புகையிலை விடு தூது
தமிழ்ப் பிரபந்தங்களில் தனிச்சிறப்பு
மிக்கது தூதுப் பிரபந்தம். ஒருவன்
மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ
தூது அனுப்புவதாக அமைந்தது தூது இலக்கியம். இத்தூது
இலக்கியத்தினைச் சிலர் வடமொழியிலிருந்து தருவித்துக்
கொண்டது என்பர். அதற்கு சந்தேச
காவியம் நூலைச் சான்று காட்டுவர்.
ஆனால் இதற்கெல்லாம் காலத்தால் முந்தைய தொல்காப்பியத்திலும், சங்கப்பனுவல்களிலும் இத்தூதுப்
பொருண்மை காணக்கிடைக்கின்றது. இத்தூதினைத் தொல்காப்பியர் ``வாயில்கள்`` என்பார். அதனால் தான் தூது
என்ற பெயரில் இலக்கியங்கள் முகில்த்த
போல்து சோமசுந்தர பாரதியார் மட்டும் தனது நூலுக்கு
``மாரி வாயில்`` எனப் பெயர் ஈந்தார்
(மாரி – மேகம்). மேலும் ``காளிதாசனுக்குப்
பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த சங்கப்
பாக்களில் இதற்கு மூலம் காணப்படுவதால்
தமிழிலிருந்து வடமொழிக்கு இவ்விலக்கிய வகை எடுத்தாளப் பெற்றிருத்தல்
வேண்டும்`` என்ற அமெரிக்க அறிஞர்
ஜியார்ஜ் ஹார்ட் கருத்தும் ஈண்டு
நோக்கத்தக்கது ஆகும்.
பின்னர்
எழுந்த பாட்டியல் நூல்கள் இதற்கு இலக்கணம்
பகர்கின்றன. இவ்வாறு தூது செல்லத்
தகுந்த தூதுப் பொருள்கள் பத்து
என்பதனை,
``இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி
– நயந்தகுயில்
பேதைநெஞ்சந்
தென்றல் பிரமாமீ ரைந்துமே
தூதுரைத்து வாங்குந் தொடை``
என்ற இரத்தினச் சுருக்கச்
செய்யுள் குறிப்பிடுகின்றது. ஆனால் தூதுப் பிரபந்தங்களை
ஆராயப்புகின் இப்பட்டியல் நீளும். 20 ஆம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்
என்னும் நூலில் 26 தூதுப் பொருள்கள் இருப்பதனைச்
சிலம்பு ந.செல்வராசு (பக்கம்
- 128) செப்புகின்றார். தூது நூல்கள் பாட்டுடைத்
தலைவனின் பெருமையினையும், சிறப்பினையும் கூறும் நோக்கில் அமையும்.
ஆனால் மிதிலைப்பட்டிக் கவிராயர் ஒருவர் தமக்கு இடையூறு
செய்த ஒருவர் மீது ``கழுதை
விடு தூது`` எனும் வசைப்பிரபந்தம்
இயற்றியுள்ளார் என்பார் உ.வே.சா. மேலும் இந்தி
எதிர்ப்புப் போரின் போது வெள்ளைவாரணர்
இராஜாஜிக்குக் ``காக்கை விடு தூது``
இயற்றியுள்ளார். சிலேடை விடு தூது
(புலவர் பா.முனியமுத்து) முழுக்க
சிலேடைகளால் ஆனது ஆகும். இவ்வாறு
இருக்க சீனிச்சர்க்கரை புலவரும் புதுமையான நோக்குடன் ``புகையிலை விடு தூது`` என்னும்
இலக்கியத்தினைப் படைத்துள்ளார்.
