பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, January 3, 2013

படைப்போர் இலக்கியத்தில் பெண்


படைப்போர் இலக்கியத்தில் பெண்
         
          தமிழ்ச் சிற்றிலக்கிய உலகு மிகப்பெரும் பரப்பைக் கொண்டிலங்குகின்றது. இப்பரப்பைப் படைத்தவர்களில் பெரும்பாலானோர் பல காலகட்டங்களைச் சேர்ந்த சமய வாதிகளே ஆவர். அதிலும் குறிப்பாக இந்துமா வாதிகளே அதிகம் படைத்திருக்கின்றனர். அதற்காக மற்ற மதத்தினரின் பங்கு இல்லை என்று குறிப்பிட இயலாது. காரணம் விதை விதைத்தவர்கள் இந்துமத வாதிகள் என்றால் நீர் வார்த்து நெடுவயல் நிறையக் கண்டு அகங்குளிர்ந்தவர்கள் ஏனைய மதத்தினர் ஆவர். அவ்வகையில் இசுலாமியர்களின் பங்கு அளப்பரியது. தமிழ் இலக்கியம் கூறும் சிற்றிலக்கிய வகைகளைத் தவிரப் பல்வேறு புதுவகை இலக்கியங்களையும் புதுக்கி அதில் வெற்றியும் கண்டனர். அவ்வகையில் அரபு இலக்கிய வகையைப் பின்பற்றி கிஸ்ஸா, நாமா, முனாஜத்து, மசலா, போன்றவைகளையும் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி படைப்போர் இலக்கிய வகையையும் படைத்தனர். அவ்வாறு புதுமையாகப் படைத்த படைப்போர் இலக்கியத்தில் பெண்கள் குறித்த செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

படைப்போர் இலக்கியம்

          களவளி மற்றும் செருக்கள வஞ்சி ஆகியவற்றின் அடுத்த நிலையாக வளர்ச்சி பெற்ற வகை பரணி ஆகும். இந்தப் பரணி வகையின் அடியொற்றிப் பிறந்ததே படைப்போர் இலக்கியம் ஆகும். போரினைப் பாடுவதற்குப் பரணி இலக்கிய வகை இருந்தும் இசுலாமியர்கள் படைப்போர் இலக்கியம் படைத்ததன் நோக்கம் பரணி இலக்கியத்தில் வரும் கடைத்திறப்பு, காளிபாடியது, பேய் பாடியது போன்ற கூறுகள் இசுலாத்திற்குப் பொருந்தாத கொள்கை. எனவே போர் குறித்ததை மட்டும் வைத்துக்கொண்டு படைப்போர் படைத்தனார். ஒருவன் படைமேற் சென்று பகைவருடன் போர்புரிந்ததனைக் கூறுவது படைப்போர் ஆகும். இதுவரை தோன்றி படைப்போர் இலக்கியங்கள் (சூராவளிப் படைப்போர் தவிர) அனைத்தும் சமயக் கொள்கையின் காரணமாக இசுலாமியருக்கும் இசுலாமியர் அல்லாதவர்க்கும் இடையே நிகழ்ந்த கொள்கைப் போராட்டமே ஆகும். பெண்களுக்கென இசுலாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதில் கண்டிப்பான முறை கடைப்பிடிக்கப்படுகிறது. படைப்போர் இலக்கியம் என்பது முழுக்க முழுக்க வீரம் சார்ந்ததே. இருப்பினும் இந்த வீரகாவியத்திலும் பெண்களைப் பங்கேற்கச் செய்து சமூகப் புரட்சியை இவ்விலக்கிய வகை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

பெண்கள் படைப்போர்

          தமிழில் இதுவரை கிடைத்துள்ள பதிமூன்று படைப்போர் இலக்கியங்களில் இரண்டு படைப்போர்கள் பெண்களின் பெயரினைத் தழுவி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவை, செய்தத்துப் படைப்போர், சல்கா படைப்போர் என்று வழங்கா நின்ற இறவூசுல்கூல் படைப்போர் என்பதாகும். இந்த இரு இலக்கியத்தையும் இயற்றியவர் குஞ்சுமுசுப் புலவர் ஆவார். இவ்விரு படைப்போர்களும் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம் தமிழ் இலக்கிய உலகு பெண்களைப் போர்களத்தில் ஒப்பாரி வைக்கவும் இறந்தவரின் உடலைக் கண்டு புலங்காகங்கிதம் அடையவுமே பயன்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ் இலக்கிய வானில் பெண்களைப் படைத்தலைவர்களாகவும் கதைத் தலைவர்களாகவும் போர்களத்தில் போராடுபவர்களாகவும் இந்த இலக்கியங்ளே முதல் முதலில் சுட்டுகின்றன. வீரயுகப் பாடல்களாகக் கருதப்பெறும் சங்க இலக்கியத்தில் இத்தகைய கூறு இல்லை என்பது ஈண்டு நோக்கத்தக்கதே. செய்தத்து எனும் பெண் தன் கணவன் அப்துல் ரகுமானுக்குத் துணையாகப் போர்க்கோலம் பூண்டு தன் தந்தையான அபூசுபியானை எதிர்த்துப் போர் செய்வதாக அமைகின்றது. ஆனால், இசுலாத்தின் கொள்கைக்காகத் தன் காதலனைக் கொன்று தந்தையை எதிர்த்துப் படைநடத்தியதாக சல்காப் படைப்போர் அமைந்துள்ளது. பரணி இலக்கிய வகைகளில் தோன்றிய இலக்கியங்களின் பெயர்கள் தோன்றவனைத் தழுவியே அமைந்திருக்கும். அதைப்போல படைப்போர் இலக்கியங்களின் பெயர்களும் அமையும். ஆனால், சல்கா படைப்போர் மட்டுமே இதனை மறுதலித்து வெற்றி பெற்ற சல்காவின் பெயரால் அமைந்திருப்பது மேலும் சிறப்பிற்குரியதாகும்.

விதவைத் திருமணம்

          தமிழிலக்கியத்தில் ஒரு பெண்ணின் கணவன் இழந்தால் அவள் ஒப்பாரி வைத்து அழுது புலம்புவதாக அமையும். இல்லையேல் புறநானூற்றுப் பூதப்பாண்டியன் மனைவி தீப்பாய்ந்ததைப் போன்று தீப்பாய்ந்து மடிந்துதாக அமையும். இதேநிலை கிபி 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்தது. அதன் பின்னே இத்தகைய பழக்கத்திற்கு எதிராகக் குரல் எழுந்தது. அதன் பயனால் 1821 ல் சதி (அல்லது) உடன்கட்டை ஏறுதல் சட்டமும் 1856 ல் விதவை மறுமணச் சட்டமும் கருக்கொண்டது. அதன் பின்னரே தமிழில் பாவேந்தன்இ ஜீவா, நாமக்கல் கவிஞார் போன்றோர் தம் படைப்புகளில் விதவை மறுமணத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்கள். 1737 ல் அசன் அலிப் புலவர் இந்திராயன் படைப்போர் எனும் இலக்கியத்தில் விதவை மறுமணத்தைக் குறித்த புரட்சியை ஏற்படுத்திவிட்டார். இசுலாமியத்தில் விதவை மறுமணம் என்பது ஏற்றுக்கொண்டாலும் தமிழ் இலக்கியத்தில் முதன் முதலில் புகுத்தியது இப்படைப்போரே ஆகும். இதனை,

      ‘‘முன்தாலி தானிழந்த மோகனமார் மங்கையார்க்குப்
       பின்தாலி கட்டி வைத்துப் பேரறிவூதான் பற்றி’’

என்றும்,

    ‘‘தாலியிழந்தவளைத் தானிலியா ரங்கழைத்துக்
    கோலியொரு மாப்பிள்ளைக்குக் கொள்கையுடன் தாலிகட்டி’’

என்றும் இந்திராயன் படைப்போர்ல் அடிகளில் உணர்த்துகிறார்.

