பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Wednesday, March 24, 2021

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுடன் சுதந்திரச் சிந்தனையின் 32 ஆவது நிகழ்வு

 

சுதந்திரச் சிந்தனையின் 32 ஆவது நிகழ்வு

          கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடனான கலந்துரையாடல் இராசபாளையம் `சுதந்திரச் சிந்தனைசார்பில் 31.01.2021 ஆம் நாளன்று நடைபெற்று. இதில் பிரான்சிஸ் கிருபா கலந்துகொண்டு வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். `வைகறை முரசுஇதழில் வெளிவந்த கட்டுரைப் பிரதி வாசகர்களுக்கு வழங்கப்பட்டது.



            

        நிகழ்ச்சியின் போது, முனைவர் .கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். பேராசிரியர் விஜய் அய்யன்னபன், `வைகறை முரசுசுதாகர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வேலாயுதம் பொன்னுச்சாமி தொடக்கவுரை ஆற்றினார். அப்பொழுது கிருபாவின் `கன்னிநாவல் குறித்து விரிவாகப் பேசினார். இரமணாலயம் திரு லோகநாதராஜா, சாகித்ய அகாதமி விருதாளர் திரு சா.தேவதாஸ் ஆகியோர் கிருபாவின் படைப்புகள் குறித்துப் பேசினர். பாலசுதர்சன் தனது கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். `வைகறை முரசுசுதாகர் நிறைவாக நன்றி கூறினார்.

இரா. நரேந்திரகுமார் (சுதந்திரச் சிந்தனை ஒருங்கிணைப்பாளர் உரை)

           பாரதியினுடைய கவிதை வரி ``சக்தியின் கூத்தில் ஒளியுரு தாளம்’‘ இந்தத் தலைப்பில் பிரான்சிஸ் கிருபா ஒரு தொகுதி வெளியிட்டிருந்தார். அந்த வெளியீட்டு விழாவில் கவிஞர் தமிழச்சி பேசும்போது மாயாகோஸ்கியின் மேற்கோள் ஒன்றைக் காட்டியிருந்தார். ``இந்த விஷயத்தைச் சொல்வதற்குக் கவிதைத் தவிர வேறு வழியில்லை என்று வரும்போது மட்டும் பேனாவைத் தொடுங்கள்’‘ என்பதே அது. கிட்டத்தட்ட தேவை ஏற்படும்போது மட்டும் பேனாவைத் தொடுபவர் நமது பிரான்சிஸ் கிருபா. ஒரு கவிதையோடு நான் தொடங்குகிறேன். ``சிலிர்க்கச் சிலிர்க்க / அலைகளை மறித்து முத்தம் தரும்போதெல்லாம் /துடிக்கத் துடிக்க / ஒரு மீனைப் பிடித்து /அப்பறவைக்குத் தருகிறது / இக்கடல்’‘. இது ஒரு அழகியல். பறவை வந்து முத்தம் இடுகிறது. கடல் மீனைத் தருகிறது. ஆனால் மீன் இறந்துவிடுகிறது. இதை இவ்வாறு பார்க்காமல் ஒரு உணவுச் சங்கிலியாகப் பார்க்கவேண்டும். இதுதான் இயல்பு. நியாயம், தர்மம், அழகியல் அனைத்தையும் தாண்டி நாம் எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறோம் என்றால், நாம் நமது தேவையைப் பூர்த்தி செய்யும் சூழலில் இருக்கிறோம். காதலை அலை மறைக்கவில்லை. தன்னை முத்தமிடும் பறவைக்கு மீனைக் கொடுக்கிறது. இந்த உணவுச் சங்கிலை முடிந்தால்தான் அது நேர்மை. அடுத்த தரப்பின் மனவலிமை நாம் யோசித்துக்கொண்டு இருந்தோம் என்றால் உலகம் சமநிலை குலைந்துபோகும். இயங்கவேண்டிய வகையில் இயங்கவேண்டிய கடல் தன் காதலையும் அழகியலையும் அது மறைப்பதில்லை என்ற பொருளில் இக்கவிதைப் படைத்துள்ளார். கவிதையைத் தவிர அனைத்துமே அழிந்துபோய்விடுகிறது. கவிதை அந்தஉலகில் நிலையக இருக்கின்றது. அந்த வகையில் என்றுமே நிலையாக இருப்பவர் பிரான்சிஸ் கிருபா.



