பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, April 5, 2012

அகநானூற்றில் சுனைகள்

முன்னுரை

                தமிழர்களின் வாழ்வு இயற்கையோடியைந்தவை. இயற்கை நெறிக் காலத்து இலக்கியங்களும் அவை, பாடப்பட்ட காலத்தை ஆடி போல எதிரொளிக்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுள் காணப்படும் கூறுபாடுகள் முழுமையையும் ஆய்வதற்கு எத்தனிப்பின் இன்னும் பல்லாயிரம் சங்கம் கூட்டப்பட வேண்டும். அத்தகு சங்கக் கவிகளைச் சுவைத்தல் நமக்குக் கிடைத்த பேறு ஆகும். அவற்றுள் அகநானூறு களிற்றுயானை நிரை புலப்படுத்தும் சுனைகள் குறித்து ஆய்வதாக அமைகின்றது.

சுனைகள்

          இயற்கை நீர் நிலைகளுள் சுனையும் ஒரு வகையாகும். சுனைகள் மலைகளில் காணப்படும் நீர்நிலை வகையாகும். சுனைகள் மலைப்பகுதியில் வாழ்ந்த விலங்கினங்கட்கு நீராதாரமாக விளங்கி வந்துள்ளன. மலைநாட்டு மக்கள் அவற்றை குடிநீருக்காகப் பயன்படுத்தியதாக அகநானூற்றில் குறிப்பு இல்லை. அகநானூற்றில் களிற்றுயானை நிரையில் 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் அவைஇ வளமுணர்த்தவும் வறுமையுணர்த்தவும் கூறப்பட்டுள்ளன.

அமைவிடம்

          சுனைகள் குறிஞ்சி நிலத்து நீர்நிலைகளுள் ஒன்றாகும். இவை உருவாகும் சிறிய நீர்நிலை ஆகும். இதனை,

                     ‘‘ பாறை நெடுஞ்சுனை …………….’’
                                                                                       -        அகம் 2:4

எனும் அடியின் வழி அறியலாம்.

சுனை நீரின் தன்மை

          சுனை நீர் உண்ணத் தகுந்த நீர் ஆகும். இது சுவை மிக்க நீராகக் காட்டப்பட்டுள்ளது. இன்தீம் பைஞ்சுனை (59) என்றும் தீம்பெரும் பைஞ்சுனை (78) என்றும் குறிக்கப்கடுகின்றது.

சுனைகள் இலக்கியத்தில் பெரும் பங்கு

          நீருடைய சுனைகள் வளத்தினைக் குறிக்கவூம் (2, 38) நீரற்ற சுனைகள் நிலத்தின் கொடுமையை உணர்த்தவூம் (1, 119) எடுத்தாளப்பட்டுள்ளது. சுனையில் ‘சூர்எனும் பெயராலான வருத்தும் தெய்வம் உள்ளதாகவும் (91) வந்துள்ளன.

வளமுணர்த்தல்

          அகநானூற்றுப் பாடல்கள் (2,38,59) ஆகியவற்றில் வளமுணர்த்தும் விதமாகச் சுனைகள் வந்துள்ளன.
          பாறைகளிடையில் சுனைகள் அமைந்துள்ளன. அதன் நீரையும் பலாப்பழத்தின் சுனையையும் தேனையூம் சேர மாந்திய ஆண் குரங்குகானது களிப்புடன் கிடந்து உறங்கும். இதனை,

        ‘‘ஊழுறு தீங்கனி உண்ணுநார்த் தடுத்த
         சுராற் பலவின் சுளையொடு ஊழ்படு
          பாறை நெடுஞ்சுனை …………..
              ……………………………..
        நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்’’
                                                                                  -        அகம் 2: 2-7

எனும் பாடலடிகள் வழி அறியலாம்.

