பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Friday, June 1, 2012

கண் கொடுத்த திருக்கண்ணீசுவரர்

கண் கொடுத்த திருக்கண்ணீசுவரர்

              சைவக் குரவர்கள் அறுபத்து மூவர் பாடிய பாடல்கள் பன்னிரெண்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகின்றது. இப்பன்னிரு திருமுறைகளில் முதல் பதினொரு திருமுறைகள் இறைவனை அடைவதற்கான வழிவகைகளையும் இறைப்போற்றுதல்களையும் நமக்குப் பகர்கின்றன. ஆனால், பன்னிரண்டாம் திருமுறையோ இறைவனை அடைந்தவர்களின் வாழ்வியலையும் அவர்களின் இறை அனுபவத்தையும் நமக்குத் தெற்றென விளக்குகின்றது. பதினொரு திருமுறைகளும் சம்மிதா மந்திரங்கள் பதினொன்றையூம் இப்பெரியபுராணம் சிவமூலமந்திரமாகிய பஞ்சாட்சரத்தையும் ஒத்தது. இதற்கும் மற்ற திருமுறைகளுக்கும் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு இடைவெளி இருக்கின்றது. இருப்பினும் இதுவே முதன்மையானதாகக் கொள்ளத்தக்கது. ஆனால், அதன்பின் தோன்றிய புராணங்களும் இறையனுபவத்தையும் திருவிளையாடல்களையும் நமக்குத் தெரிவுறுத்துகின்றது. இது மாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் காலத்தில் தான் (18 ஆம் நூற்றாண்டு) அதிகம் தோன்றியது. 1893 ல் சேறைச் சமஸ்தானத்தில் சமஸ்தான வித்துவான் இராமசாமிக்கவிராயர் அவர்களால் சேறைத்தலபுராணமும் வெளியிடப்பெற்றது. இதில் இறைவனே மன்னனுக்குச் சேவகம் செய்து கண்கொடுத்த வரலாறும் இடம்பெறுகின்றது.

                 ‘‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
                 ஆகுல நீர பிற’’
                                                                              -        குறள்

என்பது வள்ளுவர் வாக்கு. மனத்துன்கண் மாசு இலன் ஆதல் அறம் ஆகும். அத்தகைய அறத்தோடு வாழ்ந்தவன் வீரபாகு என்னும் பாண்டிய வேந்தன். இவன் அந்தணனைக் கொன்றதனால் பிரம்மகத்தி பாவத்திற்கு ஆளாகின்றான். பின்பு சேறைச் சமஸ்தானத்துத் தேவதானம் பெரிய கோவிலை வழிபட்டுப் பாவம் போக்கினான். அன்றிலிருந்து சிவனேசச் செல்வனாய் வாழ்ந்தான். இவன் மீது விக்கிமசோழன் எனும் சோழ மன்னன் படைமேற்சென்றான். தோல்வியடைந்த பாண்டியன் பரமனைச் சரணடைந்தான். அப்போது இறைவனே பாண்டிய மன்னனின் படைத்தளபதியாகிச் சோழனை வெற்றி கொண்டான். இதனை,

          ‘‘சென்று நேரியன் சேனை புகுந்துநீ
            யொன்று பூசலுடற் றுமவ் வேளையிற்
           குன்று போலுங் குறட்டை யேவிநாம்
          வென்று நல்குவம் வெற்றியுகை கென்றான்’’
                                                                  -        சேறைத்தலபுராணம்

என்று இறைவன் சேவகம் செய்த செய்தியைப் பகர்கின்றது. பாண்டியனின் பக்தித் திறத்தால் இறைவனே படை நடத்தி வெற்றி கண்டமையால் இவ்விறைவனுக்குச் ‘‘சேவகத்தேவர்’’ என்ற பெயர் உண்டாயிற்று. ஆனால், சோழ மன்னனோ கண் இழந்தான். இதனை,

