பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Sunday, March 25, 2012

வேதநாயகம் பிள்ளையின் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்

            இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலையே கீர்த்தனைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும். இவற்றை எடுப்பு, தொடுப்பு, படுப்பு என்ற பெயர்களில் அழைப்பர். இத்தகைய கீர்த்தனைப் பாடல்களைச் சமரச நோக்கோடு பாடியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் பாடிய இசைப்பாடல்களுக்குச் ``சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்'' என்று பெயரிட்டழைத்தார். இதில், 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றன. இந்நூலின் பெயருக்கு ஏற்ப, எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்தக் கடவுளையும் சுட்டாத அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இசைப்பாடல்களாகப் பாடி இருப்பது சிறப்பிலும் சிறப்பாகும். இத்தகைய சமரச நூலில் காணலாகும் கருத்துக்களை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



வேதநாயகமும் தமிழும்

                  தமிழ்நாட்டில் சிறப்புமிக்;க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று விளங்குபவர் வேதநாயகம் பிள்ளையாவார். இவர் தமிழில் நாவல் என்னும் புத்திலக்கிய வகையைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர். இவரின் நாவல்களில் நகைச்சுவை நிரம்பிய நிலையில் அமையும். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனை என்ற இலக்கிய வகையில் நிலை நிறுத்தியவர். உண்மையில் நாட்டம் காணல், சர்வ சமய சமரசச் சிந்தனைகள், பெண்மையை மேம்படுத்துதல் ஆகியன இவரின் இலக்கியக் கொள்கைகளாகும்.

                 வேதநாயகம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் பறிந்தவர். சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால் ஆங்கில அரசாங்கம் இவரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தியது. பின்பு, தரங்கம்பாடி, சீர்காழி, மாயூரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிமன்றத்தில் முன்சீப் என்ற உயர் பதவியில் பணியாற்றினார்.


நூல்களும் சிறப்புகளும்


                   சீர்காழியில் பணியாற்றிய காலத்தில், அங்கு வசித்து வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் நெருங்கிப் பழகிச் செந்தமிழைக் கற்றறிந்தார். சீகாழிக் கோவை பாடிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புலமைத் திறத்தைப் பாராட்டிப் பற்பலக் கவிதைகள் இயற்றினார். நன்னெறியில் நாட்டம் கொண்டு தம் மனத்தில் பதிந்த கருத்துக்களைப் பாடல்களாகப் பாடினார். அப்பாடல்கள் 45 அதிகாரங்களைக் கொண்டது. அதனை `நீதி நூல்' என்ற பெயரில் வெளியிட்டார்.

                     வேதநாயகர் சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முன்சீப்பாக மாற்றம் பெற்றார். அச்சமயத்தில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியார் நட்பு கிடைத்தது. அவரின் தொடர்பால் கீர்த்தனைப் பாடல்களைப் பாடும் தொடர்பைப் பெற்றார். ஒரு சமயத்தில் தஞ்சாவூர்ப் பகுதியில் ஏற்ப்பட்ட பஞ்சம் குறித்து நெஞ்சுருகப் பாடினார். தாம் சேர்த்து வைத்த செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மாயுரத்தின் பல பகுதிகளில் கஞ்சித் தொட்டிகளை அமைத்து மக்களின் பசித் துன்பத்தைப் போக்கியுள்ளார். இத்தகைய அறப்பணியைக் கண்ட கோபால கிருஷ்ண பாரதியார் வேதநாயகரை வியந்து பாராட்டி, `நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனைப் பாடலைப் பாடியுள்ளார். மனிதர் நோக மனிதர் பார்க்காத நற்பண்பிற்குக் கிடைத்த பேறாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.


                        வேதநாயகம்பிள்ளை பிற சமயத்தாருடன் வேற்றுமை இல்லாமல் பழகியுள்ளார். அன்றைய திருவாவடுதுறை ஆதினத் தலைவர் சுப்பிரமணியத் தேசிகரைப் பாராட்டிப் பற்பல கவிதைகள் பாடியுள்ளார். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகம் பிள்ளையினைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துக் `குளத்தூர்க் கோவை' இயற்றியுள்ளார்.

