பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, February 2, 2021

உதிரும் வரையிலும் உழல்வதுவோ வாழ்க்கை? - எழுத்தாளர் இமையத்தின் வாழ்க வாழ்க நூல் குறித்த விமர்சனம்.

 

உதிரும் வரையிலும்  உழல்வதுவோ வாழ்க்கை?




-          இரா.நரேந்திரகுமார்

எழுத்தாளர் இமையம் எழுதியுள்ள குறுநாவல் ‘‘வாழ்க வாழ்க’’ சுகமான வாசிப்புக்குரிய அழைப்பல்ல. எளிய மக்கள் மீதான கரிசனமும், விம்மலும், புலம்பலும், நெகிழ்தலும், உருகுதலும் கூடி நொதித்த ஓர் அவலப் படைப்பாக உருவாகியுள்ளது. விளிம்புநிலை மனிதத் தொகுதியை அரசியல் சுவீகரித்து, அவர்களின் அடையாளத்தை, இருப்பை அழித்தொழிப்பது பற்றிய எழுத்து. நூலிழை பிசகினாலும் செய்தித்தாள் வாசிப்பாகிவிடும் களம்.


ஒட்டுமொத்தக் குறுநாவலும், ‘அழைத்துவரப்பட்டவர்கள்’ சங்கமிக்கும் அரசியல் கட்சியின் பொதுக்கூட்ட மைதானத்திடலிலேயே நிகழ்ந்துமுடிகிறது. ‘கொலைச்சேவல்’ தொகுப்புக்கு அரவிந்தன் அளித்த மதிப்புரையில் – ‘‘இமையத்தின் கதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது’’ என்பது கலப்படமற்ற உண்மை. வளர்மதியின் மகளும், தன் பேத்தியுமான குழந்தையின் குளிர்சுரத்துக்கான மருத்துவச் செலவுக்காக அரசியல் கட்சிக் கூட்டத்துக்கு ஆள் பிடிப்பவனிடம் சிக்குகிறாள் ஆண்டாள். ஆள்பிடிக்கும் வெங்கடேசப்பெருமாள் அத்தனை மாயாஜாலம் காட்டியும் அவன் மீது நமக்கு எந்தவித வெறுப்பும் உண்டாவதில்லை. பாவப்பட்டவர்கள், பணத்துக்கு ஆசைப்படுகிறவர்கள் பட்டியலை வைத்திருக்கும் அவனும் அந்தப் பட்டியலில் இருப்பவன் தானே. பதினைந்து பேர் மட்டுமே ஏறக்கூடிய வேனில் ஆண்டாள், சொர்ணம், காயத்ரி, கண்ணகி உட்பட முப்பதிநான்கு பேர் ஏற்றப்படுகின்றனா். கண்டியாங்குப்பங்களின் பெண்கள் மிரளும் அளவுக்கு விருத்தாசலம் தேர்தல் பிரசாரக் கூட்டம். ஏழாம் அத்தியாத்திலிருந்து குறுநாவல் நிறைவாகும் இருபத்தைந்தாம் அத்தியாயம் வரை கூட்ட மைதானமே குறுநாவலின் களம்.

ஏமாற்றுக்கார அரசியல் என்கிற பொதுவான மனமொழி அவர்களிடம் உண்டு என்பதை பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்தவாறு அவர்கள் பேசும் உரையாடல்களிலிருந்து அறியமுடிகிறது. அரசியல் புரிதல் அவர்களிடம் இல்லாமல் இல்லை. மனிதர்களை மனிதர்களாக வாழவிடாத அரசியல் என்பதை அவர்களின் அனுபவவெளி உணர்த்தவே செய்கிறது. தங்களுக்கு இழைக்கப்படும் குரூரத்தை அவர்கள் நையாண்டியும் செய்கிறார்கள். சனநாயக அரசியல் என்பது சனநாயகமற்ற சந்தையாகிப்போனது, சந்தை என்றிருந்தால் போட்டியும் இருக்கத்தானே செய்யும்? சர்வ கட்சியினரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் இமையம். காசு வாங்கி வந்த கூட்டத்துக்குள்ளே சாதித் தகராறு. ‘நீ என்ன சாதி’, நாங்க என்னா சாதி? எங்க கூட நீ வந்து உட்காரலாமா?’’, ‘‘இது கட்சிக் கூட்டம். யாரு வேணுமின்னாலும் எங்க வேணுமின்னாலும் உட்காரலாம்’’ ‘‘நீ ஊரு இல்ல. பறத்தெரு’’ தீவுகளாக இருக்கம் மனிதத் தொகுதியையே ‘‘பறத்தெரு’’ என்கிற சொல்கொண்டு இமையம் சுட்டுகிறார்.


சினிமாப் பாடல்களுக்கேற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்த இருபது வயதைத் தாண்டாத இளம்பெண்களின் ஆட்டத்தை எல்.ஈ.டி. திரையில் காட்ட, ஒட்டுமொத்தக் கூட்டமே வம்பளக்கிறது. ‘ஆட்டம் இல்லாம கூட்டம் போட்டா என்ன’ என ஆண்டாள் கேட்க, ‘கூட்டம் சேர்க்கத்தான். சேந்த கூட்டம் கலையாம இருக்கத்தான்’ என்கிறாள் கண்ணகி. ‘‘எல்லா ஊர்லயும் தான் இந்த ஆட்டம் நடக்கும். வயசுப் புள்ளைங்க ஆடறதப் பாக்கத்தான் கூட்டம் சேருது. இல்லனா கூட்டம் எப்படிச் சேரும்’’. உணவுப் பொட்டலத்தில், தண்ணீர்ப் பாக்கெட்டில் திருட்டுத்தனம் – பிரியாணிக்கும் கணக்கெழுதி குஸ்காவா என்றெல்லாம் பலதரப்பட்ட வாக்குவாதங்கள்.


