பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Sunday, August 19, 2012

நற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார்


நற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார்

சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் - தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார். இவர் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான். தமிழ் நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். அன்பும், அடக்கமும், அமைதியும் அணிகலனாய்ப் பூண்ட இப்பெருமகனே பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.


இளமையும் கல்வியும்:-

                
வேங்கடசாமிக்கு முதலில் இட்ட பெயர் சிவப்பிரகாசம். தொண்டையில் கட்டி ஏற்பட்டு திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பின் குணமானதால் வேங்கடசாமி என்று பெயர் மாற்றம் பெற்றார். வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார், தமிழ் இலக்கியப் பயிற்சி உடையவர்.

   நைடதம், திருவிளையாடற் புராணம்,வெங்கைக்கோவை, திருப்புகலூர் அந்தாதி முதலிய நூல்களைக் கற்றவர். மேலும், இவர் கைவல்யம், ஞானவாசிட்டம், சாதகாலங்காரம் குமாரசுவாமியம், உள்ளமுடையான் முதலிய நூல்களைக் கற்ற வேதாந்தியாக விளங்கினார். வேங்கடசாமியின் பள்ளிப்படிப்பு 4ம் வகுப்புடன் நின்றது.  திருப்புகலூர் அந்தாதி
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி வெங்கைக்கோவை நைடதத்தின் முதல் பகுதி ஆகிய நூல்களைத் தம் தந்தையாரிடம் பாடம் கேட்டார். திருவிளையாடற் புராணம், வில்லிபாரதம், கம்பராமாயணம் முதலியவற்றைத் தாமே படித்து வந்தார். அப்போது அவருக்கு வயது 16. தம் குடும்ப முன்னேற்றம் கருதி, வேளாண்மையில் நேரிடையாக ஈடுபட்டார். ஒழிந்த நேரங்களில் தமிழ் நூல்களைத் தாமே படித்து வந்தார்.

     சூளாமணி நிகண்டு, அமரநிகண்டு ஆகியவற்றிலுள்ள பாடல்களை மனப்பாடம் செய்தார். நன்னூல் முழுவதையும் தாமாகவே கற்று மனனம் செய்தார். தஞ்சையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கக் கூட்டங்களுக்குத் தம் தந்தையாருடன் சென்று, கேள்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.

பண்டிதர் பட்டம்:-

அந்நாளில் அப்பகுதியில் தொடக்கப்பள்ளி மேற்பார்வையாளராக இருந்த ஐ.சாமிநாத முதலியார் நல்ல தமிழ்ப் பற்றாளர். "சாவித்ரி வெண்பா" எனும் நூலை இயற்றியவர். அவர் வேங்கடசாமியின் தமிழறிவை வியந்து, பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச் சங்கம் பற்றியும், அச்சங்கம் நடத்தி வரும்;

பிரவேசபண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம்
ஆகிய தமிழ்த் தேர்வுகள் பற்றியும் கூறி, அத்தேர்வுகளை எழுதுமாறு அவரைத் தூண்டினார். இளைஞர் வேங்கடசாமி, 1905ல் பிரவேசபண்டிதம்,
1906
ல் பாலபண்டிதம், 1907ல் பண்டிதம்
ஆகிய தேர்வுகளில் சிறப்பாகத் தேறி பல பரிசுகளைப் பெற்றார். பண்டிதம் தேர்வில் முதன்மையாகத் தேறியமைக்காக பாண்டித்துரைத் தேவர் தம் கையினாலேயே வேங்கடசாமிக்குத் தங்கத்தோடா (தங்கக்காப்பு) அணிவித்துப் பெருமைப்படுத்தினார். அனைவரும் அவரை "முத்தேர்வும் மூவாண்டில் முதன்மையினில் முற்றுவித்த பெருமான்" எனப் பாராட்டினர். 1908ல் காஞ்சி பரமாசாரியார் நடுக்காவேரி வந்திருந்தபோது, வேங்கடசாமியை நேரில் வரவழைத்து சிவப்புப் பட்டாடையைப் போர்த்திச் சிறப்பித்தார். நாட்டார் தாம் படிப்பதற்காகப் பயன்படுத்திய இல்லத்தின் மாடி அறை "தமிழவள் இருக்கை" என்ற பெயருடன் இன்றும் இலங்குகிறது.

