பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, January 2, 2020

‘‘எயினி’’ புலவர்பெயர் - அடையாளப்படுத்தலை முன்னிட்டு


‘‘எயினி’’ புலவர்பெயர் - அடையாளப்படுத்தலை முன்னிட்டு

                சங்கப் பனுவல் ஒரு புதுமைப் பனுவலாம். ஏனோவெனின் உரைகாரர் காலம் தொட்டு தற்காலத்தாரின் கையில் பட்டும்; புதுமைச் சிந்தனையும், புதுமை ஆய்வும், புதுமைப் போக்கும், புதுமை எண்ணத்தையும் புகுத்துவதாலேயாம். சங்கப் புலவோர் பாடலைப் பாடி ஏட்டில் ஏற்றிச்சென்றனர். பின்வந்தோரோ அல்லது சமகாலத்தாரோ அதைத் தொகை செய்தனர். அதன்பின் நூற்றாண்டுகள் சில கழித்து உரைகாரர் எடுத்து உரைவரைந்தனர். திணைத்துறைக் குறித்தனர். அப்பொழுது பாடலாசிரியரின் பெயர்கள் பல கிடைத்தில. சில ஐயத்திற்குரியனவாயின. சில முரண்பாடுள்ளவையாயின. சில பிழையோடு படியெடுக்கப்பெற்றன. அவ்வாறமைந்த பெயர்களே குறமகள் இளவெயினி, குறமகள் குறிஎயினி, பேய்மகள் இளவெயினி என்பனவாம்.

                இதில் குறமகள் இளவெயினி ஏறைக்கோனைப் பாடிய பாடலாக (புறநானூறு, 157) ஒன்று அமைந்துள்ளது. குறமகள் குறிஎயினி பாடிய (நற்றிணை, 357) பாடல் ஒன்று அமைந்துள்ளது. பேய்மகள் இளவெயினி சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடிய (புறநானூறு, 11) பாடல் ஒன்று அமைந்துள்ளது. மூவரும் தலா ஒரு பாடல் மட்டுமே பாடியுள்ளனர். அதில் இரண்டு அகப்பாடலும் ஒரு புறப்பாடலும் அடக்கம்.

                குறமகள் இளவெயினி என்பதில் எயினி என்பது இயற்பெயராகக் கொள்ளலாம் அல்லது எயினர் இனப் பெண் எனக் கொள்ளலாம். குறமகள் என்பது குறிஞ்சி நிலப்பெண் என்பதைக் குறிக்கும். ஈண்டு குறமகள் என்பது வருணாசிரம முறைப்படி அமைந்ததல்ல என்பது கருத்தில்கொள்ள வேண்டும். இவர் ஏறைக்கோன் என்னும் குறுநில, குறிஞ்சி மன்னனைப் பாடியுள்ளார் (புறம், 157). இவ்வேறைக்கோன் தன்னோடு சேர்ந்தவர் குற்றம் புரிந்தால் அதைப் பொருத்தலும், பிறர் தவற்றுக்குத் தான் வருந்துதலும், போர்க்களத்தில் தானே முன்னின்று போர்புரிதலும், பகைவேந்தர்களின் அவையில் அஞ்சாது நடத்தலும் ஆகிய நற்பண்புகளை உடையவன் என்கிறார். மேலும் மேகத்தை உயரத்தால் தடுக்கும் மலையின் உச்சியில், மாலை வேளையில், புணர்ச்சியில் மயங்கிய ஆண் கலைமான் மடப்பத்தையுடைய இளம்பிணையைக் கூடுதற்கு அழைக்கும் ஓசை மலைக்குகையில் இருக்கும் ஆண்புலியின் செவிக்குக் கேட்கும் மலைநாடனும், குறவர் இனத் தலைவனுமாகிய ஏறைக்கோன் என்று அவனது சிறப்புகளை விததந்தோதுகிறார். இதனை,

‘‘…….. எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பிற் கொலைவேற்
கேடற் கண்ணிக் குறவர் பெருமகன்
ஆடுமழை தவிர்க்கும் பயங்கொழு மீமிசை
……………….
பெருங்கல் நாடன்எம் ஏறைக்கும் தகுமே’’
-              புறநானூறு, 152

என்ற பாடலடிகள் பறைசாற்றுகின்றன. இதில் அமைந்துள்ள ‘‘நுமர்க்குத் தகுவனவல்ல’’, ‘‘எம் ஏறைக்கும் தகுமே’’ என்ற கூற்றுகள் இவரது உள்ளத்தின் இளமைப் பண்பைக் காட்டுகின்றன. அதனால் இவர் இளவெயினி எனப்பட்டார் என்று உரைகாரர் உரை செய்கின்றனர் (.வே.சா., பழைய உரை, ஒளவை சு.துரைச்சாமிப்பிள்ளை).

