காதல் இலக்கியம் – ஒரு பருந்துப் பார்வை
காதல். அதுதானே எல்லாம். இப்புவியில் காதல் கொள்ளாத உயிர்களே இல்லை. அதனால்தான் தமிழா் கவ்வுதல் எனும் பொருளிளில் காதல் என்னும் சொல்லைப் படைத்தனா். இக்காதலைப் பாடாத புலவனும் இல்லை. இக்காதல் குறித்து நோக்கினால் அதன் பார்வை தொல்காப்பியத்தைத் தொடும். இத்தகைய தொன்மையான காதல் என்னும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு பிற்காலத்தில் தனித்ததொரு சிற்றிலக்கிய வகைமை தோற்றம் பெற்றது. இக்காதல் இலக்கியத்தினைப் பருந்துப் பார்வையாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
தோற்றப் பின்புலம்
சமூக,
அரசியல் மாற்றத்திற்கேற்ப இலக்கியங்களும் மாற்றம் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் தொல்காப்பியத்தில் சுட்டப்பெற்ற அகம் என்று குறிக்கப்பெற்ற களவும் கற்புமே பிற்காலத்தில் காதல் இலக்கியமாகத் தோற்றம் கண்டது. சங்கப் பாக்களில் புறப்பாடலினும் அகப்பாடலே (1862 பாடல்கள்) அதிகம். இதில் களவு (882 பாடல்கள்), கற்பு (966 பாடல்கள்) குறித்த பாடல்களும் அடங்கும் (கைக்கிளை – 4 பாடல்கள், பெருந்திணை – 10 பாடல்கள்) (வ.சுப. மாணிக்கம்,
தமிழக்காதல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்). சங்க காலத்திற்குப் பின் காப்பிய காலத்தில் புலவர்கள் இவ்வகப்பொருளினைப் பல இடங்களில் வலிந்து
திணித்தனா். பிற்காலத்தில் அஃதாவது சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் இவ்வகப்பொருளினை இறைவனின்பாற் ஆற்றுப்படுத்தினா் (மாணிக்கவாசகர், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்). இக்காதல் என்பது இறைவனை ஆணாகவும் தன்னைப் பெண்ணாகவும் பாவிப்பதாய் அமைந்தது. அதன் பின்னா் மேலை நாடுகளின் வருகையால் தமிழ்ச் சமூகம் பாரிய மாற்றத்தினைச் சந்தித்தது. அது இலக்கியதினையும் இலக்காக்கியது. விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் பாளையக்காரர்கள் வீரியம் கொண்டனா். அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் தனது பயணப் பாதையில் மாற்றத்தினை ஏற்படுத்தியது. புலவர்கள் தங்களின் வறுமையினைப் போக்க சங்க காலத்தில் அரசனைப் புகழ்ந்தும் (புறப்பாடல்கள்) அவனது பரம்பரையினைப் புகழந்தும் பாடிப் பரிசில் பெற்றனர். ஆனால் பாளையக்காரர்கள் அவ்விதம் நீண்ட நெடிய வரலாற்றினைப் பெற்றிருக்கவில்லை. அதனால் சங்கபுலவர் போல் புறம் பாடிப் பரிசில் பெறுவது என்பது இயலாத ஒன்று. எனவே தான் அக்காலப் புலவர் அகப்பாக்களைக் கையில் எடுத்தனா். சங்க அகப்பாக்களைப் போலல்லாமல் காமச்சுவையினையும் அதில் இணைத்துக்கொடுத்தனா். காரணம் கி.பி. 17 ம்
நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பரப்பில் இலக்கியச் செழுமையில் ஏற்பட்ட தேக்க நிலையே ஆகும். பக்திப் பாடல்களும் அகப்பொருளோடு அமைந்தது. பக்தி இலக்கிய காலத்தில் பக்தி முதல் இடமும் காதலுக்கு இரண்டாம் இடமும் தர, பிற்காலத்தில் காதலுக்கு முதல் இடமும் பக்தி இரண்டாம் இடமும் பெற்றது.
முதல் இலக்கியம்
காதல்
இலக்கியத்தின் தோற்றம் என்பது சங்க காலத்தில் தொடங்கியிருந்தாலும் காதல் என்ற பெயரோடு தோன்றியது கி.பி. 17 ஆம்
நூற்றாண்டில் தான். வீரமாமுனிவரின் ஆசிரியராகிய சுப்பிரதீபக் கவிராயர் நிலக்கோட்டையை ஆட்சி செய்த மதுரை திருமலைநாயக்கரின் மைத்துனனாகிய நாகம கூளப்பநாயக்கன் மீது பாடிய கூளப்ப நாயக்கன் காதல் என்பதே இவ்வகையில் தோன்றிய முதல் இலக்கியம் ஆகும். இவ்வகையில் ஐம்பத்தெட்டுக்கும் மேற்கட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளதாக த.அழகப்பராசு (பக்.