கல்லூரி, பல்கலைக்கழகப் பணி:-

         ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி கல்லூரியில் 1908 -1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார். நாட்டார் திருச்சியில் இருந்தபோது, பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1933ல் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரி மூடப்பட்டது. அவ்வாண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு நாட்டாருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்து தமிழறிஞர் பலருடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி 1941ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின்னர் தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் மதிப்பியல் முதல்வர் பொறுப்பினை ஏற்றார். அவருக்கு 8.5.1944ல் மணிவிழாக் கொண்டாட ஏற்பாடாயிற்று. மணிவிழா நடைபெறுவதற்கு 40 நாட்கள் முன்னரே 28.3.1944ல் இறைவனடி சேர்ந்தார். அவரை அவரது சொந்த ஊரில் சமாதி வைத்து, அங்கு கோயில் எழுப்பினர். ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

நல்லாசிரியர்:-

          நாட்டார் வகுப்புகளில் பாடம் நடத்தும்போது அமைதி நிலவும். அவருக்கு எல்லாப் பாடங்களும் மனப்பாடம். அவலச்சுவை, பக்திச்சுவை நிறைந்த பாடல்களை இசையோடு படிக்கும்பொழுது அவர் விழிகளில் நீர் ததும்பும். பதம் பிரித்துப் படிக்கும்போதே பொருள் விளங்கும். ஒன்பான் சுவையும் தோன்றுமாறு கற்பிப்பது அவரின் தனிச்சிறப்பு. நாட்டாரது பெருந்தன்மை, பெரும்புலமை, வீண்பேச்சுப் பேசாமை, ஒழுக்கமுடைமை, தெய்வ பக்தி முதலியன மாணவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கின. செய்யுள்களை இசையோடு பாடிக்காட்டுவார். வெண்பாவை சங்கராபரணத்திலும்,
அகவலை தோடியிலும்,  துறையைப் பைரவியிலும்,
விருத்தப்பாக்களை காம்போதி, கல்யாணியிலும் பொருந்தப்பாடி மாணவர்களை மகிழ்விப்பார்.

நற்றமிழ் நாவலர்:-

நாட்டார் அழகு தமிழில் ஆற்றொழுக்காகப் பேசும் திறன் மிக்கவர். அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லும் இயல்புடையவர். அவர் மதுரைத் தமிழ்ச் சங்கம்,
திருச்சி சைவ சித்தாந்த சபை,
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம்,
திருநெல்வேலி தமிழ்ச் சங்கம்
போன்ற தமிழ் மற்றும் சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். திருச்சியில் 1923 - 25 ஆகிய மூன்றாண்டுகளில் தமிழ்ப் புலவர் மாநாட்டைக் கூட்டினார். 1939 மார்ச் திங்களில், கொழும்பு சென்று விவேகானந்தர் சங்கத்தில் "நால்வர்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். 1940ல் திருப்பதியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் திருச்சி, கருவூர் சேரர் தலைநகரமாகிய வஞ்சியன்று என வலியுறுத்தி மு.இராகவையங்கார், இரா.இராகவையங்கார் ஆகியோரின் கூற்றை மறுத்துரைத்தார்.

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940ல் நாட்டாருக்கு "நாவலர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

ஆராய்ச்சி நூல்கள்:-
"வேளிர் வரலாறு" என்ற நூலில் வேளிர் என்பார் வடநாட்டினின்று வந்தவரல்லர், அவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினர் என நிறுவியுள்ளார்.

1919
ல் எழுதப்பட்ட "நக்கீரர்" என்ற நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.
"
கபிலர்" என்ற நூலில், மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த திருவாதவூரே கபிலர் பிறந்த ஊர் என நிறுவியுள்ளார்.
1923
ல் எழுதப்பட்ட "கள்ளர் சரித்திரம்" என்ற நூல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு எனினும், பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கத்தக்க தகுதியை உடையது எனத் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாராட்டியுள்ளார். மேலும் "கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்', "சோழர் சரித்திரம்', "கட்டுரைத் திரட்டு' ஆகியவையும் இவர் எழுதிய நூல்கள்.

நாட்டார் தலைசிறந்த உரையாசிரியர்.

இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது,
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி,
நன்னெறி ஆகிய நூல்களுக்கு உரை வகுத்துள்ளார். 1931ல் "பெருஞ்சொல் விளக்கனார்" அ.மு.சரவண முதலியார் துணையுடன் திருவிளையாடற் புராண உரை வெளியிடப்பெற்றது. சிலப்பதிகார உரை, சிலப்பதிகாரம் முழுமைக்கும் அமைந்த உரையாகும்.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து நாட்டார் அகநானூற்றுக்கு உரை எழுதியுள்ளார். நாவலர் நாட்டார், திருச்சி, தஞ்சைப் பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டுமென 1925ல் கனவு கண்டார். அக்கனவு தற்போது நனவாகியுள்ளது. தற்போது தஞ்சை அருகிலுள்ள வெண்ணாற்றங்கரையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் தமிழ்க் கல்லூரி இயங்கி வருகிறது.

சான்றோரின் தூய எண்ணங்கள் செயல்வடிவம் பெறத்தக்கன என்பதற்கு இவற்றினும் வேறு சான்றும் வேண்டுமா?
 
நன்றி: தமிழ்மணி (தினமணி) மற்றும் திண்ணை
முனைவர் ப.சுப்பிரமணியன்

‘‘இராவ்சாகேப்" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி


இராவ்சாகேப்" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர்.
தமிழறிஞராக, இலக்கிய ஆசிரியராக, கவிஞராக விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.
 
மு.இராகவையங்கார் (1878 - 1960)

தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செய்திகளை வெளியிடுவதற்காகவும் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" எனும் திங்களிதழின் முதல் பதிப்பாசிரியராக இரா.இராகவையங்கார் 1902 முதல் 1906 வரை இருந்தார். இவருக்கு உறுதுணையாகத் துணைப் பதிப்பாசிரியராக அன்னாரின் மருமகனான மு.இராகவையங்கார் இருந்தார்.

"
தமிழ்க் கல்வியிலும், தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ்ப் பத்திரிகையேயாம். ஒவ்வொரு மாதத்துப் பத்திரிகையிலும் அதுவரை அறியாத அரிய விஷயங்கள் குறித்துச் சிறந்த கட்டுரைகள் பல வெளிவந்து கொண்டேயிருந்தன. பத்திராசிரியர் எழுதியனவெல்லாம் தமிழ்மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து விளங்கின; கற்பார்க்குப் பெருவிருந்தாயமைந்தன. ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெரும் பேராசிரியனாயமைந்து, தமிழ்மக்கள் வீடுதொறுஞ் சென்று, தமிழ்க்கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைகே உரியதாயிருந்தது. இப்பத்திரிகையின் உயிர் நிலையாயிருந்தவர் மு. இராகவையங்காரவர்களே. பலர் சிறந்த தமிழறிஞர்களாக விளங்குவதற்கும், அறிவுநலமிக்க பலர் தமிழாராய்ச்சியை மேற்கொள்ளுதற்கும் அவரே காரணமாயிருந்தார்," என்று ச.வையாபுரிப்பிள்ளை, "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அது இங்கு நினைவு கூரத்தக்கது.

"
செந்தமிழ்" இதழில் இவர் ஆசிரியராக இருந்த காலத்தில்  இலக்கியம், இலக்கணம், வரலாறு,
மூலபாடம் ஆகிய தலைப்புகளில் 53 கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இக் கட்டுரைகளில் சில பல்வேறு விவாதங்களுக்கு இடந்தந்தும், சில மறுப்பதற்கென்றும் எழுதப்பட்டன. மறுப்பதற்குத் தகுந்த காரணங்கள் பலவற்றைச் சான்றுகளுடன் மு.இராகவையங்கார் தம் கட்டுரைகளில் தருகிறார்.

சேர வேந்தர் தாயவழக்கு,
சேர நாட்டின் தலைநகரம் வஞ்சியா? கரூரா?
என்ற இவ்விரண்டும் பற்றி இவரும், நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் எழுதிய கட்டுரைகள் ஆராய்ச்சிக்கு இடந்தந்து நின்றன.