இமையம் ஒரு மனிதாபிமானி என்பதை வெளிப்படுத்தும் இடம் ‘‘இங்க எங்கியாச்சும் பாத்ரூம் இருக்குமா? எனப் பெண்கள் அலையுமிடம். ஐந்துமணி நேரத்துக்கும் மேலாக சுடுவெளியில் காக்கவைக்கப்பட்ட பெண்களின் நிலை பரிதாபம் நிரம்பியது. ‘வெளியே போனா சனங்க நெரிச்சே கொன்னுடுவாங்க. பேசாம இங்கேயே தரயில் உட்கார்ந்து இருந்துவிடு’ என ஒருத்தி சொல்ல இன்னொருத்தி பொருமுகிறாள். ‘காலத்தூக்கி நடுத்தெருவுல நாய் மூத்தரம் வுடுற மாதிரி கண்ட எடத்துல வேட்டியத் தூக்கி உட்டுட்டுப் போற பயலுவதான? அவனுவளுக்கு எப்படித் தெரியும் பொட்டச்சியோட கஷ்டம்?’’. சில மாதங்களுக்கு முன்பு, ‘எதற்காக இப்படி ஓடுகிறோம்?’ என்னும் தலைப்பில் இமையம் எழுதியிருந்த கட்டுரையில் கூறியிருந்தார் – ‘‘சிறுசநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகளாக்குகின்றன பள்ளிகள். ரத்தச் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்’’. தன் மனதிலிருக்கும் சமூகநலனைக் குறுநாவலிலும் தவறாது காட்சிப்படுத்துகிறார் இமையம். அரசியல் கட்சி தரும் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்து, குறைந்த மதிப்பில் காலணிளையும், அதிக மதிப்பில் தங்கச் சங்கிலி, மணிப்பர்ஸ் போன்றவற்றையும் இழந்து அரற்றுவோர் நிலை பரிதாபமானது. ‘ஐந்நூறு ரூவாய்க்கி ஆசைப்பட்டு எத்தனை பவுன் சங்கிலியத் தொலைச்சாளோ பாவி’ என்கிறாள் ஆண்டாள்.


வெயிலின் புழுக்கத்தைத் தாங்க முடியாத நாவறட்சி. வழிந்த வியர்வையைத் துடைக்க முடியாத கட்சிக்காரன் கொடுத்த இலவச பாலிஸ்டர் சேலை, உப்புப் பூத்த உடம்பு, புழுதி, வெளியே எழுந்து போக முடியாத நிலை, தங்கத் தலைவியே  தர்மத் தலைவியே என்று ஓயாமல் பாடிக்கொண்டிருந்த ஒலிப்பெருக்கியின் சத்தம், மயங்கிவிழுந்த ஒன்பதாம் வகுப்புப் பெண் எனக் காட்சிப்படுத்துகிறார் இமையம். ‘‘ஒரு ஆளு மயங்கி விழுந்திட்டானா, செத்திட்டானான்னு தெரியலை. தூக்கிகிட்டு ஓடுறாங்க. பல பேரோட கொலய வாங்கிடுவாங்க போலிருக்கே’’ எனப் புலம்புகிறாள் ஆண்டாள். இன்னொருத்தி நீர்ச்சுளுக்கால் துடிக்கிறாள்.


‘‘பத்துமணிக்கு வரவேண்டிய ஹெலிகாப்டர் மூணே கால் மணிவாக்கில் வருகிறது. சரஞ்சரமாய் வெடி. சவுக்குக் கழிகள் முறிந்து விழ, அத்தனை ஆண்கள் கூட்டமும் பெண்கள் பக்கம் சரிந்து விழ, ஐவர் நிகழ்விடத்திலேயே மரணம். ஒரு பெண் குடல் சரிந்து உயிரிழப்பு.  ‘போச்சே போச்சே’ என்று அலறியபடி வெளியே ஓட முயலும் பெண்கள். அவர்களை அடித்து விரட்டித் திரும்பவும் உள்ளே அனுப்பும் காவல்துறையினர். பெண்கள் பகுதியில் ஏற்பட்ட கூச்சல், குழப்பம், சாவு, கை கால் முறிவு ஏதுவும் தெரியாமல், கையில் வைத்திருந்த காகிதத்தைப் பார்த்துப் பார்த்துச் சத்தமாகத் தன் போக்கில் படித்துக்கொண்டிருந்த தலைவி.’’ குறுநாவல் முடிகிறது.


உச்ச கட்டத்தை நோக்கி சம்பவங்களை வலிந்து புனையும் உத்தி குறுநாவலில் இல்லை. பொருந்தாச் சொல் எதுவும் தழும்பிச் சிதறவில்லை. மேலதிகச் சொல்லும் பயன்படுத்தப்படவில்லை. இமையத்தின் உள்மன உணர்வுகளாகக் கொதித்துக் கொண்டிருக்கும் அக்கினிக்குழம்பு குறுநாவலாக உருப்பெற்றிருந்தும், நிதானமான சொல்பிசகாத எழுத்து.


