பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Friday, June 17, 2016

புகையிலை விடு தூது

 தமிழ்ப் பிரபந்தங்களில் தனிச்சிறப்பு மிக்கது தூதுப் பிரபந்தம். ஒருவன் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்தது தூது இலக்கியம். இத்தூது இலக்கியத்தினைச் சிலர் வடமொழியிலிருந்து தருவித்துக் கொண்டது என்பர். அதற்கு சந்தேச காவியம் நூலைச் சான்று காட்டுவர். ஆனால் இதற்கெல்லாம் காலத்தால் முந்தைய தொல்காப்பியத்திலும், சங்கப்பனுவல்களிலும் இத்தூதுப் பொருண்மை காணக்கிடைக்கின்றது. இத்தூதினைத் தொல்காப்பியர் ``வாயில்கள்`` என்பார். அதனால் தான் தூது என்ற பெயரில் இலக்கியங்கள் முகில்த்த போல்து சோமசுந்தர பாரதியார் மட்டும் தனது நூலுக்கு ``மாரி வாயில்`` எனப் பெயர் ஈந்தார் (மாரி – மேகம்). மேலும் ``காளிதாசனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த சங்கப் பாக்களில் இதற்கு மூலம் காணப்படுவதால் தமிழிலிருந்து வடமொழிக்கு இவ்விலக்கிய வகை எடுத்தாளப் பெற்றிருத்தல் வேண்டும்`` என்ற அமெரிக்க அறிஞர் ஜியார்ஜ் ஹார்ட் கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது ஆகும்.
                பின்னர் எழுந்த பாட்டியல் நூல்கள் இதற்கு இலக்கணம் பகர்கின்றன. இவ்வாறு தூது செல்லத் தகுந்த தூதுப் பொருள்கள் பத்து என்பதனை,
  ``இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
   பயம்பெறுமே கம்பூவை பாங்கி – நயந்தகுயில்
        பேதைநெஞ்சந் தென்றல் பிரமாமீ ரைந்துமே
   தூதுரைத்து வாங்குந் தொடை``
என்ற இரத்தினச் சுருக்கச் செய்யுள் குறிப்பிடுகின்றது. ஆனால் தூதுப் பிரபந்தங்களை ஆராயப்புகின் இப்பட்டியல் நீளும். 20 ஆம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் என்னும் நூலில் 26 தூதுப் பொருள்கள் இருப்பதனைச் சிலம்பு ந.செல்வராசு (பக்கம் - 128) செப்புகின்றார். தூது நூல்கள் பாட்டுடைத் தலைவனின் பெருமையினையும், சிறப்பினையும் கூறும் நோக்கில் அமையும். ஆனால் மிதிலைப்பட்டிக் கவிராயர் ஒருவர் தமக்கு இடையூறு செய்த ஒருவர் மீது ``கழுதை விடு தூது`` எனும் வசைப்பிரபந்தம் இயற்றியுள்ளார் என்பார் உ.வே.சா. மேலும் இந்தி எதிர்ப்புப் போரின் போது வெள்ளைவாரணர் இராஜாஜிக்குக் ``காக்கை விடு தூது`` இயற்றியுள்ளார். சிலேடை விடு தூது (புலவர் பா.முனியமுத்து) முழுக்க சிலேடைகளால் ஆனது ஆகும். இவ்வாறு இருக்க சீனிச்சர்க்கரை புலவரும் புதுமையான நோக்குடன் ``புகையிலை விடு தூது`` என்னும் இலக்கியத்தினைப் படைத்துள்ளார்.

புகையிலை விடு தூது

                இப்புகையிலை விடு தூதினை உ.வே.சாமிநாதையர் முதன்முதலில் கலைமகள் இதழில் 1939 இல் வெளியிட்டுக் குறிப்புரையும் வரைந்துள்ளார். இதன் பாட்டுடைத்தலைவன் பழனி முருகன் ஆவார். காதல் கொண்ட தலைவி ஒருத்தி பழனி முருகனிடத்தில் புகையிலையினைத் தூது விடுத்து மாலை வாங்கி வரும்படி அமைத்துப் பாடியுள்ளார். 59 கண்ணிகளைக் கொண்ட இச்சிறுநூலில் 53 கண்ணிகள் புகையிலையின் சிறப்பு குறித்தும் 3 கண்ணிகள் பழனி முருகன் குறித்தும் 3 கண்ணிகள் தூதுப் பொருண்மையிலும் அமைந்துள்ளன. இதிலிருந்து புகையிலையினைச் சிறப்பித்துப் பாட வேண்டும் என்ற நோக்குடன் இந்நூல் எழுந்துள்ளது தெற்றன விளங்கும். பழனி மலை முருகனுக்குப் புகையிலைச் சுருட்டு நிவேதனம் உண்டு என்பர் சிலர். மேலும் விராலிமலை முருகனுக்கும் இந்நிவேதனம் உண்டு.

சீனிச்சர்க்கரைப் புலவர்

                இவர் இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் இரண்டாவது சர்க்கரைப் புலவரின் குமாரர் ஆவார். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். இராமநாதபுரம் அருகில் உள்ள சிறுகம்பையூர் என்பது இவரது ஊராகும். இவர் உடன்பிறந்தவர் இருவர் ஆவர். மருது சகோதரர்களால் வளர்க்கப்பட்டு மயூரகிரிக் கோவை பாடிய (536 பாடல்கள் ஒரே நாளில் பாடப்பட்டது) சாந்துப் புலவர் ஒருவர். மேலும் மிழலைச் சதகம், உலாமாலை, வயிரவக் கடவுள் பஞ்சரத்தின மாலை ஆகிய இலக்கியங்கள் படைத்த முத்து முருகப் புலவர் மற்றொருவர் ஆவார். இவர் புகையிலை விடு தூது தவிர துறைசைக் கலம்பகம், திருந்செந்தூர்ப் பரணி போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். சர்க்கரைப் புலவர் என்ற ஒரு இசுலாமியப் புலவரும் உள்ளார். இவர் மெதினாந்தாதி என்ற இலக்கியம் படைத்தவர் ஆவார். இவர் சவ்வாதுப்புலவரின் காலத்தினைச் சேர்ந்தர் ஆவார்.