                               கிறித்துவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது தவறு என்று எண்ணினார். பல சமயத்தைச் சார்ந்தோரும் சமரச உணர்ச்சியோடு வாழ வேண்டும் என ஆசைப்பட்டார். அதன் விளைவாக சர்வ சமரசக் கீர்த்தனைகள் என்ற நூல் தோற்றம் பெற்றது. சத்திய வேத கீர்த்தனைகள், திருவள்ளுவ மாலை, தேவத் தோத்திர மாலை, பெண்மதி மாலை, திருவருளந்தாதி, தேவ மாத அந்தாதி, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி சரித்திரம், ஞான சுந்தரி ஆகியன இவர் படைத்த நூல்களாகும்.


எக்காலமும் பணிந்து போற்றல்


                     எக்காலமும் உன்தன் திருவடிகளை நான் பணிந்து கொண்டிருக்க நீ வரம் அருள வேண்டும். சிறப்பு பொருந்திய மேலோரின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் அறிவிற் சிறந்தவனே! அனைத்து உலகங்களையும் காப்பவனே! நன்மை தருவோனே! ஊன் மேல் இன்னிசை மிக்க பாடல்களைப் பாட வேண்டும். மணம்; மிக்க தாமரைப்பாதங்களை என் தலையில் சூடி வணக்கங்கள் பல சொல்லிப் பூமியில் விழுந்து வணங்க வேண்டும். தூய உள்ளம் உடைய நல்ல மனிதர்களோடு சேர்ந்து ஞானக் கடலில் நான் ஆட வேண்டும். எவ்விதக் குற்றமும் குறையுமின்றி உன்னை நாள் முழுவதும் நாடித் தொழுது நேசமுடன் பக்திப் பரவசத்தால் அழுது பாட வேண்டும். சிவந்த நெருப்பில் உருகும் மெழுகினைப் போல் என் மனம் உருகி மிகுதியும் மெய் சிலிர்த்து எக்காலமும் உன்னை நான் பணிந்து போற்ற நீ வரம் அருள வேணடும். இதனை,


``எக்காலமும் உந்தன் பொற்கால் பணிந்துகொண்டு

இருக்கநீ வரம் அருள்வாய்''

என வரும் `பல்லவி'யால் உணரலாம்.

அழகிற் சிறந்தோனே! அனைத்தும் கடந்தவனே!

                 தலைவனே! நான் உன்னைத் தேடி ஓடி வந்தேன். நீ எனக்கு உதவி செய்தருள வேண்டும். நான் உன்னை நாடி வந்து உன் திருப்பாதங்களைத் தொட்டுக் கொடிமுறை கும்பிட்டேன். ஐயனே! அழகிற் சிறந்தவனே! துன்பம் தீர்ப்பவனே! அறிவு மிக்கோனே! பேதங்கள் அற்றவனே! அனைத்தும் கடந்தவனே! வாத பிரதிவாதங்களுக்கு அப்பாற்பட்டவனே! புகழ்மிக்கவனே! அற்பமான இவ்வுலகப் பொருள்களை நான் சிறிதும் வரும்ப மாட்டேன். இதுவே முற்றிலும் உண்மையாகும். இந்த உலகத்தில் அற்புதமான இறைவனின் பொருளாகிய அருள் மட்டும் கிடைத்தால் எனக்கு அதுவே மிகுந்த பயனை விளைவிக்கும். நான் வேறு யாரின் துணையையும் நாடிச் செல்வதில்லை. உன் துணையையே நாடி வந்துள்ளேன். கீர்த்தனை மாலைகள் வகை வகையாகத் தொடுத்தேன். நீ வாசிப்பதற்கே என் இரு கரங்களையும் கொடுத்தேன். என் மனத்தை உன் வீடாக்கிக் கொள். உன் மனத்தில் எனக்கு இடம் தருவாயாக. உன்னைப் பணிந்து நடப்போர்க்கு அன்போடு உதவுகின்றவனே! உருவம் அற்றவனே! நியாயத்தின் இருப்பிடமாக விளங்குகின்றவனே! பற்பல புதுமைகள் செய்பவனே! கற்பனையின் கடலே! பாவத்தை அழிப்பவனே! உலகை ஆளும் மன்னனே! பேரொளியே! இன்ப வடிவாய் ஆனவனே! இதனை,


``ஓடி நான் உனைத் தேடி வந்தேன் - எனக்கு

உதவி செய்தருள் ஐயனே!''

எனவரும் பல்லவி அறிவுறுத்துகின்றன.

மன இருளைப் போக்குபவன்

                            வீணாய்ப் பொழுதைப் போக்கிய நான் ஒரு சிறு புல்லாகவும், நான் செய்த வினை அந்தப் புல்லை அரிக்கும் கரையானாகவும் ஆகிவிட்டோமே! உன்னை நினையாத என் மனம் கல் தானே? நித்தம் மனத்துடன் யுத்தம் செய்யவேண்டியுள்ளதே! எப்போதும் வற்றாத நல்லறிவு படைத்தவனே! நல்லோர்களின் பாராட்டுக்குரியவனே! தீயோர்களைத் திருத்துபவனே! இவ்வுலக வாழ்வில் நான் காணும் தொல்லை துயரங்களுக்கு எல்லையே கிடையாது. நான் யாரிடத்தில் சென்று முறையிடுவேன்? தெய்வமே! என் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு நீ உதவ வேண்டும். அடியேனாகிய நான் வினை வசத்தால் இவ்வாறு தொல்லைகளுக்கு ஆளாகிவிட்டேன். என்பால் கருணை கொண்டு அருள் பாலித்து இவ்வுலகத் துன்பங்களிலிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும். பக்தர்களின் அன்பனே! சுத்த மனங்களில் வாசம் செய்பவனே! எண்ணத்தில் அமைந்த குற்றங்களைப் போக்குபவனே! அறிவின் ஒளியாகத் திகழ்பவனே! இத்தகையவனை,

``என்னை ஆதரிப்பாயே – என்மன இருள்

தனையே பிரிப்பாயே''

என்ற பல்லவி வழியுறுத்துகின்றன.

வெயிலுக்கு நிழலாய் இருப்பவனே

                              நல்லோருக்கு இன்பம் நல்கும் இறைவனே! பொன்னாசையால் நான் இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். வயிற்றுப் பசியால் துடிக்கும் குழந்தை பசியைத் தீர்த்துக் கொள்ள தன் தாயிடம் தான் செல்லும். இக்குழந்தை வேறு யாரிடமும் செல்லாது. நாளும் துன்பம் தரும் பெருநோய் மருந்தால் அன்றி வேறு வகையில் குணம் ஆவதில்லை. அவ்வகையில் தாயாகவும் பெரு நோய்க்கு மருந்தாகவும் விளங்குபவனே! உயிர்ப் பயிரை வளர்க்கும் மழையே! உன்னை அல்லாமல் எம்மைக் காப்பார் வேறு யாருமில்லை. சல்லடை போன்ற பல ஓட்டைகளை உடைய துன்புறும் வெறும் புழுவும் மலமும் நிறைந்த கூடான இவ்வுடம்பை நிலையெனக் கருதி மனம் என்னும் குரங்கு பல செயல்களைச் செய்கின்றது. அதனால் தினம்தினம் பாடாத பாடு படுகின்றேன். இறைவனே! நான் பிழை எது செய்தாலும் நீ வந்து காப்பாய் என்று நம்பினேன். என் மேல் உனக்கு இன்னும் கோபமோ? இந்த உலகத்தில் சொல்ல முடியாத துன்பத்தைத் தரும் ஐம்புலப் பகைவர்கள் மென்மேலும் துன்புறுத்துகின்றனர். என் பார்வை மங்கையர் மேல் செல்கின்றது. வாயோ தீய வார்த்தைகளையே பேசுகின்றது. என் காதுகளோ தீய வார்த்தைகளையே கேட்டு மகிழ்கி;ன்றன. என் உடம்போ சிற்றின்பத்தையே நாடுகின்றது. இவ்வாறு நான்படும்பாடு நாய்படும் பாடாக உள்ளது. ஆதலால், என் தந்தையே! தினமும் மகிழ்ச்சியைத் தருபவனே! வேநாயகனே! என்னுடைய குறைகளை உன்னிடத்தில் சொல்லுகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு யார் உளர். நீ எனக்கு மனமிரங்கி நல்வழி காட்ட வேண்டும் எனக் கூறுகின்றார். இதனை,



``உன்னிடத்தில் சொல்லாமல் யாரிடத்தில் சொல்லுவேன்

ஓஓ ஜெகதீசா''

எனவரும் பல்லவி வழி அறியமுடிகின்றது.