பிரபஞ்சன் சொல்கிறார் –

‘‘எழுத்தாளர் இமையம் மொழி குறித்த தீர்க்கமான கருத்துகள் உடையவர். மக்கள் பேசும் மொழியைத்தான் அவர் தனதாக்கிக் கொண்டார். எனினும், சொற்கள் தங்கள் முழு அர்த்தத்தையும் பயன்பாட்டையும் தந்துவிடுமாறு தன் உரையாடலை அமைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர். இமையம் போன்ற எழுத்தாளர் மிக மிகச் சிலரே தமிழ்ச் சூழலில் மிகக்கடுமையான முயற்சி, உழைப்பை முன்வைத்து ஒரு புதிய உலகுக்கு எழுதுகிறார்கள். இமையத்தின் முயற்சி தோற்பது இல்லை.’’


பஞ்சமும் பட்டினியும் வறுமையும் நோய்களும் அரச வன்முறை. ஏழ்மையில் இருப்போரின் உடல், உள்ளம், ஆன்மாவைச் சிதைக்கும் வகையில் அரசியல்வாதி விட்டெறிவது பணமென்னும் ஆட்கொல்லி. மனிதர்களை மனிதர்களாக வாழவிடாத இந்த ஒழுக்கக்கேடு மரபுரீதியான அரசியலாகப் பரிணாமம் அடையுமுன் கிள்ளி எறியவேண்டும் என இமையத்தின் மனதில் விழுந்த விதையின் உறக்கம் குறுநாவலாக முளைவிட்டுள்ளது. தான் வாழும் காலத்தை நெருக்கடியான ஒரு வரலாற்றுத் தருணமாக எதிர்கொள்ளும் எழுத்தாளன் தன் சமூகத்துக்கு வேறென்ன செய்துவிட முடியும்?

இரா.நரேந்திரகுமார்

எழுத்தாளர்.

narendrakumarrajiah@gmail.com

 

 

        


Monday, January 25, 2021

சுதந்திரச் சிந்தனை, இராசபாளையம்
30 ஆவது நிகழ்வு



        ‘வைகறை முரசு’ ஒருங்கிணைப்பில் ‘சுதந்திரச் சிந்தனை’ இலக்கிய அமைப்பு சார்பில் இராசபாளையம் நகரில் 30 ஆவது கலந்துரையாடல் நிகழ்வு (19.12.2020) அன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நாவிதர் சமூகத்தின் ‘இன வரைவியல்’ நாவலான ‘‘சுளுந்தீ’’ ஆசிரியர் இரா.முத்துநாகு பங்கேற்றார். நிகழ்வின் போது க.கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். விஜய் அய்யப்பன், வைகறை முரசு சுதாகர், பாலசுதர்சன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வேலாயுதம் பொன்னுச்சாமி, பாலசுதர்சன் உள்படப் பலரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனா். பேராசிரியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் வினவிய வினாக்களுக்கு நூலாசிரியர் இரா.முத்துநாகு ஆவண ரீதியாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும் விளக்கம் அளித்தார். சுந்திரச் சிந்தனை ஒருங்கிணைப்பாளர் இரா. நரேந்திரகுமார் தலைமை உரை ஆற்றினார். இந்நிகழ்வில் எழுத்தாளர் திரு இரா.முத்துநாகு பேசியதாவது: 


v  மக்களாட்சி (ஜனநாயகம்) என்பதை புத்தகக் கண்காட்சியைத்தான் சொல்லமுடியும். ஏனென்றால் அனைத்துத் தரப்பு நூல்களும் இருக்கும் . அதை நூல் விற்பனை என்று சொல்வதற்குக் கூட மறுக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு ஜனநாயகம் என்ற சொல் எப்படிப் பொருந்துமோ அதைப்போல 100 விழுக்காடு இந்த சுதந்திரச் சிந்தனைக்கும் பொருந்தும். ஏனென்றால் எல்லாத் தரப்பு ஆட்களையம் பேசவைத்து பெருமைப்படுத்தி உங்களிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மக்கள் மயப்படுத்துதல் அல்ல ஜனரஞ்சகமாக அமைகின்றது.

v  என்னுடை எழுத்து தொழில்முறை எழுத்து அல்ல. நான் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர். 100 விழுக்காடு விவசாயி.

v  இந்த 30 நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் இந்த நூலை ஜெயமோகன் எழுதினார், இந்த நூலை பிரபஞ்சன் எழுதினார் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் சுளுந்தீ எழுதிய முத்துநாகு பேசுகிறேன். நான் எழுதிய சுழுந்தீ என்று கூறமுடியாது. சுளுந்தீயால்தான் நான் அறியப்பட்டேன்.

v  ஆங்கிலேய ஆட்சியில் சாதிய முதலாளித்துவம் என்பது தமிழகத்தில் முதலில் வெற்றிபெற்றது செட்டிநாட்டுப் பகுதிதான். அதன் பின்னர் வெற்றி பெற்றது இந்த இராசபாளையம் தான். கோயம்புத்தூர் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அதில் பல சாதிகள் வெற்றி பெற்றன. ஒற்றைத் தன்மையுடன் வெற்றி பெற்றது என்பது இதுதான்.

v  இராஜபாளையம் என்பது இராஜுக்கள் பாளையம் என்று கூறுவது பொத்தாம் பொதுவான கருத்து. ஆய்வாளர்கள் சான்று கேட்டால் கொடுப்பதற்கு ஏதும் இருக்காது.