139 – 142, தமிழ் இலக்கியக் கொள்ளை (தொகுதி – 8, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) பட்டியலிடுகிறார். தூதுக்கொத்துப் பதிப்பாசிரியர் ம.ராசேந்திரன் 26 காதல்
இலக்கியங்கள் இருப்பதாகக் (பக். 8 - 9, ம.ராசேந்திரன், காதல்
கொத்து, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை) குறிப்பிடுகிறார். சிற்றிலக்கிய வகை அகராதி எழுதிய ந.வி.செயராமன்
அந்நூலில் 24 காதல் பிரபந்தங்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். இவற்றையெல்லாம் நோக்குங்கால் மொத்தம் 66 காதல் நூல்கள் இருப்பதாக அறியமுடிகின்றது. இதில் சில நூல்கள் இன்னும் அச்சு வாகனம் ஏறவில்லை.
இலக்கணம்
சிற்றிலக்கிய
வகைமைகளுக்கான இலக்கணத்தைக் கூறும் பாட்டியல் நூல்களில் பெரும்பாலானவை இக்காதல் இலக்கியத்திற்கு இலக்கணம் செய்யவில்லை. இதற்கு
‘‘கொண்டமயல்
ஈரடிக் கண்ணியில் இசை காதலுக்கே’’
- சுவாமிநாதம்,
171
என்று சுவாமிநாதம் மட்டுமே இலக்கணம் செய்கின்றது. இக்காதல் இலக்கிய வகையில் தலைவியில் கேசாதிபாத வருணனை மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. அதனால் பிரபந்தத்திரட்டு பாதாதி கேசத்திற்கான புறனடையில்,
‘‘இன்னதுக்குப் புறநடையாய் காதலென்று பெயரா
யிசைத்தார்கள் பெரியோர்கள்’’
- பிரபந்தத்திரட்டு,
476
என்று குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் பாட்டியல் நூல்களில் இதன் இலக்கணம் சரிவர வரையறுக்கப்பெறவில்லை. அதனால் இவ்வகையில் தோன்றிய இலக்கியங்களைக்கொண்டே இலக்கணம் வகுக்கவேண்டிய சூழல் உள்ளது. வேட்டைக்குச் செல்லும் தலைவன் பூக்கொய்ய வரும் தலைவியைக் கண்டு காதல் கொள்கிறான் (இயற்கைப் புணர்ச்சி). பின்னர் இருவரும் பிரிந்து இல்லம் சென்றபின் விபரம் அறிந்த தலைவியின் வீட்டார் தலைவனை ஏசுகின்றனா். அப்பொழுது தலைவன் தலைவியை அழைத்துவர பல்லக்கு அனுப்புகிறான். அதில் தலைவி சென்று தலைவனுடன் மகிழ்வாக வாழ்கிறாள் என்பதே இக்காதல் இலக்கியத்தின் பொதுவான அமைப்பாகும். இதில் அகமரபு அமையப்பெற்று தலைவியின் வருணனையிலும் பிற இடங்களிலும் காமச்சுவை அதிகம் அமைந்துள்ளது. இதிலிருந்து புலவர்குழாம் பழமையிலிருந்து மாறாது அதே வேலை புதுமையையும் புதுக்கியுள்ளதனை உணரமுடிகின்றது. ஆனால் கந்தர் காதலில் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் துறையாய் அமைந்துள்ளது. மேலும் ஆந்தைக் காதல், கௌளிக் காதல், தும்மற் காதல் போன்றவை சோதிடம் குறித்துத் தோன்றியவை ஆகும். பின்னர் இது இறைவனுக்கும் பாடப்பட்டது. குறிப்பாக இந்து, இசுலாம், கிறித்துவம் ஆகிய மும்மதங்களிலும் இவ்வகை இலக்கியங்கள் தோன்றியுள்ளன (தருமக்காதல் – நூர்யிஸ்மால் சாயபு, ஐய நைனான் காதல்).
தமிழில் தோன்றியுள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலானவை சைவ இலக்கியங்கள். அதே வகையில் இக்காதல் இலக்கியத்திலும் சைவமே விஞ்சி நிற்கின்றது. அதிலும் முருகனின் பெயரில்தான் அதிகக் காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இத்தனைக்கும் மேலாக தெய்வச்சிலையா பிள்ளை என்பவர் மநுநீதிக் காதல் என்னும் காதல் இலக்கியம் செய்துள்ளார். இதன் நோக்கம் அறக்கருத்துக்களைக் கூறும் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் போன்றோரின் அறக்கருத்துக்களின் சிறப்பினை உணர்த்தவே ஆகும்.
