பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Monday, March 19, 2012

பாரதியின் சிற்றிலக்கியங்கள்

``சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை``

என்று புத்திலக்கிய வகைக்கு முண்டாசுக்கவி பாரதி விதை போட்டார். பழமையினைப் பாதுகாக்கும் தமிழினத்தின் தவப்புதல்வனான பாரதி தம் முன்னோர்கள் போற்றிய மரபையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவர். அதனால் தான் அவர்கள் வடிவமைத்த பாவகைகளையும் இலக்கிய வகைகளையும் போற்றி அதனூடே புதுமையைப் புதுக்கியும் புதுமை செய்தார். படித்தவனுக்குச் சொந்தமான இலக்கியத்தைப் பாமரனின் இல்லத்திற்குள்ளும் செலுத்தியவன். இத்தகைய பாரதியின் படைப்பாக்கத்தில் கருக்கொண்ட பிரபந்தங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் எண்ணம்.

பாரதியின் இலக்கியவகைகள்

            தமிழிலக்கிய உலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் சுட்டப்பெற்றுள்ளன. அவற்றில் பலவற்றைத் தன்னுடைய படைப்பில் பாரதி புகுத்தியுள்ளார். நான்மணிமாலை, தூது, அகவல், பஞ்சகம், பள்ளியெழுச்சி, நவரத்தினமாலை, தசாங்கம், பள்ளு, கும்மி போன்ற பல்வேறு வகைகளைக் கையாண்டுள்ளார்.

நான்மணிமாலை

            வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய நான்கு பாவகைகளால் நாற்பது பாடல்களை எப்பொருளிலேனும் பாடுவது நான்மணிமாலையாகும். இதனை,


``வெண்பா கலித்துறை விருத்தம் அகவல்
பின்பேசும் அந்தாதியின் நாற்பது பெரின்
நான்மணிமாலையாம் என நவில்வர்``
-           இலக்கண விளக்கம் 81

என்ற இலக்கண விளக்க நூற்பா நவில்கிறது. இவ்வகை இலக்கியத்தினை மகாகவி அவர்கள் விநாயகரின் மேல் துதிப்பொருண்மையில் பாடியுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் ``கோயில் நான்மணிமாலை`` யின் வாயிலாகப் பட்டினத்தார் தொடங்கி இவ்வகை பாரதியின் கைபட்டு மேலும் மிளிர்கிறது.

தூது

            ஒருவருடைய கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்கும் பொருட்டு பறிதொருவரை அனுப்புவது தூது. தொல்காப்பியத்திலேயே சுட்டப்படும் இத்தூது இலக்கியம் சங்க இலக்கியத்திலும் தொடர்கிறது. அதனை, இருபதாம் நூற்றாண்டிற்கும் கடத்திய பெருமை பாரதிக்கும் உண்டு.

``செல்ல வல்லாயோ? – கிளியே!
செல்ல நீவல்லாயோ.
வல்ல வேலமுரு கன்தனை - இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று``

என்று தனது எண்ணத்தைக் கிள்ளையின் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

பஞ்சகம்

            ஒரு பொருளைப் பற்றி பாடும் ஐந்து பாடல்களின் தொகுதியே பஞ்சகம் ஆகும். இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிய பாடல் தொகுதியாக இருக்கும். சிறுபான்மை மக்களைப் பற்றியும் மேம்பட்டவர்களைப் பற்றியும் அமையும். இது வெவ்வேறு பாவும் பாவினமாகவும் வரும். இவ்வகையில் பாரதி இரண்டு பஞ்சகம் படைத்திருக்கிறார். ஒன்று மஹாசக்தி பஞ்சகம். மற்றொன்று  மஹாத்மா காந்தி பஞ்சகம்.


பள்ளியெழுச்சி

            அரசன் விழித்தெழப் பாடுவது துயிலெடை எனும் இலக்கிய வகையாகும். இதனையே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பள்ளியெழுச்சி என்று கூறுகின்றனர். அதுபோல அரசன் துயில்கொள்ளப் பாடுவது கண்படை எனும் இலக்கிய வகையாகும். இதனைத் தொல்காப்பியம்,

``தாவில் நல்லிசை கருதி கிடந்தோர்க்கும்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்``
-தொல்காப்பியம் 1037
           
என்கிறது. இவ்வகையில் இதுவரை சுமார் பதினொரு இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இந்தப் பதினொரு இலக்கியங்களில் பத்து இலக்கியங்கள் இறைவனுக்கும் இறைவனைப் போற்றுபவர்களுக்கும் மட்டும் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதியின் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி மட்டும் தான் மாறுபட்டுள்ளது. கவிதை வடிவில் புதுமை புகுத்திய பாரதி இலக்கிய வகையிலும் புதுமையைப் புகுத்தி,

``பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்
...........................................
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பது காண்! பள்ளியெழுந்தருளாயே``

என்று தூங்கிய பாரதத் தாயைத் தட்டி எழுப்புகிறார்.

