உதிரும் வரையிலும் உழல்வதுவோ வாழ்க்கை?
-
இரா.நரேந்திரகுமார்
எழுத்தாளர்
இமையம் எழுதியுள்ள குறுநாவல் ‘‘வாழ்க வாழ்க’’ சுகமான வாசிப்புக்குரிய அழைப்பல்ல. எளிய
மக்கள் மீதான கரிசனமும், விம்மலும், புலம்பலும், நெகிழ்தலும், உருகுதலும் கூடி நொதித்த
ஓர் அவலப் படைப்பாக உருவாகியுள்ளது. விளிம்புநிலை மனிதத் தொகுதியை அரசியல் சுவீகரித்து,
அவர்களின் அடையாளத்தை, இருப்பை அழித்தொழிப்பது பற்றிய எழுத்து. நூலிழை பிசகினாலும்
செய்தித்தாள் வாசிப்பாகிவிடும் களம்.
ஒட்டுமொத்தக்
குறுநாவலும், ‘அழைத்துவரப்பட்டவர்கள்’ சங்கமிக்கும் அரசியல் கட்சியின் பொதுக்கூட்ட
மைதானத்திடலிலேயே நிகழ்ந்துமுடிகிறது. ‘கொலைச்சேவல்’ தொகுப்புக்கு அரவிந்தன் அளித்த
மதிப்புரையில் – ‘‘இமையத்தின் கதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு
ஆளாக இயலாது’’ என்பது கலப்படமற்ற உண்மை. வளர்மதியின் மகளும், தன் பேத்தியுமான குழந்தையின்
குளிர்சுரத்துக்கான மருத்துவச் செலவுக்காக அரசியல் கட்சிக் கூட்டத்துக்கு ஆள் பிடிப்பவனிடம்
சிக்குகிறாள் ஆண்டாள். ஆள்பிடிக்கும் வெங்கடேசப்பெருமாள் அத்தனை மாயாஜாலம் காட்டியும்
அவன் மீது நமக்கு எந்தவித வெறுப்பும் உண்டாவதில்லை. பாவப்பட்டவர்கள், பணத்துக்கு ஆசைப்படுகிறவர்கள்
பட்டியலை வைத்திருக்கும் அவனும் அந்தப் பட்டியலில் இருப்பவன் தானே. பதினைந்து பேர்
மட்டுமே ஏறக்கூடிய வேனில் ஆண்டாள், சொர்ணம், காயத்ரி, கண்ணகி உட்பட முப்பதிநான்கு பேர்
ஏற்றப்படுகின்றனா். கண்டியாங்குப்பங்களின் பெண்கள் மிரளும் அளவுக்கு விருத்தாசலம் தேர்தல்
பிரசாரக் கூட்டம். ஏழாம் அத்தியாத்திலிருந்து குறுநாவல் நிறைவாகும் இருபத்தைந்தாம்
அத்தியாயம் வரை கூட்ட மைதானமே குறுநாவலின் களம்.
ஏமாற்றுக்கார
அரசியல் என்கிற பொதுவான மனமொழி அவர்களிடம் உண்டு என்பதை பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்தவாறு
அவர்கள் பேசும் உரையாடல்களிலிருந்து அறியமுடிகிறது. அரசியல் புரிதல் அவர்களிடம் இல்லாமல்
இல்லை. மனிதர்களை மனிதர்களாக வாழவிடாத அரசியல் என்பதை அவர்களின் அனுபவவெளி உணர்த்தவே
செய்கிறது. தங்களுக்கு இழைக்கப்படும் குரூரத்தை அவர்கள் நையாண்டியும் செய்கிறார்கள்.
சனநாயக அரசியல் என்பது சனநாயகமற்ற சந்தையாகிப்போனது, சந்தை என்றிருந்தால் போட்டியும்
இருக்கத்தானே செய்யும்? சர்வ கட்சியினரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் இமையம்.
காசு வாங்கி வந்த கூட்டத்துக்குள்ளே சாதித் தகராறு. ‘நீ என்ன சாதி’, நாங்க என்னா சாதி?