       ‘‘விழிமறைத்தது கண்டஞ்சி வேந்தனு மீண்டபோதில்
      இழிவுறச்சிவி கைதோளிலேந் துவோர்சுமை போகாமல்
     வழியினிற் காறள்ளாடிமன் விழவளவன் வீழ்ந்தான்
     அழிவுறச்சுமந் தான்வீழ வன்சுமைக் குடம் வீழ்ந்தென்ன’
                                                         -        சேறைத்தலபுராணம்

எனும் அடிகள்  இயம்புகின்றன. சோழன் தன்கொடுஞ்செயலை எண்ணி மனம் வருந்தி இறைவனை இறைஞ்சி அன்பு செலுத்தினன். இதே போன்று தான் கண்ணப்பனாரும் அன்பு பூண்டார். அவருடைய அன்பினை என்புருகி மணிவாசகம் புகன்றவரான மாணிக்கவாசகப் பெருமானார்,
          
           ‘‘கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்ட பின்
           என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
          வண்ணப்ப பணித்தென்ன வாவென்ற வான்கருணைச்
          சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி’’

என்று தனது திருக்கோத்தும்பியில் பகன்றுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது. ‘‘அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே’’ என்ற மந்திரத்திற்கொப்ப அன்பைச் சிவமாகக் கொண்டதனால் இறைவனானவன் அன்பு வலையில் அகப்பட்டுச் சோழனுக்குக் கண் கொடுத்தார். இதனைச் சேறைத்தலபுராணம்,

        ‘‘நாதனருட்படி கோயினாடி முறைப்படி தேவும்
        வேதவிதிப்படி யாகமேவ விருந்தின போது
        பாதம் வழுத்திட வேயோர் பார்வைவரக் கனிவோரு
        தீதற வூத்தர கீழ்பாற்சேர் திசையிற்றனியோகி’’
                                                   -        சேறைத்தலபுராணம்

என்ற செய்யுள் வழி தெற்றென விளக்கி நிற்கின்றது. திண்ணப்பனென்பதோர் கண்ணப்பனார் இறைவனுக்குக் கண் கொடுத்தார். இதனை,

            ‘‘செங்கண்வெள் விடையின் பாகர்
                      திண்ணனார் தம்மை யாண்ட
            அங்கணர் திருக்கா ளத்தி
                     அற்புதர் திருக்கை அம்பால்
             தங்கண்முன் இடக்கும் கையைத்
                      தடுக்கமுன் றடுக்கு நாக
             கங்கணர் அழும வாக்குக்
                          கண்ணப்ப நிற்க என்ற’’

என்ற பாடல் பறைசாற்றி நிற்கின்றது. அதுபோலவ, திருமால் திருவீழிமிழலையில் ஆயிரம் தாமரை மலர்களால் நாள்தோறும் சிவநாமம் கூறிப் பெருமானைப் பூசித்தார். ஒருநாள் இறைவன் விளையாட்டால் ஒருமலர் குறைய திருமாலோ தனது கண்மலரைக் கொடுத்தார். அவருடைய அன்பிற்கு மகிழ்ந்து திருமாலுக்குக் கண் கொடுத்து ‘கண்ணன்’ எனும் திருநாமம் சூட்டிச் சக்கரத்தையும் கொடுத்தார். இத்திருவிளையாடலை,

                 ‘‘நக்குலா மலர்பன் னூறு
                             கொண்டுநன் ஞானத் தோடு
                  மிக்கபு சனைகள் செய்வான்
                              மென்மலர் ஒன்று காணா
                  தொக்குமென் மலர்க்கண் என்றால்
                               கொருகணை யிடந்தும் அப்பச்
                  சங்கரங் கொடுப்பார் போலுஞ்
                                      சாய்க்காடு மேவி னாரே’’

