கலித்தொகை மடல்
மடல் என்பது புறக்காழுடையனவாகிய தாவரங்களுக்கு வரும் பெயர் என்பார் தொல்காப்பியர். ஆனால், தமிழ் இலக்கிய உலகில் மடல் என்றால் மடல் என்னும் இலக்கிய வகையையே குறிக்கும். இது தமிழில் வழங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. திருமங்கையாழ்வாரின் காலத்திலே (பெரிய திருமடல், சிறிய திருமடல்) தனி இலக்கிய வடிவங்கள் தோன்றினாலும் இதுகுறித்த கருத்து தொல்காப்பியார் காலத்தில் இருந்தே இருந்து விருகின்றது. நற்றிறணை (பா.எண்- 342, 146, 152, 387), குறுந்தொகை (பா.எண் – 14, 17, 32, 173, 182), திருக்குறள் (நாணுத்துறவு உரைத்தல்) போன்றவற்றில் மடல் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. அவை போலவே கலித்தொகையிலும் (பா.எண்- 58, 61, 138 – 141, 147) மடல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளது.
மடல் என்பது பெருந்திணைக்குரியது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளில் இன்பமே சிறந்தது எனச் செப்புகின்றது. இதனைத் தொல்காப்பியர்,
‘‘ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலோடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே’’
- தொல்காப்பியம், 997
என்பார். அதுபோல மடல் மகடூஉக்கில்லை என்பார். இதனை,
‘‘எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மைனயானே’’
- தொல்காப்பியம், 981
என்று கூறுவார். இக்கருத்தினைத் தெய்வப்புலவரும்,
‘‘கடலென்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்’’
- திருக்குறள்
என்று வழிமொழிவார். ஆனால், பன்னிருபாட்டியலோ,
‘‘மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்
கடவுளர் தலைவராய் வருங்காலே’’
- பன்னிருபாட்டியல், 63
என்று கடவுளைத் தலைவனாகக் கொண்டால் பெண் மடல் ஏறலாம் என்கின்றது. இதற்குத் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும் அடிகோலியது எனலாம். மொத்தத்தில் தலைவியை அடையத் தலைவன் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் மடல் எனலாம்.
‘‘மடலேற்றம் என்பது ஒத்த காமம் உடையார் மாட்டே நிகழ்வது’’ என்பார் வ.சுப.மாணிக்கம். அவ்வாறு அமையின் அது ஐந்திணையின்பாற்படும். அப்போது தலைவன் மடல் ஏறுவேன் என்று கூறுவான். ஆனால், தலைவன் மடல் ஏறினால் அது பெருந்திணையின்பாற்படும். கலித்தொகையில் இவ்விரண்டும் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள மடல் குறித்த பாடல்கள் அனைத்தும் மடலேறுவேன் என்று கூறுவதாகவே அமைந்துள்ளது. ஆனால், கலித்தொகையில் மட்டுமே மடலேறிய தலைவனைக் (பா.எண்- 138 – 140) காணமுடிகின்றது. மேலும், தலைவன் மடல் ஏறுவேன் (பா.எண்- 58, 61) என்று கூறுவதாகவும் தலைவன் மடல் ஏறிவற வேண்டும் என்று காமனைத் தலைவி ( பா.எண்- 147) வணங்குவதாகவும் அமைந்துள்ளது.
மடல் என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையாகும். ஆனால், தலைவன் இதனை உண்மைக் குதிரையாக கருக்கொள்கிறான்.
‘‘மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்புளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து’’
- கலி, 138 (8 – 9)
என்று மயில் இறகுகளை நூலில் கட்டி பூளைப்பு, ஆவிரம்பூ, எருக்கம்பூ இவற்றைத் தொடுத்து மடல் குதிரையின் கழுத்தில் கட்டி இருப்பதாகக் கலித்தொகை பகர்கின்றது. ஆனால், கலித்தொகை 139 வது பாடல் ஆவிரம்பு மாலையை மார்பில் அணிந்து எருக்கம் பூக் கணிணியைத் தலையில் சூடி, பனங்கருக்குக் குதிரைக்கு மணிக்கட்டி, அதன் மேல் தலைவன் ஏறுவதாக முரணாகக் கூறப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது. ஆனால், பின்னர் தோன்றிய மடல் இலக்கியங்களில் எருக்கம் மாலை, எலும்பு மாலை போன்றவற்றைத் தலைவன் சூடியதாகக் கூறப்பட்டுச் சிவனை உவமையாகக் கூறுவதாகவே அமைந்திருக்கின்றன (பெரிய திருமடல், சிறிய திருமடல் தவிர).
