பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, November 11, 2014

பாரதியார் பரப்பிரம்மம்

முன்னுரை
     என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
     பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்
     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்பார் பாவேந்தர். பாரதியின் படைப்புவெளி என்பது இன்று வரையிலும் ஆய்ந்து அளக்க முடியாத வெளியாகும். பாரதியின் படைப்புகள் பல கோணத்தன்மையில் இயங்குதலுக்கு அடிப்படை அவரின் வாழ்வியல் பிழிவாகும். அன்றன்றைய வாழ்க்கை அனுபவத்தை எழுத்து வடிவில் பாரதி பதிவு செய்தது அவரது பன்முகத் தன்மைக்கு வித்தாக அமைகின்றது. அவ்வகையில் பாரதி பாடல்களில் மறைந்துள்ள நிலைப்பாடுகள் மற்றும் படைப்பு வெளிகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாரதியார்
     பாரதியார் கவிஞர் உலகில் ஒரு தனி வகையானவர் ஆவார். தனிமனித வாழ்வில் முரண்கள் பல கொண்டு எந்தவொரு கட்டத்திலும் சமுதாயத்தோடு தன்னைச் சமரசம் செய்துகொள்ளாதவர். சமகாலப் படைப்பாளிகள், உறவினர்கள், குடும்பத்தவர் என எவருடனும் பிடிப்பின்றி மனம்போன போக்கில் வாழ்ந்தவர் ஆவார். பொதுவாகப் புறச்சூழல்கள் படைப்பாளிகளை வெகுவாகப் பாதிக்கும். அதிலும் பாரதி புறச்சூழல்களால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவராய் வாழ்ந்திருக்கிறார். பாரதியின் படைப்புகள், சிந்தனைகள், பெரும்பாலும் வறுமையின் வார்ப்புகளாகவும் ஒரு படைப்பாளியின் தார்மீகக் கோபமாகவே உள்ளன.

படைப்புகளும் பொருண்மைகளும்
     பாரதி படைப்பு வகைகள் புதிய சொற்களாலும் தளங்களாலும் நிரம்பியவை. பாரதியின் உரைநடைகளும் சிற்சில சிறுகதைகளும் மணிப்பிரவாளத் தன்மையிலே இயங்குகின்றன. இவற்றிற்கு அடிப்படை அவரது வாழ்வியல் சிறிது காலம் காசியில் கழிந்ததும் இயல்பான சமஸ்கிருதப் புலமையுமே ஆகும். சமகாலப் படைப்பாளிகள் அயல்நாட்டு வரவுகளான புதினங்களையும், தூய தமிழ் உரைநடை என்ற மறுமலர்ச்சி உரைநடைகளையும் யாத்துக் கொண்டிருந்த காலத்தில் பாரதி மட்டும் சற்று விலகி நின்று தன்னுணர்ச்சிப் படைப்புகளால் தன்னுடைய படைப்புவெளியை நிரப்பியுள்ளார். தனக்கென்ற அடையாளமே அடையாளமின்மை தான் என்ற இயங்கியலே பாரதி படைப்புகளில் காணலாகின்றது. புதுமைப்பித்தன் சில இடங்களில் நிகர நோக்கத்தக்கவர் ஆவார்.

பின்நவீனத்துவவாதிகளும் படைப்புகளும்
     பொதுவாக, நவீனத்துவத்தின் நீட்சியாக பின் நவீனத்துவம் என்ற தொடர் கையாளப்பட்டாலும் பின் நவீனத்துவத்தின் இயங்கியல் வெகுவிரிவானது. படைப்புக் கூறு, எல்லைக் கோடு, வரையறைகள் என எவற்றோடும் பின் நவீனத்துவம் இணைந்து இயங்காது. சொற்கட்டுமானமே இவ்வகையான படைப்புகளுக்குப் பொது அடையாளம். வடிவக் கட்டுமானம் என்ற பேச்சுக்கே இடமில்லாத தன்மை இவ்வகைப் படைப்புகளில் காணப்படுகின்றது. உள்ளடக்க மீறல், அறிதலில் ஒழுங்கவிழ்ப்பு இவர்களின் தனித்துவ அடையாளம் ஆகும். படைப்புகளுள் படைப்பாளியின் பல்துறைப் புலமை, சமூகம் மீதான தர்க்கரீதியான நிலைப்பாடு, எவரும் சந்திக்காத கோணங்கள் என்ற தன்மைகளே இவ்வகைப் படைப்புகளில் மிளிரும். படைப்புகள் என்பவை இன்பகரமானவை. சமுதாயத்திற்கு நலம்பயப்பவை என்பதை எல்லாம் மறுதலித்து குறிப்பிட சமூகத்தின் அவலக்குரல் பதிவு என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. இத்தகு பதிவுகளிலும் பாரதியின் பதிவுகள் தனிவகை. தன்னுடைய விளிம்புநிலை வாழ்வியலை எழுதுபலகையாக்கித் தனது கோபக்கணைகள் எனும் கூரிய சொற்களினால் படைப்புகளை வடித்துள்ளார். பொதுவாகப் பின் நவீனத்துவப் படைப்பாளிக்கும் தீவிரவாதப் பெண்ணியவாதிகளுக்கும் இத்தகு குணநலமே இருக்கும்.