என்று அப்பரின் அடிகளால் அறிமுடிகின்றது. இவற்றையெல்லாம் ஒருங்கே நோக்குங்கால் இறைவனுக்குக் கண் கொடுத்தோர் இருவர்.  ஆனால், இறைவனே தன் பக்தனுக்குக் கண்கொடுத்த நற்பேறு பெற்றவன் விக்கிரமச் சோழன். இவன் அன்பால் தான் இவன் இறைவனுக்கு இல் கட்டி வழிபட்டான். அந்த இல்லின் தலைவனுக்குத் ‘‘திருக்கண்ணீசுவரர்’’ என்னும் திருப்பெயர் பொறித்தான். இதனைச் சேறைத்தலபுராணம்,

           ‘‘ஆலயமொன்று புதுக்கியாள் சிவலிங்க நிறுத்தி
           யேல்வழியொன்று பெறக்கண் ணீசரெனும் பெயரிட்டு
            ஞாலம் விரும்பழகுக்கு நாயகியும் புவை வைத்துச்
            சோலை வளந்தனை யுற்றுஞ் சோழனிந்தன் னிப்பால்’’
                                                               -        சேறைத்தலபுராணம்

எனும் பாடல் செப்பி நிற்கின்றது. இறைவனுக்குக் கண்கொடுத்துத் திண்ணன் கண்ணப்பனானர். திருமால் கண்ணனானார். ஆனால், இறைவன் விழி கொடுத்துத் திருக்கண்ணீசர் ஆனார். சோழ பாண்டிய மன்னர்களின் இறை பக்திக்காகவே சோழபுரத்தில் ‘‘விக்கிரம பாண்டீஸ்வரர்’’ ஆலயம் அமைந்துள்ளமையை ஈண்டு அறியக் கிடைக்கின்றது. இவ்வாறு அன்பால் விழி கொடுத்தால் நாமும் இறைவன் ஆகலாம்.

அகநானூற்றில் கண் புலப்பாடு

அகநானூற்றில் கண் புலப்பாடு
முன்னுரை

          தமிழ்கூறு நல்லுலகில் தோன்றி பழந்தமிழ் இலக்கியங்களின் வர்ணனைகளுக்கு நிகரான வர்ணனைகள் வேறு எவ்விலக்கியங்களிலும் இல்லை எனலாம். நுணுகிப்பார்க்கும் திறனும் உற்று நோக்கலும் சங்கப் பாக்களைச் செம்மாந்து நிற்கச் செய்கின்றன. அப்புலவர்களின் பார்வையில் பார்வை உறுப்பான கண்கள் எவ்வாறு புலப்படுத்தப்படுகின்றன என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கண்

          கடவுள் படைத்த உடல் உறுப்புகளுள் உணர்ச்சி மிகுந்த உறுப்பு கண் ஆகும். உடலின் எந்த உறுப்பிற்கு நோவு ஏற்ப்பட்டாலும் பொதுவாகக் கண்கள் கலங்கும். இதனையே அதற்குச் சான்றாகக் கூறலாம். பொதுவாக, வழக்கில் நகத்தின் நுனிப்பகுதியை நகக்கண் என்றும் தேங்காய், நுங்கு முதலிய பொருட்களின் பயனுறு பகுதியின் தலைப்பகுதி கண் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும். அவ்வகையில் உலகியலைக் கண்டு உள்ளத்தால் பயனுறச் செய்யும் பார்வை உறுப்பையும் கண் எனல் தகும். இதனை இடுகுறிப் பெயராகக் கருதாமல் இனி காரணப்பெயராய் மொழியும் சிறப்பாகும். கண்ணின் பயனாலே நாம் இறக்கும் வரை பயணிக்கின்றோம். பல இடங்களில் கேள்விக்காகவும் சில இடங்களில் விடைக்காகவும் விழி மொழியையே பயன்படுத்துகின்றௌம்.

          ஐம்பொறிகளும் தமக்கென ஒவ்வொரு தனித்தன்மையுடைய செயல்பாடுடன் இயங்கினாலும் ‘கண்’ மட்டும் ஏனைய நான்கு பொறிகளையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக கண் ஒரு தீயவரைக் காணின் அவர் பக்கம் கால்கள் செல்லாது. வாய் அவருடன் பேசாது. இது போன்று கண் ஐம்பொறிகட்கும் தலையாயதாய் விளங்குகின்றது.

