பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, May 24, 2012

திருவாசகச் சிற்றிலக்கியங்கள்

திருவாசகச் சிற்றிலக்கியங்கள்

முன்னுரை

          சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியர் காலத்திலேயே தோன்றிவிட்டன. இருப்பினும்,  அவற்றின் அபரிமிதமான வளர்ச்சி பக்தி இயக்க காலத்தில் தான் நடைபெற்றது. பல்வேறு புதுவகையான இலக்கியங்களையும் புகுத்தியது. அதிலும் மாணிக்கவாசகரின் பணி அளப்பரியது. காரணம் பல்வேறு புது இலக்கிய வகைகளைத் தமிழுக்கு அளித்த பெருமை இவரையே சாரும். அவரது ஆக்கமான திருவாசகத்தில் அமைந்துள்ள சிற்றிலக்கியங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திருவாசகம்

          இறைவனைப் போற்றுவதும் அவனைத் வேண்டி இரங்குவதுமே பொருண்மையாக அமைந்துள்ளது. திருவாசகம் ஐம்பத்தொரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 658 பாடல்கள் உள்ளன. மொத்தம் 3382 அடிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த 51 பகுதிகளில் ஏறத்தாழ இருபத்தொரு சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன. இதில் தமிழ் இலக்கியம் கண்டிராத பல புதுமையான வகைகளும் அமைந்துள்ளன.

பழைய இலக்கிய வகைகள்

          புராணம், பதிகம் (பத்து), அகவல், சதகம், தசாங்கம், பள்ளியெழுச்சி, ஊசல், அம்மானை, பாவை, மாலை, வெண்பா போன்ற பதினோரு வகையான இலக்கியங்கள் பழைய மரபுகளைக் கொண்டு அமைந்துள்ளது.
        புராணம் என்பது காப்பியத்தைப் போன்றது. இதன் இலக்கணத்தை வெண்பாப் பாட்டியல்,
      ‘‘கருது சில குன்றினும் அக்காப்பியம் ஆம்என்பர்
      பெரிது அறமே ஆதி பிழைத்து - வருவதுதான்
       காப்பியம் ஆகும் குலவரவு காரிகை
        யாப்பிற் புராணமே யாம்’’
                                                                    - வெண்பாப் பாட்டியல் 43

என்று வகுக்கிறது. இவ்வகையில் அமைந்த சிவபுராணத்தைக் கலிவெண்பாவால் மாணிக்கவாசகர் யாத்துள்ளார். கலித்தொகைக்கும் சிலப்பதிகாரத்திற்கும் அடுத்து இப்பாவகையை இவரே பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொருள் குறித்த பாடல்களைப் பத்துப் பத்தாகச் சேர்ப்பது சங்க காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது (ஐங்குறுநூறு, திருக்குறள் போன்றவை). அதன் பின்பு நாயன்மார்களின் காலத்தில் இது சிறப்புற்று வளர்ந்தது. அவ்வகையில் இருபத்தைந்து பதிகங்களைப் (பத்து) பாடியுள்ளார். ‘கோயில் மூத்த திருப்பதிகம்’ இவ்வகையில் சிறப்புற்று விளங்குகிறது.

அகவல் என்பது ஆசிhpயப்பாவைக் குறிக்கும். அதன் இலக்கணத்தைத் தொல்காப்பியர் நூற்பா 1338 இல் சுட்டியுள்ளார். இவ்வகையில் அமைந்த ‘கீர்த்தித் திருவகவல்,  ‘போற்றித் திருவகவல்’ எனும் இரு இலக்கியங்கள் அமைந்துள்ளன. ‘கீர்த்தித் திருவகவல்’ இறைவன் அடியார்க்குப் புரிந்த அருளிளையம் ‘போற்றித்திருவகவல்’ இறைவனைப் போற்றும் பொருண்மையிலும் அமைந்துள்ளது.
         