சில கட்டுரைகள் எழுத நேர்ந்தமைக்குரிய காரணங்களைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறும் பழக்கத்தை இவரிடம் காண முடிகிறது. பல கட்டுரைகளின் முன்னுரையில் அல்லது கட்டுரைத் தலைப்பில் இடுக்குறியிட்டு அதன் அடிக்குறிப்பில் அக்கட்டுரை எழுத நேர்ததற்கான காரணத்தைக் கூறுவதை மரபாகக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

"
செந்தமிழ்" இதழில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் இறைவன் திருவடி நீழலடைந்த பொழுது பாடிய 12 கவிதைகளும், சேதுபதியின் 34ஆவது வெள்ளணி நாள் விழாவையொட்டிப் பாடிய 5 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் பாடியதன் மூலம் ஒரு கவிஞராகவும் விளங்கியதைக் காண முடிகிறது.
மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ள நூல்களில் அருமையான சில நூல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளை "நூலாராய்ச்சி" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். "பூருரவா சரிதை" என்ற நூலைப் பற்றி சில குறிப்புகள் கூறிய ஐயங்கார், நூலாராய்ச்சியை எழுதும் முயற்சியைத் தொடராமல் விட்டுவிட்டார். இதற்குரிய காரணம் எதுவெனத் தெரியவில்லை.

"
செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக இருந்த காலத்தில் "பத்திராசிரியர் குறிப்புகள்" எனும் தலைப்பில், நூல் பதிப்பிக்கும்பொழுது நூலுக்கு முன் பகுதியிலும், சிலர் எழுதிய கட்டுரைகளில் ஐயங்கள் ஏதாவது எழுமாயின் அவற்றைக் குறிப்பிட்டுச் சில விளக்கங்களையும் எழுதியிருக்கிறார்.
"
புத்தகக் குறிப்புகள்" எனுந்தலைப்பில் அந்தக் காலத்தில் வெளிவந்த நூல்களைப் பற்றி "மதிப்புரை" எழுதியுள்ளார். நூலாசிரியரைப் பற்றியும், நூலைப் பற்றியும் பாராட்டிக் கூறுவதாகவே இம்மதிப்புரைகள் அமைந்துள்ளன. சில நூல்கள் அறிமுகம் மட்டும் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு 62 நூல்களைப் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் ஐயங்கார் எழுதியுள்ளார். ஒரு நூலைப் படித்து அதற்கு மதிப்புரை எவ்வாறு எழுத வேண்டும் என்ற நெறிமுறையை இவரெழுதிய மதிப்புரைகள் மூலம் அறிய முடிகிறது.

"
செந்தமிழ்" இதழின் ஆசிரியராக இருந்த காலத்தில் இவர் பதிப்பித்த நூல்கள், பாடல்கள் பலப்பல. சிலவற்றுக்கு "உரைக்குறிப்புகள்" எழுதியுள்ளார். சிலவற்றை மூலத்துடன் பதிப்பித்துள்ளார். எல்லா நூலுக்கும் எழுதிய "முன்னுரை"யில் தாம் அந்நூலைப் பதிப்பிக்க நேர்ந்த காரணத்தைக் கூறியுள்ளார்.

பெருந்தொகை (இரண்டு தொகுதிகள்),
நிகண்டகராதி,
திருக்குறள் பரிமேலழகர் உரை(கையடக்கப் பதிப்பு),
நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்)
போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
ஏடுகளில் எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் அமைவது உண்டு. உரையாசிரியர்கள் அவற்றுள் ஏற்புடையனவற்றைக் கொண்டு ஏலாதனவற்றை விலக்கி விடுவதுண்டு. அம்முறையில் ஐயங்கார் தாம் பதிப்பித்த நூல்களில் உள்ள பாடல்களில் காணப்படும் பாடவேறுபாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். சான்றுக்குப் பெரியாழ்வார் திருமொழி முதற்பத்தில் காணப்படும்,

"
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
 
கண்ணன் கேசவ நம்பி பிறந்தினில்
 
எண்ணெய் சுண்ண மெதிரெ'திர் தூவிடக்
 
கண்ணன் முற்றங் கலந்தள றாயிற்றே." (1)

"
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
 
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்." (3)
என்ற பாசுரங்களில் "நம்பி பிறந்தினில்", "பிள்ளை பிறந்தினில்," என்று வழங்கப்படுகின்றன. "பிறந்தினில்" என்பதற்குப் - பிறந்தபோது, பிறந்தவளவில் எனவும், "பிறந்தவிதனில்" என்பதன் விகாரமாகவுமாம் எனவும் சிலர் பொருளுரைத்துள்ளனர். இதை,
"
நம்பி பிறந்தீனில்," "பிள்ளை பிறந்தீனில்,"

