பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Sunday, September 18, 2016

மடல் பாடிய மாரங்கீரனார்


மடல் பாடிய மாரங்கீரனார்

                தமிழரின் இலக்கியக் கருவூலம் பாட்டும் தொகையுமாம். இவையே பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் பண்பாட்டினையும் பறைசாற்றி நிற்கின்றன. 2381 சங்கப் பாக்களில் 1862 பாக்கள் அகப்பாக்கள் ஆகும். இன்னபிற புறமாம். இதனைப் பாடியோர் 473 பேர். அதனுள் அகம்பாடியோர் 373 பேர். இதில் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர்கள் எடுத்தாண்ட உவமையால் குறித்தனர். பெயர்தெரிந்த புலவர்கள் சிலருக்கு அவர்கள் பயன்படுத்திப் பாடிய துறை முதலிய பிற வகையால் பெயருக்கு முன்னாள் அடைமொழி ஈந்தனர். வெறி பாடிய காமக் கண்ணியார், கோடை பாடிய பெரும்பூதனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், பாலை பாடிய பெருங்கடுங்கோ போன்றோரைச் சான்று பகரலாம். இவ்வரிசையில் வருபவரே மடல் பாடிய மாரங்கீரனார் ஆவார். இவ்வாறு இவர் அழைக்கப்பெறுதற்கான காரணங்களை இக்கட்டுரை ஆராயப்புகுகின்றது.

                மாரங்கீரனார் பாடிய பாடல்கள் மொத்தம் இரண்டு மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. அவை குறுந்தொகையின் 182 வது பாடல் மற்றும் நற்றிணையில் 377 வது பாடல். நம்முன்னோர் இவ்விரு பாடல்களை மட்டுமே வைத்து இப்பெயர் ஈந்திருக்க இயலாது. இவர் இத்துறையில் பல பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். மடல் துறைக்கு இப்பாடல்களே வெள்ளிடைமலையாய் இருக்கும் என்பதால் தான் தொகையைத் தொகுத்தோர் இரு பாடல்களை மட்டுமே எடுத்துள்ளனர் என்பது ஈண்டு புலனாகின்றது.

                மடல் குறித்துத் தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் சுட்டிய செய்திகள் மூன்றேயாம். அவை,
1.            மடல் கூற்று அன்பின் ஐந்திணைக்குரியது
2.            மடல் ஏறுதல் பெருந்திணைக்குரியது
3.            பெண் மடல் ஏறுதல் இல்லை; ஆண் மட்டுமே மடல் ஏறுதல் உண்டு
இதில் அன்பின் ஐந்திணையே சாலச்சிறந்தது. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் என்பர். மடல் கூற்றுப் பாடல்கள் குறுந்தொகையில் ஐந்தும் (பா.எண். 14, 17, 32, 173, 182), நற்றிணையில் நான்கு பாடல்களும் (பா.எண். 146, 152, 342, 377), கலித்தொகையில் நான்கு பாடல்களும் (பா.எண். 138, 139, 140, 141) அமைந்துள்ளன. மடல் துறையினைச் சுட்டாமல் மடல் குறித்த செய்திகள் இன்னும் சில பாடல்களில் வந்துள்ளன. இதில் முதலில் சுட்டப்பெற்ற ஒன்பது பாடல்களும் அன்பின் ஐந்திணையில் அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் ஐந்தும், நற்றிணையில் இரண்டும் (பா.எண். 146, 377) என ஏழு பாக்கள் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளன. நற்றிணையில் இரண்டு பாக்கள் (பா.எண். 152, 342) நெய்தல் திணையில் அமைந்துள்ளன. கலித்தொகையில் அமைந்துள்ள நான்கும் பெருந்திணையிற்பாற்பட்டது. மடல் ஏற்றத்திணைத் தொல்காப்பியர் பெருந்திணை வழக்காகத் குறித்தாலும் ஐந்திணைப் பாடல்களே அதிகம் உள்ளன. இதில் மாரங்கீரனார் பாடிய இரு பாடல்களும் குறிஞ்சித்திணையில் அமைந்துள்ளன. “அகப்பொருள் இலக்கணம் கூறியவர்கள் குறிஞ்சி முதலிய ஐந்திணை ஒழுக்கங்களில் குறிஞ்சித்திணைக்குரிய ஒழுக்கமாகவே மடல் ஏறுதலைக் குறித்தனர்என்ற முனைவர் .காந்தியின் (தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், . 16) கருத்தும் ஈண்டு சுட்டத்தக்கது ஆகும்.