என்பிழைகள் பொறுத்தருள்வாய்

                      இறைவனே! நான் உன் பக்தனைப் போல விவரித்துப் பேசுவேன். உன்னைத் துதி செய்து ஆயிரம் கவிகள் விரிவாகப் பாடுவேன். நான் இவ்வாறு பேசுவதெல்லாம் வாய் வார்த்தையோடு முடிந்து போகின்றது. என் மனத்தில் தோய்ந்து வெளிப்படும் அன்பு இதில் சிறிதும் இல்லை. சிறு நாயேன் அன்புகூட உன்மேல் இல்லாமல் தீயவனாய்த் திரிகின்றேன். நான் செய்திருக்கும் பாவங்களை எண்ணிப் பார்க்க இயலாதவை. இந்த மண்ணில் நான் பிறந்து ஒரு பயனுமில்லை. தினந் தினம் உண்ணுவதும் உறங்குவதும் பெரும் பாவங்களைச் செய்வதுமாகத் திரிகின்றேன். உன் பாதத்தைச் சிறிதும் சிந்திக்காது காலத்தைக் கழிக்கின்றேன். மனிதத் தன்மைகள் அற்ற குணங்கள் என்னிடம் மென்மேலும் குடிகொண்டுள்ளன. என் மனம் பஞ்சமா பாதகங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயமாய் உள்ளது. இந்த உலகத்தில் உன்னை நொக்கித் தவம் புரிகின்றவர்களுக்குக் குற்றங்குறைகள் நீங்கும். அவ்வகையில் இந்த உலகத்தில் நன்மை கிடைக்கச் செய்தருளும் இறைவனான வேத நாயகனே! நீ மனம் இரங்கி என் பிழைகளைப் பொறுத்து என்னை வருத்தும் தீவினைகளைப் பொறுத்து, என்னை வருத்தும் தீவினைகளைப் போக்கி அருளுதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறார். இதனை,


``என்பிழைகள் பொறுத்தருள்வாய் எனை – அலைக்கும்

துன்பவினை அறுத்தருள்வாய்''

என்ற பல்லவியின் வழி உணரமுடிகின்றது.

                     இவ்வாறாக, வேதநாயகம் பிள்ளை தனது சர்வ சமய சமரசக் கீர்த்தனையில், இறைவனிடம் தம் குறைகளைச் சொல்லி, தமக்கு அருள்புரியுமாறு வேண்டுகிறார். எச்சமயமும் சார்ந்து பாடாமல் இறைவனின் பெருமைகளைக் கூறி, எச்சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனம் உருகிப் பாடுகின்றார். இறைவனுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைச் சில கீர்த்தனைகளில் பாடுகின்றார். மொத்தத்தில் மன அழுக்குகளை எல்லாம் களைந்து இறைவனைத் தரிசிக்கத் தயாராக இருக்கும் ஓர் ஆன்மாவை இனம் கண்டு கொள்ளும் வகையில் இக்கீத்தனைகள் அமைந்துள்ளன எனக் கூறுதல் முற்றிலும் பொருத்தமுடையதாகும்.

 
 
நன்றி.
 
முனைவர். சோ.முத்தமிழ்ச்செல்வன்.

3 comments:

  1. இந்த புத்தகம் எந்த பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் தற்போது விற்பனையில் உள்ளதா என்பதையும் அறிய ஆவல்.

    ReplyDelete
  2. Pdf available on the google. சர்வ சமரச கீர்த்தனைகள் என்றுகூகுளில் டைப் செய்தால் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies



    1. சர்வ சமய சமரச கீர்த்தனை

      Delete