          கண்களின் சிறப்பினை விரிப்பின் அகலும். சுருங்கக் கூறின் மொழியின்றி கூட வாழலாம். ஆனால், விழி இன்றி வாழல் கடினமே. அத்தகு கண்ணானது அகநானூற்றில் அடையாளப்படுத்தவும் உவமைப் பொருளிலும் உரிச்சொல் அடையுடனும் புலப்படுத்தப்படுகின்றது.

அடையாளப்படுத்துதல்

          கண் எனும் சினைப்பெயரானது அடையாளப்படுத்தும் விதமாய் ஆகுபெயரால் அமையும். அகநானூற்றில் உற்றுநோக்கல் சார்ந்த பண்பில் யானையைக் குறிப்பிடும் இடங்கள் கண் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. இதனை,

                        ‘‘………………..சிறுகண் யானை
                        இரும்பிடித் தடக்கை…………..’’
                                                                                  -        அகம், 117
எனும் இடத்தும்
                         ‘‘சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
                        வான்வாய் திறந்தும்…………..’’
                                                                                -        அகம், 179

எனுமிடத்தும் யானையானது சிறிய கண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

          யானைக்குப் பெரிய உருவமும் நீண்ட தந்தமும் வலிய துதிக்கையும் உள்ளவிடத்துக் கண்ணைக் கொண்டு அடையாளப்படுத்துவதற்குக் காரணம் பெரிய உடலும் வலிய துதிக்கையும் சிறிய கண்களாலே வழி நடக்கும். அத்தனை பெரிய உடலில் கண்கள் இன்றேல் உடலின் ஆற்றலும் தோற்றமும் வீணே போய்விடும். அத்தகுத் திறத்தாலே மாற்றிமை மிக்க யானையானது சிறிய கண்களால் ‘சிறுகண் யானை’ எனும் பெயரில் அடை, சினை, முதலாய் இலக்கண வரம்பினின்று சிறப்பாகக் கூறப்படுகின்றது. இதனின்று புலப்பாடும் அதைப்புலப்படுத்தும் பாங்கும் தௌ்ளிதின் விளங்கும்.

உவமைப் பொருள்

          காதலைப் பாடாத கவிஞன் எவனும் இல்லை என்பது போல் கண்ணினைப் படாதா கவிஞர் எவரும் இல்லை. கண்கள் காந்தத்திற்கு நிகரானவை. சில இடங்களில் கவரும். அதனினும் வலிமையான சிலவற்றால் கவரவும் படும். கவரும் தன்மையாலே கண்ணிற்கு உவமைகளும் மிகுதியாகும்.

          முன்பு கூறியவாறு, ஒன்றன் நுழைவுப் பகுதி கண் எனப் பொதுவாகப் பெயர் பெரும். குறிஞ்சிப் பகுதியில் ஒரு பாறையில் ஒழுகும் நீர் நிறை சுனையில் பன்றியானது நீர் பருகுகின்றது. அச்செயலினைப் புலப்படுத்தும் பரணர் சுனையினை பாறைக்குக் கண் என்கிறார். கண்ணினின்று வழியும் கண்ணீராக இவ்விடத்தே நம் சுனையைக் கருதுதல் தவறாகும். சுனையானது வெளிப்படும் இடம். அப்பாறைக்கு அணிகலனாகப் பொருள்படும்படி சுனையை பாறைக்கும் கண் என்கிறார் பரணர். இக்காட்சியை,

                     ‘‘…………….பரூஉமயிர்ப் பன்றி
                      பாறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி’’
                                                                      -        அகம், 178
எனும் அடிகளால் அறியலாம்.

