பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, May 24, 2012

ஐங்குறுநூற்று மருதத் திணையில் நீர்நிலைகள்

ஐங்குறுநூற்று மருதத் திணையில் நீர்நிலைகள்

முன்னுரை

          சங்க இலக்கியங்களின் வனப்பிற்கும் செல்வாக்கிற்கும் அடிப்படை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே ஆகும். இயற்கைச் சமூகத்தின் அங்கமாக வாழ்ந்த பண்டைய மனிதனின் ஒவ்வொரு செயலிலும் இயற்கை பரிணமித்தது. அவற்றுள் மருதத் திணை மனிதர்கள் இயற்கையோடு மிகவும் இணக்கமுற வாழ்ந்துள்ளனர். அவர்தம் வாழ்வியல் வளமும் காதலும் அழகுணர்வும் பொதிந்த தன்மையதாய் காணப்பெற்றது. அவ்வகையில் இயற்கை வளங்களுள் ஒன்றான நீர்நிலை ஐங்குறுநூற்று மருதத் திணை மாந்தரிடையே பெற்ற இடம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மருதத்திணைச் சமூகம்

          திணைச் சமூகம் என்பது இயற்கை வளங்களுடன் பின்னிப்பிணைந்து காதலையும் வீரத்தையும் பேணிய சமூகம். வாழும் பகுதியில் நிறைந்திருந்த இயற்கைக் கூறுகள் மனிதர்களின் வாழ்வியலை வெகுவாகப் பாதித்தன. ஏறக்குறைய இயற்கைக் கூறுகளின் கட்டளைப் படி மனிதன் வாழ்ந்தான் எனலாம். அவ்வடிப்படையில் மருதம் நீங்கலான நான்கு நிலத்தோர்கள் இயற்கையை அதன் நிலையிலேயே எதிர்கொண்டு வாழ்ந்தார்கள். மருத நிலத்தவர் மாத்திரம் இவர்களிலிருந்து விலகி நின்று காடு கொன்று கழனி சமைத்து பயிர் விளைவித்து நிலம் புதுக்கினர். இதிலிருந்தே மருத நிலமக்களின் தனித்துவத்தினை அறியலாம். மருதத்திணையின் நீர் வளமே அத்திணையில் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அவ்வகையில் நீர்நிலை குறித்த செய்திகள் மருதப் பாடல்களில் மிகுதியாக உள்ளன.

மருதத்திணையில் நீர்நிலைகள் பெறுமிடம்

          மருதத்திணையில் முப்பத்திரண்டு இடங்களில் நீர்நிலைகள் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. புனலாடல் குறித்ததாக பதினைந்து இடங்களிலும் (பாடல்: 15, 16, 32, 64, 69, 71, 72, ……. 80), தலைவனை அடையாளப்படுத்த பன்னிரண்டு இடங்களிலும் (பாடல்: 2, 6, 7, 9 – 13, 70, 83, 88, 97), ஊரிற்கு அணிகலனாகத் திகழ்ந்த மாற்றை மூன்று இடங்களிலும் (பாடல்: 14, 45, 81), நம்பிக்கை மரபினை உணர்த்தும் விதமாக ஓர் இடத்திலும் (பாடல்: 84),  குடிநீருக்காகப் பயன்படுத்தப் பட்ட மாற்றினை ஓர் இடத்திலும் (பாடல் எண்: 28) நீர்நிலைப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

புனலாடலில் நீர்நிலைகள் பெறுமிடம்

          மக்கள் களிப்புடன் வாழ்ந்த மருதத்திணையில் புனலாடல் நிகழ்வு காதல்களிடையே மிகுந்திருந்தது. களவுக்காலப் புணர்ச்சி வகைகளுள் புனல்தரு புணர்ச்சியும் ஒரு வகையாகும். மருதத் திணையில் எட்டாவது பத்தாகப் ‘புனலாட்டுப் பத்து’ என்ற ஒரு பத்தும் உள்ளது. அதனின்று மருத நில மக்கள் நீராடலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அறியலாம்.