பாரதியாரின் பின் நவீனத்துவ வடிவங்கள்
     பாரதியாரின் வசன கவிதை முயற்சியும் புதுக்கவிதைகளும் அவரது இலக்கிய உலகில் மைல்கல் ஆகும். இலக்கியம் என்பது வரையறைக்குள் கருத்துப்பொதிவுகளை கூறல் வேண்டா, தன்னுடைய அப்போதைய மனநிலையில் கருத்துச் சட்டகத்தில் இயங்கினால் போதும் எனும் உட்பொதிவையே இப்படைப்புகள் காட்டுகின்றன. பின் நவீனத்துவாதிகளுக்கென்ற உலகம் பல நிறங்களை உடையது. திறமைகளும் பன்னூல் புலமைகளும் நிலைத்த கொள்கைகளும் எதுவும் இன்றி தற்காலிகத் தன்னுணர்வே பாரதியின் கவிக்கூறுகள் ஆகும். உளவியல் அடிப்படையில் தம் உள்ளக் குமுறல்களுக்குத் தன் கவித்துவத்தால் தனக்குத் தானே மருந்திட்டுக்கொண்ட மனிதன் பாரதி ஆவார். பிரெஞ்சுக் கொள்கைகள் மீது ஈடுபாடுடைய பாரதியின் பிரெஞ்சு தேசக் கோட்பாடான பின் நவீனத்துவப் பொதிவுகள் பொலிவுற்று இருப்பது தனிச்சிறப்பாகும்.

பாரதி புதினத்தில் பின் நவீனத்துவக் கூறுகள்
      பாரதியின் சிறுகதைகள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு பிற படைப்பாளிகளோடு ஒத்துப்போவதில்லை. கதைக் களம், மொழிப் புலப்பாடு என்பவற்றில் பாரதி வேறுபடுகிறான். பூகம்பம் என்ற புதினத்தில் பொதிய மலைச்சாரலில் இருக்கும் ‘வேளாண்குடிஎன்ற ஊரில் இருக்கும் ஒரு குடும்பம் பூகம்பத்தால் அழிகிறது. அத்தருணம் நிறைமாதக் கர்ப்பிணியாய் இருக்கும் கோமதிக்கு மகப்பேறு ஏற்படுகின்றது. அவளுக்கு மரணமும் கிட்டுகின்றது. அப்போது அவள் பிழைத்திருக்கும் நாத்தனாரான கைம்பெண் விசாலாட்சியிடம் குழந்தையை அடைக்கலப்படுத்திவிட்டு அவளையும் மறுமணம் செய்யுமாறு கூறி இறப்பதாகக் கதையை நிறைவுசெய்திருக்கிறார். சமூகத்தில் இருவகை நீதிகள் இருப்பதை பாரதி இவ்விடத்தில் சாடுகிறார். மறுமணம் கைம்பெண்களுக்குக் கட்டாயமாக நடைபெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இக்கதையில் கூறுகிறார். இக்கனத்த பொருளை,
‘‘…. நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரி அடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்திற்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு.
இரண்டாவது,
நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் சந்திரிகை என்று பெயர் வை’’ என்றாள்.
இந்த ஒரு கூறை அமைப்பியல் அடிப்படையில் சிறுகதையாகக் கொள்ளலாம். ஆனால், இது சந்திரிகையின் கதைத் தொகுப்பு என்ற புதினத்தில் முதல் அத்தியாயமாக இப்பதிவை பாரதியார் கூறியுள்ளார். பொதுவாகப் புதினம் என்பது நெடுங்கதை ஆகும். அதன் முடிவுக் கட்டத்திலே கதை நிறைவு என்ற தன்மை இருக்கும். இப்புதினத்திலோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ஒரு முடிவைக் கொண்டதாக அமைந்துள்ளது. இப்படைப்பை எழுதி முடிப்பதற்குள் பாரதியார் இறந்து விட்டதால் முற்றுப் பெறாத தன்மையிலும் இப்படைப்பு அமைந்துள்ளது. இது வடிவ அமைப்பில் முழு மொத்தமாக ஒரு புதினமாகவும் தனித்தனியே கதை முடிவு காணும் சிறுகதைகளாகவும் இடம் பெறுவதை வைத்து பாரதி உள்ளடக்க ஒழுங்கவிழ்ப்பு மற்றும் நேர்கோட்டு வாசிப்பு முறை மீறலை இப்படைப்பினுள் பின் நவீனத்துவ அடிப்படையில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

சிறுகதைகளில் பின் நவீனத்துவக் கூறுகள்
     பாரதியின் சிறுகதைகள் வடிவ அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு நிகழ்ச்சித் துண்டாக மட்டும் இயங்கி முடிகின்றன. எடுத்துக்காட்டாக, கத்திச்சண்டை என்ற சிறுகதையில் அவர் என்ன சொல்ல வருகிறார்?, உட்பொதிவு என்ன? என்பதெல்லாம் கண்டறிய முடியாது. ஒரு சாமியார் இன்னொரு சாதுவிடம் பாவனை கத்திச் சண்டை செய்வதாக இக்கதை அமைகின்றது. சிறுகதை என்றால் சிறிய அளவிலான பாத்திரக் கையாளல், பெரிய உரையாடல்கள் இல்லாமல், சுருக்கென குத்தும்படியான முடிவு என்பதை எல்லாம் பாரதியின் சிறுகதைகளில் காணஇயலாது. இதிலிருந்து பாரதியின் சிறுகதைகளில் மையமறுப்பு என்ற பின் நவீனத்துவக் கூறு பதிவாகியுள்ளது.

