பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Saturday, July 23, 2011

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர்




               தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

வாழ்க்கை வரலாறு

                     தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறிஸ்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி தேவர், திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தேவர் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். [1]

படிப்பு & பல நிலைப்பணிகள்

  • தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசவுரி உலுத்தரின் ஊழிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்தல்.
  • பாளையங்கோட்டைத் திருச்சபை ஊழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயிலல் - இக்காலகட்டம் [முகவை (இராமநாதபுர) மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில் 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ ஆசிரியராக பணியாற்றியது.
  • 1922 - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு.
  • 1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ்வருடம் தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பு.
  • 1925 - சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உ.நி.பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லட் உ.நி.பள்ளி, தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உ.நி.பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணி புரிதல்.
  • 1926 - திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே.
  • சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு, B.O.L. என்னும் கீழ்நிலைத் தேர்விலும் வெற்றி பெறுதல்;
  • மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயிலல்; செந்தமிழ்ச் செல்வி இதழில் ஒப்பியல் மொழியாராய்ச்சி என்ற தலைப்பில் முதல் கட்டுரை வெளியிடப்படுதல்.
  • திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணி. 1940 இல் ஒப்பியன் மொழிநூல் வெளியிடுதல்.[2]

இறுதி நாட்கள்

                        மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்தியா வெளியிட்ட அஞ்சல் தலை

வாழ்க்கைவரைவு

                தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000ல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006ல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.

தேவநேயர் ஆக்கிய நூல்கள்

  1. இசைத்தமிழ் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
  2. இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
  3. உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
  4. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
  5. ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
  6. கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது. பக்கங்கள் 33
  7. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968) 89 பக்கங்கள்
  8. கட்டுரை கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
  9. கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
  10. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
  11. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
  12. சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
  13. சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
  14. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
  15. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
  16. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
  17. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
  18. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
  19. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
  20. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
  21. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
  22. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள். முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
  23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது.
  24. தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
  25. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
  26. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள.
  27. மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
  28. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள். குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
  29. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது.
  30. வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்.
  31. வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்.
  32. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
  33. The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
  34. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள. 31 பக்கங்கள்.
  35. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
  36. கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
  37. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
  38. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்.
  39. பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
  40. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன்.

Monday, July 18, 2011

சே குவேரா

சே குவேராசே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.


 மார்க்சியத்தில் ஈடுபாடு


கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது. குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது. பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார். 1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.



கவனம் பெறும் நிகழ்வுகள்

1928 ஜூன் 14 - பிறப்பு

1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்

1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் அர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்

1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.

ஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.

1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.

ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.

1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.

டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

1959

ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.

ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.

ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்

ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.

மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.

அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.

நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

1960

அக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்

நவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

1961

ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.

பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.

ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

1962

மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்

ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

1963

ஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.

ஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

1964

பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.

மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.

அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.

டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

1966

நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.

1967

மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.

ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.

செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.

அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.

அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்

1968

ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.

1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

1997

ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.

அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.

அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

Wednesday, June 8, 2011

தஞ்சைப் பெரிய கோயிலும் தமிழும்

தஞ்சைப் பெரிய கோயிலும் தமிழும்

             வேதபுரோகிதர்களின் கட்டுப்பாடு தான் சோழப் பேரரசின் பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணற்றச் சான்றுகள் காணக்கிடக்கின்றன. இதனையும் மீறி தமிழுக்கும் சிவமதத்திற்கும் இராசராசன் பங்களிப்பு செய்திருக்கிறான் என்றால் அந்தப் பணிகளுக்குப் பின்னால் இரண்டு பெண்கள் இருந்ததை உணர முடிகிறது. அவன் பாட்டியான செம்பி யன் மாதேவியும் உடன்பிறந்த மூத்த வளான குந்தவையுமே இவர்கள். இவர்கள் இருவருமே சிவபக்தியிலும் தமிழ்மீதும் பற்றுக் கொண்டு 
இருந்தார்கள். இவர்களின் அன்புகலந்த அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி வளர்ந்து வந்தவன் அருண்மொழியாகிய இராசராசச்சோழன். சிவமத வளர்ச்சிகுறித்தும், சிற்பம், ஓவியம் முதலானவற்றிலும் 
கலைவளர்ச்சியி லும் பெரிதும் ஈடுபட அவனுக்கு ஆர்வ மூட்டி வளர்த்தார்கள் இவர்கள் என்று சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

         இராசராசனை வளர்த்த அந்த இருபெண்களும் பெருவுடையார் ஆலயத்தை அமைத்தலிலும், வழிபாடு நடத்தலிலும் தமிழ் ஆகமப்படியே அதாவது சிவ ஆகமப்படியே செய்திட வேண்டும் என்று உறுதியாக இருந்தி ருக்கிறார்கள். அதிலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதாகவே அமைந் திட வேண்டும் என்று அதற்கான வழி முறைகளை அவர்களே கண்டிருக்கி றார்கள். அவர்களின் எண்ணத்தை அவனும் இயன்றவரை நிறைவேற்றி இருக்கிறான். இவனால் கட்டப்பட்ட பெரிய கோயிலில் அமைக்கப்பட் டிருக்கும் பெருவுடையாரின் - லிங்கத்தின் உயரம் 12 அடியாக - உயிர் எழுத்தாக இருக்கிறது. பெருவுடையாரின் மெய்க்காப்பாளர்களாக இருபக்கமும் நிற்கும் துவாரபாலகர்கள் 18 அடியாக -மெய்யெழுத்தாக இருக்கிறார்கள். பெருவுடையாரும் அவரின் மெய்க்காப்பாளர்களும் தனித்தனியாக ஒரே கல்லில் வடிக்கப் பெற்று இருக்கிறார்கள். அக்கோயி லின் உயரம் 216 அடியாக - உயிர்மெய் எழுத்தாக கலையின் உச்சத்தை பெற்று நிற்கிறது. இத்திருக்கோயிலுள் அமையப் பெற்று இருக்கும் தென்னாடு கொண்ட சிவபெருமான் தான் ஒருவ னாக - ஆயுத எழுத்தாக அமையப் பெற்று இருக்க வேண்டும் என்பதே அப்பெண்மணிகளின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, தமிழின் மொத்த எழுத்துக்களான 247 ஐ உள்ளடக்கியே அக்கோயில் அமையப் பெற்றிருக் கிறது.