            அவர் சொல்கிறார் ``கவிதை எனக்குள் நிகழ்கிறது. இதைத் தடுக்கவோ நிறுத்தவோ தெரியவில்லை எனக்கு. அது நிகழும்வரை நிகழ்ந்துவிட்டுப் போகட்டும்’‘ என்கிறார். கவிஞர் கலாப்பிரியாவின் ``உலகெல்லாம் ஒரு சூரியன்’‘ என்னும் தொகுப்பில் ``கொழுவைக்கும் வீடுகளில் ஒரு குத்து சுண்டல் அதிகம் கிடைக்கும் என்று தங்கையைத் தூக்க முடியாமல் தூக்கிவரும் அக்கா குழந்தைகள்’‘ என்ற கவிதைப் படித்துவிட்டு ஈர்க்கப்படுகிறார் பிரான்சிஸ் கிருபா. முதன் முதலாக ஒரு ஈர்ப்பு உண்டாகி ஒரு கவிஞனைச் சந்திக்கச்சென்றது கலாப்பிரியாவைத்தான் என்கிறார். முப்பையில் இருந்து வந்து பார்க்கிறார். அதுவும் கலாப்பிரியா ஒரு பெண்ணாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு சென்றுள்ளார். பாரதிக்குப் பிறகு தேவதேவன் நமக்குக் கிடைத்திருக்கிறார். கன்னி நாவலில் இவருக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது தேவதேவனின் கவிதைகள்தான். இவரது `கல் மத்தளம்எனும் கவிதையைப் படித்துவிட்டு யூமா வாசுகி ஈர்க்கப்பட்டார். அப்பொழுது யூமா வாசுகி கூறுகிறார் ``ஒரு நாடோடி இசுலாமியப் பக்கிரியைப் போல நான் தப்பு வாத்தியத்தைக் கொட்டி முழக்கி இந்தக் கவிஞனின் புகழைப் பாடிக்கொண்டே நடக்கிறோன்’‘ என்கிறார். உன்னதம் என்பது ஒரு படைப்பாளியிடம் இருந்தால்தான் அது அவரது படைப்பிலும் வரும். இதற்குச் சான்றாக தேவதேவன், யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா ஆகியோர்களைக் கூறலாம். நம்முடைய நேரம் என்பது வேறு. இவருடைய நேரம் என்பது வேறு. நாம் இங்கு இவருடைய புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் யாரையோ பேசுகிறார்கள் என்று இருப்பார். பிரான்சிஸ் அரிதாய் நிகழும் அற்புதம். இவர் ஒரு அசல் கலைஞன். அசல் கலைஞனிடம் ஒழுங்கு இருக்காது. இவரிடமும் இருக்காது. ஏனென்றால் ஒழுங்கு இருந்தால் அது பிரதி என்ற பொருள் அல்லது நகல் என்று அர்த்தம். இவர் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் படைப்புக்கனம் வரும். அதைப் படைப்பாளன் புரிந்துகொள்ள வேண்டும். இவர் தனக்கு அமாவாசையிலும் பௌர்ணமியிலும் ஆகிய ஆறு நாட்கள் மட்டும்தான் படைப்புக்கனம் வரும் என்கிறார். நான் அதைப் புரிந்துகொண்டேன் என்கிறார். இவரது சொந்த ஊரில் விலங்கு போட்டு உடைமரத்தில் இவர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். பின்னர் மும்பை சென்றது, அங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கிருந்து ஏதுமற்று சென்னை வந்த தனது வாழ்வை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு என்கிறார் பிரான்சிஸ். பிரான்சிஸ் கிருபா கவிதை எழுதி பேர் பெற்றதை விட கொலை வழக்கில் தான் பேர்பெற்றார். கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்து போயிக்கொண்டிருக்கும் போது வளிப்பு வந்து ஒருவன் துடித்துக்கொண்டிருக்கிறான். தமிழ்ச் சமூகம் பார்த்துவிட்டு போயிக்கொண்டே இருக்கிறது. இவர் போயி அவரது நெஞ்சை நீவி விட்டுகிறார். அருகில் இருப்பவர்கள் இவர்தான் கொலை செய்துவிட்டார் என்று அடிக்கிறார்கள். அப்பொழுது கைது செய்யப்படுகிறார். இவரது கைகளில் செல்போனுமில்லை. ஒரு போன் இருந்தால் ஒரு சிட்டுக்குருவி செத்துவிடும் என்பதற்காகத் தான் போன் வைத்துக்கொள்ளுவதில்லை. இவரது வயதே இவருக்குத் தெரியாத போது என்படி அடுத்தவர்களின் தொலைப்பேசி எண் தெரியும். பின்னர் நண்பர்களுக்கும் தெரிந்து போயி அனைவரும் பேசுகிறார்கள். அந்த ஆய்வாளர் இவரை நம்பவில்லை. இறுதியில் இறந்தவரின் உடற்கூறுச் சோதனையில் அவர் மாரடைப்பு வந்துதான் இறந்தார் என்றும் கண்காணிப்பு கேமராக்களில் இவர் நெஞ்சை நீவிவிடும் காட்சிகள் மட்டுமே இருப்பதாலும் இவர் வெளியே வந்துள்ளார்.