                குறமகள் குறிஎயினி என்பதிலும் எயினி என்பது இயற்பெயர். இவர் பாடியது அகப்பாடலாம் (நற்றிணை, 357). அதுவும் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. களவின்கண் உள்ள தலைவன் வரைவு நீட்டிக்கின்றான். தோழியோ தலைவியைப் பற்றிக் கவலை கொள்கின்றாள். ஆனால் தலைவியோ எவ்வித வருத்தமும் இன்றிக் காணப்பெறுகின்றாள். இது தோழிக்குப் பெரும் வியப்பாக இருக்கின்றது. அதற்குத் தலைவி, தோழி! அம்மலையில் பெய்யும் மழையில் நனைந்து மயிர் சிலிர்த்து மயில் ஆடுகின்றது. அதன் பாறையில் உள்ள சுனையில் குவளை மலரைக் கொய்து நானும் தலைவனும் நீராடினோம். அந்நாளையே நினைத்துக்கொண்டுள்ளேன். இப்போது இதுதான் என் நிலைமை என்று கூறுகின்றாள். இதனை,

‘‘நின் குறிப்பு எவனோ தோழி என்குறிப்பு
என்னொடு நிலையா தாயினும் என்றும்
நெஞ்சுவடுப் படுத்துக் கெடஅறி யாதே’’
-              நற்றிணை, 357

என்ற பாடலடிகள் சுட்டிநிற்கின்றன. இது அன்பின் வலிமையையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது. மேலும் ‘‘நின் குறிப்பெவனோ தோழி என்குறிப்பு’’ என்ற அடியில் குறி என்ற சொல்லைச் சிறப்பாகப் பயன்படுத்தியமையால் குறிஎயினி எனப்பட்டார் என்று உரைகாரர் உரை கூறுவர்.

                பேய்மகள் இளவெயினி என்பதிலும் எயினி என்பது இயற்பெயர். இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடியுள்ளார் (புறம்., 11). ஆன்பெருநை நீரில் பெண்கள் வண்டலலைத்து, சிற்றில் செய்து, பூச்சூடி விளையாடுகின்றனர். வஞ்சி எனப்படும் கருவூர் வான்முட்டும் புகழினை உடையது. அதன் அரசன் சேரமான் பெருங்கடுங்கோ ஆவான். அவன் எதிரி மன்னனிடம் திறைக்கொடை பெற்று அதில் செய்யப்பெற்ற பொற்கழஞ்சுகளைப் பாடினி பெற்றனர். பாணர்களோ பொற்றாமரைகளை வெள்ளிநாரால் தொடுக்கப்பெற்ற பூவாகப் பெற்றனர் என்கிறார். இதனை,

‘‘………………..
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
எனவாங்கு
கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே’’
-              புறநானூறு, 11

என்ற பாடலடிகள் உணர்த்தி நிற்கின்றன. ‘‘பாடினி இழைபெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான்அது பெறுகின்றிலோனைப் பரிசில்கடாநிலையாயிற்று; இனி இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவுகொண்டு பாடினாளொருத்தியெனவும், இக்களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையான் எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்’’ எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில்கடாயினளெனவுங் கூறுவாருமுளர்’’ என்று பழைய உரைகாரர் (.வே.சா பதிப்பு) உரைசெய்கின்றார்.

                இளவெயினியாரை ‘‘இவ்விளவெயினியாரே நற்றிணையில் வரும் குறியெயினியராகலாம். புறப்பாட்டு இளமைக் காலத்தும் நற்றிணைப்பாட்டு பிற்காலத்தும் பாடப்பெட்டிருக்கலாம்’’ என்று நற்றிணை உரையாசிரியர் (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு) கூறுவதை ஒளவை சு.துரைச்சாமிப்பிள்ளை தனது புறநானூற்று உரையில் குறிப்பிடுகின்றார். இதனால் குறமகள் இளவெயினியும் குறமகள் குறிவெயினியும் ஒருவரே என்பது புலனாகின்றது. கண்ணுக்குத் தெரியாத பேயே பெண் உரு கொண்டு பாடியதால் பேய்மகள் இளவெயினி எனப்பட்டார் என்று புறநானூற்று பழைய உரைகாரர் குறிப்பிடுகின்றார்.

