ஆசிவக மதமும்
அறிவியல் கருத்தும்
மனிதன் மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள் மதங்கள் ஆகும். இந்த மதங்கள்
அனைத்தும் மனிதன் வாழ்வில் உய்வதற்காகவும் உயர்வதற்காகவும் பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும்
கூறிச்சென்றுள்ளன. இவ்வாறு தோன்றிய மதங்கள் பல அழிந்துவிட்டன. பல அழியும்
தன்மையில் இருக்கின்றன. அவற்றுள் சில மதங்கள் மட்டும் வேரூன்றிச் செழித்து வளர்ந்து
வருகின்றன. அவ்வாறு அழிந்த மதங்களுள் ஒன்று தான் ஆசிவக மதம் ஆகும். இம்மதம் வட
இந்தியாவில் தோன்றி தென்னிந்தியாவில் பரவி இருந்தது. பின்னர் வேறு சமயங்களின்
எழுச்சியாலும் அரசியல் காரணங்களாலும் அழிந்துவிட்டது. மனிதனின் உயர்வதற்காக
இம்மதம் பரப்பிய கொள்கையில் விளங்கும் அறிவியல் கருத்துக்களைச் சுட்டுவதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆசிவக மதம்
வட இந்தியாவில் மகத
நாட்டில் தோன்றிய இம்மதத்தைத் தோற்றுவித்தவர் ‘‘மற்கலி புத்திரர்’’
என்பவர் ஆவார். இவரைத் தமிழ் இலக்கிய
உலகு ‘மற்கலி‘, ‘மக்கலி’ என்று அழைக்கின்றது. மகாவீரரும் புத்தரும் இவரது
காலத்தவராகக் கருதப்படுகின்றனர். மகாவீரருடன் சிறிது காலம் இருந்த இவர் பின்பு தனியே பிரிந்து
சென்று அவருடைய கருத்துக்கள் சிலவற்றையும் தான் கண்ட மெய்மைகள் சிலவற்றையும் சேர்த்து
ஆசிவக மதத்தைத் தோற்றுவித்தார். ஆசிவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவகதிர்’ என்று பெயர். ‘ஆத்தியம்’ என்னும்
நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தக்கயாகப் பரணியின் உரைப்பகுதி விளக்குகின்றது.
இம்மதம் அழிந்து விட்டாலும் இம்மத நூல்கள் கிடைக்காவிட்டாலும் நீலகேசி, மணிமேகலை,
தக்கயாகப் பரணி, சிவஞான சித்தியார் போன்ற இலக்கியங்களின் வழி இதன் கொள்கைகள் நமக்குத் தெரிய
வருகின்றன. ஆனால், அந்நூல்கள் அனைத்தும் இம்மதத்திற்கு எதிராக எழுந்துள்ளதால்
இதில் குறிப்பிடுவது ஒருதலைப்பட்சமாகவே இருக்கின்றன. இருப்பினும், இம்மதக்
கொள்கைகளை இதன் வழி ஓரளவு உய்த்துணரமுடிகின்றது.
அணுக்கொள்கை
பஞ்ச பூதங்களாக
ஏற்றுக்கொண்டவைகள் ஐந்தும் இம்மதத்தால் அணுக்களாகக் கருதப்பட்டன. மேலும், இன்பம்,
துன்பம், உயிர் என்பவையும் அணுவாகக்
கொள்ளப்பெற்றது. ஆகாயத்திற்கு ஆசிவக மதத்தில் இடம் இல்லை. இதற்குப் பதிலாக உயிர் என்பதைக் கொண்டனர்.
‘‘மன்பெறு
நுண்பொருளைந்தியல் பாயவை’’
- நீலகேசி 671
என்ற நீலகேசியின் அடியும்
‘‘துரந்தரும் உயிரொடு
ஒரு நாள்வகை அணு’’
- மணிமேகலை, சமயக்கணக்கர்தம்
திறம்
கேட்டகாதை. 113
‘‘இன்பமும் துன்பமும்
இவையூம் அணுவெனத்தகும்’’
- மேலது, 163
என்ற மணிமேகலை
அடிகளும் உணர்த்துகின்றன. மேலும், நீர், நிலம், காற்று, தீ ஆகியன அனைத்தும்
அணுக்கலாள் ஆனது என்றும், அணுக்களின் சேர்க்கை வடிவே இவை என்றும் பகர்கின்றன. இது
உலகின் அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனது என்ற தற்கால அணுக்கொள்கையினைப்
பிரதிபலித்து நிற்கின்றது. மேலும், இவ்வணுக்கள் அனைத்தும் உருவப்பொருள் கொண்டது
என்பதை நீலகேசி,
‘‘உடங்கே யணுவைந்
துருவா யூளவே’’
- நீலகேசி, 674
என்ற அடி சுட்டி
நிற்கின்றது. மேலும், அணுவின் இயல்புகளை,
‘‘ஆதி யில்லாப் பரமா
ணுக்கள்
தீதுற்று யாவதும்
சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்தென்
றொன்றிற் …….
……………………………
………………………. முறைக்கும்’’
- மணிமேகலை, சமயக்கணக்கர்தம்
திறம்
கேட்டகாதை. 126–136
என்ற அடிகள் உணா;த்துகின்றன. இதில், ஓர் அணுவில் ஓர் அணு புகாவிடினும்
அணுத்திரளைகளாய் இணைதல் உண்டு என்பதும். இதன் அணுக்கொள்கையாக அமைந்திருப்பதை
மணிமேகலை விளக்குகின்றது.
பொருளின் தன்மை
ஒவ்வொரு பொருக்கும்
ஒரு தன்மை உள்ளது. அதுவே அதனைக் குறித்த புரிதலை நமக்குத் தொpவிக்கின்றது. அவ்வாறு
நிலம், நீர், காற்று, தீ ஆகியவற்றின் தன்மையினையும் ஆசிவக மதம் தனது கொள்கையாகக்
கொண்டுள்ளது. இதனை,
‘‘சொற்படு சீதத்தொடு
சுவை உடைத்தாய்
இழினென் நிலம் சேர்ந்து
ஆழ்வது நீர்தீத்
தெறுதலும் மேல் சேர் இயல்பும்
உடைத்து ஆம்
காற்று விலங்கி
அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு
எய்தும் விபரிதத்தால்’’
- மணிமேகலை, சமயக்கணக்கர்தம்
திறம்
கேட்டகாதை, 121–125
எனவரும் அடிகள்
விளக்குகின்றன. இதன்வழி நில அணுக்கள் வலிமையும், நீரணுக்கள் தாழ்வான பகுதி நோக்கிப் பாயும் தன்மையுடனும்
குளிர்ச்சியுடன் சுவையும் கொண்டனவாக உள்ளன. மேலும், தீயணுக்கள் எரிக்கும்
இயல்புடையதாகி மேல் நோக்கி எழும் தன்மையும் பெற்றிருக்கின்றன. காற்றுக்
குறுக்கிட்டு அசையும் இயல்பு கொண்டது என இம்மதக் கொள்ளை வலியுறுத்தும் அறிவியல்
செய்தி புலப்படுகின்றது.
ஒளிச்சிதறல்
வெள்ளை ஒளி ஓர் ஊடகத்தின் வழியாகச்
செல்லும் போது அது ஏழு வண்ண நிறக் கதிர்களாகப் பிரியும் என்பதே ஒளிச்சிதறல்
விதியாகும். இதன் அடிப்படையில் தான் வானவில் தோன்றுகின்றது. இக்கருத்து 19 ஆம் நூற்றாண்டில்
கண்டறியப்பெற்ற உண்மையாகும். நீலகேசியில்
ஆசிவக மதத்தின் கொள்கையினை எதிர்த்து வாதம் செய்யும் காப்பியத் தலைவியான நீலகேசி,
‘‘வானிடு வில்லின்
வரவறியாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின
னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும்
விடுசுட ரான்கதிர்
வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றணு
வாமிது வாமதன் றத்துவமே’’
- நீலகேசி, 684
என்ற பாடல் வழி வலியுறுத்துகின்றாள்.
இதன்வழி சூரிய ஒளி மேகத்தில் பட்டதால் வானவில் தோன்றுகின்றது என்ற ஒளிச்சிதறல் விதியினை
விதைத்துவிட்டார்
என்ற
கருத்துப்பெறப்பெறுகின்றது.
இவ்வாறாக மனிதனின்
மனத்தில் பயத்தினை ஏற்படுத்தி அதன் வழி அவனை நெறிப்படுத்துவதற்கு மதங்கள் தோன்றின.
அவ்வாறு தோன்றிய ஆசிவக மதம் மனித இனத்தின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தேவையான
பல்வேறு கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டிலங்கியது. அக்கருத்துக்கள் அறிவியல்
மற்றும் நாகரிகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது என்பது ஈண்டு புலனாகின்றது.
No comments:
Post a Comment