                    தலைவி ஒருத்தித் தன்னுடைய கண்ணைச் சுனையில் பூத்த மலருக்கு நிகராகச் சொல்கிறான். அதனை,

              ‘‘நீடு இதழ் தலைஇய கவின்பெறு நீலம்
              கண் என மலர்ந்த சுனையும்’’
                                                                   -        அகம் 38: 10-11

எனும் வரிகளால் அறியலாம்.

வறுமையுணர்த்தலில் சுனை

          பாலை நிலத்திற்கான புனைவுகளில் நீர் நிலைகளே முதலிடம் பெறுகின்றன. நீர் வறண்ட சுனையானது பாலை நிலக்கொடுமைகளை உணர்த்துகின்றன. மேலும், பாலை நிலத்துச் சுனைகளின் தன்மைகளை,

                 ‘‘……………………. ஆறை காய்பு
                 அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்’’
                                                                                 -        அகம் 1 - 11-12

எனும் அடிகள் உணர்த்துகின்றன.
         
          பாலைநிலத்துச் சுனைகள் காய்ந்த தன்மையில் இருக்கும். அந்நிலத்துப் பாறைகள் வெப்ப மிகுதியால் காய்ந்து கிடக்கின்றன அவ்வடிகள் உணர்த்துகின்றன. மேலும், நீரில்லாமல் யானை படும் துன்பத்தை,

                ‘‘…………….. வருத்தமொடு உணீஇய மண்டி
                 படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
               கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை’’
                                                                         -        அகம் 119 -  17-19

எனும் அடிகள் விளக்குகின்றன. யானை ஒன்று நீர் வேட்கை மிகுந்து நீர் உண்ண வேண்டி காலை மடித்துக் கொண்டு வற்றிய சுனையைத் தன் துதிக் கையால் துழாவ அங்கு நீரில்லாமல் போனதைப் பார்த்து பெருமூச்சு விட்டது.

சுனையின் வனப்பும் மக்கட் பயன்பாடும்

          சுனையில் நீலம், செங்கழுநீர் போன்ற பூக்கள் மலர்ந்திருந்தன. இவற்றில் தேன் உண்ண வண்டுகளும் வந்து சுனையை வனப்புறந் செய்துள்ளன. இதனை,

                        ‘‘…………………… வண்டினம்
                         சுனைப்பூ நீத்து, சினைப்பூப் படர’’
                                                                                   -        அகம் 71 - 4 – 5
எனும் அடிகளின் வழி அறியலாம்.

          மகளிர் தம் கூந்தலில் சுனையில் பூத்த மலர்களைச் சூடி மகிழ்ந்துள்ளனர் எனும் செய்தியை,

‘‘இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த துண்நறுங்
 கழுநீர்ச் செண்இயல் சிறுபுறம்’’
                                                                   -        அகம் 59 -  13 – 14

எனும் அடிகளால் அறியலாம்.

சுனையும் அணங்கும்

          சுனையில் ‘சூர்எனும் தெய்வம் இருந்ததாக சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்புகள் வருகின்றன. ‘சூர்என்பது தீண்டி வருத்தும் தெய்வம் ஆகும். இது பெண்டிரைத் தீண்டும் தன்மையது. சூர் தங்கியிருக்கும் சுனைனயினைச் சூர்ச்சுனை என்றே குறிப்பிட்டுள்ளனர். அதனை,

                  ‘‘அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
                  சூர்ச்சுனை துழைஇ…………….’’
                                                                          -        அகம் 91 -  3 – 4
எனும் அடிகளால் அறியலாம்.

முடிவுரை

          இதுகாறும் சுனையின் தன்மை, அதுதன் பயன்பாடு, அகவியல் இலக்கியங்களுள் பெறும் பங்கு குறித்து இக்கட்டுரை வழி விரிவாக அறியப்பட்டது.