புகையிலையின் பெயர்க்காரணமும் புராணச் செய்தியும்

     புகையிலைக்கான பெயர்க்காரணத்தையும் அது கூறும் புராணச் செய்தியினையும் இந்நூல் குறிப்பிடுகின்றது. மும்மூர்த்திகளுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி வருகின்றது. அதைத் தீர்ப்பதற்காக தேவ சபையினை நாடுகின்றனர். ஆனால் சபையில் உள்ளோர் மும்மூர்த்திகளிடமும் மூன்று பத்திரப் (பத்திரம் - இலை) பொருட்களைக் கொடுத்து அதை மறுநாள் கொண்டுவரச் சொல்கின்றனர். சிவனிடம் வில்வமும், திருமாலிடம் துழவமும் பிரம்மாவிடம் புகையிலையினையும் கொடுக்கின்றனர். மருநாள் வரும்பொழுது சிவனிடம் கொடுத்தது கங்கையின் அலை கொண்டுபோய்விட்டது. திருமாலிடம் கொடுத்தது பாற்கடலின் அலை கொண்டுபோய்விட்டது. ஆனால் பிரம்ம தேவரிடம் கொடுத்தது தன் நாவிலுள்ள கலைமகளிடத்தில் கொடுத்து வைத்திருந்தார். சபையினர் கேட்ட போது சிவனும் திருமாலும் ``எங்கள் பத்திரங்கள் போயின`` என்றனர். ஆனால் பிரம்ம தேவனோ ``என்னுடையது போகையிலை`` என்றார். அதனால் போகையிலை என்பது புகையிலை என்றானது. பிரம்மாவின் பத்திரமனாதாக இருந்ததனால் ``பிரம்ம பத்திரம்`` என்றும் அழைக்கப்பெறுகின்றது. இதனை,
                  ``ப்ரம்மபத்ர மென்றெவரும் பேசவே வந்துதித்த
                  தன்மப் புகையிலையே சாற்றக்கேள்`` (26)
என்று புலவர் குறிப்பிடுகின்றார். புகைக்கப் பயன்படுவதால் புகையிலை என்றும், சுருட்டிப் புகைக்கப்படுவதால் சுருட்டு என்றும் காயவைத்து இடிக்கப்பட்டு பொடியாக்கிப் பயன்படுத்துவதால் மூக்குப்பொடி என்றும் பலவாறு வழங்கப்பெறுகின்றது. மேலும், இது இந்தியாவிற்கு போர்த்துகீசியரால் 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்பர் ஆட்சிக் காலத்தில் மேலைநாட்டிலிருந்து வந்தது ஆகும். எனவே தான் புலவர் ``வந்த புகையிலை`` (கண்ணி 16) என்று சுடுட்டுகின்றார்.
  ``நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
  காலுந் தலையுங் கடைச்சாதி – மேலாக
  ஒட்டு முதலெழுத்து மோதுமூன் றாமெழுத்தும்
  விட்டாற் பரமனுக்கு வீடு``
என்ற தனிப்பாடலில் புகையிலையின் பெயரினை ஒரு புலவர் இலக்கிய நயத்துடன் நவில்வதும் ஈண்டு சுட்டத்தக்கது ஆகும். மேலும், பூமி வறண்டு, மனிதர்கள் பசியால் துடித்த போது கடவுள் ஒரு தேவதையை பூமிக்கு அனுப்பினார். அந்த தேவதையின் வலது கரங்கள் பட்ட இடங்களில் எல்லாம் உருளைக் கிழங்கு விளைந்தது. இடது கரங்கள் பட்ட இடங்களில் எல்லாம் சோளம் விளைந்தது. எங்கெல்லாம் தேவதை உட்கார்ந்து எழுந்தளோ அங்கெல்லாம் புகையிலை விளைந்தது என்பது தென் அமெரிக்க பழங்கதையும் ஈண்டு சுட்டத்தக்கது ஆகும்.

சிலேடை

       இவ்விலக்கியத்தில் புகையிலைக்குத் திருமால், சிவன், பிரம்மன், முருகன், தமிழ் ஆகியவற்றினைச் சிலேடையாகக் காட்டுகின்றார். ஏடு (இலை), பதிகம் (நடுவதற்குரிய செடி), மூலப்பாடம் (பக்குவம் செய்தல்), கோவை, வளமடல் (வளமான இலை), பாவும் சந்தமும் (அழகு, பக்குவம்), யாப்பு (கட்டுதல்), பரணி (சாடி), வித்தை (விதை) என்று தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடை சிறப்பாக அமைந்துள்ளது. இதனை,
  ``தாவில் வித்தையுடைத் தாகித் தமிழ்போல்
  எந்த விதமென் றியம்புவேன்`` (கண்ணி, 15)
என்ற கண்ணி பறைசாற்றுகின்றது.
புகையிலையின் பெருமைகள்
           எந்த வாசனைப் பொடியும் புகையிலையின் மூக்குப்பொடிக்கு ஒப்பாகாது என்பதனை,
  ``வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
  சாடிப் பொடிக்குச் சரியுண்டோ `` (கண்ணி, 30)
என்ற கண்ணி சுட்டுகின்றது. ஆகாயம் புகைபோல உள்ளதால் தான் இறைவன் ஆகாயத்தைத் திருமேனியாகக் கொண்டார் என்கிறார் ஆசிரியர். மேலும்,
``பூராய மான பொருளை வெளிப்படுத்தும்
சாராயந் தானுனக்குத் தம்பியோ`` (கண்ணி, 34)
என்று ஆசிரியர் புகழ்கின்றார். பச்சை வெங்காயத்தை உண்ணப் பிறர் பயந்தவர் புகையிலை போடுவோர் அதனை அஞ்சாது உண்பர் (38), புகையிலையின் அருமையினைத் தகுதியுடைய வெற்றிலைதான் அறியும் (39) என்று புகையிலையினைப் பலவாறு பாராட்டுகின்றார். மேலும் இதனை வர்த்தகம் செய்தவர்க்கு இலாபம் அதிகம் கிடைக்கும் என்றும் இயம்புகின்றார். புகையிலை வெட்டிக் கிடந்தாலும், கட்டுண்டு வந்தாலும் தும்மும் குணத்துடன் கிறுகிறுப்பை ஏற்படுத்தும் என்றும், தாகம் தீர்க்கும் சஞ்சீவி என்றும் மோகப்பயிர் என்றும் புகழ்கின்றார்.
      புகையிலை விளையும் இடங்களாகக் காங்கேயம், யாழ்ப்பாணம், அழகன்குளம், பரத்தைவயல் போன்றவற்றையும் சுட்டுகிறார். இதில் பரத்தைவயலில் விளையும் புகையிலையே சிறந்ததென்றும் பகர்கின்றார். இதனை,
``பார்த்திப ரான பரத்தை வயற்குடியார்
போற்றி வளர்க்கும் புகையிலையே`` (கண்ணி, 50)
என்ற அடிகளில் சுட்டுகின்றார்.           இவ்வாறு பலவாறுப் புகழ்ந்து பழனி முருகனிடம் தூது செல்ல விடுக்கிறார். அவ்வாறு சென்று முருகனிடம் மாலையும் வாங்கி வரச் சொல்கின்றார். இதனை
``சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலங்கு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா``  (கண்ணி, 59)
என்ற கண்ணி சுட்டி நிற்கின்றது.

