மதுரை யாதவர் கல்லூரி மற்றும் காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வுமன்றம் மற்றும் சிவகாசி பட்டாசுநகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய ஒரு நாள் கருத்தங்கம். இக்கருத்தரங்கம் ‘‘தமிழிலக்கியங்களில் கண்கள் - பன்முகப் பார்வை’’ எனும் தலைப்பில் அமைந்திருந்தது. இக்கருத்தரங்கினை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர். சோ.முத்தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்திருந்தார். இக்கருத்தரங்கில் சுமார் 200 கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப் பட்டது. மேலும், மறைந்த தமிழறிஞர். இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய கதிர்க் கடவுள் நூலும், வாழக் எம்மான் நீ (முனைவர். முத்துலட்சுமி முதல்வர், காந்திய கல்லூரி) என்னும் காந்திய நூலும் வெளியிடப்பட்டது. இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் க.ப.அறவாணன் மற்றும் பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
பெரியார்
மனிதனை நினை கடவுளை மற
Friday, June 29, 2012
Monday, June 4, 2012
தி.ஜானகிராமன் புதினங்களில் கைம்பெண்டிர் நிலை
தி.ஜானகிராமன் புதினங்களில் கைம்பெண்டிர் நிலை
முன்னுரை
தஞ்சை வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்டு அந்தணர் மற்றும் மேல் தட்டு மக்களின் சமூக வாழ்க்கைச் சிக்கல்களைத் தம் எழுத்தில் படம் பிடித்துக் காட்டியவர் தி.ஜானகிராமன். அவர் எழுதிய புதினங்கள் பலவற்றிலும் கைம்பெண்டிர் வாழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. சமூக நெருக்கடிக்கு ஆளாகும் அக்கைம்பெண்டிர் நிலை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை விளங்குகிறது.
தி.ஜானகிராமன்
தஞ்சை மாவட்டம் தேவங்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தி.ஜானகிராமன். முதலில் பள்ளி ஆசிரியராகவும் பின்னர் வானொலியில் கல்வி ஒளிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர். இவர் 1979 இல் தம் ‘சக்தி வைத்தியம்‘ என்னும் சிறுகதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஆவார். 1982 இல் தம் 61 ஆம் வயதில் காலமான இவர் அமிர்தம் முதல் நளபாகம் வரை பத்துப் புதினங்களை எழுதியுள்ளார்.
கைம்பெண்டிர்
கணவனை இழந்த பெண், இந்நாட்டில் கைம்பெண் என்று அழைக்கப்படுகிறாள். வைதவ்யக் கோலம் காரணமாக வடமொழியில் அவள் ‘விதவை‘ என்னும் சொல்லால் சுட்டப்படுகிறாள். பெண்ணுக்கு மட்டுமே ‘கற்பு‘ என்று சொல்லப்பட்ட மணிமேகலை, அதனை மூவகையாகப் பிரித்துள்ளது. தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்பவையே அவை.
‘‘காதலரிற்பிற கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா
தின்னுயிரீவர் பொய்கையின் நனியெரி புகுவர்
நளியெரி புகாஅராயின் அன்ப ரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து‘‘
- மணிமேகலை, 2, 42 – 48
இதில் கடைக் கற்பு உடையோரே கைம்பெண்டிராய் வாழ்க்கை நடத்துகின்றனர். இளம் வயதில் கணவனை இழந்த பெண்களை, ‘வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்‘ என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார். ஆச்சாரம் மிகுந்த மேல்தட்டு மக்கள் இல்லங்களில் கைம்பெண்டிர் மிகுந்த சமூக நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டனர். மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, பகற்பொழுதில் வெளியில் தலைகாட்டக் கூடாது, தலை முடியை மழித்து முரட்டு நார்ப்புடவைதான் அணிதல் வேண்டும், பூ வைக்கக் கூடாது, தாலி அணியக் கூடாது, மெட்டி அணியக் கூடாது, வண்ணச் சேலைகள் கட்டுதல் கூடாது போல்வன அப்பெண்களுக்கு இடப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகும்.