நன்றி.
ம.பிரசன்னா

Wednesday, April 4, 2012

தமிழ் ஊர்ப் பெயர்கள் சமஸ்கிருதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டமை

            சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் எனும் சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார் முதலான பன்னிரண்டு ஆழ்வார்களும் முறையே தமிழக சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் நெடுந்தொலைவு நடந்தும் பல்லக்கிலும் பயணம் செய்து ஆங்காங்கு கோயில் உறையும் கடவுளரைப் பாடினர்.அவர் தம் பாடல்கள் பிற்காலத்துத் தேவாரங்களாகவும், திருவாசகமாகவும், திவ்வியப்பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டன. அக்காலச் சூழலில் இஃது அரும்பணியாகும். இவ்வாறு தொகுக்கப்பட்டத் தேவாரப் பாடல்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும், அவற்றை முதல் இராசராச சோழன் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு) மீட்டெடுக்க முயன்ற போது அவற்றுள் பெரும்பாலானவை கரையானால் அழிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் பக்தி இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. ஓலைச்சுவடிகளில் நானூறு ஆண்டுகளுக்கு மேல் அவை இருப்பது என்பது அரிய செயல். தேவாரப் பாடல்களைக் கோயில் தோறும் ஓதுவார் பாடுவதற்கு முதல் இராசராசனும் இன்னபிற பிற்காலச் சோழ மன்னர்களும் தத்தம் காலத்தில் ஆக்கம் செய்துள்ளனர்.

                 
                           இவ்வாக்கம் பக்தி இலக்கியத்திற்குச் செய்யப் பெற்ற மிகப்பெரும் நன்றிச்செயல் என்பதில் ஐயமில்லை. இவ்வாக்கத்தின் ஊடே பாடல் பெற்ற தலங்களின் தனித்தமிழ்ப் பெயர்களும் அங்கிருந்த இறைவனின் தனித்தமிழ்ப்; பெயர்களும் இறைவியின் தமிழ்ப் பெயர்களும் தாம் பெற்றிருந்த தமிழ் வடிவத்தை இழந்து சமஸ்கிருத வடிவம் பெற்றன. இது தானே நிகழ்;ந்த நிகழ்வன்று. திருத்தலப் பெயர்களில் தமிழ் சமஸ்கிருத மாற்றத்திற்கு சோழர்காலத்தில் மிகுந்த ஆதிக்கம் பெற்றிருந்த உள்ளளுர்ப் பிராமணர்களும் வெளியூர்ப் பிராமணர்களுமே காரணம் ஆவர் என்பதை சோழர்கால அரசியல் வரலாறும் சமுதாய வரலாறும் உறுதிப்படுத்துகின்றன.


               சோழர், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த பிராமணர்களை வட இந்தியாவில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் தம் ஆட்சி இடமான தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பிராமணர்கள் மட்டும் அல்லாமல் தொடர்ந்து தானாக வந்த பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறினர். சோழர்காலத்தில் அவர் காலத்திற்கு முன்பிருந்த செங்கற்கோயில்களும் மண சுவர்க் கோயில்களும் கருங்கற்களால் செய்யப்பெற்ற கற்றளிகள் ஆக்கப்பெற்றன. சோழ அரசர்கள் மட்டுமின்றி அவர்தம் அரசியரும் அவர்தம் குடும்பத்தாரும் இவ்வாறு கற்றளிகள் ஆக்கிய தொண்டில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல் இராசராச சோழனின் வளர்ப்புத் தாயான அவனது தமக்கை குந்தவை தேவி, பின் வந்த செம்பியன்மாதேவி ஆகியோர் இத்தகு பணியில் முன்னின்றனர். கோயில்கள் மிகப்பெரிய அளவில் சோழர்காலத்தில் எடுப்பிக்கப்பட்டன. முன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்றளிகள் ஆக்கப்பெற்றன. அக்கோயில்களில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்கு சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த சிவ பிராமணர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிவ பிராமணர்கள் சோழர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் பேசப்படுகிறது. சமஸ்கிரும் மட்டுமே அறிந்தவர்களும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் அறிந்தவர்களும் கோயிலுள் நுழைந்தமையால் இறைவனைப் பூசை செய்யும் மொழியாக சமஸ்கிருதம் சோழர்காலத்தில் எள்தாக இடம்பெற்றது. ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியார் கோயிலுல் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கருவறை மூலவரை அருகு இருந்து வழிபட அனுமதிக்கப்பட வில்லை என்பதற்குத் தில்லை சிற்றம்பலக் கோயிலில் நடராசரை வணங்க நந்தன் என்ற ஒடுக்கப்பட்ட குலத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சான்றாகும். நந்தனின் போராட்டத்தைப் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் திரு நாளைப் போவார் நயினார் வரலாறு எனும் புராணத்தில் வருணித்துள்ளார். ஆக, சோழர்காலத்தில் சிவள் கோயில்களில் கருவறை பிராமணர்களுக்கு மட்டுமே பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதும் இறைவனை வழிபடும் மொழியாக சமஸ்கிருதம் ஆயிற்று என்பதும் தெளிவு.