                மடற்கூற்று நிகழ்த்துவதும் அதைச் சேட்படுத்துவதும் தலைவனும் தோழியுமாம். எனவே மடற் கூற்று இவர்கட்கே உரித்தாக அமைந்தது என்ற தொல்காப்பியத்தின் வழி நின்றே தன் பாக்களைப் படைத்துள்ளார் மாரங்கீரனார். “தோழி குறைமறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்கு உரைத்தது” (குறுந்., 182), “சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது” (நற்., 377) என்று தன் பாடல்களைத் தொல்காப்பியக் கோட்பாட்டின் படியே கட்டமைத்துள்ளார். இதில் குறுந்தொகைப் பாடலை நச்சர்நெஞ்சொடு கிளத்தல்துறைக்குச் சான்று பகர்கின்றார். இரண்டாவது பாடல் தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழிகேட்பத் தன்னுள்ளே சொல்லுவதாய் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

                குறுந்தொகையின் 14 வது பாடலில் தலைவன் களவுக்காலத்தில் எவ்வாறு தோழியின் துணையின்றித் தலைவியைப் பெற்றானோ அஃதேபோல் இப்பொழுதும் மடலேறித் தலைவியைப் பெறுவேன் என்கிறான். காமம் முதிர்கின்ற போது ஊராத குதிரையை ஊரும் குதிரையாகவும், சூடாத பூவினைச் சூடும் பூவாகவும் எண்ணுவர் என்று உலகின் மேல் வைத்துத் தோழி கூறுவதாகக் குறுந்தொகையின் 17 வது பாடல் அமைகின்றது. காமமே மடல் ஏறுவதற்கு அடிப்படை (நற்., 152); விலை கூறி விற்கப்படாத பூளை, ஆவிரை, உழிஞை, எருக்கம் இவற்றைச் சூடிப் பலரும் நகைக்க நான் மடலேறுவேன் (நற்., 146) என்றும் பிற ஐந்திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

                ஆனால் பெருந்திணைப் பாடல்களோ மடலேறிய தலைவனைக் (கலி., 137, 138, 140) காட்டுகின்றது. மேலும், தலைவன் மடல் ஏறி வருவதால் ஊரில் தலைகாட்டமுடியாது என்ற நிலையில் தலைவியைச் சுற்றத்தாரே தலைவனுடன் சேர்க்கின்றதனைக் (கலி., 141) காணமுடிகின்றது. இத்தனைக்கும் மேல் தலைவன் மடல் ஏறி வரவேண்டும் என்று காமனை வழிபடும் தலைவி (கலி., 147) மடல் ஏற்றத்தின் பரிணாமம். இவ்வாறு பிற மடல் பாடல்கள் சுட்ட மாதங்கீரனாரின் பாடல்களோ தனித்துத் தனித்துவமாக நிற்கின்றது.

                சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற அனைத்து மடல் பாடல்களும் நாணத்தைத் துறந்து, உயிருக்கு ஒப்பாகக் கருதிய மானத்தினைத் துறந்து மடல் ஏறித் தலைவியை அடைய வேண்டும் என்ற நோக்குடனே அமைந்துள்ளன. ஆனால், மாரங்கீரனாரோ மடல் என்பது தான் தலைவிக்கு அனுப்பும் காதல் தூது என்றே மடல் ஏற்றத்தினை மடைமாற்றம் செய்கின்றார். இதனை,
                                விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்

                                 மணிஅணி பெருந்தார் மரபிற் பூட்டி

                                 …………………………………

                                 கலிழ்கவின் அசைநடைப் பேதை

                                 மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த தூதே

-              குறுந்., 182
என்ற பாடல் உணர்த்துகின்றது. இப்பாடல்தான் ~மடல்| என்பது தற்போது ~கடிதம்| (தன் கருத்தை, எண்ணத்தைப் பிறருக்குத் தெரிவிப்பது) என்று அழைக்கப்பெறுவதற்கு மூலமாக  அமைந்திருக்கலாம். மேலும் இவரின் நற்றிணையின் 377 வது பாடலில்,
                                மடல் மா ஊர்ந்து, மாலை சூடி

                                 கண் அகன் வைப்பின் நாடும் ஊடும்

                                 ………………………………

                                 பண்ணல் மேவலமாகி, அரிது உற்று

                                 அது பிணி ஆக, விளியம் கெல்லோ

-              நற்., 377
எனத் தலைவி மீதுள்ள காதலால் மடல் ஏறுவது நாணமற்ற செயல். அதனினும் உயிர் விடுதல் மேல் என்கிறார்

                பிற மடல் பாடல்கள் வேறாக அமைய இவரது பாடல்கள் மட்டுமே மடலின் மாண்பினைப் பறைசாற்றுவதாய் அமைகின்றது. மேலும் இலக்கண அமைப்பிலும் இலக்கிய் கருத்தியலிலும் மற்ற பாடல்களை விடத் தனித்தே நிற்கின்றன. மடல் ஏறுவது உலகியல் வழக்கல்ல. அஃதொரு இலக்கிய வழக்கு என்பர். உலகியல் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் இவரது பாடல்கள் புதுமையாய் அமைந்துள்ளன. மேலும் தமிழரின் காதல் வாழ்வினைச் சிறிதும் சிறுமைப்படுத்தாது தமிழர்க் காதலை தலைநிமிரச் செய்கின்றது. இத்தகைய காரணங்களால் தான் இவர்மடல் பாடிய மாறங்கீரனார் என அழைக்கப்பெறுகின்றார்.

.கந்தசாமி பாண்டியன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இராசபாளையம் இராஜூக்கள் கல்லூரி,

இராசபாளையம்.


Sunday, August 21, 2016

பரத்தை தானே தலைவியது நிகரே



பரத்தை தானே தலைவியது நிகரே


                  பண்டைத் தமிழரின் இன்பியல் வாழ்வினைப் பகர்வன சங்கப் பனுவல்கள் ஆகும். இப்பனுவல்களில் பல்வேறு பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் தலைவி, தோழி, பரத்தை, நற்றாய், செவிலி, விறலி போன்றோர் பெண் பாத்திரங்களாம். இவற்றில் தலைவியும் தோழியுமே பெரும்பாலும் ஆதிக்கப் பாத்திரங்களாம். செவிலி, நற்றாயின் பங்களிப்பு குறைவே. அஃதேபோல் மொத்தத்தில் நோக்கின்; பரத்தையின் பங்கும் குறைவே. ஆனால் மருதத்திணை என்று நோக்குங்கால் அவள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிதே. இப்பரத்தை குறித்த கருத்தியல்கள் தவறாகவே சித்திரிக்கப்பெற்று வருகின்றன. அவற்றைக் களையும் நோக்கில் எழுந்ததே இவ்ஆய்வு. இதில் சுட்டப்பெறும் பரத்தை என்பவள் சங்கப் பனுவல் சுட்டும் பரத்தையே ஆவாள் என்பதும் ஈண்டு சுட்டத்தக்கது.