                   சதம் 100,  நூறு செய்யுள்களின் தொகுப்பு. சத்+அகம் - சதகம்.உண்மைப் பொருளாகிய இறைவனைப் பாடுவது சதகம் ஆகும். ‘திருச்சதகம்’ தெய்வத் தன்மை வாய்ந்த நூறு பாடல்களால் ஆனது. மேலும், ஒவ்வொரு பத்துச் செய்யுள்களுக்கும் ஒரு வகை யாப்பு வீதம் பத்துவகை யாப்புகளைப் பயன்படுத்தியுள்ளார“.

          மன்னனின் பத்து வகையான உறுப்புகளைப் பாடுவது தசாங்கம் ஆகும்.

           ‘‘பத்து இயல் வெண்பாவின் மலைநதி நாடூர்தார்
             பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
                மெத்து தசாங்கப் பத்தாம்’’
                                                                - சிதம்பரப் பாட்டியல், 5

என்று இதனைத் தசாங்கப்பத்து என்று சிதம்பரப்பாட்டியல் அழைக்கின்றது. இவ்வகை பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, பறை, தார், கொடி என்ற அடிப்படையில் அமைத்துப் பத்து உறுப்புகளுக்கு ஒரு பாடல் வீதம் பத்துப் பாடல்களை அமைத்துள்ளார். இது தலைவி, இறைவனின் தசாங்கங்களைக் கிளி கூறக் கேட்பதாக அமைத்துள்ளார்.

          உறங்கும் ஒருவரை விழித்தெழச் செய்வதற்குப் பாடுவது பள்ளியெழுச்சி. இதனைத் தொல்காப்பியர் துயிலெடைநிலை என்பார். ஆனால், துயிலெடைநிலை என நூல்கள் தோன்றாமல் பள்ளியெழுச்சி என்ற பெயரிலே தோன்றியுள்ளன. இவ்விலக்கியத்தைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார்.

          சங்க காலப் பெண்கள் விளையாட்டே ஊசல். இது ஊஞ்சல், பொன்னூசல் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விலக்கியவகை ஊசல் விளையாட்டாகத் தோன்றி, கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகி, பிள்ளைத் தமிழ்ப் பருவமாகி, பின் தனி இலக்கிய நிலையினை அடைந்துள்ளது. சிலம்பில் வஞ்சிக்காண்டத்தில் அமைந்துள்ள மூன்று ஊசல் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. ‘ஆடோமோ ஊசல்’’, ‘ஆடீர் ஊசல்’ போன்ற பதங்களில் ஒன்றினைக் கொண்டு இவ்வகைக் இலக்கியப் பாக்கள் முடிவடையும்.

          ‘‘சொல் கலித்தாழிசை அகவல்விருத்தம் ஆதல்
            சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்’’
                                                                    - சிதம்பரப் பாட்டியல், 32

என்று சிதம்பரப் பாட்டியல் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது.

‘அம்மானை’ என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டாகும். மூன்று போ; கூடி மூன்று அம்மானைக் காய்களைக் கொண்டு இது விளையாடப்பெறுகின்றது. முதலில் ஆடும் மங்கை தலைவனின் சிறப்பைக் கூறுவாள். இரண்டாமானவள் அதை ஐயுற்று வினாக் கேட்பாள். மூன்றாமானவள் ஐயத்தைப் போக்கும் விதமாகப் பதில் கூறுவது போல் அமையும். இது பெண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பருவங்களில் ஒன்றாகும்.
         
              கன்னிப் பெண்கள் நோற்ற நோன்புகளுள் பாவைநோன்பு மிகப்பழமையானது. தை நீராடல், பாவை நோன்பு நோற்றல் போன்ற செய்திகள் ஐங்குறுநூறு மற்றும் பரிபாடலிலும் காணப்படுகின்றது. இவ்வகையில் அமைந்ததே ‘திருவெம்பாவை’ ஆகும்.

          சிற்றிலக்கிய வகைகளுள் மாலையும் ஒன்றாகும். ‘ஆனந்த மாலை’ என்னும் பெயரில் மாணிக்கவாசகர் மாலை இலக்கியத்தைத் திருவாசகத்தில் கையாண்டுள்ளார். சிவானுபவத்தைப் பாடியதால் இது ‘ஆனந்த மாலை’ எனப்பட்டது.

          வெண்பா என்பது பாவகைகளுள் ஒன்றாகும். இவ்விலக்கியம் பாவகையால் பெயர் பெற்றது. இது தொல்காப்பியர் காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது. சிவத்தை அடைந்தவர்களின் தன்மையை விளக்குவதாகத் ‘திருவெண்பா’ அமைந்துள்ளது.

புதுமரபு


          தமிழ் இலக்கிய உலகு கண்டிராத பல புது இலக்கிய வகைகளைப் புதுக்கிய பெருமை திருவாதவூராரையே சாரும். கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, புலம்பல், பூவல்லி, சுண்ணம், உந்தியார், விண்ணப்பம் போன்ற பத்து வகை இலக்கியங்களை இவர் தம் திருவாசகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
         
            தும்பி பறத்தல் என்பது பெண்கள் விளையாட்டாகும். இறைவனின் பிரிவை ஆற்றாது அவரிடத்தே தும்பியைத் தூது அனுப்புதல் என்னும் பொருண்மையில் அமைந்ததே ‘திருக்கோத்தும்பி’ என்ற இலக்கியம் ஆகும். இது ‘கோத்தும்பி’ என்ற சொல்லோடு இதன் பாடல்கள் முடிவடையும்.

          சாழல் என்பது மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். பெண்கள் இரு பிரிவினராய்ப் பிரிந்து ஒரு பிரிவினரின் கேள்விக்கு மற்றொரு பிரிவினர் பதில் கூறும் வண்ணம் விளையாடுவதே சாழல் விளையாட்டு ஆகும். இதன், பாக்கள் ‘சாழலே’ என்ற சொல்லோடு முடிவடையும்.

          தெள்ளேணம் என்பதும் மகளிர் விளையாட்டு ஆகும். தெளிந்த ஓசையோடு ‘படகம்’ என்னும் இசைக்கருவியை இசைத்துப்பாடுவதாகும். இதில் வரும் பாடல்கள் அனைத்தும் ‘நாம் தெள்ளேணம் கொட்டோமோ’ எனும் பதத்தோடு முடியும்.

          தோணோக்கம் என்பதும் மகளிர் விளையாட்டு ஆகும். தோள் நோக்கம் என்பதே தோணோக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது மகளிர் ஒருவார் தோளை ஒருவர் தட்டி அன்போடு அகமகிழ்ந்து ஆடும் விளையாட்டு ஆகும். இதன் பாடல்கள் ‘தோணோக்கம் ஆடோமே’ என்றே முடியும்.

          படையெழுச்சி என்பது போருக்குச் செல்லும் படையினைக் குறித்துப்பாடுவது. ஆனால் திருவாசகம் தொண்டர்களாகிய படைகள், மாயையாகிய பகையை வெல்லுவதற்கு எழுந்து செல்லுவதை ‘திருப்படையெழுச்சி’ எனக் கூறப்படுகிறது. மாயையை வெல்வதற்கான பிரபஞ்சப் போர் இதுவாகும்.

          தனிமையில் ஆற்றுதலே புலம்பல் ஆகும். இதனை மெய்ப்பாட்டு வகைகளுள் அடக்குவார் தொல்காப்பியர். அன்பின் மிகுதியால் இறைவனை நினைத்து உருகின் புலம்புவதாக இவ்விலக்கியம் அமைந்துள்ளது.

          வல்லி கொடி, பெண்கள் பூக்களைக் கொடியிலிருந்து கொய்தலைக் குறிக்கும். அவ்வாறு கொய்யும் போது அவர்கள் பாடும் பாட்டே ‘பூவல்லி’ என்பதாகும். இதன் பாடலின் இறுதியடிகள் ‘பூவல்லி கொய்யாமே’ என்று முடியும்.

          சுண்ணம் என்பது நீராடும் போது உடலில் பூசும் வாசனைப் பொடி ஆகும். தலைவனுக்குத் தேவையான சுண்ணப்பொடி இடிக்கும் போது தலைவனின் பெருமைகளைப் பாட்டாகப் பாடுவர். அவ்வாறு பாடும் போது ஒவ்வொரு பாடலின் இறுதியடியூம் ‘சுண்ணம் இடித்து நாமே’ என்றே முடியும். திருவாசகத்தில் இறைவனின் பெருமைகளைக் கூறி சுண்ணம் இடிப்பதாக அமைந்துள்ளது. இது வள்ளைப்பாட்டு, உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பாட்டியல்கள் சுட்டும் மங்கல வெள்ளை, கொற்ற வள்ளை போன்ற இலக்கிய வகைகளோடு ஒப்பத்தக்கது. இதுவும் பெண்களின் செயலிலிருந்து தோன்றிய இலக்கியம் ஆகும்.

          உந்தி பறத்தல் என்பதும் பெண்கள் விளையாடும் விளயாட்டாகும். பெண்கள் இரு கைகளையும் இறகுகள் போல வைத்துக் குதித்துக் குதித்து ஆடும் விளையாட்டே இதுவாகும். அவ்வாடலில் ‘உந்தி பற’ என்ற சொல்லை இறுதியடியாகக் கொண்டு முடியும் பாடல்களைப் பாடுவர்.

          விண்ணப்பம் என்பது ஒருவரிடம் ஏதேனும் ஒன்று குறித்து வேண்டுதல் ஆகும். இறைவனிடத்தில் நீத்துவிடாதே என்று முறையிடுவதே ‘நீத்தல் விண்ணப்பம்’ ஆகும். தனக்கு ஞானாசிரியன் வடிவம் காட்ட வேண்டும் என்பதை வாசகர் இறைவனிடத்தில் விண்ணப்பிக்கின்றார்.

முதலும் முற்றும்

          51 பகுதிகளைக் கொண்ட திருவாசகத்தில் 21 வகையான சிற்றிலக்கிய வகைகள் அமைந்துள்ளன. இதில் நாற்பத்து ஆறு பகுதிகள் அடங்குகின்றன. புதுமரபில் கூறப்பட்டுள்ள பதினோரு இலக்கிய வகைகளுக்கும் முதல் இலக்கியம் திருவாசகத்தில் தான் அமைந்துள்ளது. மேலும், மாலை இலக்கியமான ‘ஆனந்த மாலை’யும் முதல் நூலாகக் கருதப்படுகிறது. கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, பொற்சுண்ணம் ஆகிய இலக்கிய வகைகளுக்கான இலக்கிய வடிவங்கள் திருவாசகத்தில் மட்டுமே காணப்படுகிறது. வேறெந்த இலக்கியங்களும் தோன்றியதாக அறியமுடியவில்லை. இதில் வரும் சிற்றிலக்கிய வகைகளில் பத்து வகைகள் பெண்களைச் சார்ந்த (விளையாட்டு, நோன்பு, செயல்) ஒன்றாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

          சிற்றிலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வானில் தனிப் பெரும் பரப்பைக் கொண்டது. இந்தப் பரப்பில் மிகுதியான  புதிய இலக்கிய வகைகளைப் புகுத்தி மேலும் மெருகூட்டியவர் மாணிக்கவாசகர். மகளிர் விளையாட்டுக்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் இலக்கிய வகைகளாக்கிய பெருமை இவரையே சாரும். யாரும் தொடத் தயங்கிய இலக்கிய வகைகளைத் தொட்டுத் தூக்கி, யாரும் தொடாதா இலக்கிய வகைகளை தொட்டு அதில் வெற்றியும் கணடவர் மாணிக்கவாசகர் ஆவார். எனவே திருவாசம் என்பது பக்திப்பாமாலை மட்டுமன்று சிற்றிலக்கியச் சுரங்கமும் ஆகும்.

1 comment: