பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Saturday, July 23, 2011

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர்




               தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

வாழ்க்கை வரலாறு

                     தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறிஸ்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி தேவர், திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தேவர் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். [1]

படிப்பு & பல நிலைப்பணிகள்

  • தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசவுரி உலுத்தரின் ஊழிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்தல்.
  • பாளையங்கோட்டைத் திருச்சபை ஊழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயிலல் - இக்காலகட்டம் [முகவை (இராமநாதபுர) மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில் 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ ஆசிரியராக பணியாற்றியது.
  • 1922 - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு.
  • 1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ்வருடம் தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பு.
  • 1925 - சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உ.நி.பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லட் உ.நி.பள்ளி, தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உ.நி.பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணி புரிதல்.
  • 1926 - திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே.
  • சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு, B.O.L. என்னும் கீழ்நிலைத் தேர்விலும் வெற்றி பெறுதல்;
  • மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயிலல்; செந்தமிழ்ச் செல்வி இதழில் ஒப்பியல் மொழியாராய்ச்சி என்ற தலைப்பில் முதல் கட்டுரை வெளியிடப்படுதல்.
  • திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணி. 1940 இல் ஒப்பியன் மொழிநூல் வெளியிடுதல்.[2]

இறுதி நாட்கள்

                        மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்தியா வெளியிட்ட அஞ்சல் தலை

வாழ்க்கைவரைவு

                தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000ல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006ல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.

தேவநேயர் ஆக்கிய நூல்கள்

  1. இசைத்தமிழ் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
  2. இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
  3. உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
  4. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
  5. ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
  6. கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது. பக்கங்கள் 33
  7. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968) 89 பக்கங்கள்
  8. கட்டுரை கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
  9. கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
  10. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
  11. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
  12. சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
  13. சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
  14. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
  15. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
  16. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
  17. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
  18. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
  19. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
  20. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
  21. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
  22. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள். முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
  23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது.
  24. தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
  25. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
  26. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள.
  27. மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
  28. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள். குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
  29. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது.
  30. வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்.
  31. வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்.
  32. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
  33. The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
  34. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள. 31 பக்கங்கள்.
  35. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
  36. கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
  37. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
  38. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்.
  39. பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
  40. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன்.

Monday, July 18, 2011

சே குவேரா

சே குவேராசே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.


 மார்க்சியத்தில் ஈடுபாடு


கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது. குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது. பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார். 1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.



கவனம் பெறும் நிகழ்வுகள்

1928 ஜூன் 14 - பிறப்பு

1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்

1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் அர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்

1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.

ஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.

1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.

ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.

1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.

டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

1959

ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.

ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.

ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்

ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.

மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.

அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.

நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

1960

அக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்

நவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

1961

ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.

பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.

ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

1962

மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்

ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

1963

ஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.

ஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

1964

பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.

மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.

அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.

டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

1966

நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.

1967

மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.

ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.

செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.

அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.

அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்

1968

ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.

1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

1997

ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.

அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.

அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.