          பெரும்பாலும் பரத்தையுடன் தலைவன் புனலாடுவதாகவே மருதத் திணைப் பாடல்கள் பதிவு செய்கின்றன. பாடல்கள் 72, 74 மட்டும் தலைவியோடு நீராடிய தலைவனைக் காட்டுகிறது. புனலாடல் மருத மருங்கள் நிறைந்த நீர்த்துறையில் நிகழ்ந்துள்ளது. புனலாடலின் போது தழையாடையும் அணிகலனும் அணிந்தவர்களாகப் பெண்டிர் இருந்துள்ளனர். அதனை,

          ‘‘மருது உயர்ந்து ஓங்கிய விரிபும் பெருந்துறைப்
                             பெண்டிரோடு ஆடும்……’’
                                                          - ஐங் 33 (2-3)
என்ற வரிகளாலும்

          ‘‘பசும்பொன் அவிர்இழை பைய நிழற்ற
          கரைசேர்மருதம் ஏறிப் பண்ண பாய்வோள்’’
                                                          - ஐங் 74 (2-4)
என்ற வரிகளாலும் அறியலாம். மேலும், வேழம் என்னும் தெப்பம் கொண்டு மனம் மகிழ்வுறும் படி காதலர் புனலாடியுள்ளனர்.

          பரத்தையோடு தலைவன் புனலாடுங்கால் தலைவியால் ஒறுக்கப்படுகிறான். புனலாடல் அனைவருக்கும் பொதுவான நீர்த்துறையில் நிகழ்ந்துள்ளது. தலைவனைப் பரத்தையோடு அவ்விடத்தே கண்டோர் தலைவியிடம் அவன் செய்த செயல் கூற ஊடலும் பிறக்கின்றது. புனலாடுதலுக்குப் பொதுலவான நீர்நிலை இருந்தமாற்றை,

          ‘‘பலர்ஆடு பொருந்துறைஇ மலரொடு வந்த
                             தண்புனல் வண்டல் உய்த்தென’’
                                                          - ஐங் 68 (2-3)

என்ற அடிகளால் அறியமுடிகின்றது. பரத்தையோடு புனலாடிய தலைவனைப் பற்றி

          ‘‘……….. மகிழ்நன்
          கடன்அன்று என்னும் கொல்லோ நம்ஊh;
          முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
          உடன்ஆடு ஆயமோடு உற்ற சூளே?’’
                                                          - ஐங் 31 (1-4)

என்று வெறுக்கும் தலைவி அவன் சூளிட்டதை நினைவுபடுத்துகிறாள்.

          தலைவன் பரத்தையோடு நீராடியதை ஊரார் கண்டு தலைவிக்குத் தரிவிக்க அலர் ஏற்படுகிறது. தலைவியும் அவனுக்கு வாயில் மறுக்கிறாள். இதனை,

          ‘‘பலர் இவண் ஒவ்வாய்இ மகிழ்ந! அதனால்
          அலர் தொடங் கின்றால் ஊரே மலர
          தொல்நிலை மருதத்துப் பெருந்துறை
          நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே’’
                                                          - ஐங் 75 (1-4)

என்னும் வரிகளாலும் அறியலாம். இது போன்ற தன்மையிலேயே பல இடங்களில் புனலாடல் நிகழ்வில் நீர்நிலைகள் சுட்டப் பெறுகின்றன. தலைவன் தலைவியோடு நீராடிய செய்தியும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. தலைவனுடன் தலைவி ஊடிய பொழுது அவர்களது ஊடல் தீர்க்கும் முகமாகத் தலைவனால் அவர்கள் நீராடிய நிகழ்வு நினைவுறுத்தப் பெறுகின்றது. பின்னர் ஊடலும் தணிகின்றது. மருதத்திணையில் 72, 73, 74 மூன்று பாடல்களும் இப்போக்கில் அமைந்துள்ளன.

          ‘‘ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
          வாடினும் பாடு பெறும்’’
                                                          - திருக்குறள் 1322

என்பார் வள்ளுவர். அக்கருத்தியலே,

          ‘‘வண்ண ஒண்தழை நுடங்க வால்இழை
          ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்தெனக்
          தண்ணென்று இசினே பெருந்துறைப்புனலே’’
                                                          - ஐங் 73 (41-4)

என்ற பாடலிலும் இடம்பெறுகின்றது. தலைவியானவள் அரிவைப் பருவத்தில் தலைவயொடு புனலாடியுள்ளாள். இப்போது அவள் ஒளிபொருந்திய தழையாடையும் அணிகலன்களும் அணிந்திருந்தாள். நீராடிய துறையில் குவளை மலர்ந்து மணம் வீசியது என்றும் தலைவன் நினைவு கூர ஒருவகையில் தலைவியை அது ஆற்றியது. நீரிற்குக் குளிர்விக்கும் தன்மை அடிப்படையாகும். இவ்விடத்தே நீராடுதல் குறித்த நிகழ்விற்குக் கூட உள்ளத்தைக் குளிர்விக்கும் ஆற்றல் இருந்ததனை அறியமுடிகின்றது.

