பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Monday, June 4, 2012

தி.ஜானகிராமன் புதினங்களில் கைம்பெண்டிர் நிலை

தி.ஜானகிராமன் புதினங்களில் கைம்பெண்டிர் நிலை

முன்னுரை

          தஞ்சை வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்டு அந்தணர் மற்றும் மேல் தட்டு மக்களின் சமூக வாழ்க்கைச் சிக்கல்களைத் தம் எழுத்தில் படம் பிடித்துக் காட்டியவர் தி.ஜானகிராமன். அவர் எழுதிய புதினங்கள் பலவற்றிலும் கைம்பெண்டிர் வாழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. சமூக நெருக்கடிக்கு ஆளாகும் அக்கைம்பெண்டிர் நிலை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை விளங்குகிறது.

தி.ஜானகிராமன்

          தஞ்சை மாவட்டம் தேவங்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தி.ஜானகிராமன். முதலில் பள்ளி ஆசிரியராகவும் பின்னர் வானொலியில் கல்வி ஒளிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர். இவர் 1979 இல் தம் ‘சக்தி வைத்தியம்‘ என்னும் சிறுகதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஆவார். 1982 இல் தம் 61 ஆம் வயதில் காலமான இவர் அமிர்தம் முதல் நளபாகம் வரை பத்துப் புதினங்களை எழுதியுள்ளார்.

கைம்பெண்டிர்

          கணவனை இழந்த பெண், இந்நாட்டில் கைம்பெண் என்று அழைக்கப்படுகிறாள். வைதவ்யக் கோலம் காரணமாக வடமொழியில் அவள் ‘விதவை‘ என்னும் சொல்லால் சுட்டப்படுகிறாள். பெண்ணுக்கு மட்டுமே ‘கற்பு‘ என்று சொல்லப்பட்ட மணிமேகலை, அதனை மூவகையாகப் பிரித்துள்ளது. தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்பவையே அவை.

  ‘‘காதலரிற்பிற கனையெரி பொத்தி
   ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா
   தின்னுயிரீவர் பொய்கையின் நனியெரி புகுவர்
   நளியெரி புகாஅராயின் அன்ப ரோ
  டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
  பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து‘‘
-        மணிமேகலை, 2, 42 – 48

இதில் கடைக் கற்பு உடையோரே கைம்பெண்டிராய் வாழ்க்கை நடத்துகின்றனர். இளம் வயதில் கணவனை இழந்த பெண்களை, ‘வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்‘ என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார். ஆச்சாரம் மிகுந்த மேல்தட்டு மக்கள் இல்லங்களில் கைம்பெண்டிர் மிகுந்த சமூக நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டனர். மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது,  பகற்பொழுதில் வெளியில் தலைகாட்டக் கூடாது, தலை முடியை மழித்து முரட்டு நார்ப்புடவைதான் அணிதல் வேண்டும், பூ வைக்கக் கூடாது, தாலி அணியக் கூடாது, மெட்டி அணியக் கூடாது, வண்ணச் சேலைகள் கட்டுதல் கூடாது போல்வன அப்பெண்களுக்கு இடப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகும்.

தி.ஜானகிராமன் புதினங்களில் கைம்பெண்டிர்

          தி.ஜானகிராமன் எழுதிய பத்துப் புதினங்களில் அம்மாவந்தாள், செம்பருத்தி, மலர் மஞ்சம், நளபாகம், மரப்பசு, மோகமுள் ஆகிய ஆறு புதினங்களில் கைம்பெண்டிர் துயர் சுட்டப்பெற்றுள்ளது.

          அம்மாவந்தாள் புதினத்தில் பெண்டிர் இருவர் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் வேதப் பாடசாலை நடத்தும் வயதான பவானியம்மாள். சமூக சேவையில் தன்னைக் கரைத்துக்கொண்டு, கணவன் ஏற்படுத்திய வேதப்பாடசாலையை அவர் மறைவிற்குப் பின் கட்டிக் காத்து, ஊரார் பிள்ளைகளுக்கு அன்னமிட்டு வரும் உத்தமப் பெண் ஆவாள். மற்றொருவர் இளம் வயது விதவைப்பெண் இந்து ஆவாள். பால்ய விவாகமாக பரசு என்னும் சிறுவனோடு சிறுவயதில் திருமணமாகி, நோயினால் அவன் மறைந்த பின்பு விதவையாக வாழ்பவள். பருவ வயதில் அப்புவை மானசீகமாகக் காதலித்து அப்பெண், சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பலநேரம் அஞ்சியும். சிலநேரம் அதை எதிர் கொண்டும் வாழ்கிறாள்.

          செம்பருத்தி புதினத்தில் கதைத்தலைவன் சட்டநாதனின் சின்ன அண்ணியாக வருபவள் குஞ்சம்மாள் ஆவாள். சட்டநாதனின் அண்ணன் முத்துச்சாமியை மணப்பதற்கு முன்பு மனதால் சட்டநாதனை விரும்பிய அவள், சந்தர்ப்பவசத்தால் அவன் அண்ணியாகிறாள். சிறிது காலத்திலே நோய்வாய்பட்டு முத்துச்சாமி இறந்து போகிறான். அந்தணர் குடியிருப்பில் விதவைப் பெண்கள் எல்லாம் வீட்டின் இடைக்கழியைத் தாண்டி வரக்கூடாது, சமையலறையில் தான் இருக்க வேண்டும் என்னும் கட்டுப்பாட்டின் படி தனக்குப்பிறந்த பெண் குழந்தையுடன் காலத்தைக் கழிக்கிறாள். ஒரே வீட்டில் இருந்து கொண்டே தான் சட்டநாதனைப் பார்க்கவோ பேசவோ அனுமதி மறுக்கப்படும் நிலையினை அக்காலச் சமூகம் ஏற்படுத்தியிருந்தது.

நளபாகம் ரங்கமணி

          நளபாகம் கதையின் முதன்மைப்பாத்திரமாக வருபவள் ரங்கமணி. சிறுவயதிலே கைம்பெண் ஆகிறாள். இல்லற வாழ்வில் கணவனின் உடற்குறை ஊருக்குத் தெரியாத காரணத்தால் மலடி என்னும் அவப்பெயரை  அடைகிறாள். குறிப்பாக மாமியார் கொடுமைக்கு ஆளாகிறாள். இதில் மறைமுகமாக ரங்கமணிக்கும் அவள் கணவனுக்குமான பொருந்தா மணம் சுட்டப்பெற்றுள்ளது. உடற்கட்டிலோ கர்பப்பையிலோ எவ்விதக் குறையும் இல்லாத ரங்கமணியை, மலடி எனப் பழித்துப்பேசும் சமூகத்தைக் கண்டு ரங்கமணிக்கு மிகுந்த கோபம் ஏற்படுகின்றது.

‘‘ரங்கமணிக்கு ஒரு வெறிவந்து ஆட்டிற்று. அரைப்புடவையை அவிழ்த்து, ரவிக்கையைக் கழட்டி விட்டு நிற்க வேண்டும் போல் இருந்தது.‘‘ (நளபாகம், ப.53)

எனும் வரிகள் ரங்கமணியின் கோப உணர்வை வெளிப்படுத்துகின்றன. பின் நோய்வாய்ப்பட்டுக் கணவன் இறந்ததால் அவள் விதவை ஆகிறாள். ஆனால், பழி மட்டும் அப்பெண்ணையே வந்து சேருகிறது.

‘‘துன்பம் என்றும் ஆணுக்கல்ல. அது அன்றும் இன்றும் பெண்களுக்கே’’
                             - வைரமுத்துவின் திரைப்படப் பாடல்

என்னும் கூற்று இங்கு நினைவூகூறத்தக்கது.
         
                   மலர்மஞ்சம் புதினத்தில் கதைத்தலைவி கல்லூரி மாணவி பாலாம்பாள். அவள் தோழியாக வரும் செல்லம்மாள் இளம் வயது கைம்பெண். குழந்தைமணத்தால் பெண்கள் விதவைகளாக மாறும் அவலம் இப்புதினத்தில் காட்டப்படுகிறது. மரப்பசு புதின நாயகி அம்மணி கட்டுப்பாடற்ற போக்குடையவளாகப் புதினத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளாள். அவள் அவ்வாறு மாறிடக் காரணமாக இருப்பவள் ஓர் இளம்வயதுக் கைம்பெண். அம்மணியின் தந்தையின் நண்பர் கண்டு சாஸ்திரி. அவரது மகளே இளம் விதவைப் பெண். பெயர் சுட்டப்படாத அப்பெண்ணின் கைம்மைத்துயரையும் தலைமுடி மழிப்பதையும் பார்த்த அம்மணி தனக்குத் திருமணமே வேண்டாம் என்னும் முடிவிற்கு வருகிறாள்.

          மோகமுள் புதினத்தில் சுப்பிரமணிய ஐயா; கதாபாத்திரத்தின் இரண்டாவது மனைவியாக வரும் பார்வதிபாய் என்னும் பாத்திரம் பெண் விதவையாகிறாள். பண்ணைச் சமூகம் நிறைந்த அன்றை தஞ்சை இதுபோல் கைம்பெண்கள் உருவாக மறைமுகக் காரணமாகிறது.

சொந்த வாழ்வின் பாதிப்பு

          தி.ஜானகிராமனின் இந்தப் புதினங்களில் எல்லாம் கைம்பெண்கள் உருவாகக் காரணம் அவரது வீட்டில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்வின் பாதிப்புத்தான். தி.ஜாவின் இரு சகோதரிகளையும் இராமச்சந்திரன் என்னும் ஒருவரே மணந்து பின் இளம்வயதில் அவர்களை விதவைகளாக்கி மறைந்தமையே ஆகும். இளம் பருவத்தில் இருந்த தி.ஜா., தன் சகோதரிகளை ஒருவரே மணந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எதிர்ப்பையும் மீறி குடும்பத்தார் செய்து வைத்த திருமணமே அவர் சகோதரிகளின் விதவைக் கோல வாழ்வுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. இந்நிகழ்வும் அவர் சிறுவயதில் பார்த்த தஞ்சை வட்டார அந்தணர் இல்ல விதவைகளும் தி.ஜானகிராமனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரணத்தால், இந்த ஆறு புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதியுள்ள நிறைய சிறுகதைகளிலும் விதவைப் பாத்திரங்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன. கைம்பெண் மறுமணம் என்பதை நினைத்துக் கூடப் பாத்திராத அக்காலச் சமுதாயத்தில் கைம்பெண்டிர் நிலை மிகவும் மோசமாகவே இருந்துள்ளது.

தொகுப்புரை

          தஞ்சை வட்டாரத்தில் நிலவி வந்த பண்ணைச் சமூக அமைப்பு, பலதார மணம், குழந்தைத் திருமணம், மேல்தட்டு சாதியினரின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் போல்வன தி.ஜா.,வின் புதினங்களில் கைம்பெண்டிர் படும் துன்பத்தை வெளிப்படுத்திகின்றன.


நன்றி.

முனைவர். க.சிவனேசன்,

முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவர்,

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,

சிவகாசி.

No comments:

Post a Comment