நிறைவாக

        சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய புகையிலை விடு தூது தவிர்த்து அவருக்குப் பின் சுப்பிரமணிய வேலச் சின்னோவையன் என்பவரும் ஒரு புகையிலை விடு தூது இயற்றியுள்ளதாக ந.வீ.செயராமன் (சிற்றிலக்கிய வகை அகராதி) குறிப்பிடுகின்றார். ஆனால் அதைப் பற்றிய குறிப்புகள் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் விசையகிரி வேலச்சின்னோவையன் என்னும் பெயர் தாங்கிய (பழனியின் ஜமீன்) ஒரு புலவர் இருக்கிறார். இவர் வையாபுரிப் பள்ளு, சமய மாலை என்னும் இலக்கியம் செய்துள்ளார். வையாபுரி என்பது பழனியின் வேறுபெயர் ஆகும். சீனிச்சர்க்கரைப் புலவரும் பழனி முருகனைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடியுள்ளார். கிபி 1729 ஆண்டுக்குரிய இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடிக்கு அருகிலுள்ள சுப்பிரமணியக் கோவிலைச் சேர்ந்த செப்பேடு முக்குந்தர் புகையிலைத் தோட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றது (நாட்டார் பட்டயம், பா.சுப்பிரமணியன், சீ. இலட்சுமணன், ஆவணம் - இதழ் 2, ஏப்ரல் 1992, தமிழகத் தொல்லியல் கழகம் வெளியீடு) இது பொன்னெட்டி மாலைச் சர்க்கரைப் புலவர் பட்டயத்தொடு தொடர்புடையது ஆகும். பொன்னெட்டி மாலைச் சர்க்கரைப் புலவர் என்பவர் முதலாவது சர்க்கரைப் புலவர் ஆவார். எனவே சர்க்கரைப் புலவருக்கும் புகையிலைக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கின்றது. அதனாலேயே தான் இவ்விலக்கியத்தினைப் பாடியுள்ளார் என்பதை அறியமுடிகின்றது. ``புகையிலை மிகுதியாகப் பயிரிடப்படுகின்ற இடங்கள் சூழ்ந்த பழனிக்கு அருகில் வசித்த உபகாரி உருவர் கேட்டுக்கொள்ள இயற்றியதாகக் கூறுவதும் உண்டு`` என்ற உ.வே.சாவின் கருத்தும் இதற்குத் துணைநிற்கின்றது.

க.கந்தசாமிபாண்டியன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி,
இராசபாளையம்.

Tuesday, March 17, 2015

    மூன்று நாள் செம்மொழிக் கருத்தரங்கம்

  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் - அன்றும் இன்றும் என்னும் தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க விழா 25.02.2015 அன்று கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் துறைத்தலைவருமான பேரா க.அழகர் வரவேற்புரை வழங்கினார். கருத்தரங்கைத் தலைமை ஏற்று தலைமையுரையைக் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் திரு ஏ.எஸ்.அர்ஜூனராஜா வழங்கினார். சங்க கால மக்களின் பண்பாடு நாகரிகம் குறித்த செய்திகளை வழங்கி கல்லூரி ஆட்சிமன்றக் குழுச் செயலர் திரு எஸ்.ஆர்.தனுஷ்கோடிராஜா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வே.வெங்கட்ராமன் அவர்களும் துணைமுதல்வர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தமிழர்களிடம் உள்ள நடைமுறை பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் பற்றிய தொல்காப்பிய காலம் தொட்டுப் பயன்படுத்தப்படும் பழக்க வழக்கங்கள் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பேரா அழகேசன் எடுத்துரைத்தார். கணினித் தமிழில் இன்றைய சமூதாயத்தின் வளர்ச்சி நிலை பற்றியும் நுலைப்பூவில் தகவல்களைத் தொகுக்கும் முறை பற்றியும் செம்மொழித் தமிழாய்வு ஆய்வுத்திட்ட அலுவலர் முனைவர் ஏ.எழில்வசந்தன் எடுத்துரைத்தார். நிறைவில் பேரா வி.கலாவதி நன்றியுரை வழங்கினார்.

      கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் பதினோறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.வேலம்மாள் “நற்றிணையில் பழக்க வழக்கங்கள்” என்னும் தலைப்பிலும், முனைவர் க.அழகர் “புறனாநூற்றில் நடுகல் வழிபாடு” என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர். “கையறுநிலைப் பாடல்களும் கைம்மை நோன்பும்” என்னும் தலைப்பில் முனைவர் சு.தங்கமாரி உரை நிகழ்த்தினார். முனைவர் ச.பாரிஜாதம் தலைமையில் நிழ்ந்த அமர்வில் முனைவர் சிவசங்கர் பெரும்பாணாற்றுப்படையில் பழக்க வழக்கங்கள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பிற்பகல் கருத்தரங்கில் தமிழர் பண்பாட்டு நடவடிக்கை தொடரும் கூறுகள் என்னும் தலைப்பிலும், சங்க இலக்கியத்தில் பாணர்கள் என்னும் தலைப்பில் ம.பிரசன்னாவும், முனைவர் சு.நயினார் எட்டுத்தொகை அக இலக்கியங்களில் பழக்க வழக்கங்கள் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பேரா ச.பழனிச்சாமி வரவேற்றுப் பேசினார். மூன்று நாள் நடைபெற்ற கருத்தரங்கின் குறிப்புரையைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும்   துறைத் தலைவருமான  பேரா க.அழகர் வழங்கினார். இவ்விழாவிற்கு ஆட்சிமன்றக்  குழுச்  செயலர் திரு எஸ்.ஆர்.தனுஸ்கோடி ராஜா  தலைமையேற்றார். ஆட்சிமன்றக்  குழுத்தலைவர்  திரு ஏ.எஸ்.அர்ஜூனராஜா, கல்லூரி  முதல்வர்  திரு வே.வெங்கட்ராமன், துணை  முதல்வர்  எம்.வைத்தியநாதன்  ஆகியோர்  வாழ்த்துரை   வழங்கினர். கருத்தரங்க  நிறைவுரையை  உலகத்  தமிழாராய்ச்சி  நிறுவனப்  பேராசிரியை  முனைவர்  ந.சுலோச்சனா  வழங்கினார். கருத்தரங்கில்  கலந்துகொண்டோருக்குச்  சான்றிதழ்களும்  பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. பேரா க.கந்தசாமிபாண்டியன்  நன்றி  கூறினார்.









Tuesday, November 11, 2014

பாரதியார் – பரப்பிரம்மம்

முன்னுரை
     என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
     பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்
     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்பார் பாவேந்தர். பாரதியின் படைப்புவெளி என்பது இன்று வரையிலும் ஆய்ந்து அளக்க முடியாத வெளியாகும். பாரதியின் படைப்புகள் பல கோணத்தன்மையில் இயங்குதலுக்கு அடிப்படை அவரின் வாழ்வியல் பிழிவாகும். அன்றன்றைய வாழ்க்கை அனுபவத்தை எழுத்து வடிவில் பாரதி பதிவு செய்தது அவரது பன்முகத் தன்மைக்கு வித்தாக அமைகின்றது. அவ்வகையில் பாரதி பாடல்களில் மறைந்துள்ள நிலைப்பாடுகள் மற்றும் படைப்பு வெளிகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாரதியார்
     பாரதியார் கவிஞர் உலகில் ஒரு தனி வகையானவர் ஆவார். தனிமனித வாழ்வில் முரண்கள் பல கொண்டு எந்தவொரு கட்டத்திலும் சமுதாயத்தோடு தன்னைச் சமரசம் செய்துகொள்ளாதவர். சமகாலப் படைப்பாளிகள், உறவினர்கள், குடும்பத்தவர் என எவருடனும் பிடிப்பின்றி மனம்போன போக்கில் வாழ்ந்தவர் ஆவார். பொதுவாகப் புறச்சூழல்கள் படைப்பாளிகளை வெகுவாகப் பாதிக்கும். அதிலும் பாரதி புறச்சூழல்களால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவராய் வாழ்ந்திருக்கிறார். பாரதியின் படைப்புகள், சிந்தனைகள், பெரும்பாலும் வறுமையின் வார்ப்புகளாகவும் ஒரு படைப்பாளியின் தார்மீகக் கோபமாகவே உள்ளன.

படைப்புகளும் பொருண்மைகளும்
     பாரதி படைப்பு வகைகள் புதிய சொற்களாலும் தளங்களாலும் நிரம்பியவை. பாரதியின் உரைநடைகளும் சிற்சில சிறுகதைகளும் மணிப்பிரவாளத் தன்மையிலே இயங்குகின்றன. இவற்றிற்கு அடிப்படை அவரது வாழ்வியல் சிறிது காலம் காசியில் கழிந்ததும் இயல்பான சமஸ்கிருதப் புலமையுமே ஆகும். சமகாலப் படைப்பாளிகள் அயல்நாட்டு வரவுகளான புதினங்களையும், தூய தமிழ் உரைநடை என்ற மறுமலர்ச்சி உரைநடைகளையும் யாத்துக் கொண்டிருந்த காலத்தில் பாரதி மட்டும் சற்று விலகி நின்று தன்னுணர்ச்சிப் படைப்புகளால் தன்னுடைய படைப்புவெளியை நிரப்பியுள்ளார். தனக்கென்ற அடையாளமே அடையாளமின்மை தான் என்ற இயங்கியலே பாரதி படைப்புகளில் காணலாகின்றது. புதுமைப்பித்தன் சில இடங்களில் நிகர நோக்கத்தக்கவர் ஆவார்.

பின்நவீனத்துவவாதிகளும் படைப்புகளும்
     பொதுவாக, நவீனத்துவத்தின் நீட்சியாக பின் நவீனத்துவம் என்ற தொடர் கையாளப்பட்டாலும் பின் நவீனத்துவத்தின் இயங்கியல் வெகுவிரிவானது. படைப்புக் கூறு, எல்லைக் கோடு, வரையறைகள் என எவற்றோடும் பின் நவீனத்துவம் இணைந்து இயங்காது. சொற்கட்டுமானமே இவ்வகையான படைப்புகளுக்குப் பொது அடையாளம். வடிவக் கட்டுமானம் என்ற பேச்சுக்கே இடமில்லாத தன்மை இவ்வகைப் படைப்புகளில் காணப்படுகின்றது. உள்ளடக்க மீறல், அறிதலில் ஒழுங்கவிழ்ப்பு இவர்களின் தனித்துவ அடையாளம் ஆகும். படைப்புகளுள் படைப்பாளியின் பல்துறைப் புலமை, சமூகம் மீதான தர்க்கரீதியான நிலைப்பாடு, எவரும் சந்திக்காத கோணங்கள் என்ற தன்மைகளே இவ்வகைப் படைப்புகளில் மிளிரும். படைப்புகள் என்பவை இன்பகரமானவை. சமுதாயத்திற்கு நலம்பயப்பவை என்பதை எல்லாம் மறுதலித்து குறிப்பிட சமூகத்தின் அவலக்குரல் பதிவு என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. இத்தகு பதிவுகளிலும் பாரதியின் பதிவுகள் தனிவகை. தன்னுடைய விளிம்புநிலை வாழ்வியலை எழுதுபலகையாக்கித் தனது கோபக்கணைகள் எனும் கூரிய சொற்களினால் படைப்புகளை வடித்துள்ளார். பொதுவாகப் பின் நவீனத்துவப் படைப்பாளிக்கும் தீவிரவாதப் பெண்ணியவாதிகளுக்கும் இத்தகு குணநலமே இருக்கும்.