            இவரது மொழிநடையில் ஒரு துயரம் தொக்கி நிக்கும். இவரது தொகுப்பு முழுவதும் விதவிதமான மனிதர்கள். இவரது கவிதை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் ஆனால் ஆழமாக ஒரு துயரம் நிற்கும். இவரது கவிதைகளில் கடலலை பேசும், சங்கு பேசும், மின்மினி பேசும், மின்னல், மீன்கள் என அனைத்தும் பேசும். விரிந்து பரந்த உலகமே இவருக்குக் கூடு. இவரிடம் நாடோடித்தன்மை உரைந்துபோயிருக்கும். இவரது கவிதைகளில் எவருடைய சாயலும் கிடையாது. இவரது மொழிதான் ஆதர்சம். இவரது வாழ்வு சார்ந்த நிகழ்வுகளும் ஆதர்சம். இரண்டு வாரங்களுக்கு முன் எனது இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதில் ஒரு தொகுதிக்கு என்ன பெயர் வைப்பதென்று தேடிக்கொண்டிருந்ததேன். அப்பொழுது கன்னி நாவல் படித்துக்கொண்டிருந்த போது ``உரையிலிருந்து பட்டையம்போல் தன்னை எங்கிருந்தோ உறையிலிருந்து உருகினான் பாண்டி. இதையம் சப்திக்கும் குரல் செவிகளின் வழியே துள்ளித் துள்ளிக் குதித்தது. சின கணங்கள் சூன்யம் வியாபித்திருந்தது. ஒரு காடு தன்னைச் சுற்றி வளைத்திருப்பதை உணர்ந்ததும். உடல் நடுங்கி உயிர் திடுக்கிட்டது. எனது புத்தகத்தின் பெயர் `அடர்காட்டில் வழிதேடிபிரான்சிஸ் எழுதுகிறார். காட்டின் அனைத்து வாசல்களும் திறந்திருப்பது தெரியவந்ததும் நடுக்கம் சிறுகச் சிறுகத் தனிந்தது. இருளும் வெளிச்சங்களும் சேர்ந்து அழுத்தியிருக்கும் அந்த அடர்ந்த காட்டின் வாசல்கள் திறந்திருந்தாலும் வழித்தடமும் ஒன்றும் தட்டுப்படாததும் மனதில் படபடப்பை ஏற்படுத்தியது’‘ என்று எழுதியிருந்ததார். இதில் அவர் சொல்லும் அடர்ந்த காட்டின் வழித்தடமும் என்ற சொற்களில் இருந்துதான் `அடர்காட்டில் வழிதேடிஎன்ற தலைப்பைப் பெற்றேன். தமிழில் வந்த சிறந்த பத்து நாவல்களில் இந்தக் `கன்னிநாவலும் ஒன்று. இவரது சொந்தக் கதைதான் இந்தக் `கன்னிநாவல். நாவல் முழுவதும் கவித்துமான நடை. இங்கு இருப்பவர்களைவிடக் குறைவாகப் படித்தவர். ஆனால் அனைவரும் வாசிக்கத் தயங்குகிற நடையில் எழுதியிருக்கிறார். இதில் உரைநடை எழுதியிருக்கிறார்.  `பிரகாசமான இருள்என்கிறார், `பெண்ணைக் கண்டு பேரிரைச்சல்என்றகிறார், எங்கோ பார்த்திக்கொண்டிருப்பவனைப் பார்த்து `குரல்கள் நுழையமுடியாத ஆழத்திற்குள் இருந்தான்என்கிறார். காடு இரவில் தூங்குகிறது என்பதை வனமானது பறவைகளின் இரைச்சலில் விழித்து எழுந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்கிறார். அதேபோல காதலைக் கூறும் போது `உயிர் கொதிக்கும் கண்கள். ஒளி சருக்கும் கன்னங்கள்என்கிறார். இது கவிதையாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அனைத்தையும் உரைநடையில் எழுதிக்கொண்டே செல்கிறார்.