நவரத்தினமாலை

            நவம் - ஒன்பது. நவரத்தினமாலை என்பது ஒன்பது செய்யுள்களின் தொகுப்பாகும். இவ்வகை இலக்கியத்தையும் பாரதி படைத்துள்ளார். இவருடைய பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள், இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப்பெற்றிருக்கின்றன.


தசாங்கம்
           
            அரசச் சின்னங்கள் பத்தினைப் பத்து வெண்பாக்களால் புகழ்ந்து பாடுவது தசாங்கம் ஆகும். இவ்வகை இலக்கியம் ‘ஷதசாங்கப் பத்து என்றும் அழைக்ப்படுகிறது.

``புல்லும் மலையாறு நாடுஊர் புனைதர்மா
கொல்லும் களிறு கொடிமுரசம் - வல்லகோல்
என்றிவை நஞ்செழுத்தோடு ஏலா வகைஉரைப்ப
நின்ற தசாங்கம் எனநேர்``
-           வெண்பாப் பாட்டியல் 19

என்று வெண்பாப் பாட்டியல் இதற்குரிய இலக்கணத்தை இயம்புகிறது. இவ்வகை இலக்கியத்தையும் இயற்றி பாரததேவியின் புகழைப் பார்முழுதும் பறைசாற்றியிருக்கிறார். நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்ற பாரத தேவியின் பத்து உறுப்புகளை காம்போதி, வசந்தா, மணிராங்கு, சுருட்டி, கானடா, தன்யோசி, முகாரி, செஞ்சுருட்டி, பிலகரி, கேதாரம் என்ற பத்து இராகங்களில் பாடியிருக்கிறார்.

கும்மி

            இன்றும் கிராமங்களில் வழக்கில் இருந்து வரும் கும்மி இலக்கிய வகையும் பாரதியின் படைப்பில் அடக்கம். பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பெயரில் இது அமைந்துள்ளது.

``கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
            குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
            நன்மை கண்டோ மென்று கும்மியடி!

என்று பெண்களின் விடுதலைக்கும்மி பாடி பெண்கள் விடுதலைக்கு விளக்கேற்றியவர் பாரதியார் ஆவார்.



காதல்

            காதல் எனும் இலக்கியவகையும் பாரதி கைபட்டு மிளிர்கிறது. தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பிக் கூடுகின்ற நிலையே இயற்கைப் புணர்ச்சி ஆகும். இந்த இயற்கைப் புணர்ச்சிப் பொருளில் வந்த தனி இலக்கிய வகையே காதல் ஆகும்.

``கொண்ட மயல் இரடிக் கண்ணியில்; இசை காதலுக்கே``
-           சுவாமிநாதம் 171

என்று இதனைச் சுவாமிநாதம் கூறுகின்றனது. தன் மனைவியுடனான காதலைக் ஷஷகண்ணம்மாவின் காதல்|| என்ற பெயரில் பாரதி இலக்கியம் படைத்துள்ளார்.

``காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
            காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் நில
            வூறித் ததும்பும் விழிகளும்...``

என்று தன் காதலைக் கவியாக்கி கரைந்திருக்கிறார்.

            ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கண்ணி, கலித்துறை, கலிவிருத்தம், கீர்த்தனை, குறள் வெண்பா, செந்துறை, சிந்து, தாழிசை, வஞ்சித்துறை, வெண்பா போன்ற பா வடிவங்களும் இன்ன பா என்று வகுக்கவியலாப் பாடல்கள் சிலவும் இவரது படைப்பில் காணப்படுகின்றன. ‘‘இலக்கிய வடிவம் என்பதைப் பொறுத்தவரையில் பாரதி முற்காலக் கவிஞர்களின் நிழலில் மறைந்து நின்று பாடியதைப் பார்க்கிறோம்’’ என்ற தமிழவன் (இருபதில் கவிதை) கருத்து இங்கு நம் சிந்தைக்குரியது.

நிறைவுரை

            பாரதியின் காலத்தில் தான் பல்வேறு பிரபந்த வகைகளும் பா வகைகளும் மறுமலர்ச்சி அடைந்தன என்பதை இக்கட்டுரை தெளிவுற விளக்குகிறது. பாரதியின் படைப்புகளைப் படித்து இரசித்தால் மட்டும் போதாது. அவரது ஆசைகளையும் கனவுகளையும் கவியில் மட்டும் பாராது நினைவிலும் இருத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment