பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, March 1, 2012

சேத்தூர் (சேறை)

செழுமை + பழமை = சேறை




தொடக்கம்

            தொப்புள் கொடி உறவுகள் கூட திசைமாறிப் போகலாம். ஆனால் தான் பிறந்த புண்ணிய பூமியின் அன்பு என்றும் அகலாது. காரணம் தாய் தன்னை ஈன்றாலும் தான் மடியும் வரையும் மக்கும் வரையும் தாங்கி நிற்பது மண் மட்டும் தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணின் பெயரைத் தன் மார்பு தட்டி கூறி ஒவ்வொரு மனிதனும் பெருமைப் பட்டுக் கொள்கிறான். இது சங்க காலம் முதல் தொடர்கின்ற ஒன்று. எத்தனையோ அறிஞர்கள் தன் பெயருக்கு முன்னால் பிறந்த மண்ணின் பெயரைச் சேர்த்துக்கொள்கின்றனர். காரணம் பெயர் எடுப்பதற்கு மட்டும் அன்று தன் மண்ணின் பெயரை நிலைநாட்டவும் தான். அத்தகைய அறிஞர் பலர் தனது மண்ணின் பெருமையை இலக்கியமாக வடித்தனர். அம்மண்ணின் வரலாற்றை அதன் வழி அறிய முடியும்.



சேறை(சேத்தூர்) = செழுமை



‘‘ஆண்மறை நாடு'' என்று அன்போடு இது அழைக்கப்படுகிறது. தேவியாறு, நகரையாறு, கோறையாறு, புறவடியாறு, மனமாக்கியாறு என்று பஞ்ச நதிகளின் மூலம் பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இதனைச் சேறைத் தலபுராணத்தில் நாட்டுப் படலம்



                        ``கொண்டன் மேதி கொழுங்கு வடேமடி
 
                          மண்டலத்தில் வருநதி நீண் முலை


                         கண்ட நீண்முலைக் காம்பின் வடிந்தபா


                        லுண்ட கன்றுகளொக்குங் குளங்களே''


                                                                                     - சேறைத் தலபுராணம்.



என்று கருமுகில் பசுவாகவும் மலைக் குன்றுகள் பசுவின் மடுக்களாகவும் ஆறுகள் மடுக்களின் காம்புகளாகவும் குளங்கள் பாலைக் குடிக்கும் கன்றுகளாகவும் உருவகப்படுத்திக் கூறுகின்றது. ‘‘சோழ நாடு சோறுடைத்து'' என்று தமிழறிஞர்கள் கூறுவது பழமை. ஆனால் ``சோற்றுக்கு அலைந்தவர்கள் சேற்றூருக்குச் செல்லுங்கள்'' என்று கூறுவது தான் புதுமை. இதிலிருந்து இத்தேசத்தின் செழுமை நன்கு புலப்படும்.



``மணிவயல் வாளைபாய வளரிளங் கதலி தூங்கும்


இணையின் மென்பழஞ் சிந்துந் தேனிடை விடா தொழுகச் செந்நெற்


பனையெலா மோங்குஞ் சேறைப் பதிவளர் நாட்டுப் பண்ணைக்


கணைநிகர் கருங்கட்பண் மங்கையர் வரவுரைக்கின்றேன்.''


                                                                                         - சேறைபட் பிரபந்தம்



என்று சேறையின் செழுமையை சேறைப்பட் பிரபந்தம் செப்புகிறது.



சேறை = பழமை

             `சேற்றூர்', என்றும் `போற்றூர்' என்றும் இலக்கியங்கள் பாராட்டுகின்றன. சேறை, சேரூர், சேம்மரம், குலசேகர புரம் என்னும் பெயர்களைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சேற்றூர் என்பது மருவி இன்று சேத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ஏகாம்பரத்தேவரின் மரபில் தோன்றியதே சேறை சமஸ்தானம் என்று ‘நதிவிலாசம்' கூறுகிறது.

                இராமன் இராமேசுவரத்தில் மணலைக் குவித்து சிவலிங்கத்தை வழிபட்டார். திருவாடனைக்கு அருகில் உள்ள உப்பூரில் உப்பைக் கவித்து விநாயகரை வழிபட்டார். அதுபோல சேத்தூரில் அகத்தியர் மணலைக் குவித்து வழிபட்டதாகப் புராணங்கள் பகர்கின்றன.


                      கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலையும் சமண முனிவர்கள் வாழ்ந்த குகையும் இங்கு அமைந்துள்ளது.

                 சுந்தரபாண்டியன், ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன், அதிவீரராமன் ஸ்ரீவல்லபதேவன், தர்மப்பெருமாள் குலசேகரப்பாண்டியன், செண்பக பராக்கிரம பாண்டியன் ஆகிய மன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்கள் சுமார் 14 இத்தேசத்தில் இருக்கின்றன.

                 ``சென்று நேரியன் சேனை புகுந்துநீ

                   யொன்றும் பூசலுடற் றுமவ் வேளையிற்


                   குன்று போலுற் குறட்டை யேவிநாம்


                    வென்று நல்குவம் வெற்றியுனக் கொன்றான்''


                                                                                           - சேறைத் தலபுராணம்

என்று இறைவனே பாண்டிய மன்னனுக்குச் சேவகம் செய்ததைச் சேறைத் தலபுராணம் சிவபெருமான் சேவகஞ் செய்த படலம் கூறுகின்றது. மூவேந்தரும் வழிபட்ட தலம் என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிலங்குகிறது.

                 தோல்வியே கண்டிராத மருதநாயகத்தை எதிர்த்துச் சமமாக 1756 ல் போரிட்டுள்ளது. 1800 க்குப் பிறகு சேத்தூர் பாளையம் என்ற தகுதியினைப் பெற்றது. 1803 ம் ஆண்டுக்கு முன்பு வரை இது மதுரை மாவட்டத்திலும் அதன் பின்பு சீர்மிகு திருநெல்வேலி மாவட்டத்திலும் இருந்தது. 1910 முதல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் 1984 முதல் விருதுநகர் மாவட்டத்திலும் இருந்து வருகின்றது.


சேறையும் செந்தமிழும்


                    சேறையில் முத்தமிழும் முகிழ்த்தது. முத்தமிழ் வித்தகர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தது. சேறைமன்னர் சுந்தரராசுத் தேவர் `துறைக்கோவை', `பதிகப்பாமாலை', `தனிப்பாடற்திரட்டு' போன்ற அற்புதக் கவிகள் புனைந்துள்ளார். வடமொழில் இருந்த சேறைத் தலபுராணத்தை 1574 ல் சிந்தாமணிப்பிள்ளை என்ற பொன்னாயிரங்கவிராயர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனை 1893 ல் இராமசாமிக்கவிராயர் வெனியிட்டுள்ளார். ‘குறவஞ்சிப் பிரபந்தம்', ‘தாய்மகளெசல்' போன்ற பல இலக்கியங்களை இராமசாமிக்கவிராயர் படைத்துள்ளார். சங்கரமூர்த்திக் கவிராயர் ‘சேறைப்பட் பிரபந்தம்' பாடியிருக்கிறார். மன்னர் பரம்பரையின் 14 வது பாட்டனார் சுந்தரராசுத் தேவர் ‘அன்னம்விடு தூது' பாடியிருக்கிறார். மு.ரா.கந்தசாமிக் கவிராயர் ‘குமணவள்ளல் சரித்திரம்' பாடித் தமிழ் வளர்த்துள்ளார். இத்தனைக்கும் மேலாக பாவேந்தன் பாரதி தனது இளமையில் சிறிது காலத்தை சேறையில் செலவழித்துள்ளார் என்பதும் சிறப்பு. ‘‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது முந்தைய மொழி. ஆனால் இன்றைய திருமொழி என்னவெனில் சேறைச் செந்நிலமும் செந்தமிழ் செப்பும்'' என்ற வரலாற்று ஆய்வாளர் ந.இராசையாவின் வாக்கு முற்றிலும் உண்மையே.


தொகுப்புரை

                சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தப் பாண்டிய தேசத்தின் குறுநிலமே சேறை. இச்சேறையம்பதியும் முத்தமிழ் வளர்த்தது. செழுமை பழமையும் மிக்க இம்மண்ணின் பெருமைகளை இங்கு தோன்றிய இலக்கியங்கள் பறைசாற்றி நிற்கின்றன.



No comments:

Post a Comment