v  நம் பகுதியில் முனியாண்டி என்பதும் வடதமிழகத்தில் முனியப்பன் என்பதும் விஜயநகர காலத்தில் வந்ததுதான். அது உள்ளூர்ச்சாமி அல்ல. அதேபோல் காமாட்சி அம்மன் என்பதும் வெளியிலிருந்து வந்ததுதான். காமட்டம்மன் என்பதுதான் காமாட்சியம்மன்.

v  குலநீக்கம் செய்வதற்கான வரம்பு அல்லது அதிகாரம் என்பது காஞ்சி மடத்திற்குத்தான் வழங்கப்பட்டது. சாதிவிட்டு சாதித் திருமணம் செய்வது, முறைமாறி திருமணம் செய்வது, இரவில் திருமணம் முடித்தல், ஐயர் இல்லாமல் திருமணம் முடித்தல், தீப்பந்தம் ஏற்றித் திருமணம் செய்வது போன்றவை குல நீக்கத்திற்கான காரணங்கள் ஆகும்.

v  1967 வரை குலநீக்கம் என்பது சட்டமாக இருந்தது. சாதிமறு மணம் என்பதும் 1967 வரை செல்லாது. இது நாயக்கர் காலத்தில் தொடங்கியது என்பதை நாம் எளிதாக மறந்து விடுவோம்.

v  கி.ரா வின் சாகித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியல் கி.ரா சொல்லுவார் ‘‘இந்தப் பகதியில் நிலம் சும்மா  இருந்தது. நெருஞ்சியாக இருந்தது. அதை அகற்றிவிட்டுதான் நாயக்கர் சமூகத்தார் குடியேறினர்’’ என்பார். எந்த ஊரிலும் நிலம் சும்மா இருக்காது. பிரிட்டன் அரசு வந்த போது நமது ஊரில் தரிசு என்ற சொல்லே கிடையாது. அதுவரை திணை வரையறையில் தான் நிலங்கள் பிரிந்து கிடந்தன. நஞ்சை, புஞ்சை, மானாவரி என்றுதான் பிரித்திருப்பான். அதன்பின்னர் தமிழன் மேய்ச்சல் தரிசு என்றுதான் சொன்னான். பின்னர் எப்படி சும்மா இருந்தது என்ற கூறிமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் சுளுந்தீயை எழுதுவதற்கு நான் நிர்பந்திக்கப்பட்டேன். என்தரப்பு செய்தியை அவர் கேட்பதற்கும் சொல்வதற்கும் தயாராக இல்லை. அந்த அடிப்படையில் தமிழக் குடிகளின் பிரதிநிதியாய் நிர்பந்தம் இருந்தது.

v  நான் இந்த நாவலை எழுதுவதற்கு கரு எடுத்து எழுதவில்லை. நான் உங்களைப் போன்ற வாசகன்தான். நான் எழுதவேண்டிய சூழலை இந்த எழுத்துலகம் தான் ஏற்படுத்தியது.

v  ஏழு வயது இருக்கும்போது என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் பாவாணரின் கடைசி மாணவன் அறவரசன்.

v  12 அல்லது 13 வயதில் எந்த வகையான எண்ணத்தை நாம் செலுத்துகிறோமோ அதுதான் இறுதிவரை நிற்கும். 12 வயது முதல் 18 வயது வரை ஒருவரின் மூளைக்குள் என்ன திணிக்கப்படுகிறதோ அது தான் அவனுக்கான 45 வயது வரை இருக்கும். அல்லது அவன் ஆய்வுப் புலத்திற்குள் வரும் வரை அல்லது அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்யும் வரை அந்தக் கருத்துதான் நிற்கும். அந்த அடிப்படையில்தான் தமிழக்குடிகள் தொடர்பான தகவல்களைத் தேடவேண்டியது வந்தது.

v  ஒவ்வொரு இனக்குழுவும் அதற்கான பழக்க வழக்கங்கள், பண்பாட்டினை, மரபுக் கூறுகளை ஏதேனும் ஒரு வகையில் சுமந்துகொண்டுதான் இருக்கும்.

v  எங்க அம்மா பெரிய காது வளர்த்தா. எங்க காட்டுக்கு அருகில் இருக்கும் எர்ர நாயுடு அத்தை காதில் சிவப்பு நிற பெரிய கடுக்கன் அணிந்திருந்தாள். இதைப் பார்த்து சிறுவயதில் கேள்வி கேட்டேன். ஆனால் அதற்குச் சரியான பதில் இல்லை. காது வளர்ப்பது என்பது சமணர்க்குரியது. ஆனால் எங்க ஆத்தாவும் பாட்டியும் காது வளர்த்திருந்தால் அதை என்னவென்று சொல்லுவது.

v  இதையெல்லாம் தொகுத்துத்தான் எழுதினேன். ஆனால் அது 500 பக்கங்களைத் தாண்டியது. பின்னர் ஏர் மகாராசன் போன்றோர்தான் சுருக்கிக் கொடுத்தார்கள். இதை நான் கதையாக எழுதவில்லை. கட்டுரை போன்றுதான் உள்ளது. எனவே வாசிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான்.

v  ஸ்ரீவில்லிபுத்தூரில் அருந்ததியர் இன மக்கள் தான் முதலில் பெருமாளுக்கு செருப்பினை காணிக்கையைச் செலுத்த வேண்டும். அதைத்தான் அனைவரும் தொட்டு வணங்கி அடித்துக்கொள்ள வேண்டும் என்பது மரபு. இது நாயக்கர் காலத்தில் வந்தது என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் மயோன் வழிபாடு என்பது நமது பழைய மரபு.