பேய்மகள் என்பது தெய்வமேறி ஆடும் தேவராட்டி அல்லது பூச்சாரிச்சியைக் குறிக்கும். இதனை ‘‘பேய்மகள் - தேவராட்டி, பூச்சாரிச்சி, பேயினது ஆவேசமுற்றவர்’’ என்று .வே.சா (புறநானூறு பதிப்பு) குறிப்பிடுகின்றார். தேவராட்டிக்கு பேயோட்டி, சுராட்டி போன்ற பெயர்களும் உண்டு. இவளை  ‘‘உபாசனையினால் தெய்வ ஆவேசம் தன் வடிவிலே வரப்பெற்று அதன் அருளிப்பாடுகளை வழிபடுவோருக்கு அளிப்பவள்; தெய்வத்தாள் ஆளப்பெற்றவள்; தெய்வ ஆவேசம் தன் வடிவிலே வரப்பெற்று அதன் அருளிப்பாடுகளை வழிபடுவோருக்கு அளிப்பவள்; தெய்வத்தால் ஆளப்பெற்றவள்; தெய்வ மேறப்பெற்றவள்’’ (பெரியபுராண உரை) என்று பெரியபுராண உரை குறிப்பிடுகின்றது. இவ்வாறு தெய்வமேறி ஆடும் மங்கையே குறமகள் இளவெயினி ஆவார். மேலும் இவள் பாடிய ஏறைக்கோன் என்பவன் குறிஞ்சி நிலத்துக் குறவர்க்குத் தலைவன் ஆவான். இவன் போர்த்தொழிலியில் வல்லான். காந்தட்பூச் சூடுபவன். இதனால் பேய்மகள் இளவெயினியும் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவளாக இருப்பதற்கும் இடனுண்டு.

மேலும் எயினி என்னும் பெயர் எயினர் என்னும் இனத்தைக் குறிக்கும் பெயராகும். எயினர் என்பது பாலை நிலத்து வாழும் மக்களின் பெயராகும். எயினர் என்போர் வேட்டுவச் சாதியினர் ஆவர். இவ்வேட்டை அதிகம் நிகழும் இடம் குறிஞ்சி நிலமே ஆகும். மேலும் பாலை என்பதற்குத் தனிநிலம் வகுக்கப்படாமையால் ‘‘குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’’ என்னும் இளங்கோவின் வாக்குப்படி குறிஞ்சி நிலமோ அல்லது முல்லை நிலமோ பாலையாக மாறும். எனவே குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த வேடர்கள் பின்னர் எயினர் ஆயினர் எனக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் எயினர் என்போர் பாலைத்திணை மக்கள் அல்லர். குறிஞ்சி நில மக்களே என்பது போதரும். மேலும் பேய்மகள் இளவெயினி பாடிய பாடலில் பாடினியும், பாணனும் பரிசு பெற்றனர்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று கூறாமல் கூறுவது போல் தான் அமைந்துள்ளதே தவிர பேய் வேண்டுவதாகவோ அல்லது பேயின் சிறப்புகளைப் பாடியதாகவோ இல்லை. உரையாசிரியர்கள் பலரும் இவர் குறமகள் இளவெயினியிலிருந்து வேறுபடுத்திக்காட்டவே பேய்மகள் எனப்பட்டாள் என்று கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கதாகும். இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பேய்மகள் என்று குறிப்பிட்டிருந்தால் அதன் சரியான நோக்கம் தெரியவில்லை.

                எனவே இம்மூவரும் எயினர் என்னும் இனத்தைச் சார்ந்தவர்களோ அல்லது எயினி என்னும் இயற்பெயரைக் கொண்டவராகவோ இருக்கலாம். மேலும் இம்மூவரும் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெளிவு. குறமகள் குறிஎயினியும் குறமகள் இளவெயினியும் ஒருவரே ஆவர். பேய்மகள் இளவெயினி என்பவரும் பேய் பெண் உரு கொண்டவள் அல்ல. இவள் தெய்வமேறி ஆடும் பெண்ணே ஆவாள். இவை முழுமையையும் நோக்குங்கால் இம்மூவரும் ஒருவரே என்று எண்ணத் தோன்றுகின்றது.

முனைவர் க.கந்தசாமி பாண்டியன்,
தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப்பிரிவு),
இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி,
இராஜபாளையம்.