கண்ணின் நிறம் கருமையும் வெண்மையும் கலந்த நிறமாயினும் கண் புலப்பாட்டில் கருமை முதலிடம் பெறுகின்றது. கண்ணைப் போன்று கருமை நிறத்திற்கும் கவரும் தன்மை நிறைவே ஆகும். எனவே, கருநிற மலர்களுக்குக் கண் உவமையாகின்றது. சில இடங்களில் கண்களுக்கு மலர் உவமையாகின்றது. அவ்வகையில் கண்களானது கருமை நிறமுடைய குவளை மலர் மற்றும் நெய்தல் மலருக்கும் உவமையாக உவமிக்கப்படுகின்றன. அவை,

                        ‘‘கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
                          கல்முகை நெடுஞ்சுனை நம்மொடுஆடி’’
                                                                        -        அகம், 228

                          ‘‘சிறுகரு நெய்தற் கண்மேல் மாமலர்ப்
                            பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்’’
                                                                          -        அகம், 230

எனுமிடங்களே ஆகும். சிறப்பாக வற்றிய சுனையானது வறட்சிக் குறிப்பாய் யானையின் கண்ணிற்கு உவமையானதாய் வருகின்றது. இதனை,

                   ‘‘பசித்த யானைப் பழங்கண் அன்ன
                   வறுஞ்சுனை………………….’’
                                                               -        அகம், 321

எனும் அடிகள் உணர்த்தியமைகின்றன.

உரிப்பொருள் அடையுடன் வரல்

          நலம்புனைந்துரைத்தலில் மீன் போன்ற கண்ணுடையாள் எனப் பெண்களை வர்ணிப்பர். அகநானூற்றில் அம்மீனும் கண்களால் உரிப்பொருள் அடையுடன் குறிக்கப்படுகின்றது. ‘கடுமை’ எனும் உரிப்பொருளுடன் மீனின் கண்கள் கூறப்பட்டு அதனைக் கடலினின்று நெய்தலும் பிடித்து வந்த செய்தியும் பதிவாகியுள்ளது. அதனை,

                        ‘‘திமிலோன் தந்த கடுங்கண்வயமீன்’’
                                                           -        அகம், 320
எனும் அடியால் அறியலாம்.

நிறைவுரை

          பார்வை உறுப்பிற்குக் கண் என்ற பெயர் வந்த மாற்றையும் அக்கண்ணினை அகநானூற்றில் புலவர்கள் பல்வேறு வகைகளில் எடுத்தாண்ட மாற்றையும் இக்கட்டுரையானது விளக்கி அமைகின்றது.



நன்றி.

ம.பிரசன்னா,

Monday, May 28, 2012

கலித்தொகை மடல்

கலித்தொகை மடல்

        மடல் என்பது புறக்காழுடையனவாகிய தாவரங்களுக்கு வரும் பெயர் என்பார் தொல்காப்பியர். ஆனால், தமிழ் இலக்கிய உலகில் மடல் என்றால் மடல் என்னும் இலக்கிய வகையையே குறிக்கும். இது தமிழில் வழங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. திருமங்கையாழ்வாரின் காலத்திலே (பெரிய திருமடல், சிறிய திருமடல்) தனி இலக்கிய வடிவங்கள் தோன்றினாலும் இதுகுறித்த கருத்து தொல்காப்பியார் காலத்தில் இருந்தே இருந்து விருகின்றது. நற்றிறணை (பா.எண்- 342, 146, 152, 387), குறுந்தொகை (பா.எண் – 14, 17, 32, 173, 182), திருக்குறள் (நாணுத்துறவு உரைத்தல்) போன்றவற்றில் மடல் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. அவை போலவே கலித்தொகையிலும் (பா.எண்- 58, 61, 138 – 141, 147) மடல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளது.