                வீரயுகக் காலத்தில் ஓயாத போர்களின் காரணங்களால் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது. மேலும் நிலவுடைமைச் சமூகம் என்ற அமைப்பு தோன்றியதும் (மருத நிலம்) இக்காலகட்டம் தான். தனக்குச் சொந்தமான நிலத்தின் உரிமை தனக்குப் பின் தன் சந்ததியினருக்கே என்ற எண்ணமும் தோன்றியதும் இங்கே தான். அதனாலேயே தனது சந்ததியை அடையாளப்படுத்தத் தோன்றியதே திருமணமுறை.  அதில் முதல் மனைவிக்கும் அவளது புதல்வர்க்குமே நில உரிமை என்ற பழக்கம் தோன்றியது. அதனால் தான் பரத்தை என்ற தலைவனின் மற்ற மனைவியர் ஓரங்கட்டப் பெற்றனர். பின்னர் இழிந்த முறையிலும் (விலை மகள்) சுட்டப்பெற்றனர்.

                ஒல்காப் புகழ் தொல்காப்பியனோ பரத்தை, காமக் கிழத்தை என்ற சொற்களையே பயன்படுத்துகின்றார். அஃதேபோல் காதற்பரத்தை, சேரிப் பரத்தை, நயப்புப் பரத்தை, இற்பரத்தை, இல்லிடைப் பரத்தை முதலான பெயர்களும் சங்கப் பனுவல்களின் மூலத்தில் இல்லை. மாறாக அதனைத் தொகுத்த போதோ அல்லது உரைஎழுந்த போதோ எழுதப்பெற்ற கூற்றிலும் துறைக் குறிப்பிலுமே அமைந்துள்ளன. எனவே இன்றைய பரத்தை என்ற சொல்லின் பொருளான பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, வேசி, தாசி, தேவரடியாள் (தேவடியாள்) முதலான பொருளில் அன்று வழங்கப்பெறவில்லை என்பதும் புலனாகின்றது.

                தோழி தலைவனைப் பார்த்துக் கூறுவதாக அகநானூற்றில் காணலாம் (பா.எண்.388). அதில்நின் பரத்தை தலைவியின் அருகில் வந்தாள். வந்தவள் யானும் நின் சேரியைச் சேர்ந்தவள்; தான் நின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ளேன் ; உனக்குத் தங்கை முறையும் ஆவேன் என்று கூறித் தலைவியின் நெற்றியினையும் கூந்தலையும் தடவினாள் என்கிறாள். இதனைப் பரணர்,
மைஈர் ஓதி மடவோய் யானும்நின்
சேரி யேனே அயல்இ லாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு என தன்கைத்
தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி
-          அகநானூறு 386 (10 – 14)
என்ற பாடலடிகளில் சுட்டுகின்றார். இப்பாடல்வழிப் பரத்தை என்பவள் தலைவியின் சேரியைச் சார்ந்தவளாகவும் அதே சமயம் தலைவியின் இல்லத்தருகிலும் இருந்திருக்கிறாள். இத்தனைக்கும் மேல் தலைவியின் பால் மிக்க அன்பும் வைத்திருந்தது தெற்றென விளங்குகின்றது. பரத்தையர் சேரி என்று சுட்டப்பெற்றிருந்தாலும் தலைவியின் இல்லத்தருகில் பரத்தை இருந்துள்ளாள் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது ஆகும். மேலும் தொல்காப்பியர்,
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க்கு உரையென இரத்தற் கண்ணும்
-              தொல்காப்பியம். நூற்பா. 1093.
என்னும் நூற்பாவில் பரத்தையை ‘எங்கையர்என்கிறார். என் தந்தை “எந்தைஎன்பதுபோல் என் தங்கை “எங்கைஎன்கிறார். இவ்வாறு தொல்காப்பியரே பரத்தையைத் தலைவியின் தங்கை என்றே சுட்டுகின்றார். பரத்தை என்பதற்கு “அயலோர்என்னும் பொருள் கூறுவர். ஒரு அயலாரை ஏன்? தலைவி தங்கை என அழைக்க வேண்டும். காரணம் தன் தலைவனின் மனைவியாக (தன் தங்கையாக) ஏற்றுக் கொண்டதே ஆகும். மேலும்,
கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடல் உண்டுனெ மொழிப
-              தொல்காப்பியம். நூற்பா. 1179
என்ற நூற்பாவில் தலைவி பரத்தையைப் புகழ்ந்து பேசினாலும் தம் உள்ளத்தில் ஊடல் குறிப்பும் உண்டு என்று கூறுவர். இதற்கடுத்த நூற்பாவில் (1180) பரத்தை தலைவியிடம் தன் குறைகளைக் கூறுவாள் என்றும் கூறுகின்றார். அவ்வாறு அவள் பகன்றாலும் தலைவி தலைவனைக் கடிவது மகிழ்வாக இருக்கும் போதும் ஊடலில் இருக்கும்போதுமாம் என்பார்

