி, ‘குளக் காவலன் போன்று உறங்காதிருக்கிறாள் என்று கூறுவாள்.

          குளங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் கரை உடைப்பு போன்றவற்றைச் சரிசெய்ய  காவலர்கள் நியமிக்கப்பெற்று நீல்நிலைகள் பராமாpக்கப்பட்டதை,

         ‘‘எண்நாள் திங்கள் அனையக் கொடுங்கரைத்
          தெளிநீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ’’
                                                                              -        புறம்., 118, 2 – 3

என்ற அடிகளால் அறியலாம். ஊர்களில் நீர்த்தேவைக்காகக் கிணறுகள் வெட்டப்பட்டமையை (புறம் - 132) பாடலின் வழி அறியலாம்.

முடிவுரை

          நீர்நிலைகளானது மனிதனின் அகம், புறம் என்ற இருவேறுபட்ட வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகித்தமை, அவற்றைப் பராமரித்தமை, புலவர்கள் தம் கூர்த்த சிந்தை மற்றும் வெளிப்பாட்டினால் அவற்றை நுட்பமாகக் குறிப்பிட்டமை குறித்து இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.


நன்றி.

ம.பிரசன்னா.

Sunday, November 25, 2012

ஆசிவக மதமும் அறிவியல் கருத்தும்


ஆசிவக மதமும் அறிவியல் கருத்தும்

மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள் மதங்கள் ஆகும். இந்த மதங்கள் அனைத்தும் மனிதன் வாழ்வில் உய்வதற்காகவும் உயர்வதற்காகவும் பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கூறிச்சென்றுள்ளன. இவ்வாறு தோன்றிய மதங்கள் பல அழிந்துவிட்டன. பல அழியும் தன்மையில் இருக்கின்றன. அவற்றுள் சில மதங்கள் மட்டும் வேரூன்றிச் செழித்து வளர்ந்து வருகின்றன. அவ்வாறு அழிந்த மதங்களுள் ஒன்று தான் ஆசிவக மதம் ஆகும். இம்மதம் வட இந்தியாவில் தோன்றி தென்னிந்தியாவில் பரவி இருந்தது. பின்னர் வேறு சமயங்களின் எழுச்சியாலும் அரசியல் காரணங்களாலும் அழிந்துவிட்டது. மனிதனின் உயர்வதற்காக இம்மதம் பரப்பிய கொள்கையில் விளங்கும் அறிவியல் கருத்துக்களைச் சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆசிவக மதம்

            வட இந்தியாவில் மகத நாட்டில் தோன்றிய இம்மதத்தைத் தோற்றுவித்தவர் ‘‘மற்கலி புத்திரர்’’ என்பவர் ஆவார். இவரைத் தமிழ் இலக்கிய உலகு ‘மற்கலி‘, ‘மக்கலி’ என்று அழைக்கின்றது. மகாவீரரும் புத்தரும் இவரது காலத்தவராகக் கருதப்படுகின்றனர். மகாவீரருடன் சிறிது காலம் இருந்த இவர் பின்பு தனியே பிரிந்து சென்று அவருடைய கருத்துக்கள் சிலவற்றையும் தான் கண்ட மெய்மைகள் சிலவற்றையும் சேர்த்து ஆசிவக மதத்தைத் தோற்றுவித்தார். ஆசிவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவகதிர்’ என்று பெயர். ‘ஆத்தியம்’ என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தக்கயாகப் பரணியின் உரைப்பகுதி விளக்குகின்றது. இம்மதம் அழிந்து விட்டாலும் இம்மத நூல்கள் கிடைக்காவிட்டாலும் நீலகேசி, மணிமேகலை, தக்கயாகப் பரணி, சிவஞான சித்தியார் போன்ற இலக்கியங்களின் வழி இதன் கொள்கைகள் நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், அந்நூல்கள் அனைத்தும் இம்மதத்திற்கு எதிராக எழுந்துள்ளதால் இதில் குறிப்பிடுவது ஒருதலைப்பட்சமாகவே இருக்கின்றன. இருப்பினும், இம்மதக் கொள்கைகளை இதன் வழி ஓரளவு உய்த்துணரமுடிகின்றது.