          மடல் என்பது பெருந்திணைக்குரியது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளில் இன்பமே சிறந்தது எனச் செப்புகின்றது. இதனைத் தொல்காப்பியர்,
                 ‘‘ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
                 தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
                 மிக்க காமத்து மிடலோடு தொகைஇச்
                செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே’’
                                                                        -        தொல்காப்பியம், 997

என்பார். அதுபோல மடல் மகடூஉக்கில்லை என்பார். இதனை,

                 ‘‘எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
                  பொற்புடை நெறிமை இன்மைனயானே’’
                                                                       -  தொல்காப்பியம், 981

என்று கூறுவார். இக்கருத்தினைத் தெய்வப்புலவரும்,

               ‘‘கடலென்ன காமம் உழந்தும் மடலேறாப்
                பெண்ணின் பெருந்தக்கது இல்’’
                                                                             -        திருக்குறள்

என்று வழிமொழிவார். ஆனால், பன்னிருபாட்டியலோ,
                 
                      ‘‘மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்
                       கடவுளர் தலைவராய் வருங்காலே’’
                                                                     -  பன்னிருபாட்டியல், 63

என்று கடவுளைத் தலைவனாகக் கொண்டால் பெண் மடல் ஏறலாம் என்கின்றது. இதற்குத் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும் அடிகோலியது எனலாம். மொத்தத்தில் தலைவியை அடையத் தலைவன் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் மடல் எனலாம்.

          ‘‘மடலேற்றம் என்பது ஒத்த காமம் உடையார் மாட்டே நிகழ்வது’’ என்பார் வ.சுப.மாணிக்கம். அவ்வாறு அமையின் அது ஐந்திணையின்பாற்படும். அப்போது தலைவன் மடல் ஏறுவேன் என்று கூறுவான். ஆனால், தலைவன் மடல் ஏறினால் அது பெருந்திணையின்பாற்படும். கலித்தொகையில் இவ்விரண்டும் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள மடல் குறித்த பாடல்கள் அனைத்தும் மடலேறுவேன் என்று கூறுவதாகவே அமைந்துள்ளது. ஆனால், கலித்தொகையில் மட்டுமே மடலேறிய தலைவனைக் (பா.எண்- 138 – 140) காணமுடிகின்றது. மேலும், தலைவன் மடல் ஏறுவேன் (பா.எண்- 58, 61) என்று கூறுவதாகவும் தலைவன் மடல் ஏறிவற வேண்டும் என்று காமனைத் தலைவி ( பா.எண்- 147) வணங்குவதாகவும் அமைந்துள்ளது.

          மடல் என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையாகும். ஆனால், தலைவன் இதனை உண்மைக் குதிரையாக கருக்கொள்கிறான்.

                 ‘‘மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
                    அணிப்புளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து’’
                                                                                        -  கலி, 138 (8 – 9)

என்று மயில் இறகுகளை நூலில் கட்டி பூளைப்பு, ஆவிரம்பூ, எருக்கம்பூ இவற்றைத் தொடுத்து மடல் குதிரையின் கழுத்தில் கட்டி இருப்பதாகக் கலித்தொகை பகர்கின்றது. ஆனால், கலித்தொகை 139 வது பாடல் ஆவிரம்பு மாலையை மார்பில் அணிந்து எருக்கம் பூக் கணிணியைத் தலையில் சூடி, பனங்கருக்குக் குதிரைக்கு மணிக்கட்டி, அதன் மேல் தலைவன் ஏறுவதாக முரணாகக் கூறப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது. ஆனால், பின்னர் தோன்றிய மடல் இலக்கியங்களில் எருக்கம் மாலை, எலும்பு மாலை போன்றவற்றைத் தலைவன் சூடியதாகக் கூறப்பட்டுச் சிவனை உவமையாகக் கூறுவதாகவே அமைந்திருக்கின்றன (பெரிய திருமடல், சிறிய திருமடல் தவிர).

          கலித்தொகையில் மடல் குறித்து விரிவாகப் பேசும் (138 – 141) நான்கு பாடல்களும் வெவ்வேறு நிலையில் அமைந்துள்ளது.