                பரத்தையிடம் சென்ற தலைவன் முற்றிலும் மகிழ்ச்சியாகவே இருந்தான் என்று கூறமுடியாது. காரணம் அவளும் ஒரு தலைவியே ஆவாள். தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனுக்கும் பரத்தைக்கும் இடையே ஊடலும் சினத்தலும் இகழ்ச்சிச் சொற்களும் ஏற்பட்டுள்ளது. இதனை,
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த
ஆய்இதழ் மழைக்கண் நோய்உற நோக்கி
தண்நறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினாள்…..”
-              அகநானூறு. 306 (11 – 14)
என்ற பாடலடிகளில் மதுரைக் கூலவணிகன் சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். இதிலிருந்து பரத்தைத் தலைவனுடன் கொண்ட ஊடல் புலனாகின்றது. இதில் பரத்தை தலைவனைச் சினந்து நோக்குகின்றாள். அவனது மாலையினைப் பிய்த்து எறிகின்றாள். இது சங்கத் தலைவியர் எவரும் செய்யாத செயலாக அமைகின்றதும் ஈண்டு நோக்கத்தக்கது  ஆகும்.
                அகநானூற்றின் 186 ஆவது பாடலில் தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையுடன் கூடுகின்றான். பின் மற்றொரு பரத்தையிடம் சென்றுவிடுகிறான். இதை அறியாத தலைவி முதல் பரத்தையைச் சாடுவதாக அமைந்துள்ளது. இதிலிருந்து தலைவனுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட பரத்தையுடன் இருந்த தொடர்பு அறியக்கிடைக்கின்றது. இதே போன்ற கருத்தினை மருதத்திணை பாடுவதில் வல்லவராகிய ஓரம்போகியார் அகநானூற்றில் 316 ஆவது பாடலில் தலைவனுக்குப் பல பரத்தைகளிடம் தொடர்பு உண்டு என்கிறார். மேலும் அதனை நினைத்து வீணே ஊடுதல் மனைவாழ் மகளிர்க்குரிய மாண்புடைச் செயலாகுமா? என்று கூறுகின்றார். இதனை,
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோமனைகெழு மடந்தை
-              அகநானூறு. 316 (11 – 14)
என்கிறார்.
                ஆலங்குடி வங்கனார், பரத்தையைத் தலைவன் பிரிகின்றான். அப்பொழுது பரத்தைஉன்னை அன்றி எனக்கு வேறு என்ன நலன் இருக்கின்றது? எனவே நீ சென்றாலும் என்னை மறவாது மீண்டும் அருள்வாயாக” (நற்றிணை, 400) என்று புகழ் கூறி அனுப்பி வைக்கின்றாள் என்கிறார். ஒரு வேளை தலைவனின் பொருள் ஒன்றே பரத்தையின் நோக்காக இருந்தால் மீண்டு வரும்பொழுது நிறைய பொருள் கொணர்க என்றிறுப்பாள். ஆனால் அவளோ தன்னை மறவாத மனம் வேண்டும் என்று வேண்டுவதும் ஈண்டு நோக்கற்பாலது.