        ‘... கோயிலின் வெளித் திருச்சுற்றி லுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப் பட்டது. அது பன்னிரண்டடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும்          எட்டே காலடி அகலமும் உடையது. கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தனவேயன்றி வேறு தெய்வங்களுக்கு இடமில்லை....’ என்று பண்டாரத்தார் குறிப் பிட்டுள்ளார்.

            இந்த நந்திக்கும் பெருவுடையா ருக்கும் இடைப்பட்டநடை 247 அடியாக - தமிழின் ஆககூடுதல் எழுத்துகளாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

                    “... இராசராசன் தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ்மொழியில் அகவற்பா வில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட பெருவேந்தன் ஆவான். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற்கொள்வாரா யினர்.

எத்துறையிலும் பொதுமக்களுக்கு என்றும் அறிஞர்களுக்கு என்றும் இரு வேறான மொழியைப் பயன்படுத்தியவனும் ராசராசனே. தமிழ்க்கூத்து           என் றும் ஆரியக்கூத்து என்றும் ஒழுங்கு படுத்திவைத்திருக்கிறான்.

        தில்லையில் தேவாரமூவர்களின் பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகளை மறைத்து வைத்து அழிந்து கொண்டிருந்ததை மீட்டு எடுக்கும் பணியைச் செய்யுமாறு பரிந்துரைக்க இராசராசன் உடன் செவிசாய்த்திருக்கிறான்.

         தில்லை வாழ்தீட்சிதர்கள் இந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளை யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்திருந்ததற்கு காரணம் அவர்கள் கைக்கொண்டு இருந்த வேத ஆகமத்திற்கு எதிரிடையான போக்குகளை கொண்டு வந்துவிடும் என்பதுதான். இன்றைக்குக்கூட அவர்களின் போக் குகளை கவனிக்கும் போது அவர்களிடமிருந்து தேவாரப்பாடல்களை அவ்வளவு எளிதில் ராசராசனால் மீட்டு எடுத்து இருக்க முடியும் என்று நம்பு வதற்கில்லை. அவன் படைவலிமையைக் காட்டித்தான் மீட்டு எடுத்திருக்க முடியும்.

           முத்தமிழும் தஞ்சைக் கோயிலில் வளர்க்கப்பட்டன. இசைத்தமிழின் வளர்ச்சியாகத் திருமுறைகளைத் தொகுத்து தினமும் பெருவுடையார் முன்பு தமிழ்ப் பதிகங்களைப் பாட வல்லோர்களை நியமித்தான். இவ் வகையில் 48 தமிழ் இசை வல்லோர் கள் நியமிக்கப்பட்டுத்தினமும் திருக் கோயிலில் தமிழ் பாடவைத்து இருக்கிறான். இவர்கள் பாடும் போது உடுக்கையும் கொட்டி மத்தளமும் இசைக்க தக்க இசைக்கலைஞர்களை நியமித் திருக்கிறான்.

        நாயன்மார்களின் பாடல்களை  ‘பண்’ வகைகளைக் கொண்டு இசை அமைப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைப் பெறவும் அதை விரைவாக செய்து முடிக்க எண்ணினான். அதில் வல்லவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இறுதியில் எருக்கம்புலி யூரில் வாழ்ந்து வந்த இசையிலும் யாழிலும் வல்ல பாணர் குடியில் தோன்றிய நங்கை ஒருத்தி பண்ணியல்பு அறிந்தவள் என்று அறிகிறான். அவளை அழைத்து வந்து ஏழுதிரு முறைகளுக்கும் தனித்தனியாக தமிழ்ப்பண் அமைக்கச் செய்தான். அப்பண்ணிசையைக் கொண்டே இசை வாணர்களும் ஆடல்பாடல் வல்லவர்களும் தினம் தினம் தேவாரத்தை இசையோடு பாடியிருக்கிறார்கள், ஆடியிருக்கிறார்கள்.

           இப்படியான பணிகளை சிவமதத் திற்கும் தமிழுக்கும் செய்திருக்கும் இராசராசனை வேதியர்கள் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பலவழி களை மேற்கொண்டு இருந்திருக்கின் றனர். அதில் வெற்றியும் அடைந்திருக் கிறார்கள்.

நன்றி.
(தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் அளித்த கட்டுரையின் சுருக்கம்)

ஓங்கு பரிபாடல் - ஓர் அறிமுகம்

                      ஓங்கு பரிபாடல்: ஓர் அறிமுகம்

            பரிபாடல் என்பது பரிபாடல் என்னும் பாவினத்தால் ஆகிய பாக்களின் தொகுதி. இப்பாக்கள் பண்ணமைதியோடு பொருந்தியவை; பக்தியோடு மனமுருகிப் பாடப்பட்டும் பயிலப் பட்டும் வந்தவை. ஓங்கு பரிபாடல் என்று சீரிய பெரும்புகழை அந்நாளிலேயே பெற்று அமைந்தது.