புகையிலை விடு தூது
இப்புகையிலை
விடு தூதினை உ.வே.சாமிநாதையர் முதன்முதலில் கலைமகள் இதழில் 1939 இல்
வெளியிட்டுக் குறிப்புரையும் வரைந்துள்ளார். இதன் பாட்டுடைத்தலைவன் பழனி
முருகன் ஆவார். காதல் கொண்ட
தலைவி ஒருத்தி பழனி முருகனிடத்தில்
புகையிலையினைத் தூது விடுத்து மாலை
வாங்கி வரும்படி அமைத்துப் பாடியுள்ளார். 59 கண்ணிகளைக் கொண்ட இச்சிறுநூலில் 53 கண்ணிகள்
புகையிலையின் சிறப்பு குறித்தும் 3 கண்ணிகள்
பழனி முருகன் குறித்தும் 3 கண்ணிகள்
தூதுப் பொருண்மையிலும் அமைந்துள்ளன. இதிலிருந்து புகையிலையினைச் சிறப்பித்துப் பாட வேண்டும் என்ற
நோக்குடன் இந்நூல் எழுந்துள்ளது தெற்றன
விளங்கும். பழனி மலை முருகனுக்குப்
புகையிலைச் சுருட்டு நிவேதனம் உண்டு என்பர் சிலர்.
மேலும் விராலிமலை முருகனுக்கும் இந்நிவேதனம் உண்டு.
சீனிச்சர்க்கரைப் புலவர்
இவர்
இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் இரண்டாவது
சர்க்கரைப் புலவரின் குமாரர் ஆவார். இவர்
காலம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும்
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். இராமநாதபுரம் அருகில்
உள்ள சிறுகம்பையூர் என்பது இவரது ஊராகும்.
இவர் உடன்பிறந்தவர் இருவர் ஆவர். மருது
சகோதரர்களால் வளர்க்கப்பட்டு மயூரகிரிக் கோவை பாடிய (536 பாடல்கள்
ஒரே நாளில் பாடப்பட்டது) சாந்துப்
புலவர் ஒருவர். மேலும் மிழலைச்
சதகம், உலாமாலை, வயிரவக் கடவுள் பஞ்சரத்தின
மாலை ஆகிய இலக்கியங்கள் படைத்த
முத்து முருகப் புலவர் மற்றொருவர்
ஆவார். இவர் புகையிலை விடு
தூது தவிர துறைசைக் கலம்பகம்,
திருந்செந்தூர்ப் பரணி போன்ற இலக்கியங்களைப்
படைத்துள்ளார். சர்க்கரைப் புலவர் என்ற ஒரு
இசுலாமியப் புலவரும் உள்ளார். இவர் மெதினாந்தாதி என்ற
இலக்கியம் படைத்தவர் ஆவார். இவர் சவ்வாதுப்புலவரின்
காலத்தினைச் சேர்ந்தர் ஆவார்.
புகையிலையின் பெயர்க்காரணமும் புராணச் செய்தியும்
புகையிலைக்கான
பெயர்க்காரணத்தையும் அது கூறும் புராணச்
செய்தியினையும் இந்நூல் குறிப்பிடுகின்றது. மும்மூர்த்திகளுக்கும்
இடையே யார் பெரியவர் என்ற
போட்டி வருகின்றது. அதைத் தீர்ப்பதற்காக தேவ
சபையினை நாடுகின்றனர். ஆனால் சபையில் உள்ளோர்
மும்மூர்த்திகளிடமும் மூன்று பத்திரப் (பத்திரம்
- இலை) பொருட்களைக் கொடுத்து அதை மறுநாள் கொண்டுவரச்
சொல்கின்றனர். சிவனிடம் வில்வமும், திருமாலிடம் துழவமும் பிரம்மாவிடம் புகையிலையினையும் கொடுக்கின்றனர். மருநாள் வரும்பொழுது சிவனிடம்
கொடுத்தது கங்கையின் அலை கொண்டுபோய்விட்டது. திருமாலிடம்
கொடுத்தது பாற்கடலின் அலை கொண்டுபோய்விட்டது. ஆனால்
பிரம்ம தேவரிடம் கொடுத்தது தன் நாவிலுள்ள கலைமகளிடத்தில்
கொடுத்து வைத்திருந்தார். சபையினர் கேட்ட போது சிவனும்
திருமாலும் ``எங்கள் பத்திரங்கள் போயின``
என்றனர். ஆனால் பிரம்ம தேவனோ
``என்னுடையது போகையிலை`` என்றார். அதனால் போகையிலை என்பது
புகையிலை என்றானது. பிரம்மாவின் பத்திரமனாதாக இருந்ததனால் ``பிரம்ம பத்திரம்`` என்றும்
அழைக்கப்பெறுகின்றது. இதனை,
``ப்ரம்மபத்ர
மென்றெவரும் பேசவே வந்துதித்த
தன்மப்
புகையிலையே சாற்றக்கேள்`` (26)
என்று புலவர் குறிப்பிடுகின்றார்.