                ஒரு தலைவிதலைவனே நீ பரத்தை மகளிரை எம் மனை அழைத்து வந்து அவரோடு கூடி வாழ்ந்தாலும் அவர் உனக்குப் புத்திர பாக்கியம் தந்து கற்புடையவராய் எம்முடன் இருந்திடல் அரிதினும் அரிதாகும்” என்கிறாள். இதனை, ஆலங்குடி வங்கனார்,
யாணர் ஊர நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்
புன்மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்த
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் அரிதே
-              நற்றிணை, 330 (6 – 11)
என்கிறார். இதிலிருந்து பரத்தைக்குக் குழந்தை பெற்றெடுக்கும் உரிமை இல்லை என்பது புலனாகின்றது. அதனால் தான் தலைவியின் புதல்வனைத் தனது புதல்வனாகக் கருதுகிறாள். அவனுக்கு அணிகலன்கள் அணிவித்து மகிழ்கிறார். அவள் காமத்திற்காக மட்டுமே தலைவனுடன் தொடர்பு வைத்திருந்தால் இவ்வாறு செய்ய வேண்டியதில்லை. பணத்திற்காக இருந்தால் என்றாலும் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. “பொருளுக்காகத் தன் உடலை விற்கின்றனர் என்ற கருத்து அகப்பாடல்களில் யாண்டும் காணப்பெறவில்லை. மாறாக அவர்கள் ஆணுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர்என்ற .சுப்புரெட்டியாரின் (அகத்திணைக் கொள்கைகள், . 390) கருத்தும் ஈண்டு சிந்தைகொள்ளத்தக்கதாம்.

                மேலும் பரத்தையர் சேரியில் இருந்து வந்த தலைவன் தனக்கு யாரையும் தெரியாது என்கிறான். அப்பொழுது தலைவி,
வருகமாள என்உயிர் எனப் பெரிது உவந்து
…………………..
மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை
நீயும் தாயை இவற்கு ………
……………………….. – வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே
-              அகநானூறு, 16
என்று தலைவி தன் மகனை அவளுக்கும் மகன் என்கிறார் சாகலாசனார். மாசு அற்றவள் என்றும் வானத்தில் உள்ள அருந்ததிக்கு ஒப்பானவள் என்றும் கூறுகின்றாள்.
                ஆனால், பரிபாடலில் (பா.எண்.20) தலைவன் பரத்தைக்குத் தன் தலைவியின் வளையலைக் கொடுத்திருக்கிறான். அதைக் கண்ட தோழியர்இப்பரத்தை இவ்வணிகலனுக்கு உரியவளான நம் தலைவியின் மாற்றாள்என்றே கூறுகின்றனர். இதனை,
இடுவளை ஆரமோடு ஈத்தான் உடனாக
கெடுவளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் எனநோக்க
-              பரிபாடல், 20 (33 – 35)
என்ற பாடலடிகள் சுட்டுகின்றன. மேலும்,
“………… அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!”
-              பரிபாடல், 20 (48 – 49)
என்று பரத்தையை விலைக் கணிகை என்றே சுட்டுகின்றது. இதே பாடலில் தலைவியும் பரத்தையும் வாதிடுகின்றனர் (பள்ளு இலக்கியம் நோக்குக). அப்பொழுது அங்குள்ள பெண்கள் தலைவியை நோக்கி இவ்வாறு தலைவன் பரத்தையர் மாட்டுச் செல்வது இயல்பே. அதனால் அவனை விளக்கி வைத்து வாழ்தல் என்பது இயலாததே என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கின்றனர். இவ்வாறு பரிபாடலில் அமைவதும் நோக்கத்தக்கது ஆகும். ஆனால் பாரிபாடல் என்பது சங்கப் பனுவல்களில் காலத்தால் மிகவும் பின்தங்கியது (தமிழர் சால்பு, சு.வித்யானந்தன், . 21). எனவே பின்னர் எழுந்த சமூக மாற்றத்தால் இக்கருத்து சுட்டப்பெற்றிருக்கலாம். இருப்பினும் இதில் பரத்தைமை ஒழுக்கம் தவறாகச் சுட்டப்பெறவில்லை என்பதையும் சிந்தைகொள்ளவேண்டும்.