இத்தொகை நிலை வகையால் ‘பா’ என்று சொல்லப்படும் இலக்கணமின்றி எல்லா பாவிற்கும் பொதுவாக நிற்றற்குரியதாய் இன்பப் பொருளைப் பற்றிக் கூறியதாய் உள்ளது. இது சிறுமை 25 அடியும் பெருமை 400 அடியும் எல்லையாகக் கொண்டுவரும் எனத் தொல்காப்பியம் கூறும்.

பரிபாடற்கண் மலையும் ஆறும் ஊரும் வர்ணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறுவர்.

அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வரும் என்பர் பேராசிரியர்.

பரிபாடலின் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

பரி என்னும் சொல் குதிரை ஓட்டம், நடை எனப் பல பொருள்படும். பரிபாடலின் ஓசை குதிப்பது போலவும், ஓடுவது போலவும், நடத்தல் போலவும் இருத்தலின் அவ் வோசை உடைய பாடல் பரிபாடல் என பெயராயிற்று என்று சிலர் கூறுவர்.

பரிந்த பாட்டு பரிபாட்டென வரும். ஒரு வெண்பாவாகி வராமல் பல உறுப்புகளோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது பரிபாடல் என்கிறார் இளம்பூரணர்.

பரிபாடல் என்பது பரிந்து வருவது அஃதாவது கலியுறுப்புப் போலாது நான்கு பாவா லும் வந்து பலவடியும் வருமாறு நிற்குமென்று நச்சினார்க்கினியர் கூறுவர். பாடல் நால் வகைப் பாக்களையும், அறுவகை உறுப்புகளையும் (கொச்சகம், அராகம், சுரிகம், எருத்து, சொற்சீரடி, முடுகியலடி) தாங்கி வருதலின் பரிந்த பாட்டு பரிபாடல் என்பது பெரும் பான்மையோரின் கருத்தாகும்.

பரிபாடலில் இடம் பெற்றுள்ள இருபத்திரண்டு பாடல்களில் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இயற்றியவர் பெயர்கள் கிடைத்தில. மீதமுள்ள பாடல்களைப் பாடியுள்ளோர் பதின்மூன்று பேர் ஆவர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல் காப்பிய உரையில் தொகை என்ற சொல்லைக் கையாண்டுள்ளதால் பேராசிரியர் கால மாகிய கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தொகை நூல் தோன்றி இருக்க வேண் டும் என்று சொல்வதற்கு வாய்ப்புள்ளது.

பரிபாடல்களின் தெய்வங்கள் (முருகன், திருமால்) வையை ஆறு, பாண்டிய அரசர் என்பன பரிபாடலின் பாடுபொருளாக உள்ளன. தெய்வங்கள் வரிசையில் திருமால், செவ் வேள் கொற்றவை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அரசர்களுக்கெனத் தனியாக எவ்விதப் பாடலும் இல்லை. தெய்வத்தைக் குறித்த பாடல்களிலும் ஆற்றைக் குறித்தப் பாடல்களிலும், அரசர்கள் பற்றிய செய்திகள் இடையிடையே அமைந்துள்ளன.

பரிபாடலில் காணப்படும் தெய்வங்கள் வரிசையில் முருகன், திருமால் என்னும் இரு தெய்வங்களைப் பாடு பொருளாகக் கொண்ட பாடல்கள் பல பரிபாடலில் இடம் பெற்றுள்ளன. மேலும், காடுறை தெய்வமாகிய கொற்றவை தெய்வம் குறித்தும் சில பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பரிபாடல்கள் மூலம் மதுரை, வையை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை ஆகிய வற்றின் பண்டைக் கால நிலையையும் பெருமையையும் அக்கால மாந்தர்கள் ஆடை, அணிகள், ஊண், உணவுமுறை, வணங்கிய கடவுளர்கள், வழிபாட்டு வகைகள், விழாக் கள் ஆகிய வாழ்க்கை முறைகளையும் குறிப்பிடுகிறது.

அகலிகை, ரதி, மன்மதன் போன்றோரின் புராணக் கதைகளையும் பண்டு ஓவியங் களாக ஆலயங்களில் தீட்டியுள்ளனர் என்பதையும், பண்டைக்காலத்தில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் போன்ற சொற்கள் நூறாயிரம், பதினாயிரம், லட்சம், கோடி போன்ற எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பரிபாடல் பிறசங்க நூல்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கின்றது.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவற்றின் பாடல்கள் அடிவரையறை யுடன் காணப்படுகின்றன.

பாவகை மற்றும் அடிவரையறை வேறுபாடுகளில் மட்டுமின்றி மொழிக் கூறுகளிலும் சங்க இலக்கியத்தில் இருந்து பரிபாடல் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது பாடு பொருள் வேறுபாடு; திணை, துறை வேறுபாடு; சொல் வேறுபாடு; புதிய சொற்களின் ஆட்சி, நடை வேறுபாடு போன்றவை காணப்படுகிறது.

நன்றி .
(மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ‘பரிபாடல்’ ஆய்வுக் கோவையிலிருந்து)

Sunday, May 22, 2011

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்

மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்(1855-1942)
 
 
           இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற பெரியவர்கள் தமிழ் மொழிக்குப் புதிய ஒளியைக் கொடுத்தார்கள். ஒருவர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார். மற்றொருவர் ஸ்ரீ மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். கவிஞர் பாரதியார் தம்முடைய புதிய கவிகளால் தமிழ்த்தாய்க்குப் புதிய அணிகளைப் பூட்டினார். ஐயர் அவர்களோ, பல காலமாக மங்கி மறைந்து கிடந்த பழைய அணிகளை மீட்டும் எடுத்துக்கொணர்ந்து துலக்கி மெருகூட்டிப் பூட்டி அழகு பார்த்தார்கள்.
தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் ஐயர் அவர்கள் உண்மையில் சென்ற நூற்றாண்டிலேயே தம்முடைய அரும்பெருந் தொண்டைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில் சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக் காலம்வரையில் தமிழ்த் தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும் அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்கள்.