                     சோழருக்கு முன்பு நாட்டை ஆண்ட பல்லவர், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு குலத்தினர் எனினும் அவர் காலத்திலேயே வட இந்திய குப்தர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேதங்களும் வைதீக முறைகளும் தமிழ்க் கோயில்களில் நுழைந்துவிட்டன. இவை சோழர் காலத்தில் பேராதிக்கம் பெற்றன. சோழர் காலத்தில் வாழ்ந்த பிராமணர்கள் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதங்களைக் கற்கவும் கோயில் பணி செய்யவும் அரசர்களால் நிலங்கள், மானியமாக வளங்கப்பெற்றன. பிரம்மதேயம் எனும் அருட்கொடைக்குப் பெயரிட்டு பல ஊர்கள் வரியிலி நிலமாக ஆக்கப்பட்டு பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. பிரம்ம என்றால் பிராமணர். தேயம் என்றால் நாடு. பிராமணருக்கு உரிய நாடு என்பது பொருள். ஆரசன் தன் ஆட்சிக்கு உதவும் முகமாக நன்கு கற்ற பிராமணர்களைப் பிரம்மதேயத்திடம் கேட்டு பெற்றுக்கொள்ளவது உண்டு. எனவே அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் கணிசமாக இருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனை அமைச்சரவையில் பொறுப்பு வகித்த இரண்டு பிராமண அதிகாரிகள் கொன்று விட்டனர். அவர்களை அடையாளம் கண்டு பின்னாளில் அரசனாகப் பொறுப்பேற்ற முதல் இராசராச சோழன் மரண தண்டனை விதித்துள்ளான் என்பது வரலாறு. புpரம்மதேயங்களுக்கு அரசன் செய்யும் மிகக் கூடுதலான சலுகைகள் மக்களிடையே சீற்றத்தை உண்டாக்கி உள்ளன. மூன்றாம் இராசராசன் காலத்தில் (1223) தலைச்சங்காடு என்ற பிரம்மதேயக் கிராமத்தில் அவ்வூர் மக்களால் அங்கிருந்த நிலவுரிமைப் பத்திரங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டது.

                            தமிழ்க் கல்விக்குத் தம் நானூறு ஆண்டுகால ஆட்சியில் எந்தச் சிறு முயற்சியும் செய்யாத சோழ மன்னர்கள் நூற்று எழுபத்தோரு பிரம்ம தேயங்களை மானியங்கள் கொடுத்து உதவி செய்ததோடு ஆங்காங்கே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் முதலான நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் வியாகரணங்களையும் பிராமணப் பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருந்து கற்க கடிகை எனும் கல்லூரி வசதி செய்து தந்திருந்தார்கள். தமிழருடைய பண்பாடடிற்குப் பொருந்தாத திரௌபதி கதையைக் கொண்டுள்ள மகாபாரதத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார்கள். அம்மட்டுமின்றி ஊர் நடுவே உள்ள அம்பலத்தில் மகாபாரதத்தை நன்கு கற்ற வேத பிராமணர் ஒருவர் சமஸ்கிருத மொழி வழியே எடுத்துச் சொல்ல மானியம் வழங்கிஅ து தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுதலையாகத் தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள், திருக்குறள், திழுமந்திரம், சிலப்பதிகாரம் முதலானவற்றைக் கதையாகச் சொல்லவோ, சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கவோ எவ்வித முயற்சியும் செய்யப்பெறவில்லை. காஞசிபுரத்தில் கடிகை என்ற பெயருடைய ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகமே பல்லவர் காலத்தில் இருந்து நடத்தப்பட்டது.