தி.ஜானகிராமன் புதினங்களில் கைம்பெண்டிர்
தி.ஜானகிராமன் எழுதிய பத்துப் புதினங்களில் அம்மாவந்தாள், செம்பருத்தி, மலர் மஞ்சம், நளபாகம், மரப்பசு, மோகமுள் ஆகிய ஆறு புதினங்களில் கைம்பெண்டிர் துயர் சுட்டப்பெற்றுள்ளது.
அம்மாவந்தாள் புதினத்தில் பெண்டிர் இருவர் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் வேதப் பாடசாலை நடத்தும் வயதான பவானியம்மாள். சமூக சேவையில் தன்னைக் கரைத்துக்கொண்டு, கணவன் ஏற்படுத்திய வேதப்பாடசாலையை அவர் மறைவிற்குப் பின் கட்டிக் காத்து, ஊரார் பிள்ளைகளுக்கு அன்னமிட்டு வரும் உத்தமப் பெண் ஆவாள். மற்றொருவர் இளம் வயது விதவைப்பெண் இந்து ஆவாள். பால்ய விவாகமாக பரசு என்னும் சிறுவனோடு சிறுவயதில் திருமணமாகி, நோயினால் அவன் மறைந்த பின்பு விதவையாக வாழ்பவள். பருவ வயதில் அப்புவை மானசீகமாகக் காதலித்து அப்பெண், சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பலநேரம் அஞ்சியும். சிலநேரம் அதை எதிர் கொண்டும் வாழ்கிறாள்.
செம்பருத்தி புதினத்தில் கதைத்தலைவன் சட்டநாதனின் சின்ன அண்ணியாக வருபவள் குஞ்சம்மாள் ஆவாள். சட்டநாதனின் அண்ணன் முத்துச்சாமியை மணப்பதற்கு முன்பு மனதால் சட்டநாதனை விரும்பிய அவள், சந்தர்ப்பவசத்தால் அவன் அண்ணியாகிறாள். சிறிது காலத்திலே நோய்வாய்பட்டு முத்துச்சாமி இறந்து போகிறான். அந்தணர் குடியிருப்பில் விதவைப் பெண்கள் எல்லாம் வீட்டின் இடைக்கழியைத் தாண்டி வரக்கூடாது, சமையலறையில் தான் இருக்க வேண்டும் என்னும் கட்டுப்பாட்டின் படி தனக்குப்பிறந்த பெண் குழந்தையுடன் காலத்தைக் கழிக்கிறாள். ஒரே வீட்டில் இருந்து கொண்டே தான் சட்டநாதனைப் பார்க்கவோ பேசவோ அனுமதி மறுக்கப்படும் நிலையினை அக்காலச் சமூகம் ஏற்படுத்தியிருந்தது.
நளபாகம் ரங்கமணி
நளபாகம் கதையின் முதன்மைப்பாத்திரமாக வருபவள் ரங்கமணி. சிறுவயதிலே கைம்பெண் ஆகிறாள். இல்லற வாழ்வில் கணவனின் உடற்குறை ஊருக்குத் தெரியாத காரணத்தால் மலடி என்னும் அவப்பெயரை அடைகிறாள். குறிப்பாக மாமியார் கொடுமைக்கு ஆளாகிறாள். இதில் மறைமுகமாக ரங்கமணிக்கும் அவள் கணவனுக்குமான பொருந்தா மணம் சுட்டப்பெற்றுள்ளது. உடற்கட்டிலோ கர்பப்பையிலோ எவ்விதக் குறையும் இல்லாத ரங்கமணியை, மலடி எனப் பழித்துப்பேசும் சமூகத்தைக் கண்டு ரங்கமணிக்கு மிகுந்த கோபம் ஏற்படுகின்றது.