பாரதியாரின் பின் நவீனத்துவ வடிவங்கள்
     பாரதியாரின் வசன கவிதை முயற்சியும் புதுக்கவிதைகளும் அவரது இலக்கிய உலகில் மைல்கல் ஆகும். இலக்கியம் என்பது வரையறைக்குள் கருத்துப்பொதிவுகளை கூறல் வேண்டா, தன்னுடைய அப்போதைய மனநிலையில் கருத்துச் சட்டகத்தில் இயங்கினால் போதும் எனும் உட்பொதிவையே இப்படைப்புகள் காட்டுகின்றன. பின் நவீனத்துவாதிகளுக்கென்ற உலகம் பல நிறங்களை உடையது. திறமைகளும் பன்னூல் புலமைகளும் நிலைத்த கொள்கைகளும் எதுவும் இன்றி தற்காலிகத் தன்னுணர்வே பாரதியின் கவிக்கூறுகள் ஆகும். உளவியல் அடிப்படையில் தம் உள்ளக் குமுறல்களுக்குத் தன் கவித்துவத்தால் தனக்குத் தானே மருந்திட்டுக்கொண்ட மனிதன் பாரதி ஆவார். பிரெஞ்சுக் கொள்கைகள் மீது ஈடுபாடுடைய பாரதியின் பிரெஞ்சு தேசக் கோட்பாடான பின் நவீனத்துவப் பொதிவுகள் பொலிவுற்று இருப்பது தனிச்சிறப்பாகும்.

பாரதி புதினத்தில் பின் நவீனத்துவக் கூறுகள்
      பாரதியின் சிறுகதைகள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு பிற படைப்பாளிகளோடு ஒத்துப்போவதில்லை. கதைக் களம், மொழிப் புலப்பாடு என்பவற்றில் பாரதி வேறுபடுகிறான். பூகம்பம் என்ற புதினத்தில் பொதிய மலைச்சாரலில் இருக்கும் ‘வேளாண்குடி’ என்ற ஊரில் இருக்கும் ஒரு குடும்பம் பூகம்பத்தால் அழிகிறது. அத்தருணம் நிறைமாதக் கர்ப்பிணியாய் இருக்கும் கோமதிக்கு மகப்பேறு ஏற்படுகின்றது. அவளுக்கு மரணமும் கிட்டுகின்றது. அப்போது அவள் பிழைத்திருக்கும் நாத்தனாரான கைம்பெண் விசாலாட்சியிடம் குழந்தையை அடைக்கலப்படுத்திவிட்டு அவளையும் மறுமணம் செய்யுமாறு கூறி இறப்பதாகக் கதையை நிறைவுசெய்திருக்கிறார். சமூகத்தில் இருவகை நீதிகள் இருப்பதை பாரதி இவ்விடத்தில் சாடுகிறார். மறுமணம் கைம்பெண்களுக்குக் கட்டாயமாக நடைபெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இக்கதையில் கூறுகிறார். இக்கனத்த பொருளை,
‘‘…. நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரி அடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்திற்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு.
இரண்டாவது,
நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் சந்திரிகை என்று பெயர் வை’’ என்றாள்.
இந்த ஒரு கூறை அமைப்பியல் அடிப்படையில் சிறுகதையாகக் கொள்ளலாம். ஆனால், இது சந்திரிகையின் கதைத் தொகுப்பு என்ற புதினத்தில் முதல் அத்தியாயமாக இப்பதிவை பாரதியார் கூறியுள்ளார். பொதுவாகப் புதினம் என்பது நெடுங்கதை ஆகும். அதன் முடிவுக் கட்டத்திலே கதை நிறைவு என்ற தன்மை இருக்கும். இப்புதினத்திலோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ஒரு முடிவைக் கொண்டதாக அமைந்துள்ளது. இப்படைப்பை எழுதி முடிப்பதற்குள் பாரதியார் இறந்து விட்டதால் முற்றுப் பெறாத தன்மையிலும் இப்படைப்பு அமைந்துள்ளது. இது வடிவ அமைப்பில் முழு மொத்தமாக ஒரு புதினமாகவும் தனித்தனியே கதை முடிவு காணும் சிறுகதைகளாகவும் இடம் பெறுவதை வைத்து பாரதி உள்ளடக்க ஒழுங்கவிழ்ப்பு மற்றும் நேர்கோட்டு வாசிப்பு முறை மீறலை இப்படைப்பினுள் பின் நவீனத்துவ அடிப்படையில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

சிறுகதைகளில் பின் நவீனத்துவக் கூறுகள்
     பாரதியின் சிறுகதைகள் வடிவ அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு நிகழ்ச்சித் துண்டாக மட்டும் இயங்கி முடிகின்றன. எடுத்துக்காட்டாக, கத்திச்சண்டை என்ற சிறுகதையில் அவர் என்ன சொல்ல வருகிறார்?, உட்பொதிவு என்ன? என்பதெல்லாம் கண்டறிய முடியாது. ஒரு சாமியார் இன்னொரு சாதுவிடம் பாவனை கத்திச் சண்டை செய்வதாக இக்கதை அமைகின்றது. சிறுகதை என்றால் சிறிய அளவிலான பாத்திரக் கையாளல், பெரிய உரையாடல்கள் இல்லாமல், சுருக்கென குத்தும்படியான முடிவு என்பதை எல்லாம் பாரதியின் சிறுகதைகளில் காணஇயலாது. இதிலிருந்து பாரதியின் சிறுகதைகளில் மையமறுப்பு என்ற பின் நவீனத்துவக் கூறு பதிவாகியுள்ளது.