Ø                       முதலில் இணைந்த தலைவி பின்பு வேறுபட்டு நிற்கின்றாள். தன் அன்புக்கு அவள் பரிசாகக் கொடுத்தது கருக்கு நிறைந்த மடல் நான் தந்த மணமலர்க்கு அவள் தந்த பூக்கள் பூளையும் எருக்கும். பின் யான் பெற்ற துன்பத்தைக் கண்டு வருந்தித் தன்னுடன் இணைந்ததாகப் பாங்கர்க்குத் தலைவன் தெரிவிப்பதாக ஒருபாடல் (138) அமைந்துள்ளது.

Ø                       அன்பின் ஏமாற்றத்தால் தலைவி தந்த காதல்நோய் தலைவனின்  மனஉறுதியை உரைக்கின்றது. அத்துன்பக்கடலை நீந்துவதற்கு இம்மடலையே கலமாகக் கொண்டு பயணிக்கின்றான். தலைவியை அடைவதற்காகவே தான் இப்பயணம் மேற்கொண்டிருப்பதாகச் சான்றோர்களிடம் செப்புகின்றான். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் சான்றோரே என் துன்பத்தை நீக்குங்கள் என்று முறையிடுகிறான்.

Ø                       தலைவியின் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தான் மடல் ஏறினேன். எனவே எனது துயரினைத் துடையுங்கள் என்று கண்டோருக்குக் கூறியதாக ஒருபாடல் அமைந்துள்ளது.

Ø                       தலைவன் மடல் ஏறி வருவதால் தமராகி ஊரில் தலைகாட்ட முடியாது என்ற நிலையில் தலைவியை சுற்றத்தாரே தலைவியைக் கொடுப்பதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.

Ø                       தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தான் தலைவியை விரும்புகிறான். அவளின் அழகிற்குக் காரணம் அவளின் வீட்டார் தான். எனவே அவர்களைத் தண்டிக்கவும் தனது அன்பின் மிகுதியாலும் தான் மடலூர்வதாக ஒரு பாடல் (58) அமைந்துள்ளது.

Ø     தலைவன் தலைவியுடன் கூட தோழியை
நாடுகிறான். அப்பொழுது தோழி குறை நவில்கிறாள். தலைவன் தான் தலைவியை அடைய மடலூறவும் தயாராக இருப்பதாகக் கூறும்படியாக ஒரு பாடல் (61) அமைந்துள்ளது.

Ø     தலைவனுடன் கூடிய தலைவி தலைவனைப்
பிரிகிறாள். பிரிவுத்துயர் தாங்காத தலைவி தலைவனை நினைத்துப் புலம்புகிறாள். அப்பொழுது தலைவன் தன் மேல் அன்பு மிகுதியாக மடல் ஏற வேண்டும் எனக் காமனை வேண்டுவதாக ஒரு பாடல் (147) அமைந்துள்ளது.

          இவ்வாறு கலித்தொகையில் அமைந்துள்ள மடல் குறித்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. மேலும், மடல் என்பது களவின் இறுதி நிலை. அதிலும் தலைவன் தலைவியை அடைவதற்குப் பல வழிமுறைகளையும் ஆசிரியர் சுட்டியுள்ளார். இலக்கியம் என்பது காலந்தோறும் மாறும் தன்மையுடைத்து. அதன் அடிப்படையில் இலக்கணங்களும் மாறியமையைக் கலித்தொகைப் பாடல்கள் உணர்த்துகின்றது. எனவே, கலித்தொகையின் மடல் குறித்த செய்திகள் மடல் இலக்கிய வகையின் துளிர் நிலை எனக்கொள்ளல் தகும். மடலேறுதல் மேம்போக்கில் காதல் மிகுதிப்பாட்டைக் காட்டுகின்றது என்பதை விட உடன்போக்கு நிகழ்வு பிழையெனக் கொள்ளாத காலத்தே பெற்றோர் விருப்பதிற்கு மதிப்பு கொடுக்கும் பண்பட்ட காதலரைக் காட்டுகிறது. இது, தமிழர் தம் அறப்பண்பாட்டின் முக்கியக்கூறாகும்.