புகைக்கப் பயன்படுவதால் புகையிலை என்றும், சுருட்டிப் புகைக்கப்படுவதால் சுருட்டு என்றும் காயவைத்து இடிக்கப்பட்டு
பொடியாக்கிப் பயன்படுத்துவதால் மூக்குப்பொடி என்றும் பலவாறு வழங்கப்பெறுகின்றது.
மேலும், இது இந்தியாவிற்கு போர்த்துகீசியரால்
17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்பர் ஆட்சிக் காலத்தில்
மேலைநாட்டிலிருந்து வந்தது ஆகும். எனவே
தான் புலவர் ``வந்த புகையிலை`` (கண்ணி
16) என்று சுடுட்டுகின்றார்.
``நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
காலுந் தலையுங் கடைச்சாதி
– மேலாக
ஒட்டு முதலெழுத்து மோதுமூன்
றாமெழுத்தும்
விட்டாற் பரமனுக்கு வீடு``
என்ற தனிப்பாடலில் புகையிலையின்
பெயரினை ஒரு புலவர் இலக்கிய
நயத்துடன் நவில்வதும் ஈண்டு சுட்டத்தக்கது ஆகும்.
மேலும், பூமி வறண்டு, மனிதர்கள்
பசியால் துடித்த போது கடவுள்
ஒரு தேவதையை பூமிக்கு அனுப்பினார்.
அந்த தேவதையின் வலது கரங்கள் பட்ட
இடங்களில் எல்லாம் உருளைக் கிழங்கு
விளைந்தது. இடது கரங்கள் பட்ட
இடங்களில் எல்லாம் சோளம் விளைந்தது.
எங்கெல்லாம் தேவதை உட்கார்ந்து எழுந்தளோ
அங்கெல்லாம் புகையிலை விளைந்தது என்பது தென் அமெரிக்க
பழங்கதையும் ஈண்டு சுட்டத்தக்கது ஆகும்.
சிலேடை
இவ்விலக்கியத்தில்
புகையிலைக்குத் திருமால், சிவன், பிரம்மன், முருகன்,
தமிழ் ஆகியவற்றினைச் சிலேடையாகக் காட்டுகின்றார். ஏடு (இலை), பதிகம்
(நடுவதற்குரிய செடி), மூலப்பாடம் (பக்குவம்
செய்தல்), கோவை, வளமடல் (வளமான
இலை), பாவும் சந்தமும் (அழகு,
பக்குவம்), யாப்பு (கட்டுதல்), பரணி
(சாடி), வித்தை (விதை) என்று
தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடை சிறப்பாக அமைந்துள்ளது.
இதனை,
``தாவில் வித்தையுடைத் தாகித்
தமிழ்போல்
எந்த விதமென் றியம்புவேன்``
(கண்ணி, 15)
என்ற கண்ணி பறைசாற்றுகின்றது.
புகையிலையின் பெருமைகள்
எந்த
வாசனைப் பொடியும் புகையிலையின் மூக்குப்பொடிக்கு ஒப்பாகாது என்பதனை,
``வாடைப் பொடிகதம்ப மானவெல்லா
முன்னுடைய
சாடிப் பொடிக்குச் சரியுண்டோ
`` (கண்ணி, 30)
என்ற கண்ணி சுட்டுகின்றது.
ஆகாயம் புகைபோல உள்ளதால் தான்
இறைவன் ஆகாயத்தைத் திருமேனியாகக் கொண்டார் என்கிறார் ஆசிரியர். மேலும்,
``பூராய மான பொருளை
வெளிப்படுத்தும்
சாராயந் தானுனக்குத் தம்பியோ``
(கண்ணி, 34)
என்று ஆசிரியர் புகழ்கின்றார்.