பெண்கள் படை

          பெண்களுக்கெனத் தனிப் படைப்பிரிவு அமைத்துப் போர் செய்த செய்தியினை மலுக்கு முலுக்கின் படைப்போர் காட்டுகின்றது. இதனை,

      ‘‘மின்னியவாள் விழிபோன்ற வீரிய பெண்படையாலே
       முன்னணியாக நிறுத்தி’’

என்னும் அடிகள் காட்டுகின்றன. தமிழில் அல்லி அரசாணி மாலை பெண்ணைத் தளபதியாகக் கொண்டு இருந்தாலும் முழுக்க முழுக்கப் போர் நிகழ்வினைச் சுட்டவில்லை. மேலும்,

‘‘ஏறுவதும் பெண் குதிரை இருப்பதும் பெண்சேனை’’

எனும் அடி பெண்கள் படை இருந்ததற்கான குறிப்பினை மட்டுமே தருகின்றது. ஆனால், மலுக்கு முலுக்கின் படைப்போர் பெண்படை போராடியதாகவே கூறுகின்றது. இதனை, இன்று தமிழீழ விடுதலைப் போரில் கண்கூடாகக் காணமுடிகின்றது.

வழக்காடும் பெண்

     சிலம்பில் கண்ணகி கோவலனை இழந்ததால் எவ்வாறு நெடுஞ்செழியனிடம் வழக்காடினாலோ அதுபோல இபுனியன் படைப்போரிலும் இபுனியன் மனைவி அலியிடம் சென்று வழக்காடுகிறாள். இதனை,

      ‘‘பலியெல்லா மேற்றீரே
       பத்தாவைக் கொண்றீரே’’

என்ற அடிகள் நமக்குத் தெரிவுறுத்துகின்றது.

முடிவுரை

          ஒருசெல் உயிரியிலிருந்து மனிதன் எவ்வாறு பரிணாம
வளர்ச்சி பெற்றானோ அதுபோல படைப்போர்
இலக்கியத்திலும் பெண்களின் உரிமைகளும் சிறப்புக்களும்
வளர்ச்சி பெற்றது என்றே கூற வேண்டும். முதல்
படைப்போரில் திருமணப் பெண்ணாவும் அதனை
அடுத்தடுத்துத் தோன்றிய படைப்போர்களில் கணவனை
இழந்தவளாகவும் பின்னர் விதவை மறுமணம் செய்வதாகவும்
இறுதியில் பெண்கள் படைத்தலைவர்களாக அமைத்து
படைப்போர் இலக்கியத்தில் படைக்கப் பெற்றனர் எனலாம்.
இவ்வாறு படைப்போர் இலக்கியங்கள் பெண்களின்
விடுதலைக்கும் உரிமைக்கும் முக்கியத்துவமும் முதன்மையும்
கொடுத்து நின்கின்றது.

தமிழில் கிடைக்கப் பெற்ற படைப்போர் இலக்கியங்கள்

          1. சக்கூன் படைப்போர்         -        வரிசை முகிய்யித்தீன் புலவர்
          2. இபுனியன் படைப்போர்             -        அசன் அலிப் புலவர்
          3. உச்சி படைப்போர்                        -        அசன் அலிப் புலவர்
          4. வடோச்சி படைப்போர்               -        அசன் அலிப் புலவர்
          5. தாகி படைப்போர்                         -        அசன் அலிப் புலவர்
          6. இந்திராயன் படைப்போர்          -        அசன் அலிப் புலவர்
          7. செய்தத்துப் படைப்போர்           -        குஞ்சுமுசுப் புலவர்
          8. கன்னி சல்கா படைப்போர்      -        குஞ்சுமுசுப் புலவர்
          9. மலுக்கு முலுக்கின் படைப்போர்   -        அப்துல்லா சாயூபு
          10. இமாம் காஸிம் படைப்போர்          -                  --------         
          11. நபுஸீ படைப்போர்                      -     செய்யது முகம்மது புலவர்
          12. ஹீசைன் படைப்போர்              -        காளை அசனலிப் புலவர்
          13. சூறாவளிப் படைப்போர்           -        ஆ.மு.ஷரிபுதீன்