             அவர்கள் தோன்றிய காலத்தில் பெரும் புலவர்களும் சங்க நூல்கள் என்று பெயரளவிலே தெரிந்துகொண்டிருந்தார்களே ஒழிய அவை இன்னவை என்பது அவர்களுக்குத் தெரியாது. கோவலன் கதை என்ற ஒரு நாடோடிக் கதையையும் அதில் வரும் கண்ணகியையும், மாதவியையும் அறிவார்களேயன்றிச் சிலப்பதிகாரத்தையும் அதில் உள்ள பாத்திரங்களையும் அறியமாட்டார்கள். அகநானூறு, புறநானூறு என்ற இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இன்னதென்று தெரியாது. மணிமேகலை எந்தச் சமயத்தைப் பற்றிய நூல் என்பதும் தெரியாது.
இன்றோ பள்ளிக்கூடத்திற் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவனுக்குப் பாரியைப்பற்றிய வரலாறு தெரியும். சேரன் செங்குட்டுவனுடைய வெற்றியைப்பற்றி மேல் வகுப்பு மாணாக்கர்கள் படிக்கிறார்கள். பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் புறநானூறு, குறுந்தொகை பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களிலுள்ள பகுதிகளைப் பாடமாக வாசிக்கிறார்கள் பிள்ளைகள்.

         பல ஆண்டுகளுக்கு முன் திராவிட மொழிகளின் அமைப்பைப்பற்றிக் கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் அழகான நூல் ஒன்று எழுதினார். 'திராவிட மொழிகளின் ஒப்பியல்' (Comparaitive Philology of Dravidian Languages) என்பது அந்த நூலின் பெயர். அதை இன்றும் சிறந்த நூலாகப் புலவர்கள் கொண்டாடுகிறார்கள். அதை எழுதினவருக்கே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை கிடைக்கவில்லை. அந்நூல்களின் அமைப்பை அவர் அறியார்.
இன்றோ சங்ககாலத் தமிழரைப் பற்றியும், நூல்களைப் பற்றியும் பல பல நூல்கள் வந்திருக்கின்றன. பல வகையான ஆராய்ச்சிகள் நிகழ்ந்துவருகின்றன. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சங்க காலத்தைப் போற்றிப் பாராட்டிப் பெருமிதத்துடன் பேசுகிறோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழர் மரபு என்று நமக்குரிய தனிச் சிறப்பைப் பல மேடைகளில் புலவர் பெருமக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். பாரதநாட்டில் உயிருடன் வழங்கிவரும் மொழிகள் யாவற்றிலும் பழையது. இலக்கிய வளம் பொருந்தியது. இலக்கண வரம்புடையது, எதையும் வழங்கத்தக்க சொல்வளமுடையது என்றெல்லாம் மற்றவர்களும் ஒப்புக்கொள்ளும் நிலை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ்த் தாத்தாவின் அரும்பெருந் தொண்டே இத்தனை உயர்வுக்கும் மூலகாரணம் என்பதைத் தமிழ்ப் புலவர்கள் அறிவார்கள். தமிழ் வரலாற்றில் ஐயர் அவர்களுக்கு என்று ஒரு தனிப் பகுதி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