புதிய படைப்பு முயற்சிகள்
     பாரதியாரின் வேதப்பயிற்சி, வடமொழி அறிவு, ஆங்கிலக் கல்வி, பிரெஞ்சு மொழியறிவு, பொதுவுடைமைக் கொள்கை மீதான ஈர்ப்பு, சமுதாயப் பிரக்ஞை, கவித்துவம் ஆகியவையே அவரது புதுப்புதுப் படைப்பு முயற்சிகளுக்கு வித்தாகும். இவை காரணமாகவே விநாயகர் நான்மணிமாலை எனும் யாப்பு அடிப்படையிலான பாடல்களைத் திறம்படப் பாடிய பாரதியாருக்கு, புதிய கோணங்கி, காலனுக்கு உரைத்தல் என்ற இலக்கிய வகைமைக்கு வேறுபட்ட படைப்புகளை உருவாக்கக் காரணமாக அமைந்தன.

படைப்புவெளி
     பகவத் கீதைக்கு ஆத்மார்த்தமாக உரை எழுதிய பாரதியாரின் எழுத்துகளில் வைஷ்ணவப் பாஷ்யக்காரர்களின் உன்னதப் பக்திநெறி புலப்படுகின்றது. மேலும்,
‘‘காக்கை குருவி எங்கள் சாதி உயர்
வானும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்’’
எனுமிடத்து ஒரு மிகைப் பொதுவுடைமையாளனைப் பாரதியிடம் பார்க்க முடிகின்றது.

     பாரத நாட்டின் விடுதலைக்காக அவர் பாடிய நாட்டு வணக்கம், பாரதமாதா, எங்கள் தாய், வெறிகொண்ட தாய், பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி, நவரத்தினமாலை, திருத்தசாங்கம் முதலிய பாடல்களால் அவரைச் சிறந்த விடுதலை விரும்பியாகப் பார்க்க முடிகின்றது. மேற்கண்ட படைப்புகளுள் சிற்றிலக்கியக் கூறுகள் தத்தம் உள்ளடக்கங்களைப் பெறாமல் புதுவகை உள்ளடக்க மாறுதலுக்குப் பாரதியார் உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம் என்ற உள்ளீட்டினை உட்புகுத்தி அத்துக்களை மீறும் படைப்புகளாக இவை பிரவேசிக்கின்றன. மேலும், சித்தாந்தசாமி கோயில், மனப்பெண், பரசிவ வெள்ளம், நான், உலகத்தை நோக்கி வினவுதல், கற்பனையூர்  ஆகிய படைப்புகள் சித்தர் நெறிகளைக் கைக்கொண்டனவாக அமைந்துள்ளன.

குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய படைப்புகளின் வாயிலாகப் பாரதி உருவகக் கவித்திறன் சிறப்பாகப் புலப்படுகின்றது. பெண்விடுதலை, பெண்மை, புதுமைப் பெண் முதலிய படைப்புகளால் பாரதியின் முற்போக்குவாதி முகம் நமக்குத் தெரிகின்றது.

 முடிவுரை


     பாரதி எடுத்துக்கொண்டப் படைப்புப் பொருண்மைகளும் எழுத்துச் சித்தங்களும் ஓர் அமைப்பினுள் அடங்காது. தன்னை மிதித்த திருவல்லிக்கேணி பாரத்தசாரதிப் பெருமாள் கோயில் யானையைப் பெருந்தன்மையுடன் மன்னித்ததாக ‘கோயில் யானை’ எனும் தலைப்பினில் கட்டுரை வரைந்துள்ளார் பாரதி. இதுவே அவரது இறுதிப்படைப்பு ஆகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது பாரதியை எந்தக் கூட்டினுள் அடைப்பது? பாரதி வாழ்வியல் போலவே அவரது படைப்புகளும் வைரக்கற்கள் போன்று பன்முகம் கொண்டவையாக இருப்பதன் வழி பாரதியையும் பாரதியின் படைப்புகளையும் படைப்புலகின் பரப்பிரம்மமாகக் கருதுதல் நலம்.

ம.பிரசன்னா,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
கலசலிங்கம் பல்கலைக் கழகம்,
கிருஷ்ணன்கோவில்.
பாரதியின் விகடசித்திரம்

‘‘தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
பைந்தமிழ்த் தேனீ......’’

என்று தன் தாசனால் பாடப்பெற்ற முண்டாசுக்கவி கதை, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, இதழாலன் எனப் பல்வேறு முகம்கொண்டவன். கதையிலும், கவிதையிலும், புதுமையினைப் புகுத்தியவன். அஃதே போன்று இதழியலில் புத்தெழுச்சி புதுக்கியவன். பாரதி பல்வேறு இதழ்களில் சேவை புரிந்திரிந்தாலும் ‘இந்தியா’ இதழிலில் செய்த தொண்டு மகத்தானது.  இந்திய தேயத்தின் விடுதலைக்கு எத்தகைய முனைப்போடு செயல்பட்டானோ அதேபோல் ‘இந்தியா’ இதழிலும் வீரியத்துடன் செயல்பட்டான். இவ்விதழிலில் கருத்துப்படம், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு பகுதிகள் அங்கம் வகித்தன. இவ்வங்கத்தில் முதன்மையிடமும் முக்கிய இடமும் பெறுபவை கருத்துப்படங்களே ஆகும். இக்கருத்துப்படங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையினை ஈண்டு நோக்கலாம்.

பாரதியின் விகடசித்திரம்

      இதழாசிரியனின் கருத்தினையும் இதழின் நோக்கத்தினையும் நிறைவேற்றும் பொருட்டு அமைவதே கருத்துப்படம் என்பதாகும். கருத்துப்படம் என்பதும் ஒரு தலையங்கமாகக் கருதப்பெறுகின்றது. பல சொற்கள் கூறுவதை ஒரு கருத்துப்படம் சில கோடுகளின் வழி எளிதில் உணர்த்திவிடுகின்றது. இவ்வகையில் நோக்கும் போது கருத்துப்படம் என்பது இதழில் முதன்மை பெறுகின்றது. இக்காரணத்தால் தான் என்னவோ பாரதி ‘இந்தியா’வின் முதல் பக்கத்தில் இதற்கு முதன்மை இடம் கொடுத்தான்.

      ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ என்று வழங்கப்பெறும் இது தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களில் குறிக்கப்பெறுகின்றது. பாரதியார் இதனை ‘விகடசித்திரம்’ என்றே சொல்லாடுகின்றார். முதலில் டில்லியில் வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ இதழும், ‘இந்தியன் பஞ்ச்’ என்ற இதழும், ‘அவத் பஞ்ச்’ என்ற இதழும் கருத்துப்படங்களை வெளியிட்டதாக அறியமுடிகின்றது. ஆனால், தமிழில் முதன்முதலில் இவ்விகடசித்திரத்தினை வெளியிட்டது ‘இந்தியா’ இதழே ஆகும். இதனைப் பாரதி, ‘‘புதிய அபிவிருத்தி’’ என்ற கட்டுரையில் (13.3.1909) ‘‘தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்’’ என்று குறிப்பதிலிருந்து உணரமுடிகின்றது. இவ்வாறு வெளிவந்த படங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்யும் ஆவணங்களாகவும், அதன் வரலாற்றைக் கூறும் மூலங்களாகவும் அமைகின்றன.

      மார்ட்டின் லூதர்கிங் தனது புரட்சிக் கருத்துக்களை ஜெர்மனி தேயத்தில் பரப்புவதற்குத் துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார். இப்பிரசுரங்களில் பல்வேறு கேலிச்சித்திரங்களை அமைத்து, அதில் தனது படத்தினையும் பங்கேற்கச் செய்து புரட்சி விதையினைத் தூவினான். அதேபோன்று பாரதியும் தனது விகடசித்திரங்கள் வழி அன்றைய அரசியல் சூழல்களையும், சமுதாயம் மீதான தனது மனப்பதிவுகளையும், மக்களின் நிலையினையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய செயல்களையும் சுட்டிக்காட்டி விடுதலை வேள்வியினையும் இவற்றின் வழி வார்த்தெடுத்தான். உணர்வில்லாத மக்களுக்கு உணர்வினை ஊட்டி அவர்களின் தேசிய உணர்வினை ஊக்குவித்தான். ‘இந்தயா’  இதழ் இந்தியாவில் தடைசெய்வதற்குக் காரணமாக ஆங்கிலேய அரசு கூறியது இதில் வெளியான கருத்துப்படமும் சில கட்டுரைகளுமே ஆகும். இவ்வாறு இதில் வெளியான சித்திரங்கள் ஆங்கிலேய அரசுக்குச் சிம்மசொப்பனமானது.

வெள்ளையர்களைச் சாடல்
      ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 போடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்று (8.9.1906) அமைந்திருக்கின்றது. மேலும், இந்திய மாதா என்ற பசுவிடமிருந்து மார்லி ஒட்டப் பால் கறப்பது போலவும் கருத்துப்படம் பதிப்பித்திருக்கிறார். இப்படங்கள் இரண்டிலும் இந்தியர்களை எலும்பும் தோளுமாகவும் வெள்ளையர்களைக் கொளுத்த உடலுடனும் அமைத்து இந்தியாவின் இழிநிலையினை விளக்குகின்றார்.

      எங்கு உரிமை மறுக்கப்படுகின்றதோ அங்கு புரட்சி வெடிக்கும் என்ற கருத்திற்கேற்ப ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளால் இந்தியாவில் புரட்சிக்கனல் வீசியது. கொடூரச் சட்டங்கள் என்ற கோழி குப்பை மேட்டிலிருந்து கூவுகின்றது. இக்கோழியின் குரலைக் கேட்டவுனே ‘சுதந்திர சூரியன்’ உதிப்பது போன்ற (19.12.1908) சித்திரம் வரைந்தார். மேலும், பாரத தேசத்தின் அமைதி என்ற ஏரியானது நவீன உணர்ச்சி என்ற வெள்ளத்தால் உடைபடுகின்றது. ஆங்கிலேயே அதிகாரிகள் அதனை அடைப்பதற்கு ‘புதிய சட்டங்கள்’ என்ற கூடைமண் சுமந்து அடைக்கின்றனர் என்ற கருத்தை விளக்குவதாகவும் சித்திரம் அமைத்தார். இவ்வாறு சித்திரங்களின் வழி மக்களுக்கு அன்றை அரசியல் சூழலைத் தெளிவாக விளக்குகின்றார்.

பொருளாதாரம் சார்ந்த படங்கள்
      பாரதியை நாம் பன்முகம் கொண்டவராகக் கருதுகின்றோம். அதில் பொருளாதார மேதை என்பதும் ஒன்றாகும். ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தான் வருகின்றது என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இது இன்றும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதையும் சிந்தை கொள்ளவேண்டும். மேலும், 17.4.1909 நிதிநிலை அறிக்கை குறித்த சித்திரத்தில் மக்கள் நலனுக்குக் கொடுக்கும் பணம் குறைவு. ஆனால், மக்கள் மீது அடக்குமுறையினைப் பயன்படுத்த உதவும் போலீஸ் இலாகாவிற்குச் செலவு அதிகம் என்ற கருத்தில் அமைந்த படம் நிதிநிலை அறிக்கையினை விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றது.