புதிய படைப்பு முயற்சிகள்
     பாரதியாரின் வேதப்பயிற்சி, வடமொழி அறிவு, ஆங்கிலக் கல்வி, பிரெஞ்சு மொழியறிவு, பொதுவுடைமைக் கொள்கை மீதான ஈர்ப்பு, சமுதாயப் பிரக்ஞை, கவித்துவம் ஆகியவையே அவரது புதுப்புதுப் படைப்பு முயற்சிகளுக்கு வித்தாகும். இவை காரணமாகவே விநாயகர் நான்மணிமாலை எனும் யாப்பு அடிப்படையிலான பாடல்களைத் திறம்படப் பாடிய பாரதியாருக்கு, புதிய கோணங்கி, காலனுக்கு உரைத்தல் என்ற இலக்கிய வகைமைக்கு வேறுபட்ட படைப்புகளை உருவாக்கக் காரணமாக அமைந்தன.

படைப்புவெளி
     பகவத் கீதைக்கு ஆத்மார்த்தமாக உரை எழுதிய பாரதியாரின் எழுத்துகளில் வைஷ்ணவப் பாஷ்யக்காரர்களின் உன்னதப் பக்திநெறி புலப்படுகின்றது. மேலும்,
‘‘காக்கை குருவி எங்கள் சாதி உயர்
வானும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்’’
எனுமிடத்து ஒரு மிகைப் பொதுவுடைமையாளனைப் பாரதியிடம் பார்க்க முடிகின்றது.

     பாரத நாட்டின் விடுதலைக்காக அவர் பாடிய நாட்டு வணக்கம், பாரதமாதா, எங்கள் தாய், வெறிகொண்ட தாய், பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி, நவரத்தினமாலை, திருத்தசாங்கம் முதலிய பாடல்களால் அவரைச் சிறந்த விடுதலை விரும்பியாகப் பார்க்க முடிகின்றது. மேற்கண்ட படைப்புகளுள் சிற்றிலக்கியக் கூறுகள் தத்தம் உள்ளடக்கங்களைப் பெறாமல் புதுவகை உள்ளடக்க மாறுதலுக்குப் பாரதியார் உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம் என்ற உள்ளீட்டினை உட்புகுத்தி அத்துக்களை மீறும் படைப்புகளாக இவை பிரவேசிக்கின்றன. மேலும், சித்தாந்தசாமி கோயில், மனப்பெண், பரசிவ வெள்ளம், நான், உலகத்தை நோக்கி வினவுதல், கற்பனையூர்  ஆகிய படைப்புகள் சித்தர் நெறிகளைக் கைக்கொண்டனவாக அமைந்துள்ளன.

குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய படைப்புகளின் வாயிலாகப் பாரதி உருவகக் கவித்திறன் சிறப்பாகப் புலப்படுகின்றது. பெண்விடுதலை, பெண்மை, புதுமைப் பெண் முதலிய படைப்புகளால் பாரதியின் முற்போக்குவாதி முகம் நமக்குத் தெரிகின்றது.

 முடிவுரை


     பாரதி எடுத்துக்கொண்டப் படைப்புப் பொருண்மைகளும் எழுத்துச் சித்தங்களும் ஓர் அமைப்பினுள் அடங்காது. தன்னை மிதித்த திருவல்லிக்கேணி பாரத்தசாரதிப் பெருமாள் கோயில் யானையைப் பெருந்தன்மையுடன் மன்னித்ததாக ‘கோயில் யானை’ எனும் தலைப்பினில் கட்டுரை வரைந்துள்ளார் பாரதி. இதுவே அவரது இறுதிப்படைப்பு ஆகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது பாரதியை எந்தக் கூட்டினுள் அடைப்பது? பாரதி வாழ்வியல் போலவே அவரது படைப்புகளும் வைரக்கற்கள் போன்று பன்முகம் கொண்டவையாக இருப்பதன் வழி பாரதியையும் பாரதியின் படைப்புகளையும் படைப்புலகின் பரப்பிரம்மமாகக் கருதுதல் நலம்.

ம.பிரசன்னா,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
கலசலிங்கம் பல்கலைக் கழகம்,
கிருஷ்ணன்கோவில்.
பாரதியின் விகடசித்திரம்

‘‘தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
பைந்தமிழ்த் தேனீ......’’

என்று தன் தாசனால் பாடப்பெற்ற முண்டாசுக்கவி கதை, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, இதழாலன் எனப் பல்வேறு முகம்கொண்டவன். கதையிலும், கவிதையிலும், புதுமையினைப் புகுத்தியவன். அஃதே போன்று இதழியலில் புத்தெழுச்சி புதுக்கியவன். பாரதி பல்வேறு இதழ்களில் சேவை புரிந்திரிந்தாலும் ‘இந்தியா’ இதழிலில் செய்த தொண்டு மகத்தானது.  இந்திய தேயத்தின் விடுதலைக்கு எத்தகைய முனைப்போடு செயல்பட்டானோ அதேபோல் ‘இந்தியா’ இதழிலும் வீரியத்துடன் செயல்பட்டான். இவ்விதழிலில் கருத்துப்படம், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு பகுதிகள் அங்கம் வகித்தன. இவ்வங்கத்தில் முதன்மையிடமும் முக்கிய இடமும் பெறுபவை கருத்துப்படங்களே ஆகும். இக்கருத்துப்படங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையினை ஈண்டு நோக்கலாம்.

