பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Wednesday, June 8, 2011

தஞ்சைப் பெரிய கோயிலும் தமிழும்

தஞ்சைப் பெரிய கோயிலும் தமிழும்

             வேதபுரோகிதர்களின் கட்டுப்பாடு தான் சோழப் பேரரசின் பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணற்றச் சான்றுகள் காணக்கிடக்கின்றன. இதனையும் மீறி தமிழுக்கும் சிவமதத்திற்கும் இராசராசன் பங்களிப்பு செய்திருக்கிறான் என்றால் அந்தப் பணிகளுக்குப் பின்னால் இரண்டு பெண்கள் இருந்ததை உணர முடிகிறது. அவன் பாட்டியான செம்பி யன் மாதேவியும் உடன்பிறந்த மூத்த வளான குந்தவையுமே இவர்கள். இவர்கள் இருவருமே சிவபக்தியிலும் தமிழ்மீதும் பற்றுக் கொண்டு 
இருந்தார்கள். இவர்களின் அன்புகலந்த அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி வளர்ந்து வந்தவன் அருண்மொழியாகிய இராசராசச்சோழன். சிவமத வளர்ச்சிகுறித்தும், சிற்பம், ஓவியம் முதலானவற்றிலும் 
கலைவளர்ச்சியி லும் பெரிதும் ஈடுபட அவனுக்கு ஆர்வ மூட்டி வளர்த்தார்கள் இவர்கள் என்று சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

         இராசராசனை வளர்த்த அந்த இருபெண்களும் பெருவுடையார் ஆலயத்தை அமைத்தலிலும், வழிபாடு நடத்தலிலும் தமிழ் ஆகமப்படியே அதாவது சிவ ஆகமப்படியே செய்திட வேண்டும் என்று உறுதியாக இருந்தி ருக்கிறார்கள். அதிலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதாகவே அமைந் திட வேண்டும் என்று அதற்கான வழி முறைகளை அவர்களே கண்டிருக்கி றார்கள். அவர்களின் எண்ணத்தை அவனும் இயன்றவரை நிறைவேற்றி இருக்கிறான். இவனால் கட்டப்பட்ட பெரிய கோயிலில் அமைக்கப்பட் டிருக்கும் பெருவுடையாரின் - லிங்கத்தின் உயரம் 12 அடியாக - உயிர் எழுத்தாக இருக்கிறது. பெருவுடையாரின் மெய்க்காப்பாளர்களாக இருபக்கமும் நிற்கும் துவாரபாலகர்கள் 18 அடியாக -மெய்யெழுத்தாக இருக்கிறார்கள். பெருவுடையாரும் அவரின் மெய்க்காப்பாளர்களும் தனித்தனியாக ஒரே கல்லில் வடிக்கப் பெற்று இருக்கிறார்கள். அக்கோயி லின் உயரம் 216 அடியாக - உயிர்மெய் எழுத்தாக கலையின் உச்சத்தை பெற்று நிற்கிறது. இத்திருக்கோயிலுள் அமையப் பெற்று இருக்கும் தென்னாடு கொண்ட சிவபெருமான் தான் ஒருவ னாக - ஆயுத எழுத்தாக அமையப் பெற்று இருக்க வேண்டும் என்பதே அப்பெண்மணிகளின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, தமிழின் மொத்த எழுத்துக்களான 247 ஐ உள்ளடக்கியே அக்கோயில் அமையப் பெற்றிருக் கிறது.

        ‘... கோயிலின் வெளித் திருச்சுற்றி லுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப் பட்டது. அது பன்னிரண்டடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும்          எட்டே காலடி அகலமும் உடையது. கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தனவேயன்றி வேறு தெய்வங்களுக்கு இடமில்லை....’ என்று பண்டாரத்தார் குறிப் பிட்டுள்ளார்.

            இந்த நந்திக்கும் பெருவுடையா ருக்கும் இடைப்பட்டநடை 247 அடியாக - தமிழின் ஆககூடுதல் எழுத்துகளாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

                    “... இராசராசன் தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ்மொழியில் அகவற்பா வில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட பெருவேந்தன் ஆவான். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற்கொள்வாரா யினர்.

எத்துறையிலும் பொதுமக்களுக்கு என்றும் அறிஞர்களுக்கு என்றும் இரு வேறான மொழியைப் பயன்படுத்தியவனும் ராசராசனே. தமிழ்க்கூத்து           என் றும் ஆரியக்கூத்து என்றும் ஒழுங்கு படுத்திவைத்திருக்கிறான்.