மிதவாதிகளை விமர்சித்தல்
      பிரிட்டிஷ் ஏகாதிபத்ய  எதிர்ப்புப் பிரசாரம், காங்கிரஸ் மிதவாமிகளைக் குத்தலும் கிண்டலுமாகத் தாக்கும் பிரசாரம் முதலானவை பெரும்பான்மையாகக் கேலிச்சித்திரங்களில் இடம் பெறுகின்றன. நாடு விரைந்து சுதந்திரம் அடைவதற்காகத் தீவிர இயக்கத்தை நடத்தியவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளைப் பாரதி தயக்கமின்றித் தாக்கி எழுதினான். சித்திரம் ஒன்றில் அவர்களைச் ‘சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தான். இவர்களை நிதானக் கட்சியினர், பழைய கட்சியினர், நிதானஸ்தர்கள் என்று அழைத்தான். சுயராஜ்யம் நோக்கிச் செல்லும் காங்கிரஸ் என்ற மாட்டு வண்டியில் திலகர் (தீவிரக்கட்சி) என்னும் காளை பீடுநடை போட்டுச் செல்வதாகவும் மற்றொரு மேத்தா (பழைய கட்சி) என்னும் காளை தடுமாறி இடைவழியில் நகரமுடியாமல் படுத்துவிடுவதாகவும் விமர்சித்துப் படம் வரைந்தார். அஃதோடு அமையாது உலக அரசியல் நிகழ்வுகளைக் கூறியும் மிதவாதிகளை ஒறுத்தார். ‘‘கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’’ (23.3.1907) என்று அமெரிக்க, ஜப்பான் தேயங்களின் அரசியல் சூழ்ச்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளார். மேலும், இப்படத்தின் விளக்கத்தில் ‘கையாலாகாத ஜனங்களின் வாய்க் கூச்சல்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பயத்தில் நடக்கிற விஷயங்கள் நயத்தில் நடக்கமாட்டா’’ என்று மிதவாதிகளின் போக்கால் இந்தியா பயனடையாது என்பதைத் தெளிவுறுத்துகின்றார்.

சுதேசிக் கப்பல் சித்திரம்
      பாரதியின் விகடசித்திரங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம் பாரதி கண்டது தேசியம் என்பதால் தான். ஆனால், சுதேசிக்கப்பலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சுமார் நான்கு படங்களை வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை என்பதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் இதற்கு உதவுங்கள் என்று கூறுவதாகவும், மற்றொன்று தீபாவளித் தாய் பணம் வசூலித்துத் தருவதாகவும் அமைந்திருக்கின்றது. ஒருபடம் தென்இந்தியாவிலே சிலர் மட்டும் சுதேசிக்கப்பலுக்காக வேலை பார்ப்பதால் தான் அது நஷ்டத்தில் ஓடுவதாகவும் அமைத்திருக்கின்றது.

      துருக்கி சுதந்திரம் அடைந்தபோது அதனை விளக்கும் முகமாகவும் விகடசித்திரம் தீட்டினார். மேலும், ஐரோப்பாவில் வெளியாகும் ‘‘பஸ்கினோ’’ எனும் பத்திரிக்கையில் பிரசுரமான படத்தினையும் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளார். வேறு பல இதழ்களில் வெளியான கட்டுரைகளையும் கருத்துக்களையும் விளக்கும் விதமாகவும் சித்திரம் வெளியிட்டார். ஓயாமல் தற்காலச் சித்திரம் காட்டுவதில் ஜனங்களுக்குச் சலிப்பு உண்டாகியிருக்கும். அதனால் போக்குவதற்குப் பழைய புராதனச் சித்திரம் வரைந்து வாசகர்களின் சிந்தனை மேலும், மெறுகேற்றுதல் வேண்டும் என்ற எண்ணத்தில் (9.1.1909) பழைய வீரத்தினை விளக்குவதாக சித்திரம் வரைந்தார். இதே சித்திரத்தினை 2.10.1909 அன்று மீண்டும் வெளியிட்டார். அதில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனங்களுக்கு வீரத்தன்மைருக்கும். ராஜங்கம் சுயாட்சிமுறை தழுவியிருக்கும். அப்போது நமது வீரர்கள் பரதேசத்தாருடன் போர்செய்யப் புறப்படும் போது வாழ்க்கைத் துணைவியர்கள் வாள் கொடுத்து வழியனுப்புவர் என்று இந்தியாவின் சுதந்திரத்தை முன்பே கனித்துக் கூறியிருக்கிறான். அதனால் தான்,

‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’’

சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரப்பள்ளு பாடினான். ஒரே சித்திரத்தினைக் காலச்சூழலுக்கு ஏற்ப இருமுறை பயன்படுத்தி இருவேறு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

      ‘‘இந்தியாவின் குமாரர்கள் ஆனந்தமடைவதைப் பாருங்கள்’’ (20.10.1906) என்று இந்தியர்கள் பண்டிகை கொண்டாடும் போது அதனைச் சாடுகின்றார். மேலும், நம் சந்ததியினர் சந்தோஷத்துடன் பண்டிகை கொண்டாட வகை செய்ய வேண்டுவது நமது கடமை என்பதைனையும் நினைவுபடுத்துகிறார். தமிழ்ப்புத்தாண்டிற்குச் சித்திரம் வரைந்து வாழ்த்துத் தெரிவித்து கவிதை வரைந்து விடுதலை உணர்வினை விதைக்கிறார்.

பாரதி எண்ணிய புது யுக்தி
      முழுவதும் கேலிச்சித்திரம் அடங்கிய இதழையும் வெளியிடும் எண்ணம் பாரதிக்க இருந்தது. இதனை 4.12.1909 இதழ் தெளிவுறுத்துகின்றது. மேலும், ‘இந்தியா’ இதழில் முதல் பக்க சித்திரம் மட்டுமல்லாது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள முக்கிய நிகழ்வுகளை விளக்கும் பொருட்டும் சித்திரம் வரைவதற்குத் தான் எண்ணியுள்ளதாகவும் பாரதி பகர்கின்றார் (13.3.1909).


      இவ்வாறு பல்வேறு யுக்திகளைத் தனது விகடசித்திரத்தில் பாரதி பதித்தான். ‘‘இந்தியா இதழின் சுவையான பகுதி படங்கள் ஆகும். அந்தச் சித்திரம் தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம் தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று’’ என்ற பாரதிதாசன் வரிகளில் இருந்து பாரதியின் சித்திரத்திற்குக் கிடைத்த வெற்றியினை நாம் ஒருவாறு அறியலாம்.


க.கந்தசாமிபாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜூக்கள் கல்லுரி,
இராசபாளையம்.

Sunday, November 2, 2014

தமிழ் இலக்கியத்தில் வள்ளைப்பாட்டு

    உலகில் தோன்றிய இலக்கியங்கள் அனைத்திற்கும் தாய் நாட்டுப்புற இலக்கியங்களே ஆகும். ஹோமரின் இலியட், ஒடிசி, இந்திய தேயத்தின் மகாகாவியங்களான இராமாயணம், பாரதம் போன்றவையும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் வழக்கிலிருந்து கிளைத்தவைகளாகும். சங்க இலக்கியஙங்களும் நாட்டுப்புற இலக்கியங்களே என்ற கூற்றும் தமிழகத்தில் நிலவி வருகின்றது. இவ்வாறு பல்வேறு நாட்டுப்புற இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெற்றுத் தனி இலக்கிய வகையாகக் கருக்கொண்டுள்ளது. அவ்வகையில் வள்ளைப்பாட்டு எனும் இலக்கிய வகையும் நாட்டுப்புற வடிவத்தில் இருந்து ஏட்டிலக்கிய வடிவத்தினைத் தழுவியுள்ளது. இவ்வள்ளைப்பாட்டினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பல்வேறு பெயர்கள்
                வள்ளைஉலக்கை; வள்ளைப் பாட்டு என்பது பெண்கள் உலக்கை கொண்டு உரலில் ஏதேனும் பொருளினை இட்டு குத்தும் போது ஏற்படும் களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடப்படுவது ஆகும். இது உரற்பாட்டு, உலக்கைப் பாட்டு, அம்மானை வள்ளை, பொற்சுண்ணம், வள்ளைக் கூத்து எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பெற்று வருகின்றது. இப்பாட்டினை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் ~அவலிடி| என்று சுட்டுகின்றார்.

தொல்காப்பியத்தில் வள்ளைப்பாட்டு
                வள்ளைப்பாட்டு என்ற இலக்கிய வடிவத்தினைத் தொல்காப்பியர் நேரடியாகச் சுட்டவில்லை. ஆனால், உரையாசிரியர்களே வள்ளைப்பாட்டின் வடிவத்தைக் கூறுகின்றனர். வஞ்சித்திணைக்குரிய பதிமூன்று துறைகளில் ``குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளை’’ என்னும் ஒரு துறையினைத் தொல்காப்பியர் நவில்கின்றார். அதற்கு ``நெல் முதலியவற்றை உரலிற்பெய்து உலக்கை கொண்டு குற்றும் மகளிர், தாம் பாடும் பாடல்களில் வேந்தனது வெற்றித் திறத்தைப் போற்றியுரைக்கும் முறையில் அமைந்த புறத்துறையாகும்’’ என்று இளம்பூரணர் உரைசெய்கின்றார்.  தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை என்பதனையும் சுட்டுகின்றார். மொத்தத்தில் உலக்கையிடிக்கும் பெண்கள் வேந்தனின் சிறப்பைச் சொல்லிப் பாடுவதே கொற்றவள்ளை என்பது புலனாகின்றது.

சங்க இலக்கியத்தில் வள்ளைப்பாட்டு
                பல்வேறு இலக்கிய வடிவங்கள் தொல்காப்பியத்தில் கருக்கொண்டு சங்க இலக்கியத்தில் வளர்ச்சியும் வளமும் பெற்றன. அவ்வாறே இவ்வள்ளைப்பாட்டும் வளர்ச்சி நிலையினை எட்டியது.
               ``வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
       கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
       போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
       உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்’’
                                                                                    -              புறநானூறு, 22 (14–17)
என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டிக் அந்த இடத்தில் உலக்கையினை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கின்றனர்.   இது எதெற்கென்றால் நெல் குற்றுவதற்காக அல்ல. வள்ளைக் கூத்தினை அக்களத்தில் நிகழ்த்துவதற்காக என்று சுட்டப்பெற்றுள்ளது. இதன்வழி புறநானூற்றுக் காலத்தில் வள்ளைப்பாட்டு கூத்து வடிவில் இருந்துள்ளமையை அறியமுடிகின்றது. மேலும், வஞ்சித் துறைகளுக்கு உரையெழுதிய சோமசுந்தர பாரதியார் வள்ளை என்பதும் முருகன் மேல் வைத்து ஆடும் வள்ளி என்பதும் வௌ;வேறானது என்று இரு கூத்துக்களையும் இனம் பிரித்துக் காட்டுவதும் ஈண்டு சுட்டத்தக்கதாகும்.