                             ஆக, சோழஅரசியலும் சோழ அரசரிடமும் அருகு இருந்த பெரும் செல்வாக்கைப் பெற்று முன்பே கட்டப்பட்டிருந்த சைவக் கோயில்களுக்கு உள் பூசை செய்யும் உரிமையுடன் சென்ற சமஸ்கிருதம் மட்டும் அறிந்த பிராமணர்கள் அந்தக் கோயிலின் பெரையும் கோயில் மூலவர் பெயரையும் கோயில் இருந்த ஊரின் பெயரையும் மாற்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள் சமஸ்கிருதமாக்கப்பட்ட ஊர்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ்ப் பெயரைக் கொண்டிருந்தன என்பதும் இன்னும் சொல்லப் போனால் சைவ நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற அவ்வூர்ப் பெயர்கள் மூலவர்கள் பெயர்கள் தூய தமிழிலே இருந்தன என்பதும் அவை சோழர் காலத்தில் தான் மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் எளிதாக ஊகிக்கத்தகும். இவை இவ்வாறு மாற்றம் பெற்றன என்பதற்கு ஓரிரு சான்று: உலகப் புகழ்பெற்ற நடராசர் உருவத்தை மிகப் பழங்காலம் தொட்டுப் பெற்றிருக்கும் கோயில் திருநல்லம் என்ற பெயருடையதாகும். இந்த அழகான ஊர்ப்பெயர் பின்னர் கோனேரி ராஜபுரம் என்று மாற்றம் பெற்று இன்றுவரை தொடர்கிறது. காவிரி ஆற்றுத் தென்கரையில் உள்ள ஊர் திரு ஆவூர் என்பதாகும். இவ்வூர் பசுபதீஸ்வரம் என்று மாற்றப்பட்டு இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர் என்றும் இறைவி மங்கள நாயகி என்றும் மாற்றம் பெற்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருமுதுகுன்றம் எனும் பெயர் விருத்தாசலம் என்று ஆயிற்று. இறைவனின் பெயர் விருத்தகிரீஸ்வரர் என்றும் இறைவியின் பெயர் விருத்தாம்பிகை என்றும் என்றும் மாற்றம் பெற்றன. காவேரிளூ தென்கரையில் உள்ள சேரி நாட்டுத் திருமறைக்காடு வேதாரண்யம் என்று மாற்றப்பட்டது. திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் மறைவனம் என்றே இவ்வூர் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள இறைவனின் பெயர் வேதாரண்யீஸ்வரர். இறைவியின் பழந்தமிழ்ப் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. அப்பெயர் வேதாரண்ய ஈஸ்வரி என்று மாற்றப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பாண்டிய நாட்டு ஊர் திருப்புத்தூர். இவ்வூர் ஸ்ரீதலீஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் சிவகாமி அம்பாள் என்றும் மாற்றம் பெற்றன. சம்பந்தரின் தேவாரம் திருப்புத்தூர் இறையாரை (272) என்பதாகும். குhவிரித் தென்கரையில் உள்ள திரு சோற்றுத் துறை மாற்றம் பெற்று அவ்வூர் அம்மன் அன்னபுரணி என்று ஆக்கப்பெற்றார்.