                இவ்வாறு மருதத்தில் வரும் பரத்தை என்பவள் தலைவிக்கு நிகராகவே சித்திரிக்கப்பெற்றுள்ளார். தலைவன் தலைவியைப் பிரியும் போது தலைவி வருந்துவதைப் போல் பரத்தையும் வருந்துகின்றாள். தலைவனின் மீது தலைவியைப் போல் அன்பும் அதிகம் கொண்டவளாகவே வருகின்றாள். தலைவனைக் கடிவதில் தலைவிக்கு ஒருபடி மேலேயே இருக்கின்றாள். ஆனால் தலைவிக்கும் பரத்தைக்கும் இடையே உள்ள வேறுபாடு புதல்வரைப் பெறுதலே ஆகும். எனவே பரத்தை என்பவள் தலைவனின் மனைவியாகவே கருதப்பெற வேண்டியவள் ஆவாள். இதனால் தான் சிலம்பு .செல்வராசு பரத்தையைத் தலைவனின் மனைவி என்றே கூறுகின்றார். பரத்தை என்பவள்விலை மகளினம் வேறு; பரத்தைமை இனம் வேறு. பரத்தையர் தலைவனின் மனைவியராகக் கருதத் தக்கவராவார்என்று தனது சங்க இலக்கிய மறுவாசிப்பு (. 176) என்னும் நூலில் சுட்டுகின்றார்.

                அக்கால சமூகப் பின்புலத்தினால் பரத்தைமை என்பது சமூகத் தேவையாகவே இருந்துள்ளது. அதனால் தான் சங்கப் பனுவல் இதனைப்பரத்தைமை ஒழுக்கம்என்கிறது. “தொல்காப்பியமும் மருதச் செய்யுட்களும் கூறும் பரத்தை எத்தகையவள்? வீதிவீதியாய்த் திரியும் கீழ்மகள் அல்லள்; பரத்தைக் குலத்தவளேனும் இல்லறத்தின் பகைத்தியல்லள். சிலப்பதிகாரத்தின் மாதவி போன்று ஆடலும் பாடலும் சான்றவள். கலை பயின்றவள் பெரும்பாலான குடும்பப் பண்பு உடையவள். வள்ளுவன் கடியக் கூடிய பொருட்பெண்டு அல்லள்என்று மூதறிஞர் .சுப.மாணிக்கம் தனது தமிழ்க்காதலில் (. 231) குறிப்பிடுவது ஈண்டு சுட்டத்தக்கது ஆகும்.

                ஆனால் பிற்காலத்தில் (சமண, பௌத்த சமயம் வளரத் தோன்றிய காலம் - அற இலக்கிய காலம்) இது மிக இழிவாகச் சித்திரிக்கப்பெற்றது. அதன் பின்னர் சமூக மாற்றத்தினால் உண்மையாகவே இழிநிலையினை (விலை மாதர்) அடைந்துவிட்டது. இஃது எப்படி என்றால் நாற்றம் எனும் சொல் அன்று மணம் என்ற பொருளிலும் தற்போது துர்நாற்றம் என்ற பொருளிலும் வழங்குவது போல். எனவே பரத்தை என்பாள் தலைவிக்கு நிகரானவளே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே.

.கந்தசாமி பாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் இராஜூக்கள் கல்லூரி,
இராசபாளையம்.