அணுக்கொள்கை

பஞ்ச பூதங்களாக ஏற்றுக்கொண்டவைகள் ஐந்தும் இம்மதத்தால் அணுக்களாகக் கருதப்பட்டன. மேலும், இன்பம், துன்பம், உயிர் என்பவையும் அணுவாகக் கொள்ளப்பெற்றது. ஆகாயத்திற்கு ஆசிவக மதத்தில் இடம் இல்லை. இதற்குப் பதிலாக உயிர் என்பதைக் கொண்டனர்.

       ‘‘மன்பெறு நுண்பொருளைந்தியல் பாயவை’’
                                                          - நீலகேசி 671

என்ற நீலகேசியின் அடியும்

      ‘‘துரந்தரும் உயிரொடு ஒரு நாள்வகை அணு’’
                                 - மணிமேகலை, சமயக்கணக்கர்தம் திறம் 
                                               கேட்டகாதை. 113

       ‘‘இன்பமும் துன்பமும் இவையூம் அணுவெனத்தகும்’’
                                                                 -           மேலது, 163

என்ற மணிமேகலை அடிகளும் உணர்த்துகின்றன. மேலும், நீர், நிலம், காற்று, தீ ஆகியன அனைத்தும் அணுக்கலாள் ஆனது என்றும், அணுக்களின் சேர்க்கை வடிவே இவை என்றும் பகர்கின்றன. இது உலகின் அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனது என்ற தற்கால அணுக்கொள்கையினைப் பிரதிபலித்து நிற்கின்றது. மேலும், இவ்வணுக்கள் அனைத்தும் உருவப்பொருள் கொண்டது என்பதை நீலகேசி,

         ‘‘உடங்கே யணுவைந் துருவா யூளவே’’
                                                                  -           நீலகேசி, 674

என்ற அடி சுட்டி நிற்கின்றது. மேலும், அணுவின் இயல்புகளை,

          ‘‘ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
          தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
          புதிதாய்ப் பிறந்தென் றொன்றிற் …….
                       ……………………………
                        ………………………. முறைக்கும்’’
                                   - மணிமேகலை, சமயக்கணக்கர்தம் திறம் 
                                           கேட்டகாதை. 126–136

என்ற அடிகள் உணா;த்துகின்றன. இதில், ஓர் அணுவில் ஓர் அணு புகாவிடினும் அணுத்திரளைகளாய் இணைதல் உண்டு என்பதும். இதன் அணுக்கொள்கையாக அமைந்திருப்பதை மணிமேகலை விளக்குகின்றது.

பொருளின் தன்மை

            ஒவ்வொரு பொருக்கும் ஒரு தன்மை உள்ளது. அதுவே அதனைக் குறித்த புரிதலை நமக்குத் தொpவிக்கின்றது. அவ்வாறு நிலம், நீர், காற்று, தீ ஆகியவற்றின் தன்மையினையும் ஆசிவக மதம் தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. இதனை,

         ‘‘சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
          இழினென் நிலம் சேர்ந்து ஆழ்வது நீர்தீத்
          தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
          காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
          வேற்று இயல்பு எய்தும் விபரிதத்தால்’’
                                          - மணிமேகலை, சமயக்கணக்கர்தம் திறம் 
                                           கேட்டகாதை, 121–125

எனவரும் அடிகள் விளக்குகின்றன. இதன்வழி நில அணுக்கள் வலிமையும், நீரணுக்கள்  தாழ்வான பகுதி நோக்கிப் பாயும் தன்மையுடனும் குளிர்ச்சியுடன் சுவையும் கொண்டனவாக உள்ளன. மேலும், தீயணுக்கள் எரிக்கும் இயல்புடையதாகி மேல் நோக்கி எழும் தன்மையும் பெற்றிருக்கின்றன. காற்றுக் குறுக்கிட்டு அசையும் இயல்பு கொண்டது என இம்மதக் கொள்ளை வலியுறுத்தும் அறிவியல் செய்தி புலப்படுகின்றது.

ஒளிச்சிதறல்

            வெள்ளை ஒளி ஓர் ஊடகத்தின் வழியாகச் செல்லும் போது அது ஏழு வண்ண நிறக் கதிர்களாகப் பிரியும் என்பதே ஒளிச்சிதறல் விதியாகும். இதன் அடிப்படையில் தான் வானவில் தோன்றுகின்றது. இக்கருத்து 19 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பெற்ற உண்மையாகும்.  நீலகேசியில் ஆசிவக மதத்தின் கொள்கையினை எதிர்த்து வாதம் செய்யும் காப்பியத் தலைவியான நீலகேசி,

         ‘‘வானிடு வில்லின் வரவறியாத வகையனென்பாய்
         தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
         மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
         றானடைந் தாற்றணு வாமிது வாமதன் றத்துவமே’’
                                                                               -           நீலகேசி, 684

என்ற பாடல் வழி வலியுறுத்துகின்றாள். இதன்வழி சூரிய ஒளி மேகத்தில் பட்டதால் வானவில் தோன்றுகின்றது என்ற ஒளிச்சிதறல் விதியினை விதைத்துவிட்டார் என்ற கருத்துப்பெறப்பெறுகின்றது.