            அனைத்தையும் காட்சிப் படிமமாக எழுதுகிறார். `கொடி விளக்கின் ஒளியில் படியிறங்கும் வெளிச்சம்’, `அலைகளை இலைகளென கணந்தோறும் கரையில் விதிக்கிறது கடல்என்று பல்வேறு காட்சிப் படிமங்களைக் கூறுகிறார். நாம் இறப்பைப் பற்றிக் கனவு காண்கிறோம். ஆனால் என்றாவது பிறந்தது போல் கனவு கண்டுள்ளோமா என்றால் இல்லை. இதில் கிருபாவின் கருத்து என்பது ``பிறப்பது என்பது நல்ல விஷயம். அது தாமதமாகக் கிடைத்தாலும் அதை அனுபவிப்பது ஒரு சுகம். துக்கம் என்பது அடிக்கடி வரும். இறப்பும் அப்படியே. நாம் துக்கத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறோம்’‘ என்கிறார். அழகான கனவு அபூர்வமாய்ச் / சித்திக்கிறது ஆயிரத்தில் ஒருவனுக்குஎன்கிறார். நம் மனதில் பாதிப்பது மாறுவதே இல்லை. நல்ல கனவுகள் விடியலின் வெளிச்சத்தில்தான் வரும். ஆனால் கெட்ட கனவு இரவு முழுவதும் வரும். ``இறப்பதுபோல் எல்லோரும் கனவு காண்கிறார்கள். யாரேனும் பிறப்பது போல் கனவு காண்கிறார்களா? ‘‘ என்பது பிரான்சிஸின் கேள்வி

                கனங்கள் தோறும் என்னைநானே 

                தண்டித்துக் கொண்டிருக்கும்போது 

                 என்னை நீ ஏனும்

                மன்னிக்கக்கூடாது 

என்கிறார்.

            தமிழில் மனச்சிதைவு ஏற்பட்ட கதைகளை மூவர் எழுதியிருக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் எம்.வி.வி. `காதுகள்எழுதியிருந்தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் .நா.சு. `பித்தப்பைஎழுதியிருந்தார். அதற்கு முன் அனைவரும் பரவலாக அறிந்த நகுலனின் `நினைவுப் பாதை’. இவர்கள் முன்னோடிகள். இது முன்னோடி நாவல். இவர் தொடாத பகுதிகளைத் தொட்டிருக்கிறார். இவர்களின் சாயல் கொஞ்சம் கூட `கன்னிநாவலில் இல்லவே இல்லை. அப்படிப்பட்ட கட்டமைப்பு. அப்படிப்பட்ட மொழிநடை. மனநிலை சரியில்லாவனின் மனம் எங்கெல்லாமோ செல்லுமோ அங்கெல்லாம் செல்கிறது. இந்தக் `கன்னிநாவலை வாசிப்பவர்கள் கொடுப்பினை உள்ளவர்கள். அதேபோல பிரான்ஸிஸ் கிருபாவைச் சந்திக்க வாய்ப்பு பெற்ற நீங்களும் கொடுப்பினை உள்ளவர்கள்தான்.

             ``பார்த்தவண்ணம் நிற்கிறாள் 

                சிலை போல 

                சிறுவயதில் பிடி தப்பிய கனாவையா?

                விழிக்கும் விரலுக்கும் இடைப்பட்ட தூரத்தையா?