காமச்சுவைக்கான காரணங்கள்
இக்காதல்
இலக்கியங்கள் தோன்றிய பதினேழாம் நூற்றாண்டு என்பது சிறிது போர்கள் இன்றி தமிழக மக்கள் அமைதியாய் வாழ்ந்த காலம். இக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லையாதலால் இக்காதல் இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் தங்கள் வீரத்தினை வெளிக்கொணர வேட்டைக்குச் சென்றதாய் அமையப்பெற்றிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது. மேலும் இக்காலம் முன்னர் கூறியது போல் இலக்கியப் பரீட்சயம் உடைய தலைவர்கள் குன்றிய இருந்த காலமாக இருந்ததாலும் இக்காதல் இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் பெரும்பாலும் தனிமனிதனாகவும் சிறு பாளையக்காரராகவோ இருந்ததினாலும் அவர்களின் கவனத்தைப்பெற இக்காமச்சுவையினை அதிகம் இவற்றில் பயன்படுத்தியுள்ளனா். இதில் வரும் காமச்சுவைகள் பெரும்பாலும் தலைவியை வருணிப்பதாகவே அமைந்துள்ளது. மேலும் இவ்வருணனை கேசாதி பாதமாகவும் அமைந்துள்ளது. ஆற்றுப்படை நூல்களில் அமைந்துள்ள விறலி வருணனையும் இவ்வகையில் அமைந்தாலும் அதில் காமச்சுவை என்பது தெரியா வண்ணம் புலவர் பயன்படுத்தினா். இக்காதல் இலக்கியங்கள் தோன்றிய காலப்பின்னணியினை நோக்கும் போது இது சரியென்றே தோன்றுகின்றது. ஆனால் பிற்காலத்தில் இக்காதல் இலக்கியங்கள் என்பவை தமிழ்ப் புலவர்களிடையே எந்த வரவேற்பையும் பெறவில்லை. காதல் என்பதும் காமம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. அதனால்தான் தொல்காப்பியர்,
‘‘மக்கள் நுதலிய அகணைந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாஅர்’’
- தொல்காப்பியம்,
1000
என்று குறித்தார்போழும். ஒருவேளை இக்காதல் இலக்கியங்கள் அனைத்தும் சுட்டிஒருவர் பெயர் கொள்ளப்பெறாமல் இருந்திருந்தால் பிற்காலப் புலவர்கள் இவ்வகையினைத் தொடர்ந்து தொட்டிருப்பார்கள்போழும்
காதலில் பிற இலக்கிய வகைகள்
அகக்கோவை
நூல்களே இக்காதல் இலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைந்திருக்கலாம். மேலும் உலா மற்றும் தூது இலக்கியங்களும் இவ்வகையில் இடம்பெற்றுள்ளன. மன்னனின் அரச அ ங்கங்களைப்
பாடும் தசாங்கம் எனும் இலக்கிய வகைமையும் இதில் காணக்கிடைகின்றது. அரசன் உலாப்போனபோது சோலையினைச் சார்ந்து இருக்கும் பொய்கை வரைச் சென்று அங்கு அவன் கண்ட தெய்வமகள் மேல் காதலால் இயற்கைச் சூழல் மாற்றமுற்றதாகப் பாடும் தாடகசிங்காரம் என்னும் இலக்கிய வகையும் இதில் அமைந்துள்ளது. இதற்கு,
‘‘மன்பவனி சோலை மலர்மலி வாவிவர
மின்னொருத்தி மின்போல் வியனெய்தக் – கன்னிக்
கிறைமோகத் தாற்சோலை யேற்றவெல்லாம் பாட
லறியுந்த டாகசிங்கா ரம்’’
- பிரபந்தத்
திரட்டு, 13
என்று பிரபந்தத் திரட்டு இலக்கணம் செய்கின்றது. இளவேனிற் காலத்தில் அரசன் ஒருவன் தெய்வக் கன்னியின் மீது காதல் கொண்டு சோலை நோக்கிச் செல்கின்றான். அதனை அறிந்து தேவ கன்னிகை அரசன் மீது அன்பு கொண்டு தூது நீக்கி பின்பு அவனை அனைத்துக் கொள்வதாகப் பாடும் காதலுத்தியாபவனம் (பிரபந்தத் திரட்டு-47, எனும் வகையும் இதில் உள்ளது. காதலால் ஏற்பட்ட மயக்கத்தை நிலவு ஒளிவீசும் போது கூறும் இலக்கிய வகையாகிய விடயசந்திரோதயம் (பிரபந்தத் திரட்டு – 42) எனும் இலக்கிய வகையும் காணப்பெறுகின்றது.
பவனிக்காதல் என்பது வேறு வகை
பவனிக்காதல்
என்பது வேறுவொரு இலக்கிய வகையாகும். உலா என்பது பவனி வரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட தலைவியின் நிலையினைப் புலவர் கூறுவதாய் அமையும். ஆனால் பவனிக்காதல் என்பது தலைவியின் நேரடிக் கூற்றாய் அமையும். எனவே உலா என்பதும் பவனிக்காதல் என்பதும் வேறானவை. மேலும் காதல் இலக்கியமும் பவனிக்காதல் இலக்கியமும் வேறானவையே ஆகும்.
மொத்தத்தில்
இலக்கியம் செய்யும் மரபு சற்று மங்கிப்போன காலத்தில் புலவன் தனது வறுமையினைப் போக்கவே இக்காதல் இலக்கியம் செய்துள்ளனா். ஆனால் இதில் காமச்சுவை மிகுந்திருப்பினும் இலக்கியச்செழுமை சற்றேனும் குறையவில்லை என்பதே உண்மை.
முனைவர் க.கந்தசாமி பாண்டியன்,
தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப்பிரிவு),
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி,
இராஜபாளையம்.