v  இப்படி பழைய திணைக் கலப்பு தான் சாதியமாகத் தோன்றியது. அதை ஒரு வரைமுறைப்படுத்தும் போதுதான் குல நீக்கம் என்ற கருத்தாக்கம் பெறுகிறது. இதையும் முதலில் வெளிக்கொண்டுவந்தது திராவிட இயக்கம் தான்.

v  தமிழன், திராவிடன் யார் என்று முறையாக எழுதிவைத்தவர் பாவாணர் தான். அதை மறுத்துப் பேசவோ எழுதவோ யாரும் இல்லை.

v  பெரியார் தான் முதலில் ஈரோட்டில் அனைத்து சமூகத்திற்கும் குழாய் அமைத்து வீட்டிற்கே தண்ணீர் வரவழைத்தார். அதுதான் இன்று அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.

v  கிணற்றை எப்போது வெட்டியிருப்பார்கள். அசோகர் எப்படி கிணறு வெட்டினார். எவ்வளவு ஆழம் வெட்டியிருப்பார். அதற்கு எந்தக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? கிணறு தோண்டுவதற்கு எந்த வகையான ஆயுதத்தைப் பயன்டுத்தியிருப்பார்கள் அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எந்த நூலும் சொல்லவில்லை.

v  குடைவரைகளையும் இதைப்போல எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள குடைவரைகள் படுக்கை அறைகொண்ட குடைவரை இது சமணத்திற்கானது. இது தென்தமிழகத்தில்தான் உள்ளது வடதமிழகத்தில் இல்லை.

v  மலையடிக்குறிச்சிதான் முதல் குடைவரை. இது பல்லவர் காலத்திற்கு முந்தையது என்பர். ஆனால் இது பாண்டியர் குடவரை. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதோடு சேர்ந்ததுதான் பிள்ளையார்பட்டி குடைவரை. குடைவரை எப்பொழுது வெட்டியது யார் காலத்தைச் சார்ந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதை எப்படி வெட்டினான். எதைவைத்து வெட்டினான் என்பதே இங்கு கேள்வி.  

v  குன்றக்குடி ஆதினத்தில் கீழ் உள்ள திருக்கோலங்குடி குடைவரைதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய குடைவரை. இதை எப்படிக் குடைந்திருப்பான். அதைக் குடைவதற்கு அவன் பயன்படுத்திய விஞ்ஞானத்திற்கான துணைக்கருவி வெடிபொருளாகத்தான் இருக்க வேண்டும். உப்பை வெடியாகத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி அவன் பயன்படுத்திய பொருள் கந்தகம் ஆகும். இதை கி.பி. 9 ஆம் நூற்றாண்டு தெலுங்குக் கல்வெடு ‘‘கெந்தகம்’’  என்கிறது. வெடிமருந்துதான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஆங்கிலேயரே கூறியுள்ளனர். அதை எவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதை திருமந்திரம் சொல்லியுள்ளது. இதை ஆய்வறிஞர் ரெங்கையா முருகன் ஒரு குறிப்பில் சொல்லியுள்ளார். திருமந்திர நூலாக்கமும் இந்தக் கல்வெட்டின் காலமும் ஏறத்தாள ஒன்றாகவே உள்ளது.

v  சாதீய அடுக்குமுறை என்ற இந்த இழிநிலையை சுளுந்தீயில் முதல் பக்கத்திலேயே காணலாம். மாடன் ஊர் சாற்றி முடித்துவிட்டு வாரேன் சாமி என்பான். அப்பொழுது அங்கிருந்தவர்கள் என்னப்பா? எங்கள அரண்மனையார் மாதிரி சாமினு சொலற என்பார்கள். இதில் மாடன் அருந்ததியர் பாத்திரம். இன்றைக்கு இவர்கள் கீழ்நிலைச் சமூகம். ஆனால் அன்றைக்க அவர்கள் அவ்வாறு இல்லை. அனைவரும் சமமாகத்தான் இருந்துள்ளார்கள். குலநீக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே சாமி என்று அழைக்கவேண்டும்.

v  பார்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய நூல்களில் முதன்மையானது கைவல்ய நவநீதம் என்பதாகும். இதன் முக்கியப்பங்கு வகிப்பது இராசபாளையம் தான்.

v  இன்றைய சாதியப் படிநிலையை வலதுசாரி எழுத்தாளர்கள் வளர்நிலை என்கிறார்கள்.

v  லா.சாராவிலிருந்து கி.ரா வரை இவர்கள் எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இடுவார்கள். அதில் தென்னரசும் சிற்றரசும் இருக்கமாட்டர்கள். இவர்கள் எழுதாத கதையா. அல்லது அண்ணாவும் கலைஞரும் எழுதாத கதையா? ஆனால் இவர்களை யாரும் எந்த மேடையிலும் குறிப்பிடுவது இல்லை.

v  அம்பேத்காரை எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் பெரியாரையும் சீர்திருத்தவாதி அல்லது புரட்சிக்காரரகப் பார்க்கவேண்டும். ஆனால் சிலர் பெரியாரைக் கலகக்காரர் என்கிறார்கள்.