என்று பாடங்கொள்வதே பொருந்தும். கண்ணன் அவதரித்த சூதிகாகிருதம் என்பது இங்கே பொருளாம். பிறந்த ஈனில் - பிறந்தீனில்; பிறந்தகம் என்பது போல, ஈன்இல் - பிரசவ வீடு, பிறந்த பிள்ளையைக் காணப்புகுவதற்கும், புக்குப் போதுதற்கும் "பிரசவவீடு" என்ற பொருளே மிகவும் ஏற்புடையதாகும். இப்பொருளில், குறுந்தொகை,  பதினொராந்திருமுறை,
திருக்கோவையார் முதலான நூல்களில் வழங்கப்படும் மேற்கோள்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

மு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் "செந்தமிழ்" இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் இவருக்கென்று ஓரிடம் இருப்பது வெள்ளிடைமலை. இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு இவர் ஆய்வுப் போக்கு, நெறிமுறைகள் பெரிதும் உறுதுணை புரியும்.


நன்றி: தமிழ்மணி (தினமணி)
ம.சா.அறிவுடைநம்பி 

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்


பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்

            "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
 
     செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.

          "
சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.
அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார். 

        
சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901
ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.

        
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.
பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.

அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம். மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-

தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம். அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன். சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

      
உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.

மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

       "
தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

         
சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர். தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)
புலவர் முத்து வேங்கடேசன் 

Wednesday, August 1, 2012

முத்தமிழ் மன்ற துவக்க விழா


முத்தமிழ் மன்ற துவக்க விழா


                                                  விருந்தினருக்கு சிறப்புச் செய்தல்
                                         அறிமுக உரை
                                                தலைமை உரை
                                          வழக்கறிஞர் க.லட்சுமிநாராயணன் சிறப்புரை
சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறையின் முத்தமிழ் மன்ற துவக்க விழா 01.08.2012 அன்று கல்லூரி மேற்கு வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முத்தமிழ் மன்றம், சமூக நலப்பணிக் குழு மற்றும் கலை வளர்ச்சிக் மன்றம் ஆகியவற்றின் துவக்க விழா நிகழ்ந்தது. தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் தலைமையுரை ஆற்றினார். முனைவர் சு.நயினார் அறிமுகவுரை நிகழ்த்தினார். இவ்விழாவில் இராசபாளையம் வழக்கறிஞர் திரு.க.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது உலக முதல் மொழி நம் தமிழ் மொழி. அத்தகைய தொன்மையான மொழி பல்வேறு இலக்கிய வளங்களைக் கொண்டுள்ளது. இவ்விலக்கியங்கள் மக்களின் இயல்பான  எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன. இது நமது தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்று. இவ்விலக்கியங்கள் அனைத்தும் மேலை நாட்டு இலக்கியங்களை விட மிகவும் உயர்ந்ததாகவும் மானம் மற்றும்  வீரத்திற்குச் சான்றாகவும் உள்ளது. இத்தகைய தொன்மை மிக்கப் பழமை மிக்க மொழியின் பழைய வரலாறுகளைப் பேசிக்கொண்டு மட்டும் இருந்து விடாமல் அவற்றின் பெருமையினையும் தொன்மையினையும் காப்பாற்றும் பங்கு தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தான் உண்டு. எனவே, அதனை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். மேலும் தமிழர்களின் எண்ணங்கள் மிகவும் சிறப்பானது. எனவே ஒவ்வொருவரும் தங்களின் எண்ணங்களை இலக்கியமாக வடிக்க வேண்டும். அப்படி வார்த்தெடுக்கும் போது தன்னிலை தாளாமல் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நம்பிக்கை இருந்தாள் எதையும் சாதிக்கலாம். இதற்குச் சான்று மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மற்றும் மறைந்த நகைச்சுவை மாமேதை சார்லி சாப்ளின் என்று கூறி தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது உலக இலக்கியங்களைப் பற்றியும் சிறப்பான சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் து.வெள்ளைச்சாமி மற்றும் சமூக நலப்பணி குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சோ.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.