                தெரியவில்லை

                பிழிந்த சேலை

                தோளில் முறுகிக் கிடக்கிறது 

                ஈரம்பட்டு முற்றும் நனைந்துவிட்டது இடது ஸ்தனம் 

                இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது 

                துணி உலர்ந்தும் கொடியில் 

                தட்டான்’‘ 

என்பது ஒரு கவிதை. இதில் கல்யாணமான பெண் தன் வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிருக்குச் செல்கிறாள். கணவன் தனக்குப் பிடித்தும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். மகிழ்வான சூழலில் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆக அமைதியான சூழலில் இருக்க வேண்டியவள் ஆர்ப்பாட்டமான சூழலுக்கு வருகிறாள். இதுபோன் சோக நிகழ்வு ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. இதுதான் இந்தக் கவிதையின் அடிநாதம். கடையில் துணி உலர்த்தும் கொடியில் தட்டான். தட்டானை இவள் பார்;த்துக்கொண்டிருக்கிறாள். தட்டான் இருப்புக் கம்பியிலா இருக்கும். பசுங்கொடியில், பூக்களில் இருக்கவேண்டியது இந்த இருப்புக் கொடியில் நிற்கிறது. இது போல இவள் கனிவு நிறைந்த சூழலில் இருந்து விளகி இங்கு இருக்கிறோம் என்று எண்ணி நிற்கிறாள்.  அதைப் பார்த்தவண்ணமாகவே அந்தத் தட்டானோடு தன் நிலையை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்.



கவிஞர் பிரான்சிஸ் கிருபா உரை

            ஓசூரில் இருந்து ஒருவர் போன் பன்னியிருந்தார். நான் சென்னையில் இருந்தேன். வாங்க சந்திக்கலாம் என்றேன். கடற்கரையில் சந்திக்கலாம். காந்தி சிலையின் அருகில். ஆறரை மணிக்கு சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். அவர் ஒரு சகோதரியை உடன் அழைத்து வந்திருந்தார். அவரது கைகளைப் பிடித்துக்கொண்டே வந்தார். நான் அவரை அவரது காதலியென்று நினைத்துக்கொண்டேன். அருகில் வந்தபின்புதான் அறிந்துகொண்டேன் அவர் உதவியாளரென்று. அதன்பின்புதான் தெரிந்தது அவருக்கு இரண்டு கண்ணும் தெரியாது என்று. கண் தெரியாதவர் எப்படி கன்னி நாவலைப் படித்தார் என்று குழப்பம். அவரது பெயர் கண்ணன். கண்ணன் எப்படி நாவலை வாசிச்சீங்க என்று கேட்டேன். சித்ரா தான் வாசித்துக்காட்டினார் என்று அந்தப் பெண்ணைக் காட்டினார். சரி என்னைத்தான் நீங்க பார்க்க முடியாதுல பின்ன ஏன் வந்தீர்கள் என்றேன். அதற்கு அவர் சொன்னார் உங்களைத் தொட்டுப் பார்க்கவேண்டும் என்று சொன்னார். கன்னி நாவலைப் பற்றி எவ்வளவு பாராட்டுக்கள் வந்தாலும் அந்த மனிதனின் செயல்பாட்டினை நினைக்கும் போது இன்றும் என் மனம் நடுங்கும். இது எனது இரண்டு ஆண்டு உழைப்பு. என் வாழ்விலிருந்து எடுத்து எழுதப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் அளவிற்கு என் உடல் நிலை இல்லை. இந்த நிகழ்வு எனக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்தான் வந்தேன். எனக்கு மேடைப்பேச்சு வராது. மேடையில் பேச வேண்டியிருக்கும் என்பதாலே பல விருதுகளை வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன். இந்த நிகழ்வில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி.

உரையாடல்

கேள்வி : பெண்கள் குறித்த கவிதை ரசனை உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது. எப்படி கவிதை எழுதத் தொடங்கினீர்கள்.

கிருபா : என் உடன்பிறந்த சகோதரிகள் மூன்று பேர். அப்புறம் எங்கள் கிராமத்தில் பீடி சுத்துவதுதான் தொழில். வறுமையான சூழல். நான் அண்ணன்களோடு பழகியதைவிட அக்காள்களுடன் பழகியதுதான் அதிகம். என்னுடைய கவிதைகளில் காதலிக்கு இணையாக வருபவர்கள் சகோதரிகள். கன்னி நாவலில் அமலா என்பது சகோதரி. சாரா கதாப்பாத்திரம் காதலி. இரண்டும் சமபங்கு உண்டு. இரண்டிற்கும் இடையில் சிறிய இழைதான் வேறுபாடு. அதுதான் கன்னி நாவலில் வெற்றி.