அடையாளம் உணர்த்துதல்

          மருதத்திணையில் தலைவனை அடையாளப்படுத்த நீர்நிலை பயன்படுகின்றது. நீரின் தன்மையான குளிர்ச்சி என்ற பண்போடு நிலத்தின் பொதுவான ஆடவரின் பெயரையும் தாங்கித் ‘தண்துறை ஊரன்’ என்ற பெயரின் மருத நிலத்தலைவன் எட்டு இடங்களில் குறிப்பிடப்படுகிறான். மேலும், துறைகேழ் ஊரன், மாநீர்ப் பொய்கை ஊர என்றெல்லாம் நீர்நிலை மனிதனை அடையாளப்படுத்த உதவியது. அகத்திணையில்,

          ‘‘மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
          சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’’
                                                          - தொல்காப்பியம் 994

என்பது விதியாகும். அம்மரபுப் படியே மருத நிலத்தலைவன் மேற்கண்டவாரெல்லாம் குறிப்பிடப் பெறுகிறான். தலைவன் கருப்பொருள் வழியே அடையாளப்படுத்தப்படும் போதும் நீர்நிலையே அதில் முதலிடம் பெறுகின்றது. மேலும், தலைவியையும் அடையாளப்படுத்த ஓரிடத்தில் நீர்நிலை சுட்டப்பெறுகின்றது.

          ‘‘கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
          தன்துறை ஊரன் கேண்மை
          அம்பல் அகற்க!......’’
                                                - ஐங் 9 (4-6)

என்ற வரிகளாலும்,

          ‘‘மனைநடு வயலை வேழம் சுற்றும்
          துறைகேழ் ஊரன் கொடுமைநாணி’’
                                                          - ஐங் 11 (1-2)

எனும் வரிகளாலும் நீர்நிலையை வைத்து தலைவன் அடையாளப்படுத்தப் பட்டமையை அறியலாம். நீர்நிலையை வைத்துத் தலைவியும் அடையாளப்படுத்தப்படுகிறாள். அதனை,

          ‘‘பகன்றை வால்மலர் மிடைந்த கோட்டைக்
          கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
          பொய்கைஇ ஊரன் மகள் இவள்’’
                                                          - ஐங் 97 (1-3)

என்ற வரிகளின் வழியும் அறியலாம்.

ஊரிற்கு அணிகலன்

          ‘‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’’ என்பது முதுமொழி. இவ்விடத்தே நீர்நிலைக்குச் சமுதாயம் கொடுத்த முக்கியத்துவம் விளங்கும். ஊரை ஒரு உடலாக எண்ணின் அதற்கு அணிகலன்களாக நீர்நிலைகள் கருதப்பெற்றன. இதனை,

          ‘‘வடிகொள் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
          அணித்துறை ஊரன் மார்பே’’
                                                          - ஐங் 14 (1-2)
மேலும்,

          ‘‘கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து
          வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
          யாறுஅணிந் தன்றுநின் ஊரே’’
                                                          - ஐங் 45 (1-3)

என்ற வரிகளால் அறியலாம்.

நம்பிக்கை, மரபு உணர்த்துமிடம்

          புதுப்புனலாடுதல் குறித்துப் பரிபாடல் விரிவாகப் பேசும். நீர்த்துறைகளில் சென்று நீராடின் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. மகளிர் பலர் கூடித் தைத் திங்களில் அவ்வாறு நீராடிய மரபு இருந்துள்ளது. அதனை,

          ‘‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
          தைஇத் தண்கயம் போல’’
                                                          - ஐங் 84 (2-3)

என்ற வரிகளால் அறியலாம்.

குடிநீர்ப்பயன்பாடு

          குளிப்பதற்கு, நீராடுவதற்கு என இரு நிலைகளில் நீர்நிலைகள் பகுக்கப்பட்டிருந்தன. குடிநீருக்காகப் பயன்படுத்தப்பெற்ற நீர்நிலைகள் ‘உண்துறை’ என்று அழைக்கப்பெற்றன. அதனை,

‘‘உண்துறை அணங்கு இவள் உறைநோய்ஆயின்’’
                                                - ஐங் 27 (1)

என்ற வரிகளால் அறியலாம்.

நிறைவுரை

          கருப்பொருள்களுள் ஒன்றான நீர்நிலைகள் மருதத்திணை மக்களோடு பிரிக்க இயலாத நிலையில் இருந்ததையும் நீர்நிலைகள்  அவர்களின் வாழ்வியலோடு ஒன்றியிருந்தமாற்றையும் இக்கட்டுரை வழியே தெள்ளிதின் அறியமுடிகின்றது.


நன்றி.
ம.பிரசன்னா,
ஆய்வாளர்.
         

No comments:

Post a Comment