             ஐயர் அவர்களுடைய ஊர் தஞ்சை ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம் என்ற சிறிய கிராமம். சங்கீத வித்துவானாகிய ஸ்ரீ வேங்கட சுப்பையருக்கும் ஸ்ரீமதி சரசுவதியம்மாளுக்கும் புத்திரராக ஐயர் அவர்கள் பிறந்தார்கள். அவர்களுடைய தந்தையார் பல இடங்களுக்குச் சென்று தம்முடைய இசைத் திறமையைக் காட்டி ஊதியம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். குறிப்பிட்ட வேலையும் குறிப்பிட்ட சம்பளமும் இல்லாவிட்டாலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் அன்பும் கலையபிமானமும் அவரைப் போன்ற கலைஞர்களைப் பாதுகாத்து வந்தன. அங்கங்கே இருந்த செல்வர்களும் ஜமீன்தார்களும் அவருக்குச் சிறப்புச் செய்து, வாழ்க்கையைச் சுவையுடையதாக்கினார்கள். இந்தச் சூழ்நிலையில் ஐயர் அவர்கள் வளர்ந்துவந்தார்கள். தந்தையாரிடமும் சில திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களிடமும் இப்பேரறிஞர் இளமையில் கல்விபயின்றார்கள். அக்காலத்தில் சில நூல்களையே கற்றிருந்தாலும், அவற்றைத் திருத்தமாகப் பயின்று மற்றவர்களுக்கும் தெளிவாகப் பாடம் சொல்லும் சிறிய புலவர்கள் அங்கங்கே இருந்தார்கள். அத்தகையவர்களாகிய அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடம் ஐயர் அவர்கள் சில நூல்களைக் கற்றார்கள். ஐயர் அவர்களுடைய தந்தையாருக்குத் தம் குமாரரைப் பெரிய சங்கீத வித்து வானாக ஆக்கவேண்டுமென்ற ஆசையே முதலில் எழுந்தது. ஆனால் இவர்களுக்குத் தமிழில் உண்டான பெரும் பசியைக் கண்டபோது அந்தத் துறையில் இவர்களை ஈடுபடுத்துவதுதான் தம்முடைய கடமை என்பதை அவர் உணர்ந்தார். அதனால் எங்கெங்கே தமிழ் நூல்களைப் பாடம் சொல்லுகிறவர்கள் இருக்கிறார்களோ, அந்த அந்த ஊர்களுக்கெல்லாம் குடியேறித் தம்முடைய குமாரர் தமிழ்க் கல்வி பெறும்படி செய்து வந்தார்.
அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தில் பெருங் கவிஞராகவும் சிறந்த புலவராகவும் திகழ்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் பல மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவருகிறார் என்ற செய்தி ஐயர் அவர்களின் தந்தையார் காதில் விழுந்தது. ''நம் பிள்ளையையும் அந்த மகாவித்துவானிடம் சேர்த்துவிட வேண்டும்'' என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.
1870- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயர் அவர்கள் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி தொடங்கியது. மாயூரத்தில் இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் இவர்கள் மாணக்கராகச் சேர்ந்தார்கள். அதுமுதல் அந்தத் தமிழ்க் கடலின் மறைவு வரையில் (1.2.1876) உடனிருந்து பலவகையான தமிழ் நூல்களைக் கற்றார்கள். அப்புலவர்பிரான் அவ்வப்போது இயற்றிவந்த நூல்களை எழுதுவதும், திருவாவடுதுறை மடத்தின் ஆதீனகர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் பழகுவதும், அந்த மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் வடமொழிவாணரிடத்திலும் சங்கீத வித்துவான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால் இவர்களுக்குக்கிடைத்த அநுபவம் வேறு யாருக்கும் கிடைத்தற்கு அரிது. அத்தகைய அநுபவத்தினால் ஐயர் அவர்கள் பெற்ற பயன் மிக அதிகம். எந்தப் பொருளானாலும், எத்தகைய மனிதரானாலும், எந்த விதமான நிகழ்ச்சியானாலும் கூர்ந்து உணரும் இயல்பு ஐயர் அவர்களிடம் சிறந்திருந்தது. அதனால் அக்காலத்தில் அவர்கள் கண்டவையும் கேட்டவையும் அப்படி அப்படியே இவர்களுடைய இளநெஞ்சில் நன்றாகப் பதிந்தன. பெரிய ஆதினத்தின் தொடர்பால் பலவகை மக்களின் பழக்கம் இவர்களுக்கு ஏற்பட்டது. பெரும்புலவருடைய தொடர்பால் பல நூல்களில் அறிவு உண்டாயிற்று. பல கலைஞருடைய நட்பினால் பல துறையிலும் அறிவு சிறந்தது. வெவ்வேறு ஊர்களுக்குத் தம்முடைய ஆசிரியருடன் செல்ல வேண்டியிருந்தமையால் பல தலங்களைப்பற்றிய செய்திகளும் அங்கங்குள்ள பெரிய மனிதர்களின் பழக்கமும் ஐயர் அவர்களுக்குக் கிடைத்தன.

                பிள்ளையவர்கள் மறைவுக்குப்பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு ஐயர் அவர்களுக்குப் பின்னும் இறுகலாக அமைந்தது. அதற்கு முன் பிள்ளையவர்கள் மூலமாக ஆதீனத்தின் தொடர்பு இருந்துவந்தது. அதற்குப்பின் ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம் கேட்கப் புகுந்தார்கள் ஐயர் அவர்கள். அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் பணியையும் மேற்கொண்டார்கள். இதனால் இவர்களுடைய தமிழறிவு உரம் பெற்று வந்தது.
அக்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் காலேஜில் தியாகராச செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழாசிரியராக இருந்தார். அவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில் ஐயர் அவர்களை நியமிக்கும்படி செய்தார். 1880-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் ஐயர் அவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார்கள்.
நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும் ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள் சிறப்பாகப் பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில் கவர்ந்தார்கள். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது. ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம் மாணக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பு இருந்து வந்தது. இங்கிலீஷ்காரர்கள் சிலர் அந்தப் பாடங்களைக் கற்பித்து வந்தார்கள். அதனாலும் அவற்றிற்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை. அவர்களுக்குக் கிடைத்த ஊதியமும் மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.

              இத்தகைய நிலையில் ஐயர் அவர்கள் மாணாக்கர்களின் உள்ளத்தைப் பிணித்ததோடு மற்ற ஆசிரியர்களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார்கள். ஆங்கிலம் சிறிதும் அறியாவிட்டாலும், ஆண்டில் இளைஞராக இருந்தாலும், அவர்களுடைய புலமையும், பண்பும் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பிறகும் இவர்களைச் சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன.
காலேஜில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டிலேயே (அக்டோபர் மாதம்) ஐயர் அவர்களுக்கும் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம் இராமசுவாமி முதலியாரவர்களுக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பழக்கமே ஐயர் அவர்கள் பிறந்ததன் பயனைத் தமிழுலகத்துக்குக் கிடைக்கும்படி செய்யக் காரணமாயிற்று. முதலியார் சிந்தாமணியைப் பாடம் சொல்லும்படி ஐயர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனை முன்பு பாடம் கேட்டறியாதவர்கள் இவர்கள்; அந்த நூலைப் பார்த்தது கூட இல்லை. ஆயினும் தைரியமாகப் பாடம் சொல்லப் புகுந்தார்கள். ஏட்டுச் சுவடியை வைத்துக்கொண்டு பாடம் சொன்னார்கள். சிந்தாமணியில் ஆழ்ந்தார்கள். தாம் அதுகாறும் படித்த நூல் குவியல்களால் அறியவொண்ணாத பலவற்றை அதில் கண்டார்கள். அது ஜைனசமய நூலாதலால் பல செய்திகள் ஐயர் அவர்களுக்கு விளங்கவில்லை. அவற்றையெல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு அறிந்தார்கள். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார்கள். அவருடைய உரைப்போக்கும் அதனிடையே அவர் காட்டியிருக்கும் மேற்கோள்களும் ஏதோ ஒரு புதிய பிரபஞ்சத்தையே அவர்கள் அகக்கண்முன் தோற்றுவித்தன.

              தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாக இவர்களுக்குச் சிந்தாமணியைப் பதிப்பிக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆராய்ச்சி நடைபெற்றது. மேட்டுமடையில் நீர் பாய்வதுபோன்ற வேதனையைப் பல சமயத்தில் அவர்கள் அடைந்தார்கள். ஆனாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ஆம் ஆண்டு சிந்தாமணியை வெளியிட்டார்கள். அந்தப் பதிப்பைக் கண்ட தமிழ் நாட்டினர் மிகவும் ஆனந்தமடைந்து களிக்கூத்தாடினர். அதுமுதல் ஐயர் அவர்கள் பழைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

               சிந்தாமணிக்குப்பின் பத்துப்பாட்டு வெளியாயிற்று. அதன்பின் சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வந்தன. புறநானூறு கண்ட தமிழுலகம் ஏதோ ஒரு புதிய கண்டத்தைக் கண்டு பிடித்தது போன்ற மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடைந்தது. ஆராய்ச்சிக்காரர்களுடைய மூளை வேலைச் செய்யத் தொடங்கியது. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சிகளை அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள்.
இவ்வாறு ஐயர் அவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும் தொண்டை விடாது செய்து வந்தார்கள். ஐம்பெருங் காப்பியங்கள் என்று சேர்த்துச் சொல்லும் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, என்ற மூன்றையும் அவர்கள் வெளியிட்டார்கள். பத்துப்பாட்டு அவர்களுடைய உழைப்பால் தமிழுலகம் காண முடிந்தது. எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன மலர்ந்தன. பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய இலக்கணங்கள் வெளிவந்தன. இவற்றையன்றி, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருக்காளத்திப் புராணம் முதலிய பல புராணங்களும், கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணி மாலை, அந்தாதி, குறவஞ்சி முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன. தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்.

             ஏட்டில் இருக்கிறதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும் வேலை அன்று, ஐயர் அவர்கள் செய்தது. புத்தகப் பதிப்பு அவ்வளவு எளிதாக இருந்தால் எத்தனையோ அறிஞர்கள் அதை முன்பே செய்து புகழ் பெற்றிருப்பார்கள். ஏட்டில் உள்ள பாடம் பிழைபட்டிருக்கும். பல இடங்களில் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும். அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும் இயற்கையான அறிவுத் திறமையாலும் விடா முயற்சியினாலும் திருவருளின் துணையாலும் ஆராய்ந்து செப்பம் செய்யவேண்டும். ஐயர் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந் தொண்டர். அவர்களுடைய பதிப்பு என்றாலே தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக அற்புதமானவை. நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் பல வகையான விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப் பகுதிகளிலும் காட்சி தரும். அவை ஐயர் அவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச் சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும் பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் அமைந்தவை ஐயர் அவர்களின் பதிப்புக்கள்.

             இந்த முறையில் கண்ணாடிபோல மேல் நாட்டாரும் வியக்கும் வண்ணம் ஆங்கிலமே அறியாத தமிழ்ப் பண்டிதர் புதிதாக இத்துறையில் புகுந்து சாதித்தார் என்று சொன்னால் அது அதிசயமான செயல் அல்லவா?
முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய அளவிலே வெளிப்படுத்திய ஐயர் அவர்கள், தாம் பதிப்பித்த நூல்களின் அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்கள்.

        கும்பக்கோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத் தமிழாசிரியராக 1903-ஆம் ஆண்டு வந்தார்கள், அப்பால் அந்தப் பதவியிலிருந்து 1919-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்கள். கல்லூரி ஆசிரியர் என்ற அலுவலிலிருந்து ஓய்வு பெற்றார்களேயன்றி மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்தோ, நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியத் தொண்டிலிருந்தோ, அவர்கள் ஓய்வு பெறவில்லை. உண்மையில் அவ்வேலைகள் பின்னும் பன்மடங்கு பெருகின.

                கல்லூரியில் வேலையாக இருந்தபோதே வீட்டில் தனியே இவர்களிடம் பலர் பாடம் கேட்டார்கள். மகாபாரதப் பதிப்பாசிரியராகிய மகா மகாபாத்யாய ம. வீ. இராமாநுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர் இவ்வகைகளில் பாடம் கேட்டவர்கள். இவர்களிடம் இருந்து ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்டு தாமே நூல்களைப் வெளியிட்டவர்கள் சிலர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ. வை. அனந்தராமையர் முதலியவர்கள் இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். இவர்கள் ஏடு தேடி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்ட நூல்களைத் படித்து அந்த முறையையும் அறிந்த சில புலவர்கள் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
1924 முதல் 1927 வரையில் ஐயர் அவர்கள் ராஜா அண்ணாமலை செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக இருந்தார்கள்.