            இவ்வாறாக மனிதனின் மனத்தில் பயத்தினை ஏற்படுத்தி அதன் வழி அவனை நெறிப்படுத்துவதற்கு மதங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய ஆசிவக மதம் மனித இனத்தின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தேவையான பல்வேறு கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டிலங்கியது. அக்கருத்துக்கள் அறிவியல் மற்றும் நாகரிகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது என்பது ஈண்டு புலனாகின்றது. 
 Tuesday, September 11, 2012

நாட்டுப்புற விளையாட்டுக்கள்


தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1.
அச்சுப்பூட்டு
2.
கிட்டிப்புள்
3.
கோலி
4.
குச்சி விளையாட்டு

(
எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5.
குதிரைக் கல்லு
6.
குதிரைச் சில்லி
7.
சச்சைக்காய் சில்லி
8.
சீச்சாங்கல்
9.
தெல்லு (தெல்லுருட்டான்)
10.
தெல்லு (தெல்லு எறிதல்)
11.
பட்டம்
12.
பந்து, பேய்ப்பந்து
13.
பம்பரம்
14.
மல்லு
15.
வில்லுக்குச்சி

கால் திறன்
1.
ஆனமானத் திரி
2.
கரணப்பந்து
3.
குதிரைக்குக் காணம் காட்டல்
4.
கொக்கு விளையாட்டு
5.
கோழிக்கால்
6.
தை தக்கா தை
7.
நடைவண்டி ஓட்டம்
8.
நொண்டி
9.
பச்சைக் குதிரை
10.
பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11.
மந்தி ஓட்டம்
12.
மாட்டுக்கால் தாண்டல்
13.
மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1.
ஓடுசிக்கு
2.
சூ விளையாட்டு
3.
நாடு பிரித்து
4.
பந்து, பிள்ளையார் பந்து
5.
பூச்சொல்லி
6.
மதிலொட்டி
7.
மந்திக் குஞ்சு
8.
வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1.
அணில் பிள்ளை
2.
ஆடும் ஓநாயும்
3.
உயிர் கொடுத்து
4.
கல்லுக்குச்சி
5.
காக்கா கம்பு
6.
காக்கா குஞ்சு
7.
குச்சிக்கல்
8.
குரங்கு விளையாட்டு
9.
கோட்டான் கோட்டான்
10.
கோழிக்குஞ்சு
11.
தவளை விளையாட்டு
12.
நாலுமூலைக் கல்
13.
மரக்குரங்கு
14.
வண்ணான் தாழி
15.
வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1.
காயா பழமா
2.
நீரில் தொடல்
3.
நீரில் விழுதல்

கண்டுபிடி
1.
உருண்டை திரண்டை
2.
சீப்பு விற்கிறது

உல்லாசம்
1.
ஊதல்
2.
கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3.
சீத்தடி குஞ்சு
4.
தோட்டம் (விளையாட்டு)
5.
பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1.
சில்லு (சில்லி)