எங்க கூட நீ வந்து உட்காரலாமா?’’, ‘‘இது கட்சிக் கூட்டம். யாரு வேணுமின்னாலும் எங்க
வேணுமின்னாலும் உட்காரலாம்’’ ‘‘நீ ஊரு இல்ல. பறத்தெரு’’ தீவுகளாக இருக்கம் மனிதத் தொகுதியையே
‘‘பறத்தெரு’’ என்கிற சொல்கொண்டு இமையம் சுட்டுகிறார்.
சினிமாப்
பாடல்களுக்கேற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்த இருபது வயதைத் தாண்டாத இளம்பெண்களின் ஆட்டத்தை
எல்.ஈ.டி. திரையில் காட்ட, ஒட்டுமொத்தக் கூட்டமே வம்பளக்கிறது. ‘ஆட்டம் இல்லாம கூட்டம்
போட்டா என்ன’ என ஆண்டாள் கேட்க, ‘கூட்டம் சேர்க்கத்தான். சேந்த கூட்டம் கலையாம இருக்கத்தான்’
என்கிறாள் கண்ணகி. ‘‘எல்லா ஊர்லயும் தான் இந்த ஆட்டம் நடக்கும். வயசுப் புள்ளைங்க ஆடறதப்
பாக்கத்தான் கூட்டம் சேருது. இல்லனா கூட்டம் எப்படிச் சேரும்’’. உணவுப் பொட்டலத்தில்,
தண்ணீர்ப் பாக்கெட்டில் திருட்டுத்தனம் – பிரியாணிக்கும் கணக்கெழுதி குஸ்காவா என்றெல்லாம்
பலதரப்பட்ட வாக்குவாதங்கள்.
இமையம்
ஒரு மனிதாபிமானி என்பதை வெளிப்படுத்தும் இடம் ‘‘இங்க எங்கியாச்சும் பாத்ரூம் இருக்குமா?
எனப் பெண்கள் அலையுமிடம். ஐந்துமணி நேரத்துக்கும் மேலாக சுடுவெளியில் காக்கவைக்கப்பட்ட
பெண்களின் நிலை பரிதாபம் நிரம்பியது. ‘வெளியே போனா சனங்க நெரிச்சே கொன்னுடுவாங்க. பேசாம
இங்கேயே தரயில் உட்கார்ந்து இருந்துவிடு’ என ஒருத்தி சொல்ல இன்னொருத்தி பொருமுகிறாள்.
‘காலத்தூக்கி நடுத்தெருவுல நாய் மூத்தரம் வுடுற மாதிரி கண்ட எடத்துல வேட்டியத் தூக்கி
உட்டுட்டுப் போற பயலுவதான? அவனுவளுக்கு எப்படித் தெரியும் பொட்டச்சியோட கஷ்டம்?’’.
சில மாதங்களுக்கு முன்பு, ‘எதற்காக இப்படி ஓடுகிறோம்?’ என்னும் தலைப்பில் இமையம் எழுதியிருந்த
கட்டுரையில் கூறியிருந்தார் – ‘‘சிறுசநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை
நோயாளிகளாக்குகின்றன பள்ளிகள். ரத்தச் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்து
கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்’’. தன் மனதிலிருக்கும் சமூகநலனைக் குறுநாவலிலும்
தவறாது காட்சிப்படுத்துகிறார் இமையம். அரசியல் கட்சி தரும் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்து,
குறைந்த மதிப்பில் காலணிளையும், அதிக மதிப்பில் தங்கச் சங்கிலி, மணிப்பர்ஸ் போன்றவற்றையும்
இழந்து அரற்றுவோர் நிலை பரிதாபமானது. ‘ஐந்நூறு ரூவாய்க்கி ஆசைப்பட்டு எத்தனை பவுன்
சங்கிலியத் தொலைச்சாளோ பாவி’ என்கிறாள் ஆண்டாள்.
வெயிலின்
புழுக்கத்தைத் தாங்க முடியாத நாவறட்சி. வழிந்த வியர்வையைத் துடைக்க முடியாத கட்சிக்காரன்
கொடுத்த இலவச பாலிஸ்டர் சேலை, உப்புப் பூத்த உடம்பு, புழுதி, வெளியே எழுந்து போக முடியாத
நிலை, தங்கத் தலைவியே தர்மத் தலைவியே என்று
ஓயாமல் பாடிக்கொண்டிருந்த ஒலிப்பெருக்கியின் சத்தம், மயங்கிவிழுந்த ஒன்பதாம் வகுப்புப்
பெண் எனக் காட்சிப்படுத்துகிறார் இமையம். ‘‘ஒரு ஆளு மயங்கி விழுந்திட்டானா, செத்திட்டானான்னு
தெரியலை. தூக்கிகிட்டு ஓடுறாங்க. பல பேரோட கொலய வாங்கிடுவாங்க போலிருக்கே’’ எனப் புலம்புகிறாள்
ஆண்டாள். இன்னொருத்தி நீர்ச்சுளுக்கால் துடிக்கிறாள்.