                 அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு தம்முடைய அநுபவங்களை எளிய இனிய உரைநடையில் எழுதத் தொடங்கினார்கள். இந்தத் துறையில் ஐயர் அவர்கள் தொண்டாற்றப் புகுந்தபோது பெரியவர்களும் சிறுவர்களும், ஆடவரும் பெண்டிரும், புலவர்களும் பிறரும் ஒருங்கே இவர்கள் எழுத்தைப் படித்து இன்புற்றார்கள். பத்திரிகைகளில் இவர்கள் கட்டுரைகள் வெளியாயின. மாதந்தோறும் முதலில் ஐயர் அவர்களின் கட்டுரை ஒன்றைத் தாங்கிச் சிறப்படைந்தது கலைமகள். தமிழ் நாட்டுப் பத்திரிகைகளின் மலர்கள் ஐயர் அவர்களின் கட்டுரைகளோடு மலர்ந்தன.

                  தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றை வெளியிடவேண்டும் என்னும் நெடு நாள் ஆர்வத்தால் அவர்கள் பல செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்கள். அவற்றைக் கொண்டு மிக விரிவாக அச் சரித்திரத்தை இரண்டு பாகங்களாக எழுதி முடித்தார்கள். தம்முடைய வாழ்க்கையில் எந்தப் பெரியார்களோடு பழக நேர்ந்ததோ அவர்களைப் பற்றிய வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் சுவை ததும்ப எழுதினார்கள். தியாகராச செட்டியார் சரித்திரம், கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரம், மகா வைத்தியநாத ஐயர் சரித்திரம், கனம் கிருஷ்ணையர் வரலாறு என்பன இவர்களுடைய அன்பையும் எழுதும் ஆற்றலையும் நன்றியறிவையும் விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாக எழுதினார்கள்; இந்த வகையில் பூண்டி அரங்கநாத முதலியார், மணிஐயர் வி. கிருஷ்ணசாமி ஐயர், திவான் சேஷாயா சாஸ்திரிகள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள் வெளியாயின.

         இவர்களுடைய பெருமையைத் தமிழுலகம் மெல்ல மெல்ல உணரலாயிற்று. அரசாங்கத்தார், 1906-ஆம் ஆண்டு, 'மகாமக்கோபாத்தியாயர்' என்ற பட்டத்தை அளித்தார்கள். 1917-ஆம் ஆண்டு பாரத தர்ம மண்டலத்தார், 'திராவிட வித்தியா பூஷணம்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள். 1925-ஆம் ஆண்டு காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளவர்கள், 'தாக்ஷிணாத்திய கலா நிதி' என்ற பட்டத்தை அருளினார்கள். இவர்கள், சென்னை, மைசூர் ஆந்திரா, காசி முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து தொண்டாற்றினார்கள். 1932-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள்.

             1935-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி ஐயர் அவர்கள் 80-ஆண்டுகள் நிறைந்து விளங்கினார்கள். அவர்களுடைய சதாபிஷேக விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக் கழக மண்டபத்தில் இவ்விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக் கழக மண்டபத்தில் இவ்விழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.

            பழுத்த பருவத்திலும் ஐயர் அவர்கள் தமிழ்த் தொண்டு வீறுகொண்டு நடைபெற்றது. குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார்கள். சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத் திரட்டுகள் குறிப்புரையுடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி ஆனந்த விகடனில் வாரந்தோறும் தம்முடைய வரலாற்றை ''என் சரித்திரம்'' என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினார்கள். 1940-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுய சரித்திரமாக வரும் நிலை பெற்றது.

                 1942-ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயர் அவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார்கள். அங்கே ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அந்தத் தலத்தில் தமிழ்த்தாயின் தவப்புதல்வராகிய ஐயர் அவர்கள், தாம் பிறந்த காலத்தில் கண்ட நிலையை மாற்றித் தமிழ் மக்களைப் பழந்தமிழ்ச் செல்வத்துக்கு உரிமையுடையவர்களாக ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன் திருவடியை அடைந்தார்கள்.

            ஐயர் அவர்கள் தொகுத்து வைத்துச் சென்ற ஏடுகள் இப்போது அடையாறு கலா «க்ஷத்திரத்தின் தலைவராகிய ஸ்ரீமதி ருக்மணி தேவியாரால் ஒரு நூல் நிலையமாக அமைத்துப் பாதுகாக்கப் பெற்று வருகின்றன. அந்நூல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடவேண்டும் என்னும் ஆர்வத்துடன் பல நூல்களை இந்நிலையத்தார் வெளியிட்டு வருகிறார்கள். 

           ஐயர் அவர்களுடைய ஒரே புதல்வராகிய ஸ்ரீ கல்யாணசுந்தர ஐயர் அவர்கள் தம்முடைய தந்தையாருக்கு எள்ளளவும் குடும்பக் கவலையே இல்லாமற் செய்து இவர்களின் நூலாராய்ச்சி தடையின்றி நடைபெறச் செய்ததோடு, தாமும் அவ்வாராய்ச்சியில் கலந்துகொண்டு உழைத்து வந்தார்கள். ஐயர் அவர்களின் மாணாக்கராகவும், அவருக்கு ஆராய்ச்சியில் உதவிபுரியும் துணைவராகவும், அவருடைய காரியதரிசியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார் என்றே இவர்களைச் சொல்லவேண்டும். ஐயர் அவர்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் பெயரால் அமைந்த நூல் நிலையப் பொறுப்பாளராக இவர்களே அமைந்து நூல்களை வெளியிட்டார்கள். அவர் 1950ஆம் ஆண்டில் இவர் தம் பூதவுடம்பை நீத்தார். அவருடைய குமாரர் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தம்முடைய தந்தையார் செய்த தொண்டுகளைச் செய்துவருகிறார்கள்.