v  அனைவரும் பாரதியாரைத் தூக்கி நிறுத்துவது போல் பாரதிதாசனை நிறுத்துவது இல்லை. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்றார். காணி என்பது பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கும் நிலம். அரசே நினைத்தாலும் கூட அதை வாங்கமுடியதது. இது பிராமணர்களுக்குக் கொடுக்கும் நிலம். அதைத்தான் பாரதி கேட்டான். இதை சிற்றரசு தனது எழுத்தில் பதிவு செய்துள்ளார். அதை யாரும் கூற மாட்டார்கள்.

v  இதைப்போலத்தான் நீங்கள் யார் யாரெல்லாம் பெரிய எழுத்தாளர்கள் என்று பட்டியலிடுகிறீர்களோ அதில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் இடம் பெறுவது இல்லை. அதைப்போலத்தான் எந்த இலக்கியவாதியும் இந்த தமிழக் குடியைப் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யும் பட்டியலிலும் இல்லை. அதனால்தான் இந்தத் தமிழ்க்குடியைச் சுளுந்தீ பதிவு செய்தது.

 

 




Tuesday, April 28, 2020

காதல் இலக்கியம் – ஒரு பருந்துப் பார்வை

காதல் இலக்கியம் – ஒரு பருந்துப் பார்வை

            காதல். அதுதானே எல்லாம். இப்புவியில் காதல் கொள்ளாத உயிர்களே இல்லை. அதனால்தான் தமிழா் கவ்வுதல் எனும் பொருளிளில் காதல் என்னும் சொல்லைப் படைத்தனா். இக்காதலைப் பாடாத புலவனும் இல்லை. இக்காதல் குறித்து நோக்கினால் அதன் பார்வை தொல்காப்பியத்தைத் தொடும். இத்தகைய தொன்மையான காதல் என்னும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு பிற்காலத்தில் தனித்ததொரு சிற்றிலக்கிய வகைமை தோற்றம் பெற்றது. இக்காதல் இலக்கியத்தினைப் பருந்துப் பார்வையாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தோற்றப் பின்புலம்
           சமூக, அரசியல் மாற்றத்திற்கேற்ப இலக்கியங்களும் மாற்றம் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் தொல்காப்பியத்தில் சுட்டப்பெற்ற அகம் என்று குறிக்கப்பெற்ற களவும் கற்புமே பிற்காலத்தில் காதல் இலக்கியமாகத் தோற்றம் கண்டது. சங்கப் பாக்களில் புறப்பாடலினும் அகப்பாடலே (1862 பாடல்கள்) அதிகம். இதில் களவு (882 பாடல்கள்), கற்பு (966 பாடல்கள்) குறித்த பாடல்களும் அடங்கும் (கைக்கிளை – 4 பாடல்கள், பெருந்திணை – 10 பாடல்கள்) (.சுப. மாணிக்கம், தமிழக்காதல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்). சங்க காலத்திற்குப் பின் காப்பிய காலத்தில் புலவர்கள் இவ்வகப்பொருளினைப் பல இடங்களில் வலிந்து திணித்தனா். பிற்காலத்தில் அஃதாவது சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் இவ்வகப்பொருளினை இறைவனின்பாற் ஆற்றுப்படுத்தினா் (மாணிக்கவாசகர், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்). இக்காதல் என்பது இறைவனை ஆணாகவும் தன்னைப் பெண்ணாகவும் பாவிப்பதாய் அமைந்தது. அதன் பின்னா் மேலை நாடுகளின் வருகையால் தமிழ்ச் சமூகம் பாரிய மாற்றத்தினைச் சந்தித்தது. அது இலக்கியதினையும் இலக்காக்கியது. விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் பாளையக்காரர்கள் வீரியம் கொண்டனா். அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் தனது பயணப் பாதையில் மாற்றத்தினை ஏற்படுத்தியது. புலவர்கள் தங்களின் வறுமையினைப் போக்க சங்க காலத்தில் அரசனைப் புகழ்ந்தும் (புறப்பாடல்கள்) அவனது பரம்பரையினைப் புகழந்தும் பாடிப் பரிசில் பெற்றனர். ஆனால் பாளையக்காரர்கள் அவ்விதம் நீண்ட நெடிய வரலாற்றினைப் பெற்றிருக்கவில்லை. அதனால் சங்கபுலவர் போல் புறம் பாடிப் பரிசில் பெறுவது என்பது இயலாத ஒன்று. எனவே தான் அக்காலப் புலவர் அகப்பாக்களைக் கையில் எடுத்தனா். சங்க அகப்பாக்களைப் போலல்லாமல் காமச்சுவையினையும் அதில் இணைத்துக்கொடுத்தனா். காரணம் கி.பி. 17 ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பரப்பில் இலக்கியச் செழுமையில் ஏற்பட்ட தேக்க நிலையே ஆகும். பக்திப் பாடல்களும் அகப்பொருளோடு அமைந்தது. பக்தி இலக்கிய காலத்தில் பக்தி முதல் இடமும் காதலுக்கு இரண்டாம் இடமும் தர, பிற்காலத்தில் காதலுக்கு முதல் இடமும் பக்தி இரண்டாம் இடமும் பெற்றது