கேள்வி : நீங்கள் எப்பொழுது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்.

கிருபா : நான் பாம்பேயில் இருக்கும் போது `மராத்திய முரசுஎன்னும் இதழ் வந்தது. அதில் திங்கள் கிழமை தோறும் வாசகர் கவிதைகள் இடம்பெறும். நான் படித்தது எட்டாவது வரையும்தான். எங்க அப்பா என்னைப் படிக்கவைக்க ரெம்ப ஆசைப்பட்டார். ஆனா எனக்குப் படிப்பு வரல. படிப்புவரலங்கிற ஆதங்கத்துலதான் ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் மராத்திய முரசு பத்திரிக்கையில் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சேன். அது கவிதைகள் கிடையாது. அனால் அது ஒரு பயிற்சியாக அமைந்தது. பின்னர் சென்னை வந்த பின்பு எழுத ஆரம்பிச்சேன். அதன்பின்பு தான் கவிதைகள். இப்பவும் ரெம்ப மெனக்கிடுவது கிடையாது. மாதத்திற்கு ஆறு நாட்கள் மட்டும்தான் எழுதுறேன். அடுத்த தொகுப்பு `நட்சத்திப் பிச்சைக்காரன்வெளிவர இருக்கிறது.

கேள்வி : தட்டான் கவிதையைப் பற்றி நரேந்திரகுமார் ஒரு விளக்கம் சொன்னார். ஆனால் அந்தக் கவிதையைப் பற்றி நீங்க என்ன விளக்கம் சொல்றீங்க?

கிருபா : கவிதையைப் பற்றி ஒருநாளும் கவிஞன் விளக்கம் சொல்லிரவே கூடாதுமா. இங்க நீங்க ஐம்பது பேர் இருக்கீங்க. அதுக்கு ஐம்பது விளக்கம் இருக்கு. எப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனி கைரேகை இருக்கோ அதுபோல ஒரு கவிதைக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கும். அதை நான் சொல்லிவிட்டால் அது என்னுடைய ரசனையாக மாறிவிடும். உங்களுடையதாக மாறாது.

கேள்வி : உங்களுக்குக் கன்னி நாவல் எழுதக் காரணம் என்ன?

கிருபா : இலக்கிய உலகத்தில் கவிதைக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. உரைநடைக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. கவிதை எழுதுபவர்களைப் பெரும்பாலும் யாரும் மதிப்பது கிடையாது. ஆனால் உரைநடை எழுதுபவர்களை மதிக்கிறார்கள். கவிதையை 30 சதவீதம் பேர்தான் வாசிக்கிறார்கள். ஆனால் உரைநடை எழுதும்போது மதிப்பு கிடைக்கிறது. எனது ஐந்து கவிதைத் தொகுப்பிற்குக் கிடைக்காத ஒரு மதிப்பு கன்னி நாவலுக்குக் கிடைத்தது. ஏனென்றால் உரைநடை அனைவரும் வாசிக்கமுடியும். ஆனால் கவிதை அனைவராலும் வாசிக்கமுடியாது. `அழகர்சாமியின் குதிரைபடத்தில் குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி என்ற பாடலை நான்தான் எழுதியுள்ளேன். தற்போது `பைரிஎன்ற படத்தில் நடத்துக்கொண்டிருக்கிறேன். பறவையே பறவையை வேட்டையாது போன்ற கதை. அதுபோலவேதான் நாவலையும் எழுதிப்பார்த்தேன்.

கேள்வி : நீங்கள் கவிதை எழுத வரும்போது தமிழ் இலக்கிய சூழலில் பிற எழுத்தாளர்களோடு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்.

கிருபா : எனக்கு முதலில் பிடித்தது கலாப்பிரியாவின் கவிதை

                கொழுவைக்கும் வீடுகளில் 

                ஒருகொத்து சுண்டல 

                கூடுதல் கிடைக்குமென 

                தங்கைக் குழந்தைகளை 

                தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் 

                அக்காள் குழந்தைகள் 

என்னும் கவிதை `உலகெல்லாம் சூரியன்என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதுதான் முதலில் பிடித்தது. அப்பொழுது மாராத்திய முரசு பத்திரிக்கையில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கவிதையைப் படித்தவுடன் அனைத்தும் மாறிவிட்டது. தென்காசிக்கு வந்து அவரை நேரில் சந்திச்சுப் பேசுனேன். அப்பொழுது வேறு பல ஆளுமைகளைச் சொன்னார். சில புத்தகங்களைப் பரிந்துரையும் செய்தார். அதற்குப் பின்பு தான் நான் எழுதிக்கொண்டிருப்பது கவிதை அல்ல. நாம் எழுதவேண்டியது வேறு என்று புரிந்துகொண்டேன். அதன்பின்புதான் வேறு வாசிப்புக்கு வந்தேன். வேறு எழுதத் தொடங்கினேன்.

