பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Wednesday, June 8, 2011

ஓங்கு பரிபாடல் - ஓர் அறிமுகம்

                      ஓங்கு பரிபாடல்: ஓர் அறிமுகம்

            பரிபாடல் என்பது பரிபாடல் என்னும் பாவினத்தால் ஆகிய பாக்களின் தொகுதி. இப்பாக்கள் பண்ணமைதியோடு பொருந்தியவை; பக்தியோடு மனமுருகிப் பாடப்பட்டும் பயிலப் பட்டும் வந்தவை. ஓங்கு பரிபாடல் என்று சீரிய பெரும்புகழை அந்நாளிலேயே பெற்று அமைந்தது.

இத்தொகை நிலை வகையால் ‘பா’ என்று சொல்லப்படும் இலக்கணமின்றி எல்லா பாவிற்கும் பொதுவாக நிற்றற்குரியதாய் இன்பப் பொருளைப் பற்றிக் கூறியதாய் உள்ளது. இது சிறுமை 25 அடியும் பெருமை 400 அடியும் எல்லையாகக் கொண்டுவரும் எனத் தொல்காப்பியம் கூறும்.

பரிபாடற்கண் மலையும் ஆறும் ஊரும் வர்ணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறுவர்.

அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வரும் என்பர் பேராசிரியர்.

பரிபாடலின் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

பரி என்னும் சொல் குதிரை ஓட்டம், நடை எனப் பல பொருள்படும். பரிபாடலின் ஓசை குதிப்பது போலவும், ஓடுவது போலவும், நடத்தல் போலவும் இருத்தலின் அவ் வோசை உடைய பாடல் பரிபாடல் என பெயராயிற்று என்று சிலர் கூறுவர்.

பரிந்த பாட்டு பரிபாட்டென வரும். ஒரு வெண்பாவாகி வராமல் பல உறுப்புகளோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது பரிபாடல் என்கிறார் இளம்பூரணர்.

பரிபாடல் என்பது பரிந்து வருவது அஃதாவது கலியுறுப்புப் போலாது நான்கு பாவா லும் வந்து பலவடியும் வருமாறு நிற்குமென்று நச்சினார்க்கினியர் கூறுவர். பாடல் நால் வகைப் பாக்களையும், அறுவகை உறுப்புகளையும் (கொச்சகம், அராகம், சுரிகம், எருத்து, சொற்சீரடி, முடுகியலடி) தாங்கி வருதலின் பரிந்த பாட்டு பரிபாடல் என்பது பெரும் பான்மையோரின் கருத்தாகும்.

பரிபாடலில் இடம் பெற்றுள்ள இருபத்திரண்டு பாடல்களில் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இயற்றியவர் பெயர்கள் கிடைத்தில. மீதமுள்ள பாடல்களைப் பாடியுள்ளோர் பதின்மூன்று பேர் ஆவர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல் காப்பிய உரையில் தொகை என்ற சொல்லைக் கையாண்டுள்ளதால் பேராசிரியர் கால மாகிய கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தொகை நூல் தோன்றி இருக்க வேண் டும் என்று சொல்வதற்கு வாய்ப்புள்ளது.

பரிபாடல்களின் தெய்வங்கள் (முருகன், திருமால்) வையை ஆறு, பாண்டிய அரசர் என்பன பரிபாடலின் பாடுபொருளாக உள்ளன. தெய்வங்கள் வரிசையில் திருமால், செவ் வேள் கொற்றவை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அரசர்களுக்கெனத் தனியாக எவ்விதப் பாடலும் இல்லை. தெய்வத்தைக் குறித்த பாடல்களிலும் ஆற்றைக் குறித்தப் பாடல்களிலும், அரசர்கள் பற்றிய செய்திகள் இடையிடையே அமைந்துள்ளன.

பரிபாடலில் காணப்படும் தெய்வங்கள் வரிசையில் முருகன், திருமால் என்னும் இரு தெய்வங்களைப் பாடு பொருளாகக் கொண்ட பாடல்கள் பல பரிபாடலில் இடம் பெற்றுள்ளன. மேலும், காடுறை தெய்வமாகிய கொற்றவை தெய்வம் குறித்தும் சில பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பரிபாடல்கள் மூலம் மதுரை, வையை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை ஆகிய வற்றின் பண்டைக் கால நிலையையும் பெருமையையும் அக்கால மாந்தர்கள் ஆடை, அணிகள், ஊண், உணவுமுறை, வணங்கிய கடவுளர்கள், வழிபாட்டு வகைகள், விழாக் கள் ஆகிய வாழ்க்கை முறைகளையும் குறிப்பிடுகிறது.

அகலிகை, ரதி, மன்மதன் போன்றோரின் புராணக் கதைகளையும் பண்டு ஓவியங் களாக ஆலயங்களில் தீட்டியுள்ளனர் என்பதையும், பண்டைக்காலத்தில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் போன்ற சொற்கள் நூறாயிரம், பதினாயிரம், லட்சம், கோடி போன்ற எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பரிபாடல் பிறசங்க நூல்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கின்றது.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவற்றின் பாடல்கள் அடிவரையறை யுடன் காணப்படுகின்றன.

பாவகை மற்றும் அடிவரையறை வேறுபாடுகளில் மட்டுமின்றி மொழிக் கூறுகளிலும் சங்க இலக்கியத்தில் இருந்து பரிபாடல் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது பாடு பொருள் வேறுபாடு; திணை, துறை வேறுபாடு; சொல் வேறுபாடு; புதிய சொற்களின் ஆட்சி, நடை வேறுபாடு போன்றவை காணப்படுகிறது.

நன்றி .
(மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ‘பரிபாடல்’ ஆய்வுக் கோவையிலிருந்து)

No comments:

Post a Comment