பச்சை வெங்காயத்தை உண்ணப் பிறர் பயந்தவர்
புகையிலை போடுவோர் அதனை அஞ்சாது உண்பர்
(38), புகையிலையின் அருமையினைத் தகுதியுடைய வெற்றிலைதான் அறியும் (39) என்று புகையிலையினைப் பலவாறு
பாராட்டுகின்றார். மேலும் இதனை வர்த்தகம்
செய்தவர்க்கு இலாபம் அதிகம் கிடைக்கும்
என்றும் இயம்புகின்றார். புகையிலை வெட்டிக் கிடந்தாலும், கட்டுண்டு வந்தாலும் தும்மும் குணத்துடன் கிறுகிறுப்பை ஏற்படுத்தும் என்றும், தாகம் தீர்க்கும் சஞ்சீவி
என்றும் மோகப்பயிர் என்றும் புகழ்கின்றார்.
புகையிலை
விளையும் இடங்களாகக் காங்கேயம், யாழ்ப்பாணம், அழகன்குளம், பரத்தைவயல் போன்றவற்றையும் சுட்டுகிறார். இதில் பரத்தைவயலில் விளையும்
புகையிலையே சிறந்ததென்றும் பகர்கின்றார். இதனை,
``பார்த்திப ரான பரத்தை வயற்குடியார்
போற்றி வளர்க்கும் புகையிலையே``
(கண்ணி, 50)
என்ற அடிகளில் சுட்டுகின்றார். இவ்வாறு
பலவாறுப் புகழ்ந்து பழனி முருகனிடம் தூது
செல்ல விடுக்கிறார். அவ்வாறு சென்று முருகனிடம்
மாலையும் வாங்கி வரச் சொல்கின்றார்.
இதனை
``சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலங்கு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா`` (கண்ணி,
59)
என்ற கண்ணி சுட்டி
நிற்கின்றது.
நிறைவாக
சீனிச்சர்க்கரைப்
புலவர் இயற்றிய புகையிலை விடு
தூது தவிர்த்து அவருக்குப் பின் சுப்பிரமணிய வேலச்
சின்னோவையன் என்பவரும் ஒரு புகையிலை விடு
தூது இயற்றியுள்ளதாக ந.வீ.செயராமன்
(சிற்றிலக்கிய வகை அகராதி) குறிப்பிடுகின்றார்.
ஆனால் அதைப் பற்றிய குறிப்புகள்
சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் விசையகிரி வேலச்சின்னோவையன்
என்னும் பெயர் தாங்கிய (பழனியின்
ஜமீன்) ஒரு புலவர் இருக்கிறார்.
இவர் வையாபுரிப் பள்ளு, சமய மாலை
என்னும் இலக்கியம் செய்துள்ளார். வையாபுரி என்பது பழனியின் வேறுபெயர்
ஆகும். சீனிச்சர்க்கரைப் புலவரும் பழனி முருகனைப் பாட்டுடைத்
தலைவனாகப் பாடியுள்ளார். கிபி 1729 ஆண்டுக்குரிய இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடிக்கு அருகிலுள்ள
சுப்பிரமணியக் கோவிலைச் சேர்ந்த செப்பேடு முக்குந்தர்
புகையிலைத் தோட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றது
(நாட்டார் பட்டயம், பா.சுப்பிரமணியன், சீ.
இலட்சுமணன், ஆவணம் - இதழ் 2, ஏப்ரல்
1992, தமிழகத் தொல்லியல் கழகம் வெளியீடு) இது
பொன்னெட்டி மாலைச் சர்க்கரைப் புலவர்
பட்டயத்தொடு தொடர்புடையது ஆகும். பொன்னெட்டி மாலைச்
சர்க்கரைப் புலவர் என்பவர் முதலாவது
சர்க்கரைப் புலவர் ஆவார். எனவே
சர்க்கரைப் புலவருக்கும் புகையிலைக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கின்றது.
அதனாலேயே தான் இவ்விலக்கியத்தினைப் பாடியுள்ளார்
என்பதை அறியமுடிகின்றது. ``புகையிலை மிகுதியாகப் பயிரிடப்படுகின்ற இடங்கள் சூழ்ந்த பழனிக்கு
அருகில் வசித்த உபகாரி உருவர்
கேட்டுக்கொள்ள இயற்றியதாகக் கூறுவதும் உண்டு`` என்ற உ.வே.சாவின் கருத்தும்
இதற்குத் துணைநிற்கின்றது.
க.கந்தசாமிபாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி,
இராசபாளையம்.
No comments:
Post a Comment