‘‘ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே''

என்பர் ஞானசம்பந்தர் (பா.294). புகழ் பெற்ற மயிலாடுதுறை இறைவன் மயூரநாதர் என்று மாற்றம் பெற்றார். அம்மனி;ன் பெயர் அபயாம்பிகை என்று மாற்றம் பெற்றது. சம்பந்தர் இவ்வூரில் உள்ள இறைவன் மேல் பாடிய தேவாரப்பா பல, மயிலாடுதுறை என்றே முடிகிறது. (பா. 404 – 413) சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள திருவேட்களம் எனச் சம்பந்தரால் பாடப்பெற் திருத்தலம். சம்பந்தர் இங்குள்ள இறைவனை வேட்கள நன்னகராரே எனத் தேவார எண் 415 முதல் 424 வரை பாடுகிறார். வேட்கள நன்னகரார் என்ற திருப்பெயர் பாசுபதேஸ்வரர் என்றும் அம்மன் பெயர் சற்குணாம்பாள் என்றும் மாற்றப் பெற்றன. திருமுதுகுன்றம் எனும் பெயர் ஞானசம்பந்தரால் பாடல் தோறும் முதுகுன்றே முதுகுன்றே என்று (570 இல் இருந்து 578) பாடப்பெற்றது. இப்பெயர் விருத்தாசலம் என்று இறைவனின் பெயர் வேதகரீஸ்வரர் என்றும் மாற்றப்பெற்றன. தொண்டை நாட்டில் உள்ள திருவோத்தூர் எனும் திருத்தலக் கடவைள ஓத்தூர் சடையீர் (581), ஓத்தூர் நாட்டீர் (583) எனத் திருப்பித் திருப்பி சம்பந்தர் பாடியிருப்பார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என்னும் அம்மையின் பெயர் பால குசலாம்பிகை என்றும் மாற்றம் பெற்றன. சென்னைக்கு அண்மையில் உள்ள திருவேற்காட்டு இறைவனை ஞானசம்பந்தர் ஷவேற்காடு உயர்ந்தார்' என்று பாடுவார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என இறைவனுக்கும் பாலாம்பிகை என்று இறைவிக்கும் பிற்காலத்து மாற்றப்பெற்றன. சிவஞான போதம் எழுதிய மெய்கண்டதேவரின் ஊர் திருத்தூங்கானை மாடம் என்பதாகும். இப்பெயரை ஒவ்வொரு பாடலிலும் சொல்லி சம்பந்தர் பாடியுள்ளார் (634-644). திருத்தலத்தின் பெயர் பிரள காளேஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் கடந்தைநாயகி என்றும் மாற்றம் பெற்றன.


                   கிட்டத்தட்ட பெரும்பான்மைத் தலங்கள் தேவார காலத் தமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை எய்தவைக்கப் பெற்றன. ஊர்ப் பெயரையும் உள்ளுர் இறைவனின் பெயரையும் இறைவியின் பெயரையும் நூற்றாண்டுகளாகச் சொல்லிச் சொல்லி வழிபட்ட தமிழ் மக்கள் முற்றும் வேற்று மொழியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது எப்படி பொறுத்துக் கொண்டார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமக்கு இழைக்கப்படும் ஆதிக்கச் செயல்களையும், தம் மொழிக்கு இழைக்கப்படும் அழிவுச் செயலையும் எதிர்க்க ஆற்றல் அற்ற கோழைகளாக இருந்தனர் என்பதையே இச்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவர்கள் இத்தகு அஞ்சி அடங்கும் அடிமைகளையும் பிரம்மதேயமாகப் பெற்றுத் துய்த்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. ஒரு சமயம் அரசன் அறிவித்த பிரம்மதேய கிராமங்களின் எல்லையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த உழுகுடிகளின் வீடும் நிலமும் இருந்தன. ஊரிமை பெற்ற அம்மக்களின் ஒப்புதல் பெறாமலே சோழ மன்னன் அவர்களது நிலத்தையும் வீட்டையும் பிரம்மதேய அந்தணருக்கு நன்கொடையாக வழங்கி ஊர்க்கோயில் கல்வெட்டிலும் வெட்டச் செய்துவிட்டான். ஆதனால் பாதிப்படைந்த அவ்வூர் மக்கள் வாய் திறக்கவே இல்லை. அப்படியே ஏற்றுக்கொண்டு அங்கு புதிய எஜமானர்களான பிராமணர்களின் நிலத்தில் உழுகுடியாக வேலை செய்தார்கள்.