        தில்லையில் தேவாரமூவர்களின் பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகளை மறைத்து வைத்து அழிந்து கொண்டிருந்ததை மீட்டு எடுக்கும் பணியைச் செய்யுமாறு பரிந்துரைக்க இராசராசன் உடன் செவிசாய்த்திருக்கிறான்.

         தில்லை வாழ்தீட்சிதர்கள் இந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளை யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்திருந்ததற்கு காரணம் அவர்கள் கைக்கொண்டு இருந்த வேத ஆகமத்திற்கு எதிரிடையான போக்குகளை கொண்டு வந்துவிடும் என்பதுதான். இன்றைக்குக்கூட அவர்களின் போக் குகளை கவனிக்கும் போது அவர்களிடமிருந்து தேவாரப்பாடல்களை அவ்வளவு எளிதில் ராசராசனால் மீட்டு எடுத்து இருக்க முடியும் என்று நம்பு வதற்கில்லை. அவன் படைவலிமையைக் காட்டித்தான் மீட்டு எடுத்திருக்க முடியும்.

           முத்தமிழும் தஞ்சைக் கோயிலில் வளர்க்கப்பட்டன. இசைத்தமிழின் வளர்ச்சியாகத் திருமுறைகளைத் தொகுத்து தினமும் பெருவுடையார் முன்பு தமிழ்ப் பதிகங்களைப் பாட வல்லோர்களை நியமித்தான். இவ் வகையில் 48 தமிழ் இசை வல்லோர் கள் நியமிக்கப்பட்டுத்தினமும் திருக் கோயிலில் தமிழ் பாடவைத்து இருக்கிறான். இவர்கள் பாடும் போது உடுக்கையும் கொட்டி மத்தளமும் இசைக்க தக்க இசைக்கலைஞர்களை நியமித் திருக்கிறான்.

        நாயன்மார்களின் பாடல்களை  ‘பண்’ வகைகளைக் கொண்டு இசை அமைப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைப் பெறவும் அதை விரைவாக செய்து முடிக்க எண்ணினான். அதில் வல்லவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இறுதியில் எருக்கம்புலி யூரில் வாழ்ந்து வந்த இசையிலும் யாழிலும் வல்ல பாணர் குடியில் தோன்றிய நங்கை ஒருத்தி பண்ணியல்பு அறிந்தவள் என்று அறிகிறான். அவளை அழைத்து வந்து ஏழுதிரு முறைகளுக்கும் தனித்தனியாக தமிழ்ப்பண் அமைக்கச் செய்தான். அப்பண்ணிசையைக் கொண்டே இசை வாணர்களும் ஆடல்பாடல் வல்லவர்களும் தினம் தினம் தேவாரத்தை இசையோடு பாடியிருக்கிறார்கள், ஆடியிருக்கிறார்கள்.

           இப்படியான பணிகளை சிவமதத் திற்கும் தமிழுக்கும் செய்திருக்கும் இராசராசனை வேதியர்கள் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பலவழி களை மேற்கொண்டு இருந்திருக்கின் றனர். அதில் வெற்றியும் அடைந்திருக் கிறார்கள்.

நன்றி.
(தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் அளித்த கட்டுரையின் சுருக்கம்)

ஓங்கு பரிபாடல் - ஓர் அறிமுகம்

                      ஓங்கு பரிபாடல்: ஓர் அறிமுகம்

            பரிபாடல் என்பது பரிபாடல் என்னும் பாவினத்தால் ஆகிய பாக்களின் தொகுதி. இப்பாக்கள் பண்ணமைதியோடு பொருந்தியவை; பக்தியோடு மனமுருகிப் பாடப்பட்டும் பயிலப் பட்டும் வந்தவை. ஓங்கு பரிபாடல் என்று சீரிய பெரும்புகழை அந்நாளிலேயே பெற்று அமைந்தது.

இத்தொகை நிலை வகையால் ‘பா’ என்று சொல்லப்படும் இலக்கணமின்றி எல்லா பாவிற்கும் பொதுவாக நிற்றற்குரியதாய் இன்பப் பொருளைப் பற்றிக் கூறியதாய் உள்ளது. இது சிறுமை 25 அடியும் பெருமை 400 அடியும் எல்லையாகக் கொண்டுவரும் எனத் தொல்காப்பியம் கூறும்.

பரிபாடற்கண் மலையும் ஆறும் ஊரும் வர்ணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறுவர்.

அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வரும் என்பர் பேராசிரியர்.

பரிபாடலின் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

பரி என்னும் சொல் குதிரை ஓட்டம், நடை எனப் பல பொருள்படும். பரிபாடலின் ஓசை குதிப்பது போலவும், ஓடுவது போலவும், நடத்தல் போலவும் இருத்தலின் அவ் வோசை உடைய பாடல் பரிபாடல் என பெயராயிற்று என்று சிலர் கூறுவர்.

பரிந்த பாட்டு பரிபாட்டென வரும். ஒரு வெண்பாவாகி வராமல் பல உறுப்புகளோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது பரிபாடல் என்கிறார் இளம்பூரணர்.

பரிபாடல் என்பது பரிந்து வருவது அஃதாவது கலியுறுப்புப் போலாது நான்கு பாவா லும் வந்து பலவடியும் வருமாறு நிற்குமென்று நச்சினார்க்கினியர் கூறுவர். பாடல் நால் வகைப் பாக்களையும், அறுவகை உறுப்புகளையும் (கொச்சகம், அராகம், சுரிகம், எருத்து, சொற்சீரடி, முடுகியலடி) தாங்கி வருதலின் பரிந்த பாட்டு பரிபாடல் என்பது பெரும் பான்மையோரின் கருத்தாகும்.

பரிபாடலில் இடம் பெற்றுள்ள இருபத்திரண்டு பாடல்களில் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இயற்றியவர் பெயர்கள் கிடைத்தில. மீதமுள்ள பாடல்களைப் பாடியுள்ளோர் பதின்மூன்று பேர் ஆவர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல் காப்பிய உரையில் தொகை என்ற சொல்லைக் கையாண்டுள்ளதால் பேராசிரியர் கால மாகிய கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தொகை நூல் தோன்றி இருக்க வேண் டும் என்று சொல்வதற்கு வாய்ப்புள்ளது.

பரிபாடல்களின் தெய்வங்கள் (முருகன், திருமால்) வையை ஆறு, பாண்டிய அரசர் என்பன பரிபாடலின் பாடுபொருளாக உள்ளன. தெய்வங்கள் வரிசையில் திருமால், செவ் வேள் கொற்றவை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அரசர்களுக்கெனத் தனியாக எவ்விதப் பாடலும் இல்லை. தெய்வத்தைக் குறித்த பாடல்களிலும் ஆற்றைக் குறித்தப் பாடல்களிலும், அரசர்கள் பற்றிய செய்திகள் இடையிடையே அமைந்துள்ளன.

பரிபாடலில் காணப்படும் தெய்வங்கள் வரிசையில் முருகன், திருமால் என்னும் இரு தெய்வங்களைப் பாடு பொருளாகக் கொண்ட பாடல்கள் பல பரிபாடலில் இடம் பெற்றுள்ளன. மேலும், காடுறை தெய்வமாகிய கொற்றவை தெய்வம் குறித்தும் சில பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பரிபாடல்கள் மூலம் மதுரை, வையை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை ஆகிய வற்றின் பண்டைக் கால நிலையையும் பெருமையையும் அக்கால மாந்தர்கள் ஆடை, அணிகள், ஊண், உணவுமுறை, வணங்கிய கடவுளர்கள், வழிபாட்டு வகைகள், விழாக் கள் ஆகிய வாழ்க்கை முறைகளையும் குறிப்பிடுகிறது.

அகலிகை, ரதி, மன்மதன் போன்றோரின் புராணக் கதைகளையும் பண்டு ஓவியங் களாக ஆலயங்களில் தீட்டியுள்ளனர் என்பதையும், பண்டைக்காலத்தில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் போன்ற சொற்கள் நூறாயிரம், பதினாயிரம், லட்சம், கோடி போன்ற எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பரிபாடல் பிறசங்க நூல்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கின்றது.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவற்றின் பாடல்கள் அடிவரையறை யுடன் காணப்படுகின்றன.

பாவகை மற்றும் அடிவரையறை வேறுபாடுகளில் மட்டுமின்றி மொழிக் கூறுகளிலும் சங்க இலக்கியத்தில் இருந்து பரிபாடல் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது பாடு பொருள் வேறுபாடு; திணை, துறை வேறுபாடு; சொல் வேறுபாடு; புதிய சொற்களின் ஆட்சி, நடை வேறுபாடு போன்றவை காணப்படுகிறது.

நன்றி .
(மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ‘பரிபாடல்’ ஆய்வுக் கோவையிலிருந்து)