பாரதியின் விகடசித்திரம்

      இதழாசிரியனின் கருத்தினையும் இதழின் நோக்கத்தினையும் நிறைவேற்றும் பொருட்டு அமைவதே கருத்துப்படம் என்பதாகும். கருத்துப்படம் என்பதும் ஒரு தலையங்கமாகக் கருதப்பெறுகின்றது. பல சொற்கள் கூறுவதை ஒரு கருத்துப்படம் சில கோடுகளின் வழி எளிதில் உணர்த்திவிடுகின்றது. இவ்வகையில் நோக்கும் போது கருத்துப்படம் என்பது இதழில் முதன்மை பெறுகின்றது. இக்காரணத்தால் தான் என்னவோ பாரதி ‘இந்தியா’வின் முதல் பக்கத்தில் இதற்கு முதன்மை இடம் கொடுத்தான்.

      ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ என்று வழங்கப்பெறும் இது தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களில் குறிக்கப்பெறுகின்றது. பாரதியார் இதனை ‘விகடசித்திரம்’ என்றே சொல்லாடுகின்றார். முதலில் டில்லியில் வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ இதழும், ‘இந்தியன் பஞ்ச்’ என்ற இதழும், ‘அவத் பஞ்ச்’ என்ற இதழும் கருத்துப்படங்களை வெளியிட்டதாக அறியமுடிகின்றது. ஆனால், தமிழில் முதன்முதலில் இவ்விகடசித்திரத்தினை வெளியிட்டது ‘இந்தியா’ இதழே ஆகும். இதனைப் பாரதி, ‘‘புதிய அபிவிருத்தி’’ என்ற கட்டுரையில் (13.3.1909) ‘‘தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்’’ என்று குறிப்பதிலிருந்து உணரமுடிகின்றது. இவ்வாறு வெளிவந்த படங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்யும் ஆவணங்களாகவும், அதன் வரலாற்றைக் கூறும் மூலங்களாகவும் அமைகின்றன.

      மார்ட்டின் லூதர்கிங் தனது புரட்சிக் கருத்துக்களை ஜெர்மனி தேயத்தில் பரப்புவதற்குத் துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார். இப்பிரசுரங்களில் பல்வேறு கேலிச்சித்திரங்களை அமைத்து, அதில் தனது படத்தினையும் பங்கேற்கச் செய்து புரட்சி விதையினைத் தூவினான். அதேபோன்று பாரதியும் தனது விகடசித்திரங்கள் வழி அன்றைய அரசியல் சூழல்களையும், சமுதாயம் மீதான தனது மனப்பதிவுகளையும், மக்களின் நிலையினையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய செயல்களையும் சுட்டிக்காட்டி விடுதலை வேள்வியினையும் இவற்றின் வழி வார்த்தெடுத்தான். உணர்வில்லாத மக்களுக்கு உணர்வினை ஊட்டி அவர்களின் தேசிய உணர்வினை ஊக்குவித்தான். ‘இந்தயா’  இதழ் இந்தியாவில் தடைசெய்வதற்குக் காரணமாக ஆங்கிலேய அரசு கூறியது இதில் வெளியான கருத்துப்படமும் சில கட்டுரைகளுமே ஆகும். இவ்வாறு இதில் வெளியான சித்திரங்கள் ஆங்கிலேய அரசுக்குச் சிம்மசொப்பனமானது.

வெள்ளையர்களைச் சாடல்
      ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 போடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்று (8.9.1906) அமைந்திருக்கின்றது. மேலும், இந்திய மாதா என்ற பசுவிடமிருந்து மார்லி ஒட்டப் பால் கறப்பது போலவும் கருத்துப்படம் பதிப்பித்திருக்கிறார். இப்படங்கள் இரண்டிலும் இந்தியர்களை எலும்பும் தோளுமாகவும் வெள்ளையர்களைக் கொளுத்த உடலுடனும் அமைத்து இந்தியாவின் இழிநிலையினை விளக்குகின்றார்.

      எங்கு உரிமை மறுக்கப்படுகின்றதோ அங்கு புரட்சி வெடிக்கும் என்ற கருத்திற்கேற்ப ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளால் இந்தியாவில் புரட்சிக்கனல் வீசியது. கொடூரச் சட்டங்கள் என்ற கோழி குப்பை மேட்டிலிருந்து கூவுகின்றது. இக்கோழியின் குரலைக் கேட்டவுனே ‘சுதந்திர சூரியன்’ உதிப்பது போன்ற (19.12.1908) சித்திரம் வரைந்தார். மேலும், பாரத தேசத்தின் அமைதி என்ற ஏரியானது நவீன உணர்ச்சி என்ற வெள்ளத்தால் உடைபடுகின்றது. ஆங்கிலேயே அதிகாரிகள் அதனை அடைப்பதற்கு ‘புதிய சட்டங்கள்’ என்ற கூடைமண் சுமந்து அடைக்கின்றனர் என்ற கருத்தை விளக்குவதாகவும் சித்திரம் அமைத்தார். இவ்வாறு சித்திரங்களின் வழி மக்களுக்கு அன்றை அரசியல் சூழலைத் தெளிவாக விளக்குகின்றார்.

பொருளாதாரம் சார்ந்த படங்கள்
      பாரதியை நாம் பன்முகம் கொண்டவராகக் கருதுகின்றோம். அதில் பொருளாதார மேதை என்பதும் ஒன்றாகும். ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தான் வருகின்றது என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இது இன்றும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதையும் சிந்தை கொள்ளவேண்டும். மேலும், 17.4.1909 நிதிநிலை அறிக்கை குறித்த சித்திரத்தில் மக்கள் நலனுக்குக் கொடுக்கும் பணம் குறைவு. ஆனால், மக்கள் மீது அடக்குமுறையினைப் பயன்படுத்த உதவும் போலீஸ் இலாகாவிற்குச் செலவு அதிகம் என்ற கருத்தில் அமைந்த படம் நிதிநிலை அறிக்கையினை விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றது.