கைத்திறன்
1.
கல் பிடித்தல்
2.
சுண்டு முத்து
3.
தட்டாங்கல்

உல்லாசம்
1.
இதென்ன மூட்டை
2.
கிளி செத்துப்போச்சு
3.
ஊதாமணி
4.
என் உலக்கை குத்து குத்து
5.
ஒருபத்தி இருபத்தி
6.
ஒளிதல்
7.
குச்சு குச்சு ரங்கம்மா
8.
குறிஞ்சி வஞ்சி
9.
கொடுக்கு
10.
சிறுவீடு விளையாட்டு
11.
சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12.
ராட்டு பூட்டு
13.
தவிட்டுக் குஞ்சு
14.
பிஸ்ஸாலே பற
15.
பூசனிக்காய் விளையாட்டு
16.
பூப்பறி விளையாட்டு
17.
பூப்பறிக்க வருகிறோம்
18.
பூப்பூ புளியம்பூ
19.
மச்சிலே யாரு
20.
மத்தாடு
21.
மோரு விளையாட்டு
22.
வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1.
கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1.
ஊதுமுத்து
2.
உயிர் எழுப்பு
3.
ஐந்து பந்து
4.
எலியும் பூனையும்
5.
கல் எடுத்தல்
6.
கல்லா மண்ணா
7.
கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8.
குஞ்சு விளையாட்டு
9.
குத்து விளையாட்டு
10.
துரத்திப் பிடி
11.
தூண் விளையாட்டு
12.
தொடு விளையாட்டு
13.
நாலு மூலை விளையாட்டு
14.
நிலாப்பூச்சி
15.
நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16.
பாரிக்கோடு
17.
புலியும் ஆடும்
18.
மரங்கொத்தி
19.
மல்லர் கம்பம்
20.
மலையிலே தீப்பிடிக்குது
21.
மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1.
ஊஞ்சல்
2.
ஈசல் பிடித்தல்
3.
உப்பு விற்றல்
4.
ஒருகுடம் தண்ணி ஊத்தி விளையாட்டு
5.
கரகர வண்டி
6.
கள்ளன் போலீஸ்
7.
காற்றாடி
8.
கிய்யா கிய்யா குருவி
9.
கிழவி விளையாட்டு
10.
கிறுகிறு மாம்பழம்
11.
குலையா குலையா முந்திரிக்காய்
12.
சங்கிலி விளையாட்டு
13.
தட்டான் பிடித்தல்
14.
தட்டை
15.
நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16.
பந்து, எறிபந்து
17.
பந்து, பிடிபந்து
18.
பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19.
பூக்குதிரை
20.
வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1.
உப்பு வைத்தல்
2.
எண் விளையாட்டு
3.
ஓடுகுஞ்சு
4.
கண்ணாம்மூச்சி
5.
கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6.
கொப்பரை கொப்பரை
7.
தந்தி போவுது தபால் போவுது
8.
நிலாக் குப்பல்
9.
பாக்குவெட்டியைக் காணோமே
10.
மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1.
ஒற்றையா இரட்டையா
2.
கண்கட்டி விளையாட்டு
3.
மோதிரம் வைத்தல்
4.
ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1.
சிய்யான்
2.
பருப்பு சட்டி (விளையாட்டு)
3.
புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1.
அடிமுறை
2.
இளவட்டக்கல்
3.
கிளித்தட்டு
4.
சடுகுடு (கபடி)
5.
சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6.
சிலம்பம்

கன்னியர்
1.
அம்மானை
(
ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1.
ஆடுபுலி
2.
ஓட்டம்
3.
கட்ட விளையாட்டு
4.
கைச்சில்லி
5.
சூது தாயம்
6.
தாயம்
7.
திரிகுத்து
8.
துரும்பு
9.
நட்சத்திர விளையாட்டு
10.
பரமபதம் (விளையாட்டு)
11.
பல்லாங்குழி
12.
முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1.
அந்தக் கழுதை இந்தக் கழுதை
2.
அய்யன் கொம்பு
3.
அட்டலங்காய் புட்டலங்காய்
4.
அத்தளி புத்தளி
5.
உப்பு மூட்டை
6.
கிள்ளாப் பறண்டடி
7.
தட்டலங்காய் புட்டலங்காய்
8.
தென்னைமரம் விளையாட்டு
(
ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9.
நடைவண்டி
10.
நான் வளர்த்த நாய்க்குட்டி
11.
பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1.
கரகம்
2.
கழியல்
3.
கழைக்கூத்து
4.
காவடி
5.
கோக்கழிக் கட்டை
6.
வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1.
உரிமரம்
2.
உரியடி
3.
கார்த்திகை விளக்கு
4.
கார்த்திகைச் சுளுந்து
5.
தைப்பாவை
6.
பரணி பரணி
7.
பாரி வேட்டை
8.
பானை உடைத்தல்
9.
புலியாட்டம்
10.
பொம்மைச்சீட்டு
11.
மஞ்சள் நீர் விளையாட்டு
12.
மாட்டுப் பந்தயம்
13.
மூணுகட்டை
14.
மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1.
கேலி
2.
பூக்குதிரை
3.
பூச்சொல்லி
4.
மொழி விளையாட்டு
5.
ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race
விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?

அழுகை வருகிறது அன்பர்களே..!

Top of Form
Bottom of Form