முதல் இலக்கியம்
            காதல் இலக்கியத்தின் தோற்றம் என்பது சங்க காலத்தில் தொடங்கியிருந்தாலும் காதல் என்ற பெயரோடு தோன்றியது கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தான். வீரமாமுனிவரின் ஆசிரியராகிய சுப்பிரதீபக் கவிராயர் நிலக்கோட்டையை ஆட்சி செய்த மதுரை திருமலைநாயக்கரின் மைத்துனனாகிய நாகம கூளப்பநாயக்கன் மீது பாடிய கூளப்ப நாயக்கன் காதல் என்பதே இவ்வகையில் தோன்றிய முதல் இலக்கியம் ஆகும். இவ்வகையில் ஐம்பத்தெட்டுக்கும் மேற்கட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளதாக .அழகப்பராசு (பக். 139 – 142, தமிழ் இலக்கியக் கொள்ளை (தொகுதி – 8, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) பட்டியலிடுகிறார். தூதுக்கொத்துப் பதிப்பாசிரியர் .ராசேந்திரன் 26 காதல் இலக்கியங்கள் இருப்பதாகக் (பக். 8 - 9, .ராசேந்திரன், காதல் கொத்து, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை) குறிப்பிடுகிறார். சிற்றிலக்கிய வகை அகராதி எழுதிய .வி.செயராமன் அந்நூலில் 24 காதல் பிரபந்தங்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். இவற்றையெல்லாம் நோக்குங்கால் மொத்தம் 66 காதல் நூல்கள் இருப்பதாக அறியமுடிகின்றது. இதில் சில நூல்கள் இன்னும் அச்சு வாகனம் ஏறவில்லை

இலக்கணம்
            சிற்றிலக்கிய வகைமைகளுக்கான இலக்கணத்தைக் கூறும் பாட்டியல் நூல்களில் பெரும்பாலானவை இக்காதல் இலக்கியத்திற்கு இலக்கணம் செய்யவில்லை. இதற்கு 
            ‘‘கொண்டமயல் ஈரடிக் கண்ணியில் இசை காதலுக்கே’’
-           சுவாமிநாதம், 171
என்று சுவாமிநாதம் மட்டுமே இலக்கணம் செய்கின்றது. இக்காதல் இலக்கிய வகையில் தலைவியில் கேசாதிபாத வருணனை மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. அதனால் பிரபந்தத்திரட்டு பாதாதி கேசத்திற்கான புறனடையில்,

         ‘‘இன்னதுக்குப் புறநடையாய் காதலென்று பெயரா
         யிசைத்தார்கள் பெரியோர்கள்’’
                                                        -           பிரபந்தத்திரட்டு, 476

என்று குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் பாட்டியல் நூல்களில் இதன் இலக்கணம் சரிவர வரையறுக்கப்பெறவில்லை. அதனால் இவ்வகையில் தோன்றிய இலக்கியங்களைக்கொண்டே இலக்கணம் வகுக்கவேண்டிய சூழல் உள்ளது. வேட்டைக்குச் செல்லும் தலைவன் பூக்கொய்ய வரும் தலைவியைக் கண்டு காதல் கொள்கிறான் (இயற்கைப் புணர்ச்சி). பின்னர் இருவரும் பிரிந்து இல்லம் சென்றபின் விபரம் அறிந்த தலைவியின் வீட்டார் தலைவனை ஏசுகின்றனா். அப்பொழுது தலைவன் தலைவியை அழைத்துவர பல்லக்கு அனுப்புகிறான். அதில் தலைவி சென்று தலைவனுடன் மகிழ்வாக வாழ்கிறாள் என்பதே இக்காதல் இலக்கியத்தின் பொதுவான அமைப்பாகும். இதில் அகமரபு அமையப்பெற்று தலைவியின் வருணனையிலும் பிற இடங்களிலும் காமச்சுவை அதிகம் அமைந்துள்ளது. இதிலிருந்து புலவர்குழாம் பழமையிலிருந்து மாறாது அதே வேலை புதுமையையும் புதுக்கியுள்ளதனை உணரமுடிகின்றது. ஆனால் கந்தர் காதலில் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் துறையாய் அமைந்துள்ளது. மேலும் ஆந்தைக் காதல், கௌளிக் காதல், தும்மற் காதல் போன்றவை சோதிடம் குறித்துத் தோன்றியவை ஆகும். பின்னர் இது இறைவனுக்கும் பாடப்பட்டது. குறிப்பாக இந்து, இசுலாம், கிறித்துவம் ஆகிய மும்மதங்களிலும் இவ்வகை இலக்கியங்கள் தோன்றியுள்ளன (தருமக்காதல்நூர்யிஸ்மால் சாயபு, ஐய நைனான் காதல்). தமிழில் தோன்றியுள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலானவை சைவ இலக்கியங்கள். அதே வகையில் இக்காதல் இலக்கியத்திலும் சைவமே விஞ்சி நிற்கின்றது. அதிலும் முருகனின் பெயரில்தான் அதிகக் காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இத்தனைக்கும் மேலாக தெய்வச்சிலையா பிள்ளை என்பவர் மநுநீதிக் காதல் என்னும் காதல் இலக்கியம் செய்துள்ளார். இதன் நோக்கம் அறக்கருத்துக்களைக் கூறும் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் போன்றோரின் அறக்கருத்துக்களின் சிறப்பினை உணர்த்தவே ஆகும்