                வயலில் விளைந்த நெல்லின் கதிரினைக் முறித்து கரிய நிறமுடைய உலக்கையால் பச்சை அவல் இடிப்பதனை,
                           `கூழைக் கூந்த`ற் குறுந்தொடி மகளிர்
            பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
            பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்’’
                                                                        -              அகநானூறு, 141 (11–18)
என்ற அகநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகின்றன. இஃதேபோல் குறுந்தொகையும் ``பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை’’ (குறுந், 238) என்று பச்சை அவலினை இடிப்பதனைச் சுட்டுகின்றது. மேலும்,
                      ``பாஅடி உரல பகுவாய் வள்ளை
          ஏதில மாக்கள் நுவறலும் நுவல்ப’’
                                                           -              குறுந்தொகை, 89 (1–2)
என்று தலைவி வள்ளைப்பாட்டு பாடியதை குறுந்தொகை உணர்த்துகின்றது.
                     ``தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்’’
                                                                         - மலைபடுகடாம், 342
என்று வயலில் திணை அறுக்கும் மகளிர் பாடும் வள்ளைப் பாட்டின் இனிமையினை மலைபடுகடாம் புகழ்கின்றது. கலித்தொகையில் தான் வள்ளைப்பாட்டு குறித்து அதிகப் பாடல்களும் செய்திகளும் காணப்பெறுகின்றன. முற்றிய திணைக் கதிர்களைச் சந்தன மரத்தால் ஆன உரலில் இட்டு முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் குற்றியதனை,
                         ``முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின்
           வகைசால் உலக்கை வடான்வயின் ஒச்சிப்’’
                                                           -              கலித்தொகை, 40 (4–5)
என்ற பாடலடியும், மூங்கில் நெல்லினை பாறை உறலில் இட்டு யானைத் தந்தத்தால் குற்றியதை,
                        ``பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
           கோடுலக்கை யாகநற் சேம்பின் இலைசுளகா
           ஆடுகழை நெல்லை அரையுரலும் பெய்திடுவாம்
           பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபாடுற்று’’
                                                              -              கலித்தொகை, 41 (1–4)
என்ற பாடலடிகளும் உணர்த்துகின்றன. கலித்தொகையின் 42 வது பாடல் தலைவன் செய்த கொடுமையினை வள்ளைப்பாட்டாக பாடத் தோழியினைத் தலைவி அழைப்பதாக அமைந்துள்ளது. 43 வது பாடல் முருகனைப் பாடுவது போல் தலைவனை வள்ளைப்பாட்டால் பாடுவோம் வாவென்று தோழி தலைவியை அழைப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு காலமாற்றத்தால் வள்ளைக் கூத்து வள்ளைப்பாட்டாக மாறியுள்ளதற்குச் சங்கச் செய்யுள்கள் சான்று பகர்கின்றன.

காப்பியத்தில் வள்ளைப்பாட்டு
                வள்ளைப்பாட்டின் தன்மையினை உணர்ந்த இளங்கோவடிகள் மூவேந்தர்களின் தலைநகர்களிலும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடுவதாகச் சுட்டுகின்றார்.
                             ``தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
              பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்’’
             ``பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
              மாடமதுரை மகளிர் குறவரே’’
             ``சாந்துரல் பெய்து தகைசால் அணிமுத்தம்
              வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டாங்’’
என்று வாழ்த்துக் காதையில் (26, 27, 28) புகார் நகரத்து பெண்கள் கரும்பு உலக்கை கொண்டும், மதுரை நகரத்துப் பெண்கள் பவள உலக்கை கொண்டும், வஞ்சி நகரத்துப் பெண்கள் சந்தன உரலிலும் குற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.

                பெண்கள் பாறையின்மேல் பவழத்தாலாகிய உரலில் புதிய மணிகளைச் செந்நெல்லாகப் பெய்து யானைத் தந்தமாகிய உலக்கையால் குற்றிக் கொண்டே வள்ளைப்பாட்டினையும் அம்மானைப் பாட்டினையும் பாடி திவிட்டநம்பியைப் புகழ்ந்ததாகச் சூளாமணி செப்புகின்றது. இதனை,
                      ``பைம்பொன் னறைமேற் பவழ முரலாக
          வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
          அம்பொன் மலைசிலம்ப வம்மானை வள்ளையுடன்
          கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினர்’’
                                                               -              சூளாமணி, (சுயம்வரச், 106)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. ஆனால் பெருங்கதையோ,

                     ``அரையுர னிறைய வைனப் பாசவல்
         இசையொடு தன்னைய ரியல்பு புகழ்ந் திடிக்கும்
         அம்மை வள்ளை…….’’
                                                              -              பெருங்கதை, 2.14(50–52)
என்று குறவரின மகளிர் வில்லால் வீழ்த்தப்பெற்ற யானைத் தந்தத்தினை உலக்கையாகக் கொண்டு மலைநெல்லினைப் பாறையில் இட்டுக் குத்தித் தனது தமையன்மார்களைப் போற்றிப் பாடியதாகக் கூறுகின்றது. சங்க காலத்திலிருந்து தலைவனையும், இறைவனையும் வாழ்த்திப் பாடிய வள்ளைப்பாட்டு பிற்காலத்தில் தமையன்மார்களுக்கும் உரித்தானதாக வளர்ச்சியடைந்துள்ளதனை பெருங்கதை உணர்த்தி நிற்கின்றது.