கேள்வி : ஏன் நீங்கள் இதுவரை சிறுகதை எழுதவில்லை.

கிருபா : இனிமேல் எழுதுறேன். இனிமேல் சிறுகதை எழுதிவிட்டு உனக்கே சமர்ப்பிக்கிறேன். அது எழுதவும் எனக்கு விருப்பம் இருக்கிறது.

கேள்வி : நீங்க அதிகம் வாசிக்கும் அல்லது வாசிக்க விரும்பும் புத்தகம் எது?

கிருபா : நான் அதிகம் வாசிப்பது பைபிள், மகாபாரதம். ஏனென்றால் வாசிக்க வாசிக்க புதிய புதிய எண்ணம் தோன்றுகிறது. அதேபோல் பைபிளில் பழைய ஏற்பாடு வாசித்தால் இலக்கியத்திற்குப் பெரிய உதவியாக இருக்கும். அதுதான் நான் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன்.

கேள்வி : உங்கள் வாழ்க்கையில் இது இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லக்கூடியது எது?

கிருபா : இப்படி எல்லாம் வினாடி வினாவுல கேட்கிறமாதிரி கேட்கக்கூடாது. யோசிக்கவேண்டாமா. இதுக்கெல்லாம் ஓஷோ, ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோரே தடுமாறி இருக்காங்க. நான் எப்படி. நாமா ஞாயிற்றுக்கிழமை அரைநாள் பூசைக்கு வந்த பூசாரி. ஏன்கிட்ட போயி இந்தக்கேள்விய கேட்டுப்புட்டயேப்பா.

கேள்வி : யூமா வாசுகிக்கும் உங்களுக்குமான உறவு என்ன?

கிருபா : ரெம்ப நல்ல கேள்வி. அவர் என் உடன்பிறவா சகோதரன். அவர் வந்து ஓவியரா பத்திரிக்கையில் வேளை பார்த்துக்கொண்டிருந்தபோது நான் ரிப்போர்ட்டராக வேலை பாரத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் கவிதை எழுதியத் தொடங்கிய காலகட்டம். அவர் நண்பர் என்பதைத் தாண்டி ஒரு சகோதரரா இருந்துக்கிட்டு இருக்கிறார். அது தொடர்ந்து இறுதிவரை இருந்துக்கிட்டு இருக்கும். `கசங்கல் பிரதிமுன்னுரையில் வாசித்தால் அவருக்கும் எனக்குமான உறவு பற்றி அவரே சொல்லியிருப்பார்.

கேள்வி : கன்னி நாவலில் உள்ள சந்தனப்பாண்டி பாத்திரத்தைப் பைபிளில் உள்ள யாக்கோபு பாத்திரத்தோடு ஒப்பிடலாமா?

கிருபா : இல்லை. கன்னி நாவலில் உள்ள சந்தனப்பாண்டி பிரான்சிஸ் தான். அமலாவும் சாராவும் எனக்குத்தான். அது எல்லாமே உண்மையான கதாப்பாத்திரங்கள். அதில் உடைமரத்தில் கட்டிப்போட்டிருந்தது என்னைத்தான். இது என்னுடைய சுயசரிதை தான்.

கேள்வி : உங்களது எழுத்துக்களில் பைபிளின் சாயல் இருக்கிறதா?

கிருபா : இல்லை. அப்படி ஒரு எழுத்தின் சாயல் இருந்தால் அதைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். நான் இன்று எழுதிவிட்டு நாளை வாசித்துப் பார்க்கும் போது வேறு ஏதாவது சாயல் இருந்தால் நானே அதைத் தூக்கி எறிந்துவிடுவேன்.