கலித்தொகையில் மடல் குறித்து விரிவாகப் பேசும் (138 – 141) நான்கு பாடல்களும் வெவ்வேறு நிலையில் அமைந்துள்ளது.
Ø முதலில் இணைந்த தலைவி பின்பு வேறுபட்டு நிற்கின்றாள். தன் அன்புக்கு அவள் பரிசாகக் கொடுத்தது கருக்கு நிறைந்த மடல் நான் தந்த மணமலர்க்கு அவள் தந்த பூக்கள் பூளையும் எருக்கும். பின் யான் பெற்ற துன்பத்தைக் கண்டு வருந்தித் தன்னுடன் இணைந்ததாகப் பாங்கர்க்குத் தலைவன் தெரிவிப்பதாக ஒருபாடல் (138) அமைந்துள்ளது.
Ø அன்பின் ஏமாற்றத்தால் தலைவி தந்த காதல்நோய் தலைவனின் மனஉறுதியை உரைக்கின்றது. அத்துன்பக்கடலை நீந்துவதற்கு இம்மடலையே கலமாகக் கொண்டு பயணிக்கின்றான். தலைவியை அடைவதற்காகவே தான் இப்பயணம் மேற்கொண்டிருப்பதாகச் சான்றோர்களிடம் செப்புகின்றான். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் சான்றோரே என் துன்பத்தை நீக்குங்கள் என்று முறையிடுகிறான்.
Ø தலைவியின் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தான் மடல் ஏறினேன். எனவே எனது துயரினைத் துடையுங்கள் என்று கண்டோருக்குக் கூறியதாக ஒருபாடல் அமைந்துள்ளது.
Ø தலைவன் மடல் ஏறி வருவதால் தமராகி ஊரில் தலைகாட்ட முடியாது என்ற நிலையில் தலைவியை சுற்றத்தாரே தலைவியைக் கொடுப்பதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.
Ø தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தான் தலைவியை விரும்புகிறான். அவளின் அழகிற்குக் காரணம் அவளின் வீட்டார் தான். எனவே அவர்களைத் தண்டிக்கவும் தனது அன்பின் மிகுதியாலும் தான் மடலூர்வதாக ஒரு பாடல் (58) அமைந்துள்ளது.
Ø தலைவன் தலைவியுடன் கூட தோழியை
நாடுகிறான். அப்பொழுது தோழி குறை நவில்கிறாள். தலைவன் தான் தலைவியை அடைய மடலூறவும் தயாராக இருப்பதாகக் கூறும்படியாக ஒரு பாடல் (61) அமைந்துள்ளது.
Ø தலைவனுடன் கூடிய தலைவி தலைவனைப்
பிரிகிறாள். பிரிவுத்துயர் தாங்காத தலைவி தலைவனை நினைத்துப் புலம்புகிறாள். அப்பொழுது தலைவன் தன் மேல் அன்பு மிகுதியாக மடல் ஏற வேண்டும் எனக் காமனை வேண்டுவதாக ஒரு பாடல் (147) அமைந்துள்ளது.
இவ்வாறு கலித்தொகையில் அமைந்துள்ள மடல் குறித்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. மேலும், மடல் என்பது களவின் இறுதி நிலை. அதிலும் தலைவன் தலைவியை அடைவதற்குப் பல வழிமுறைகளையும் ஆசிரியர் சுட்டியுள்ளார். இலக்கியம் என்பது காலந்தோறும் மாறும் தன்மையுடைத்து. அதன் அடிப்படையில் இலக்கணங்களும் மாறியமையைக் கலித்தொகைப் பாடல்கள் உணர்த்துகின்றது. எனவே, கலித்தொகையின் மடல் குறித்த செய்திகள் மடல் இலக்கிய வகையின் துளிர் நிலை எனக்கொள்ளல் தகும். மடலேறுதல் மேம்போக்கில் காதல் மிகுதிப்பாட்டைக் காட்டுகின்றது என்பதை விட உடன்போக்கு நிகழ்வு பிழையெனக் கொள்ளாத காலத்தே பெற்றோர் விருப்பதிற்கு மதிப்பு கொடுக்கும் பண்பட்ட காதலரைக் காட்டுகிறது. இது, தமிழர் தம் அறப்பண்பாட்டின் முக்கியக்கூறாகும்.