சிற்றிலக்கிங்களில் வள்ளைப்பாட்டு
                பாண்டிய மன்னன் மேல் காதல் கொண்ட ஒரு பெண், பக்கத்து வீட்டில் மணமான பெண்கள் எல்லாம் வள்ளைப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கின்றனர்; அதைப்போல  யானும் பாண்டியனின் கொடி, தேர், அவனது மணிமுடி போன்றவற்றைப் புகழ்ந்து வள்ளைப்பாட்டு பாடுவதோ என்று ஏங்குகின்றாள். இதனை,
                          ``கொடி பாடித் தேர்பாடித்
            கொய் தண்தார் மாறன்
            முடிபாடி முத்தாரம்
            பாடித் - தொடியுலக்கை
            கைம்மனையில் ஒச்சப்
            பெறுவனோ? யானும் ஓர்
            அம்மனைக் காவல்
            உளேன்!
                                                               -              முத்தொள்ளாயிரம், 69
என்ற பாடலடி சுட்டிநிற்கின்றது. இவ்வாறு வளர்ச்சியடைந்த வள்ளைப்பாட்டு பரணி இலக்கியத்தில் தனக்கெனத் தனியிடத்தினைப் பிடித்துக்கொண்டது. அனைத்துப் பரணி இலக்கியங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக,

                        ``இந்த உரற்கண் இவ்வரிசி
            எல்லாம் பெய்து கொல்யானைத்
            தந்த உலக்கை தனை ஒச்சிச்
            சலுக்கு! மொலுக்கு எனக் குற்றீரே’’
                                                           -              கலிங்கத்துப்பரணி, 527
என்று முரசங்களாகிய உரலில் பற்களாக அரிசியினைக் கொட்டி, கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்களை உலக்கையாக்கி ~சலுக்கு மொலுக்கு| என்னும் ஒலி உண்டாகும்படி குற்றுங்கள் என்று பேய்கள் கூறுவதாக அமைந்துள்ளது. இதில் முதலில் காளியைப் பாடி பின் குலோத்துங்கனையும், அவனது சிறப்புக்களையும், அவனது படைத்தலைவன் கருனாகரனையும் இறுதியில் திருமாலையும் பாடுவதாக இடம்பெற்றுள்ளது. இரணியவதைப் பரணியில் இதைப்போல பதினைந்து பாடல்கள் இருக்கின்றன. ஒரு இலக்கியத்திற்குள் இருந்த வள்ளைப்பாட்டு மாணிக்கவாசகரின் கைபட்டுப் ~~திருப்பொற்சுண்ணம்|| எனும் பெயரில் தனி இலக்கியமாக வடிவெடுத்தது. இது இருபது பாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. நிலவுலகம் முழுவதும் உரலாகக் கொண்டு மேருமலையை உலக்கையாக்கிக் கொண்டு உண்மையென்னும் மஞ்சள் இட்டுத் தில்லை நாதனுக்குப் பொற்சுண்ணம் இடிப்போம் (திருப்பொற்சுண்ணம், 9) வாருங்கள் என்று மாணிக்கவாசகர் அழைக்கின்றார்.

நாட்டுப்புற இலக்கியங்களில் வள்ளைப்பாட்டு
                பாட்டிலக்கியமாக இருந்த வள்ளைப்பாட்டு ஏட்டிலக்கியமாக மாறியது. இருப்பினும் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறுகின்றது. தலாட்டு முதல் ஒப்பாரி வரை பல்வேறு பாடல்களில் இடம் பெறுகின்றது.
                               ``பள்ளிதனைக் கூட்டி
              புதமாக அவல் இடித்து
              இடைச்சிதனைக் கூட்டி
              இலைபோல அவல் இடித்து’’
என்ற தலாட்டுப் பாட்டினை இதற்குச் சான்று பகரலாம். மேலும்,

              ``கங்காணி ஐயாவே வாருமையா
               ஒரு காரியம் செல்லுறேன் கேளுமையா
               சில்லறை கங்காணி சேவுகமே நீங்க
               சீமைக்குப் போய்வாங்க அக்கரையா
               கங்காணி ஐயாவே பயப்படாத
               கப்பல் கடல்கர வந்து சேரும்
               ஆளுங்க அன்புக இல்லாட்டி தொரை
               வட்டிகள் வாசிகள் போட்டெடுப்பார்’’
என்று மலையகப் பெண்களின் உலக்கைப் பாடலினை சாரல்நாடன் சான்றாகக் காட்டுகின்றார். வள்ளைப்பாட்டில் மனதைப் பறிகொடுத்த பாட்டுக்கொருபுலவன் புலவன் பாரதி கூட தன் குயிற்பாட்டில் (37–38),
                        ``சுண்ண மிடிப்பார்த்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
            பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்’’
என்று வள்ளைப்பாட்டினைக் குறித்துச்சென்றான்.

வள்ளைப்பாட்டின் இலக்கணம்

Ø  உலக்கை ஒச்சி இடிப்பவரின் அன்பிற்குரியவர் இப்பாட்டின் தலைவராக அமைவர்
Ø  முதலில் தலைவனையும், மன்னனையும் பாடிய வள்ளைப் பாட்டு பின்னாளில் தெய்வத்திற்கும் (பொற்சுண்ணம்), தமையன்மார்களுக்கும் (பெருங்கதை) உரியதாக வளர்ச்சியடைந்துள்ளது.
Ø  போர்க்களத்தில் பேய்கள் கூழ் சமைப்பதற்கு முன் தலைவனை வாழ்த்தி வள்ளைப்பாட்டு பாடும் மரபு பரணி இலக்கியங்களில் முகிழ்த்தது.
Ø  ``சும்மேலோ சும்மலக்காய்’’ என்ற ஈற்றடியுடன் முடியுமாறு அமைந்து வரும்.
இவ்வாறு வள்ளைப்பாட்டு நாட்டுப்புற வடிவமாக இருந்து கூத்தாக மலர்ந்து பின்னர் தனி இலக்கியவகையாக வடிவெடுத்துள்ளது.

.கந்தசாமிபாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜூக்கள் கல்லூரி,

இராசபாளையம்.