மிதவாதிகளை விமர்சித்தல்
      பிரிட்டிஷ் ஏகாதிபத்ய  எதிர்ப்புப் பிரசாரம், காங்கிரஸ் மிதவாமிகளைக் குத்தலும் கிண்டலுமாகத் தாக்கும் பிரசாரம் முதலானவை பெரும்பான்மையாகக் கேலிச்சித்திரங்களில் இடம் பெறுகின்றன. நாடு விரைந்து சுதந்திரம் அடைவதற்காகத் தீவிர இயக்கத்தை நடத்தியவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளைப் பாரதி தயக்கமின்றித் தாக்கி எழுதினான். சித்திரம் ஒன்றில் அவர்களைச் ‘சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தான். இவர்களை நிதானக் கட்சியினர், பழைய கட்சியினர், நிதானஸ்தர்கள் என்று அழைத்தான். சுயராஜ்யம் நோக்கிச் செல்லும் காங்கிரஸ் என்ற மாட்டு வண்டியில் திலகர் (தீவிரக்கட்சி) என்னும் காளை பீடுநடை போட்டுச் செல்வதாகவும் மற்றொரு மேத்தா (பழைய கட்சி) என்னும் காளை தடுமாறி இடைவழியில் நகரமுடியாமல் படுத்துவிடுவதாகவும் விமர்சித்துப் படம் வரைந்தார். அஃதோடு அமையாது உலக அரசியல் நிகழ்வுகளைக் கூறியும் மிதவாதிகளை ஒறுத்தார். ‘‘கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’’ (23.3.1907) என்று அமெரிக்க, ஜப்பான் தேயங்களின் அரசியல் சூழ்ச்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளார். மேலும், இப்படத்தின் விளக்கத்தில் ‘கையாலாகாத ஜனங்களின் வாய்க் கூச்சல்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பயத்தில் நடக்கிற விஷயங்கள் நயத்தில் நடக்கமாட்டா’’ என்று மிதவாதிகளின் போக்கால் இந்தியா பயனடையாது என்பதைத் தெளிவுறுத்துகின்றார்.

சுதேசிக் கப்பல் சித்திரம்
      பாரதியின் விகடசித்திரங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம் பாரதி கண்டது தேசியம் என்பதால் தான். ஆனால், சுதேசிக்கப்பலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சுமார் நான்கு படங்களை வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை என்பதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் இதற்கு உதவுங்கள் என்று கூறுவதாகவும், மற்றொன்று தீபாவளித் தாய் பணம் வசூலித்துத் தருவதாகவும் அமைந்திருக்கின்றது. ஒருபடம் தென்இந்தியாவிலே சிலர் மட்டும் சுதேசிக்கப்பலுக்காக வேலை பார்ப்பதால் தான் அது நஷ்டத்தில் ஓடுவதாகவும் அமைத்திருக்கின்றது.

      துருக்கி சுதந்திரம் அடைந்தபோது அதனை விளக்கும் முகமாகவும் விகடசித்திரம் தீட்டினார். மேலும், ஐரோப்பாவில் வெளியாகும் ‘‘பஸ்கினோ’’ எனும் பத்திரிக்கையில் பிரசுரமான படத்தினையும் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளார். வேறு பல இதழ்களில் வெளியான கட்டுரைகளையும் கருத்துக்களையும் விளக்கும் விதமாகவும் சித்திரம் வெளியிட்டார். ஓயாமல் தற்காலச் சித்திரம் காட்டுவதில் ஜனங்களுக்குச் சலிப்பு உண்டாகியிருக்கும். அதனால் போக்குவதற்குப் பழைய புராதனச் சித்திரம் வரைந்து வாசகர்களின் சிந்தனை மேலும், மெறுகேற்றுதல் வேண்டும் என்ற எண்ணத்தில் (9.1.1909) பழைய வீரத்தினை விளக்குவதாக சித்திரம் வரைந்தார். இதே சித்திரத்தினை 2.10.1909 அன்று மீண்டும் வெளியிட்டார். அதில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனங்களுக்கு வீரத்தன்மை இருக்கும். ராஜங்கம் சுயாட்சிமுறை தழுவியிருக்கும். அப்போது நமது வீரர்கள் பரதேசத்தாருடன் போர்செய்யப் புறப்படும் போது வாழ்க்கைத் துணைவியர்கள் வாள் கொடுத்து வழியனுப்புவர் என்று இந்தியாவின் சுதந்திரத்தை முன்பே கனித்துக் கூறியிருக்கிறான். அதனால் தான்,

‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’’

சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரப்பள்ளு பாடினான். ஒரே சித்திரத்தினைக் காலச்சூழலுக்கு ஏற்ப இருமுறை பயன்படுத்தி இருவேறு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

      ‘‘இந்தியாவின் குமாரர்கள் ஆனந்தமடைவதைப் பாருங்கள்’’ (20.10.1906) என்று இந்தியர்கள் பண்டிகை கொண்டாடும் போது அதனைச் சாடுகின்றார். மேலும், நம் சந்ததியினர் சந்தோஷத்துடன் பண்டிகை கொண்டாட வகை செய்ய வேண்டுவது நமது கடமை என்பதைனையும் நினைவுபடுத்துகிறார். தமிழ்ப்புத்தாண்டிற்குச் சித்திரம் வரைந்து வாழ்த்துத் தெரிவித்து கவிதை வரைந்து விடுதலை உணர்வினை விதைக்கிறார்.

பாரதி எண்ணிய புது யுக்தி
      முழுவதும் கேலிச்சித்திரம் அடங்கிய இதழையும் வெளியிடும் எண்ணம் பாரதிக்க இருந்தது. இதனை 4.12.1909 இதழ் தெளிவுறுத்துகின்றது. மேலும், ‘இந்தியா’ இதழில் முதல் பக்க சித்திரம் மட்டுமல்லாது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள முக்கிய நிகழ்வுகளை விளக்கும் பொருட்டும் சித்திரம் வரைவதற்குத் தான் எண்ணியுள்ளதாகவும் பாரதி பகர்கின்றார் (13.3.1909).


      இவ்வாறு பல்வேறு யுக்திகளைத் தனது விகடசித்திரத்தில் பாரதி பதித்தான். ‘‘இந்தியா இதழின் சுவையான பகுதி படங்கள் ஆகும். அந்தச் சித்திரம் தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம் தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று’’ என்ற பாரதிதாசன் வரிகளில் இருந்து பாரதியின் சித்திரத்திற்குக் கிடைத்த வெற்றியினை நாம் ஒருவாறு அறியலாம்.


க.கந்தசாமிபாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜூக்கள் கல்லுரி,
இராசபாளையம்.