காமச்சுவைக்கான காரணங்கள்
            இக்காதல் இலக்கியங்கள் தோன்றிய பதினேழாம் நூற்றாண்டு என்பது சிறிது போர்கள் இன்றி தமிழக மக்கள் அமைதியாய் வாழ்ந்த காலம். இக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லையாதலால் இக்காதல் இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் தங்கள் வீரத்தினை வெளிக்கொணர வேட்டைக்குச் சென்றதாய் அமையப்பெற்றிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது. மேலும் இக்காலம் முன்னர் கூறியது போல் இலக்கியப் பரீட்சயம் உடைய தலைவர்கள் குன்றிய இருந்த காலமாக இருந்ததாலும் இக்காதல் இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் பெரும்பாலும் தனிமனிதனாகவும் சிறு பாளையக்காரராகவோ இருந்ததினாலும் அவர்களின் கவனத்தைப்பெற இக்காமச்சுவையினை அதிகம் இவற்றில் பயன்படுத்தியுள்ளனா். இதில் வரும் காமச்சுவைகள் பெரும்பாலும் தலைவியை வருணிப்பதாகவே அமைந்துள்ளது. மேலும் இவ்வருணனை கேசாதி பாதமாகவும் அமைந்துள்ளது. ஆற்றுப்படை நூல்களில் அமைந்துள்ள விறலி வருணனையும் இவ்வகையில் அமைந்தாலும் அதில் காமச்சுவை என்பது தெரியா வண்ணம் புலவர் பயன்படுத்தினா். இக்காதல் இலக்கியங்கள் தோன்றிய காலப்பின்னணியினை நோக்கும் போது இது சரியென்றே தோன்றுகின்றது. ஆனால் பிற்காலத்தில் இக்காதல் இலக்கியங்கள் என்பவை தமிழ்ப் புலவர்களிடையே எந்த வரவேற்பையும் பெறவில்லை. காதல் என்பதும் காமம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. அதனால்தான் தொல்காப்பியர்,

                 ‘‘மக்கள் நுதலிய அகணைந்திணையும்
              சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாஅர்’’
                                              -           தொல்காப்பியம், 1000

என்று குறித்தார்போழும். ஒருவேளை இக்காதல் இலக்கியங்கள் அனைத்தும் சுட்டிஒருவர் பெயர் கொள்ளப்பெறாமல் இருந்திருந்தால் பிற்காலப் புலவர்கள் இவ்வகையினைத் தொடர்ந்து தொட்டிருப்பார்கள்போழும்

காதலில் பிற இலக்கிய வகைகள்
            அகக்கோவை நூல்களே இக்காதல் இலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைந்திருக்கலாம். மேலும் உலா மற்றும் தூது இலக்கியங்களும் இவ்வகையில் இடம்பெற்றுள்ளன. மன்னனின் அரச ங்கங்களைப் பாடும் தசாங்கம் எனும் இலக்கிய வகைமையும் இதில் காணக்கிடைகின்றது. அரசன் உலாப்போனபோது சோலையினைச் சார்ந்து இருக்கும் பொய்கை வரைச் சென்று அங்கு அவன் கண்ட தெய்வமகள் மேல் காதலால் இயற்கைச் சூழல் மாற்றமுற்றதாகப் பாடும் தாடகசிங்காரம் என்னும் இலக்கிய வகையும் இதில் அமைந்துள்ளது. இதற்கு,

                ‘‘மன்பவனி சோலை மலர்மலி வாவிவர
                மின்னொருத்தி மின்போல் வியனெய்தக்கன்னிக்
                கிறைமோகத் தாற்சோலை யேற்றவெல்லாம் பாட
               லறியுந்த டாகசிங்கா ரம்’’
                                                          -           பிரபந்தத் திரட்டு, 13

என்று பிரபந்தத் திரட்டு இலக்கணம் செய்கின்றது. இளவேனிற் காலத்தில் அரசன் ஒருவன் தெய்வக் கன்னியின் மீது காதல் கொண்டு சோலை நோக்கிச் செல்கின்றான். அதனை அறிந்து தேவ கன்னிகை அரசன் மீது அன்பு கொண்டு தூது நீக்கி பின்பு அவனை அனைத்துக் கொள்வதாகப் பாடும் காதலுத்தியாபவனம் (பிரபந்தத் திரட்டு-47, எனும் வகையும் இதில் உள்ளது. காதலால் ஏற்பட்ட மயக்கத்தை நிலவு ஒளிவீசும் போது கூறும் இலக்கிய வகையாகிய விடயசந்திரோதயம் (பிரபந்தத் திரட்டு – 42) எனும் இலக்கிய வகையும் காணப்பெறுகின்றது

பவனிக்காதல் என்பது வேறு வகை
            பவனிக்காதல் என்பது வேறுவொரு இலக்கிய வகையாகும். உலா என்பது பவனி வரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட தலைவியின் நிலையினைப் புலவர் கூறுவதாய் அமையும். ஆனால் பவனிக்காதல் என்பது தலைவியின் நேரடிக் கூற்றாய் அமையும். எனவே உலா என்பதும் பவனிக்காதல் என்பதும் வேறானவை. மேலும் காதல் இலக்கியமும் பவனிக்காதல் இலக்கியமும் வேறானவையே ஆகும்

            மொத்தத்தில் இலக்கியம் செய்யும் மரபு சற்று மங்கிப்போன காலத்தில் புலவன் தனது வறுமையினைப் போக்கவே இக்காதல் இலக்கியம் செய்துள்ளனா். ஆனால் இதில் காமச்சுவை மிகுந்திருப்பினும் இலக்கியச்செழுமை சற்றேனும் குறையவில்லை என்பதே உண்மை


முனைவர் .கந்தசாமி பாண்டியன்,
தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப்பிரிவு),
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி,
இராஜபாளையம்.