நன்றி.

க.ப.அறவாணன்


முன்னாள் துணைவேந்தர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.



ஆசீவகமதம்

ஆசீவகமதம்.

              அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுவதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப்பற்றிக் கூறுவது அமைவுடைத்து. பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் ‘கோசால’ என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

                  ‘மக்கலி’ என்பது வடநாட்டில் பண்டைக் காலத்திலிருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தாருக்குப் பெயரென்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். ‘மக்கலி’ என்பது இவருடைய தந்தையின் பெயர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வழங்கியதென்று வேறுசிலர் உரைப்பர். மக்கலி, அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தை யுண்டாக்கிய மகா வீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர் வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்துவந்த காலத்தில், அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரது உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் ‘ஆசீவகமதம்’, அல்லது ‘ஆஜீவகமதம்’ என்பது. ஆருகதமதக் கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது. சற்றேறத்தாழ கி. மு. 500-இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடு பெற்றார் என்பர். மகாவீரர் வீடு பெற்ற சில ஆண்டுக்குப் பின்னர், கௌதம புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

                      ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய இந்த மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது. ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவ கதிர்’ என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம். நவகதிரையன்றி, ‘ஆதித்தியம்’ என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, ‘ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்’ என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும்.


               மற்கலிக்குப் ‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க் கண்டவாறு ‘நீல கேசி’ என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

‘உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

திரையா னரையான் றெரிவில் லுருவம்

வரையா வகை வானிடுவில் லனையன்

புரையா வறிவிற் புகழ் பூரணனே ’

(ஆஜீவக வாதச் சருக்கம் 15-ஆம் செய்யுள்.)


              ‘வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவு முடையனல்லானாகி ஆகாச தலத்து இந்திர தனுசுப்போலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றம்படாத வறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு’ (மேற்படி உரை.) ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப் பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,


‘தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்

பாழியிற் பிணங்குளுந் துளப்பெழப் படுத்தியே’


என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர், ‘தாழி - முதுமக்கட் சாடி * * * தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம் செய்வராதலின், அவரைச் சுட்டி நின்றது’ என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம். மேலே காட்டிய உரைப் பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகின்றது. அதாவது, ஆசீவகமதம் ஆருகத மதமாகிய ஜைன மதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை’, ‘நீலகேசி’ என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவகமதம் வேறு என்று தௌ¤வாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இந்தத் தவறுதலைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப் பரணியுரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம் ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.


‘சாவகர் அருகர் சமணர் ஆகும்;

ஆசீ வகரும் அத்தவத் தோரே’

-சேந்தன்திவாகரம்.

‘சாவகர் அருகர் சமணர் அமணர் ;

ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே’

-பிங்கலநிகண்டு.