கேள்வி : அடுத்த எழுத்தாளர் தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

கிருபா : நிறைய வாசியுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுங்கள். வாசிப்பு மட்டும் இருந்தால் அது பொழுதுபோக்காக மாறிவிடும். உங்களுக்கான வாசல் திறக்கும்போது அந்த வாசலில் சிறிது கோலமிடுங்கள்.

கேள்வி : உங்கள் குடும்பம், வளர்ந்த சூழல் பற்றிக் கூறுங்கள்?

கிருபா : எங்கள் வீட்டில் ஏழுபேர். மூணு அக்கா மூணு அண்ணன். வளர்ந்தது நாங்குநேரி தாலுகா பத்தினிப்பாறை என்கிற கிராமம். எட்டாவது வரை படித்தேன். அதன் பின் பாம்பே சென்றுவிட்டேன். அங்கு பதிமூன்று ஆண்டுகள் இருந்தேன். பாபர் மசூதி இடிக்கும்வரை அங்கு இருந்தேன். முதலில் டீ கடையில் வேலைபார்த்தேன். பின் லேத்பட்டறையில் வேலைபார்த்தேன். பின்னர் லேத் பட்டறையே வைத்துவிட்டேன். அந்த பட்டறை இசுலாமியரின் இடத்தில் இருந்ததால் என்னையும் இசுலாமியராக நினைத்து அதை உடைத்துவிட்டார்கள். நான் கிறித்துவன். அவர்களுக்கு இரவோடு இரவாக அதை வேட்டையாடவேண்டும். நான் கடன் வாங்கிதான் அதைத் தொடங்கியிருந்தேன். அதிலிருந்து மீள முடியாமல் திரைப்படத்தில் சேர்ந்தேன். பின்னர் சென்னைக்கு வந்தன் காமராசரின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தில் வசனம் எழுதினேன். அப்பொழுதான் அரசியல் குறித்து வாசிக்கத் தொடங்கினேன். அதன் பின்னர் காமராசர் படத்தில் வசனம் எழுதினேன். திரை உலகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறேன். கவிதை எழுதியிருக்கிறேன். நாவல் எழுதியிருக்கிறேன். சிறுகதை எழுதவும் போறேன்.

கேள்வி : நீங்கள் எட்டாவது வரைக்கும்தான் படித்திருக்கிறீர்கள். எப்படி கவிதை எழுத முடிகிறது?

கிருபா : கண்ணதாசன் எட்டாவது தாண்டல. கவிதைக்கும் படிப்புக்கும் தொடர்பு இல்லை. ..எஸ் படிச்சா கூட கவிதை பக்கத்துள வராது.

கேள்வி : நீங்கள் பித்துநிலையில் இருந்து மீண்டுவந்து கன்னி கதையினை எழுதியிருக்கீறர்கள். இந்த நிலை பஷீருக்கும் இருந்தது. அந்த பழைய நினைவுகளை எப்படி மீட்டெடுக்க முடிகிறது?

கிருபா : பைத்திய நிலை அப்படினா மூன்று மாதமோ நான்கு மாதமோ தூங்காமல் இருந்தேன். சென்னையிலிருந்து கிழம்பி பஸ்ஸில் வந்து பொருட்களையெல்லாம் தொலைத்துவிட்டு பாட்டுபாடிக்கொண்டே வீட்டிற்குச் சென்றேன். பின்னர் ஒன்றரை மாதம் தூங்கவில்லை. பின்பு முற்றியபிறகுதான் மரத்தில சங்கிலிபோட்டு கட்டிவைச்சாங்க. ஆனா பாடிக்கொண்டே இருக்கும் போது இந்து நினைவுகள் நேரில் நடந்ததைப் போன்று இன்றும் நினைவில் இருக்கிறது. பின்னர் எழுத்துக்குத் தேவையான கற்பனையையும் சேர்த்தேன். நான்கு மாதம் தூங்காமல் இருந்தது உண்மை.

கேள்வி : தற்போது சமகாலத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் அல்லது அதிகம் வாசித்தவர்கள் யார்?

கிருபா : நிறையபேர் இருக்கிறார்கள். தற்போது ஊட்டியிலிருந்து விஜயராஜ் என்று ஒருவர் முன்னுரைக்காக அனுப்பியிருந்தார். அவர் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறார்.




சுதந்திரச் சிந்தனை

இராசபாளையம்.

செல் : 9629222201