            1948-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆறாம்தேதி சென்னை அரசினர் கல்லூரியில் ஐயர் அவர்களுடைய முழுஉருவச் சிலையன்றை நிறுவினார்கள். தமிழ்க் கடலின் விரிவை மீட்டும் தமிழுலகத்துக்குக் காட்டிய ஐயர் அவர்களின் திருவுருவம் பெருங்கடலை நோக்கி நிற்கும் கோலத்தை இன்றும் கண்டு மகிழலாம்.

            1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஐயர் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. அதனை, அவர்கள் பெயர் கொண்ட நூல் நிலையம் மிகச் சிறப்பாகக் கொண்டாடிற்று.

               ஐயர் அவர்களுடைய குணநலங்கள் பல. சிறந்த பண்பு உள்ளவர்கள் இவர்கள். இணையற்ற ஆசிரியர். பலவகை மாணாக்கர்களுடைய உள்ளம் அறிந்து தக்கவண்ணம் பாடம் சொல்வதில் வல்லவர்கள் புலமைப் பெருங்கடல்; கவிஞர்; சிறந்த எழுத்தாளர்; முன்னும் பின்னும் கண்டறியாத அற்புதப் பதிப்பாசிரியர்; சுப்பிரமணிய பாரதியார் தாம் பாடிய பாட்டில்.
''கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்''
என்று ஐயர் அவர்களைச் சிறப்பிக்கிறார்.
''பொதியமலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே''

என்று அவர் பாடியிருப்பதற்குமேல் நாம் என்ன சொல்ல முடியும்?

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) 
சுருக்கமாக விடுதலைப் புலிகள் என்பது, இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இது இலங்கையில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார்.
இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி சனநாயக வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.

வரலாறு

தோற்றமும் வளர்ச்சியும்

விடுதலைப்புலிகள் வெளியிட்ட நாணயம் ஒன்று.
விடுதலைப் புலிகள் அமைப்பு மே 5 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.
1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது. அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது. சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம்
இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது.  இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.

1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி  இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.

இந்திய படைக் காலம்

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன்(operation liberation) என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும் இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளைக் களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா, இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force) அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது.

பல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும்,  புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.[இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய ஊளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபடி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு  பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படை(IPKF)யின் செல்வாக்கு குறைந்தது.
.பல ஆயிரம் தமிழ் பொதுமக்களைக் கொன்றதாகவும் ,சில ஆயிரம் தமிழ் பெண்களை வன்புணர்ந்ததாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது.இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும்(IPKF) புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு, பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது.

ஈழப் போர் II

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.
1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈழப் போர் III

கிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கிள் அணியொன்று 2004
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத் தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர்.  இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.   மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்மை நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிரவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.

2001 போர் நிறுத்தம்

ஆகஸ்டு 31, 2007 தேதியன்று வரையிலான நிலவரப்படி புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள்
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.
டிசம்பர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

ஈழப் போர் IV

முதன்மைக் கட்டுரை: நான்காம் ஈழப்போர்
2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.

புலிகளின் உள் கட்டமைப்பு

கடற்புலிகளின் விசைவேகப் படகு

தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இன்று வளர்ச்சியடைந்து முழுமையான இராணுவமாக காணப்படுகின்றனர். புலிகள் அமைப்பு இராணுவப் பிரிவு அரசியல் பிரிவு என இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டுக்கும் கீழ் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இவையனைத்தும் பிரபாகரன் தலைமையிலான மையத் தலைமையகத்தால் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.

அரசியல்துறை

படைத்துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

படைத்துறை அதிகார படிநிலை


விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடக்கத்தில் படைத்துறை அதிகார படிநிலை காணப்படவில்லை. பொதுவாக வீரச்சாவின் பின்னரே பதவிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் புலிகளின் வளர்ச்சியுடன் படிப்படியாக இந்நிலைமை மாறி இன்று படைதுறை அதிகாரப் படிநிலையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் மிக இறுக்கமான படைத்துறை அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும் ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பி்டும் போது சிறந்த அதிகார படிநிலை காணப்படுகிறது. அமைப்பில் கீழ் மட்டத்தில் இணையும் போராளி ஒருவர் ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது சாத்தியமானதாகும். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இதற்கு விதிவிலக்காக கருதப்படுகிறது.

மாவீரர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்.

கொள்கைகள்

  • தன்னாட்சி
  • மரபுவழித் தாயகம்
  • தமிழ்த் தேசியம்
  • இயக்க ஒழுக்கம்
  • சாதிபேதமற்ற சமூகம்
  • சம பெண் உரிமைகள்
  • சமய சார்பின்மை
  • தனித்துவமான சமவுடமை

புலிகள் நோக்கி விமர்சனங்கள்


தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பாக விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருக்கின்றன. யாரால், எந்த தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் இன்றியமையாதது.
  • புலிகளிடம் விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இல்லை
  • புலிகள் அடிப்படை தனிமனித உரிமைகளைப் பேணுவோம் என்று உறுதி தரவில்லை
  • புலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரக்கு உறுதி தரவில்லை
  • தம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல்
  • வன்முறையாக சட்டத்தை மீறுதல்
  • ஏக பிரதிநிதித்துவம் நிலைப்பாடு
  • ஜனநாயக விழுமியங்களைப் பேணாமை
  • இறுக்கமான மூடிய கட்டமைப்பு
  • பாசிசப் போக்கு
  • பயங்கரவாத செயற்பாடுகள்
  • சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தல்
  • கட்டாய ஆள் சேர்ப்பு
  • தமிழ் இனவாதத்தை ஊக்குவித்தல்
  • முஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம்
  • பண்பாட்டு கட்டுப்பாடுகள்
thanks to wikipeidia