‘‘ரங்கமணிக்கு ஒரு வெறிவந்து ஆட்டிற்று. அரைப்புடவையை அவிழ்த்து, ரவிக்கையைக் கழட்டி விட்டு நிற்க வேண்டும் போல் இருந்தது.‘‘ (நளபாகம், ப.53)
எனும் வரிகள் ரங்கமணியின் கோப உணர்வை வெளிப்படுத்துகின்றன. பின் நோய்வாய்ப்பட்டுக் கணவன் இறந்ததால் அவள் விதவை ஆகிறாள். ஆனால், பழி மட்டும் அப்பெண்ணையே வந்து சேருகிறது.
‘‘துன்பம் என்றும் ஆணுக்கல்ல. அது அன்றும் இன்றும் பெண்களுக்கே’’
- வைரமுத்துவின் திரைப்படப் பாடல்
என்னும் கூற்று இங்கு நினைவூகூறத்தக்கது.
மலர்மஞ்சம் புதினத்தில் கதைத்தலைவி கல்லூரி மாணவி பாலாம்பாள். அவள் தோழியாக வரும் செல்லம்மாள் இளம் வயது கைம்பெண். குழந்தைமணத்தால் பெண்கள் விதவைகளாக மாறும் அவலம் இப்புதினத்தில் காட்டப்படுகிறது. மரப்பசு புதின நாயகி அம்மணி கட்டுப்பாடற்ற போக்குடையவளாகப் புதினத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளாள். அவள் அவ்வாறு மாறிடக் காரணமாக இருப்பவள் ஓர் இளம்வயதுக் கைம்பெண். அம்மணியின் தந்தையின் நண்பர் கண்டு சாஸ்திரி. அவரது மகளே இளம் விதவைப் பெண். பெயர் சுட்டப்படாத அப்பெண்ணின் கைம்மைத்துயரையும் தலைமுடி மழிப்பதையும் பார்த்த அம்மணி தனக்குத் திருமணமே வேண்டாம் என்னும் முடிவிற்கு வருகிறாள்.
மோகமுள் புதினத்தில் சுப்பிரமணிய ஐயா; கதாபாத்திரத்தின் இரண்டாவது மனைவியாக வரும் பார்வதிபாய் என்னும் பாத்திரம் பெண் விதவையாகிறாள். பண்ணைச் சமூகம் நிறைந்த அன்றை தஞ்சை இதுபோல் கைம்பெண்கள் உருவாக மறைமுகக் காரணமாகிறது.
சொந்த வாழ்வின் பாதிப்பு
தி.ஜானகிராமனின் இந்தப் புதினங்களில் எல்லாம் கைம்பெண்கள் உருவாகக் காரணம் அவரது வீட்டில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்வின் பாதிப்புத்தான். தி.ஜாவின் இரு சகோதரிகளையும் இராமச்சந்திரன் என்னும் ஒருவரே மணந்து பின் இளம்வயதில் அவர்களை விதவைகளாக்கி மறைந்தமையே ஆகும். இளம் பருவத்தில் இருந்த தி.ஜா., தன் சகோதரிகளை ஒருவரே மணந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எதிர்ப்பையும் மீறி குடும்பத்தார் செய்து வைத்த திருமணமே அவர் சகோதரிகளின் விதவைக் கோல வாழ்வுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. இந்நிகழ்வும் அவர் சிறுவயதில் பார்த்த தஞ்சை வட்டார அந்தணர் இல்ல விதவைகளும் தி.ஜானகிராமனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரணத்தால், இந்த ஆறு புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதியுள்ள நிறைய சிறுகதைகளிலும் விதவைப் பாத்திரங்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன. கைம்பெண் மறுமணம் என்பதை நினைத்துக் கூடப் பாத்திராத அக்காலச் சமுதாயத்தில் கைம்பெண்டிர் நிலை மிகவும் மோசமாகவே இருந்துள்ளது.
தொகுப்புரை
தஞ்சை வட்டாரத்தில் நிலவி வந்த பண்ணைச் சமூக அமைப்பு, பலதார மணம், குழந்தைத் திருமணம், மேல்தட்டு சாதியினரின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் போல்வன தி.ஜா.,வின் புதினங்களில் கைம்பெண்டிர் படும் துன்பத்தை வெளிப்படுத்திகின்றன.
முனைவர். க.சிவனேசன்,
முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.
இலக்கியங்களில் கண் - ஓர் ஆய்வு
இலக்கியங்களில் கண் - ஓர் ஆய்வு
முன்னுரை
மனிதவூடல் மதிப்புமிக்கது. இதையறிந்த திருமூலர்,
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
என்று பாடுகிறார். உடம்பிலுள்ள ஒவ்வோர் உறுப்புகளும் ஆற்றும் பணிகள் அருமை வாய்ந்தவை. உயிர்வாழவூம் உடல் இயங்கவூம் எல்லாவுறுப்புகளின் கூட்டுச் செயல்பாடுகளும் இன்றியமையாதவையாகும். உடல் உறுப்புகளை வெளியில் புலனாகுபவை, உடலின் உள்ளே அமைந்தவை என இரண்டாகப் பகுக்கலாம். கண், காது, மூக்கு, கை, கால் போன்றவை வெளியில் புலனாகுபவை. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை உடலின் உள்ளே அமைந்தவையாகும். ஓர் உறுப்பின் அருமை, அதை இழக்க நேரும் போதோ, அது பழுதுபட்டுச் செயலிழக்கும் போதோ தான் முழுமையாக உணரப்படுகிறது. உடல் உறுப்புகளில் இதுமதிப்பு மிக்கது, இது மதிப்பு குறைந்தது என்று எந்த உறுப்பையும் கூறுதல் இயலாது. அந்த அளவிற்கு ஒவ்வொன்றும் உடல் இயக்கத்திற்குத் துணை புரிகின்றது. எனினும் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒரு மனிதனால் கணப்பொழுதும் வாழ இயலாது. ஆனால் கண், காது, கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒருவன் வாழ்தல் கூடும். அவ்வாறாயின் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் உயர்ந்தனவா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் கூறலாம். ஏனெனில் மனிதன் நிறைவாழ்வு வாழத் தேவையான கல்வியறிவைப் பெறுவதில் கண்ணும், செவியும் முதலிடம் பெறுகின்றன. “கண்ணினும் செவியினும்” எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். கண்ணின் பங்கு மிகமிகப் பரிதாகும். கண் உறுப்புகளில் முதன்மையானதாக எல்லாராலும் கருதப்படுவதோடு, இலக்கிய ஏற்றமும் பெற்றுத் திகழ்கிறது. கண் குறித்து பண்டை இலக்கியந் தொட்டு இன்றுவரை பாடப்பட்டுள்ள செய்திகளைத் திரட்டித் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நான்காம் அறிவு
மனிதன் பெறத்தக்க ஆறு அறிவுகளுள் நான்காவது அறிவூ, கண்ணின் வழியாகப் பெறப்படும் பார்வைப் புலனாகும். இதனைத் தொல்காப்பியர்,
“நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே”
(தொல்-மரபியல்-நூற்பா 27)
என்று குறிப்பிடுகின்றார். கண், மனிதன் நீங்கலாக அஃறிணை உயிர்கள் பலவற்றுக்கும் உண்டென்ற போதிலும், அவைகள் கண்ணைப் பயன்படுத்தி, மனிதன் பெற்றதைப் போன்ற பேரறிவைப் பெறவில்லை. மனித அறிவோடு, கண் நெருங்கிய தொடர்புடையது என்பதைத் திருவள்ளுவர்,
“கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”
(திருக்குறள் - கல்வி – 403)
என்று கூறியிருப்பதன் மூலம் நன்குணர முடிகிறது. கண்ணை அறிவின் நுழைவாயில் என்று கூறுவது பொருத்தமே.
கண்ணும் காதலும்
உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் காதலருக்கும், அவர் வழியாக ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் காதலரை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்றழைக்கும் மரபு உண்டாயிற்று. சிலப்பதிகாரத்தில் மாதவி, தான் உயிரினும் மேலாகக் காதலித்த கோவலனுக்கு வரைந்த மடலைக் கோசிகன் என்னும் அந்தணன் வாயிலாக அனுப்பிய போதுஇ அவனைக் “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது.
“வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி
கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே
மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்”
(சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76)
காதலரைக் கண்ணுக்கு நிகராகக் கருதியது போலவே, தாம் ஈன்றெடுத்த குழந்தையையும் ‘கண்ணே’ என்றழைப்பது மிகப்பரவலாகக் காணக் கிடக்கிறது. தாய்பாடும் தாலாட்டுப் பாடலில்,
கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என்
கானகத்து வண்டுறங்கு”
(வாய்மொழிப்பாடல் - தாலாட்டு)
என்று பாடும் போது தன் குழந்தையைக் கண்ணே என்றழைத்து மகிழ்கிறாள்.
கண்ணும், குறிப்பறிதலும்
வள்ளுவத்தில் ‘குறிப்பறிதல்’ என்னும் ஒரே தலைப்பில் இரண்டு அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று பொருட்பாலில் உள்ளது. மற்றொன்று காமத்துப்பாலில் காணக்கிடக்கிறது. பொருட்பால் குறிப்பறிதல் அரசியல் சார்ந்தது. காமத்துப்பால் குறிப்பறிதல் காதல் சார்ந்தது. எனினும் இரண்டு வகைக் குறிப்பறிதலுக்கும் ஆதாரமாக விளங்குவது கண்ணேயாகும்.
“குறிப்பின் குறிப்பு உணரா ஆயின், உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். ”
(திருக்குறள் - பொருள்- குறிப்பறிதல் 715)
“நுண்ணியம் என்பார் அளக்குங்கோல், காணுங்கால்
கண் அல்லது இல்லை பிற”
(திருக்குறள் - பொருள் குறிப்பறிதல் 720)
மேற்காண் இருபாடல்களும் அரசியல்; குறிப்பறிதலில் கண்ணின் பங்கை படம் பிடித்துக் காட்டுகின்றன.
“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்றுபெரிது”
(திருக்குறள் – காமம் குறிப்பறிதல் 1112)
‘‘இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து’’
(திருக்குறள்-காமம் குறிப்பறிதல் 1111)
என்னும் இருபாடல்களும் காதல் குறிப்பறிதலில் கண்ணின் பங்கைச் சிறப்பிக்கின்றன.
காமத்துப்பாலில் கண்
திருக்குறள் காமத்துப்பாலில் ‘கண்’ பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. ‘கண் விதுப்பழிதல்’ என்று ஓர் அதிகாரமே கண்ணின் பெயரால் படைக்கப் பட்டுள்ளது. கண்கள் காதலரைக் காட்டியதால் அன்றௌ இத்தீராத (காதல்) நோயை அனுபவிக்கின்றேன். இவ்வாறு எனக்கு நோயை உண்டாக்கிய கண்கள் இப்பொழுது அழுவது எதற்காக? என்று பொருள்படுமாறு இக்குறள் அமைந்துள்ளது.
“கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது”
(திருக்குறள் - கற்பு – 1171)
பெண் என்பவள் பேணிக்காப்பவள். ஆனால், பெண்களில் தகைமையுடைய இவளுக்குக் கண்கள் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத்துடன் அமைந்துள்ளன. இது என்ன முரண்பாடு? என்ற வினவுவது போல,
“கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்”
(திருக்குறள் - களவு – 1084)
என்னும் குறள் படைக்கப்பட்டுள்ளது.
கண்ணுக்கு மலரை ஒப்பிடுவது தமிழ் இலக்கியத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.
“மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி”
(திருக்குறள் - களவு – 1119)
என்றும்,
“நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூ அன்ன கண்ணா ரகத்து”
(திருக்குறள் - கற்பு – 1305)
என்றும் வள்ளுவம் இதனை உண்மையாக்குகிறது. மலர்கள் பலவற்றுள்ளும் ‘குவளை’ கண்ணோடு மிக நெருக்கமானது. “குவளை மலருக்குக் காணும் திறன் இருந்தால் தலைவியின் கண்களைப் பார்த்து, அவற்றுக்குத் தான் ஒப்பாக இயலாது என்று தலை கவிழ்ந்து நிலம் நோக்கும்” என்று கூறியிருப்பது இதனை அரண் செய்யும்.
“காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொங்கவம் என்று”
(திருக்குறள் - கற்பு – 1114)
காதல் வயப்பட்ட தலைவன் ஒருவன், தனது கண்களின் கருமணிப் பாவையை வெளியேறச் சொல்கிறான். ஏனெனில் அவன் தன் காதலியை அப்பாவை இருந்த இடத்தில் வைத்துக் காக்கப் போகின்றானாம்.
“கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்டை இடம்”
(திருக்குறள் - களவு – 1123)
தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்ட துயரை வெளிப்படுத்தும் உறுப்புகளான நெற்றி, தோள், கண் ஆகியவற்றில் கண் முதலிடம் பெறுகிறது. தலைவியின் நெற்றியில் ஏற்பட்ட வேறுபாட்டால் கண்பசப்புற்று வருந்தியதாம்.
“கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு”
(திருக்குறள் - கற்பு – 1240)
தலைவன் கொண்ட காதலைக் தனது கண்களால் அறிவது போலத் தலைவி அவன் மீது கொண்ட காதலைத் தனது கண்களாலேயே அறிவிக்கின்றாள். இதனைக் குறிப்பறிவுறுத்தல் என்னும் அதிகாரம் விளக்குகிறது.
“பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு”
(திருக்குறள் - கற்பு – 1280)
என்னும் குறளால் இதனை அறிய முடிகிறது.
‘‘புலவி நுணுக்கம்‘‘ என்னும் அதிகாரத்தில் ‘தலைவனே! பெண்கள் எல்லாரும் உன்னைத் தங்கள் கண்களாலேயே கூடி மகிழ்கின்றனர். பலருக்கும் இன்பம் நல்கும் நீ பரத்தன் ஆகிவிட்டாய். எனவே உன் மார்பை நான் தழுவிச் சேரமாட்டேன்” என்று கண்களாலேயே பரத்தைமை நடைபெற்றதைத் தலைவி குறிப்பிடுகின்றாள்.
“பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு”
(திருக்குறள் - கற்பு – 1317)
கம்பனில் கண்
விசுவாமித்திரன் தான் நடத்தப் போகும் யாகத்தைக் காப்பதற்குத் தசரதனிடம் இராமனைத் தன்னோடு அனுப்புமாறு வேண்டினான். அந்தப் போழ்தில் தசரதன் உற்ற துயரைக் கம்பன் உவமை சொல்லி விளக்குகிறான்.
“கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்”
(கம்ப – கையடைப்படலம் - 12)
கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். அவற்றில் ஒன்று இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென்பது. அதைக் கேட்டவுடனே தசரதன் கைகேயிடம் “என் கண்ணை வேண்டுமானாலும் கேள். தருகிறேன். ஆனால், இராமன் வனவாசம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை விட்டுவிடு” என்று இறைஞ்சுகிறான். இதனைக் கம்பர்,
“கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் என்
உள்நேர் ஆவிவேண்டினும் இன்றே உனது அன்றௌ
பெண்ணே வண்மைக் கேகயன் யானே! – பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான்”
என்று பாடுகிறார்.
(கம்ப –கைகேயி சூ.வி.படலம் 32)
பெரிய புராணத்தில் கண்
அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவர் கண்ணின் பெயராலேயே ‘கண்ணப்பன்’ என்றழைக்கப்படுகிறார். திண்ணன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், திருக்காளத்தி அப்பர் மேல் கொண்ட பேரன்பால் தனது கண்களையே பெயர்த்து, அவருக்கு அப்பினார் என்று சேக்கிழார் பாடுகிறார்.
“இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்தெழும் உள்ளத் தோடுமகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்கரம் அடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப”
(பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் - க.எ.அ)
“கண்ணப்பனைப் போல் என்னால் அன்பு செய்யமுடியாதபோதும்இ என்னையும் ஆட்கொண்டு அருளினாயே” என்று மாணிக்கவாசகர் சிவனின் பேரருட்கருணையை வியக்கும் போது,
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்”
(திருவாசகம்)
என்று பாடிப் பரவுகிறார். பட்டினத்தாரும் இதே கருத்தைக் கூறும் போது, “நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன் நான் இனிச்சென்று” என்று பாடுகிறார்.
துறைமங்கலம் சிவப்பிரகாசர் தனது நன்னெறி நூலில், கண்ணின் பெருமையை அழகுற விதந்தோதுகிறார். உடலின்பிற உறுப்புகள் அணிகலன்களை அணிந்து அழகுபெறும் போது, கண் அதைப் பார்த்து மகிழ்கிறது. ஆனால் கண், எந்த ஆபரணத்தையும் அணிவதில்லை. தான் அணிய இயலாத போதும், பிற உறுப்புகளின் அழகைப் பார்த்துப் பொறாமை கொள்ளாமல் மகிழும் கண்ணின் பெருந்தன்மையைப் போல் மனிதர் வாழ வேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர்.
மற்றொரு பாடலில், எந்த உறுப்பு வலியால் துடித்தாலும் கண் அதற்காக அழுது கண்ணீர் சிந்துகிறது. அதைப் போல மனிதரும் பிறர் துன்பம் கண்டு இரங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கவிஞர் நா. காமராசன், கண்ணைப் பற்றித் தனது கவிதையொன்றில்,
“புருவக் கொடியருகே
பொன்னிமையின் உள்ளே
உருவாகிச் சுழலும்
உள்ளத்தின் முத்திரைகள்
இதைதேடி மனப்பறவை
என்றௌ திறந்து வைத்த
இருவாய்கள்
முகவிளக்கின் இருசுடர்கள்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பாடலில் பல இடங்களில் கண் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. கண்ணிழந்த மனைவியை, மாமல்லபுரத்திற்கு அழைத்துச் செல்லும் கணவன்,
கண்ணே, என் கண்மீது உன் கண்
வைத்துப் பாராய்”
என்று பாடுகிறான். ஒரு பொருளை அனுபவிக்க இயலாத நிலையில் உள்ளவருக்கு அதனைக் கொடுத்தால் என்ன நிகழும் என்பதை,
“கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்”
என்று பாடுகிறான் கவிஞன்.
மற்றொரு பாடலில்,
“நீ படிக்கும் அறையில் நான் கண்களா? புத்தகமா? ”
என்று கேட்டுக் கவிஞன் வியப்பை ஏற்படுத்துகிறான்.
முடிவுரை
உடல் உறுப்புகளில், அறிவின் திறவுகோலாக விளங்குவது கண்கள். அதன் இன்றியமையாமை பற்றியே அது காதலருக்கும்இ அவர் வழித்தோன்றும் குழந்தைகட்கும் ஒப்பாகப் பேசப்படுகின்றது. குறிப்பறிதலிலும், குறிப்பு அறிவுறுத்தலிலும் கண் பெரும்பங்கு வகிக்கிறது. கருணையின் இருப்பிடமாகக் கண் திகழ்வதால், கருணையைக் கண்ணோட்டம் என்றே அழைக்கின்றனர். கண்ணுக்கு உவமையாக மலர் கூறப்பட்டாலும், குவளை மலர் கண்ணோடு மிகப் பொருந்திப் போகிறது. கண்ணைப் பற்றிய செய்திகள், முனைவ பட்ட ஆய்வேடு அளவிற்கு மிகுந்திருந்த போதும், இக்கட்டுரையில் அளவு வரையறை காரணமாக, பதச் சோறாக ஒருசில மட்டும் தெரிவு செய்து தரப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கண் குறித்து ஆய்வு செய்ய, மிகுதியான வாய்ப்புள்ளது என்பது தெளிவாகின்றது.
நன்றி.
முனைவர் திருமதி.ப.காந்திமதி.
தமிழ்த்துறைத் தலைவர்,
ம.சு.பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரி,
நாகலாபுரம்.
Subscribe to:
Posts (Atom)