‘‘பத்துமணிக்கு
வரவேண்டிய ஹெலிகாப்டர் மூணே கால் மணிவாக்கில் வருகிறது. சரஞ்சரமாய் வெடி. சவுக்குக்
கழிகள் முறிந்து விழ, அத்தனை ஆண்கள் கூட்டமும் பெண்கள் பக்கம் சரிந்து விழ, ஐவர் நிகழ்விடத்திலேயே
மரணம். ஒரு பெண் குடல் சரிந்து உயிரிழப்பு.
‘போச்சே போச்சே’ என்று அலறியபடி வெளியே ஓட முயலும் பெண்கள். அவர்களை அடித்து
விரட்டித் திரும்பவும் உள்ளே அனுப்பும் காவல்துறையினர். பெண்கள் பகுதியில் ஏற்பட்ட
கூச்சல், குழப்பம், சாவு, கை கால் முறிவு ஏதுவும் தெரியாமல், கையில் வைத்திருந்த காகிதத்தைப்
பார்த்துப் பார்த்துச் சத்தமாகத் தன் போக்கில் படித்துக்கொண்டிருந்த தலைவி.’’ குறுநாவல்
முடிகிறது.
உச்ச
கட்டத்தை நோக்கி சம்பவங்களை வலிந்து புனையும் உத்தி குறுநாவலில் இல்லை. பொருந்தாச்
சொல் எதுவும் தழும்பிச் சிதறவில்லை. மேலதிகச் சொல்லும் பயன்படுத்தப்படவில்லை. இமையத்தின்
உள்மன உணர்வுகளாகக் கொதித்துக் கொண்டிருக்கும் அக்கினிக்குழம்பு குறுநாவலாக உருப்பெற்றிருந்தும்,
நிதானமான சொல்பிசகாத எழுத்து.
பிரபஞ்சன்
சொல்கிறார் –
‘‘எழுத்தாளர்
இமையம் மொழி குறித்த தீர்க்கமான கருத்துகள் உடையவர். மக்கள் பேசும் மொழியைத்தான் அவர்
தனதாக்கிக் கொண்டார். எனினும், சொற்கள் தங்கள் முழு அர்த்தத்தையும் பயன்பாட்டையும்
தந்துவிடுமாறு தன் உரையாடலை அமைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர். இமையம் போன்ற எழுத்தாளர்
மிக மிகச் சிலரே தமிழ்ச் சூழலில் மிகக்கடுமையான முயற்சி, உழைப்பை முன்வைத்து ஒரு புதிய
உலகுக்கு எழுதுகிறார்கள். இமையத்தின் முயற்சி தோற்பது இல்லை.’’
பஞ்சமும்
பட்டினியும் வறுமையும் நோய்களும் அரச வன்முறை. ஏழ்மையில் இருப்போரின் உடல், உள்ளம்,
ஆன்மாவைச் சிதைக்கும் வகையில் அரசியல்வாதி விட்டெறிவது பணமென்னும் ஆட்கொல்லி. மனிதர்களை
மனிதர்களாக வாழவிடாத இந்த ஒழுக்கக்கேடு மரபுரீதியான அரசியலாகப் பரிணாமம் அடையுமுன்
கிள்ளி எறியவேண்டும் என இமையத்தின் மனதில் விழுந்த விதையின் உறக்கம் குறுநாவலாக முளைவிட்டுள்ளது.
தான் வாழும் காலத்தை நெருக்கடியான ஒரு வரலாற்றுத் தருணமாக எதிர்கொள்ளும் எழுத்தாளன்
தன் சமூகத்துக்கு வேறென்ன செய்துவிட முடியும்?
இரா.நரேந்திரகுமார்
எழுத்தாளர்.
No comments:
Post a Comment