‘சிவஞான சித்தியார்’ என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றான திகம்பர ஜைன மதம் என்று தவறாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ‘திகம்பரமொப்பினும் அநேகாந்த வாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப்போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ‘மணிமேகலை’, ‘நீல கேசி’ என்னும் இரண்டு நூல்களைத் தவிர, பிற்காலத்து நூல்களாகிய ‘சிவஞான சித்தியார்’, ‘தக்கயாகப் பரணி’, ‘திவாகரம்’, ‘பிங்கல நிகண்டு’ முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவக மதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டுவந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி இருத்தலும், குளியாமல் அழுக்குடம்போடு இருத்தலும், இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவக மதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிற்காலத்தில் தவறாகக் கருதப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டுவந்தனர். இந்த மதத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. ‘மணிமேகலை’ என்னும் பௌத்த நூலிலும் (சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை), ‘நீலகேசி’ என்னும் ஜைன நூலிலும் (ஆசீவக வாதச் சருக்கம்), ‘சிவஞானசித்தியார்’ என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவகமதம்) இந்த மதக்கொள்ளைகளை எடுத்துக்கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப்பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும், Encylopaedia of Religion and Ethics by James Hastings என்னும் ஆங்கில நூலும் உதவிபுரியும்.


                       இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது, தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகேசி’ என்னும் நூல் கூறுகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும் கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு, உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

‘கண்ணகி தாதை கடவுளர் கோலத்

தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் ’ - (நீர்ப்படைகாதை.)

எனவரும் அடிகளால் இதனை அறியலாம். இராச இராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலா சாசனங்களில் ‘ஆசுவ கடமை’ என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள ‘ஆசுவ கடமை’ என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒருவரியைக் குறியாது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள ‘நீலகேசி’யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே, ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்

Monday, April 2, 2012

மழைகளின் வகைகள்

மழைகளின் வகைகள்

 


1. ஊசித் தூற்றல்

2. சார மழை (ஊதல் காற்றௌடு கலந்து பெய்யூம் நுண்ணிய மழை)

3. சாரல்

4. தூறல்

5. பூந்தூறல்

6. பொசும்பல்

7. எறிதூறல் (பொடீக் கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)

8. தூவானம்

9. பொடித்தூறல்

10. ரவைத்தூறல்

11. எறசல்

12. பறவல்மழை

13. பருவட்டு மழை (மேலெழுந்த வாhpயாக)

14. அரண்ட பருவம் (தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை)

15. மழை மhhp

16. துணைமழை (முதல் மழையைத் தொடா;ந்து மறுநாளோ அதுக்கும்       மறுநாளோ பெய்வது)

17. பே மழை

18. நச்சு மழை (இடையில்லாமல் தொடா;ந்து பெய்துகொண்டேயிருப்பது)

19. வதி மழை (பூமியெல்லாம் சேறு ஆகும்படியாக)

20. கல் மழை (ஆலங்கட்டி மழை)

21. காத்து மழை (காற்றும் மழையூம் கலந்து பெய்வது)

22. சேலை நனைகிறாப்புல

23. கோடை மழை

24. கால மழை

25. தக்காலம் (மழைக்காலம்)

26. பாட்டம் பாட்டமாய் (விட்டுத் தொடா;;ந்து)

27. நீரூத்து மழை (தரையிலிருந்து நீh; கசிந்து வெளியேறிக் கொண்டேயிருக்கும் படியாகப் பெய்யூம் தொடா; மழை)

28. வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியானஇ பூமியைச் சாந்தி பண்ணமுடியாத மழை)

29. அட மழை (அடை மழை)

30. மாசி மழை (காpசல் விவசாயிகளுக்கு உகந்த மழை)

31. தை மழை (வேண்டாத மழை)

32. சுழி மழை ( பரவலாகப் பெய்யாமல் ஆங்காங்கே சுழி சுழியாகப் பெய்யூம் மழை)

33. பட்டத்து மழை (சாpயான காலத்தில் பெய்யூம் மழை)

34. எல்லைக் கட்டிப் பெய்யூம் மழை ( ஊhpன் எல்லையோடு பெய்து நின்றுவிடும்)

35. மகுளிக்கும் மழை (பூமி உள்வாங்கிக் கொண்டது போக மண் நீரை வெளியே கக்கும் மழை)

36. வெள்ள மழை

37. பரு மழை (கன மழை)

38. பருவ மழை

39. பதமழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை)

40. அப்பு மழை (மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது)



நன்றி.

கதைசொல்லி.