பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Friday, December 14, 2012

புறநானூற்றில் நீர்நிலைச் சிறப்புகள்


புறநானூற்றில் நீர்நிலைச் சிறப்புகள்


முன்னுரை

          புறம் என்ற சொல்லாட்சிக்குத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புப் பொருளுண்டு. புறம் இடம், ஏழாம் வேற்றுமை உருபு, சுற்று, பக்கம், பின்புறம், மதில், முதுகு, வீரம் வெளிவளம் எனுமாறு பொருள் விளக்கங்களைத் தமிழ் மொழி அகராதி கூறுகின்றது. குறிப்பாக வீரம் என்ற பொருளிள் சங்கப் பாடல்களில் நானூறு பாடல்கள் புறநானூறு என அடையாளமிட்டு வழங்கப்படுகின்றன. 1894 இல் உ.வே.சா முயற்சியால் வெளிக்கொணரப்பட்ட தமிழர் வாழ்வியல் விளக்கம் புறநானூறு ஆகும். போருக்கு நிகராக வள்ளண்மை, நட்பு, தமிழர் தம் உயரிய கொள்ளை எனப் பலவும் சிறப்பாகப் பதியன் பெற்றுள்ளன. அவ்வகையில் புறநானூற்றில் காணலாகும் நீர் நிலைகள் குறித்த சிறப்புச் செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
வாழ்வியலில் நீர் நிலைகள்

          பொதுவாக, உயிரிகளின் உணவுத் தேவைக்கும் உடல் பராமரிப்பிற்கும் அடிப்படையாக நீர் நிலைகள் அமைகின்றன. அகப்பாடல்களில் களவுப் புணர்ச்சி நிகழ்தலுக்குரிய களமாகவும் இன்புறுவதற்குரிய நிலையங்களாகவும் நீர் நிலைகள் இலக்கியங்களில் காட்டப்படுகின்றன. வளமை உணர்த்தும் வாக்கிலும் அவைகள் சுட்டப்படுகின்றன. புற உலகம் அரசியல் உந்துதல்களால் இயக்கமாகும் தம்மையுடையதாகும். எனவே, புற உலகில் நீர் நிலைகளுக்கான அடையாளம் வேறு வடிவினத்ததாய் கையாளப்பட்டு உள்ளது.

புறநானூற்றில் நீர்  நிலைகள்

          புறத்தில் நீர் நிலைகளின் இன்றியமையாமை, போர்க்காலங்களில் நீர் நிலைகட்க உண்டாகும் நிலைகள், நீரக மேலாண்மை, நீர்நிலைப் பாதுகாப்பு, நீரின் ஆற்றல் எனப் பல்வேறு கோணங்களில் நீர் நிலைகள் ஆராய்ந்து அணுகப்பெற்றுள்ளது.

நீர்நிலைகளின் இன்றியமையாமை

          ஒரு பொருள் குறித்த மீஎண்ணங்கள் அப்பொருள் இல்லாதபோதே இருக்கும். இவ்வகையிலே, வறட்சியான இடம் குறித்த கருத்துக்கள் வருமாறெல்லாம் நீரின் இன்றியமையாமை அழுத்தமுறப் புறநானூற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அதனை,

       ‘‘ஊரி இல்ல, உயவு அரிய
       நீர் இல்ல, நீள் இடைய’’
                                                 -        புறம்., 3, 17 – 18

எனும் வரிகளால் அறியலாம். பாலைநில வழியானது எவ்வித ஊர்களும் இடையில் இல்லாது வழியில் தாகம் தீர்க்க நீர்நிலைகளும் அற்ற தன்மையில் இருக்கும் என இப்பாடல் குறிப்பிடுகின்றது. குடியிருப்புகள் அவ்வழியில் இல்லாமைக்கு நீரின்மை இன்றியமையாமைக் காரணமாகக் கருதவும் இடமுண்டு. உயிர் வாழ அடிப்படையான நீர் இல்லாத இடத்தில் வாழ்வவு நடைபெற வாய்ப்பு இராது. நீர் வாழிடக் காரணியாகப் புலவர்கள் உணர்ந்ததால் இவ்வாறான வறண்ட நிலம் பற்றிய கூற்று நீர் நிலைகள் குறித்த புலப்பாடுகள் மேலோங்குகின்றன.

நீர்நிலை - எல்லைகள்

          ஆட்சிப்பரப்பில் நில எல்லை, நீர் எல்லை என இருவேறு எல்லைகள் இருந்தன. பரந்துபட்ட நீர் எல்லைகள் மிக அதிகமான அளவில் பராமரிப்பிற்குரியவைகளாகச் சங்க காலத்தில் திகழ்ந்துள்ளன. கடற்போர், கடம்பர்கள் எனும் இனத்தவர் கடல் கொள்ளையில் ஈடுபட்டமை குறித்த பல்வேறு செய்திகளை நம் இலக்கியங்களில் இருந்து அறியலாம். கடல்போர்ச் சிறப்பினால் ‘கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என வேந்தன் ஒருவன் புகழப்பட்டதன் அடிப்படையிலும் கடல் எல்லைகளின் முக்கியத்துவத்திலும் அறியலாம். இதனைப் புறநானூற்றின்,

          ‘‘ஒவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
           நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற’’
                                                                           -        புறம்., 3,  1 – 2

எனும் வரிகளால் அறியலாம். ‘நிலவுக்கடல் என்னும் சொல் நிலைத்த கடல் பரப்பை குறிக்கிறது. நில எல்லைகளைப் பாழ்படுத்தலாம். கடல், கடல் எல்லை என்பன வலியவைகள் ஆகும். எனவே, இவ்விடத்தில் ‘நிலவூக்கடல் என்ற சொல்லாட்சி கடலின் சிறப்புத் தன்மையோடு குறிப்பிடப்படுகின்றது. பண்டைத் தமிழகமும் ‘வடவேங்கம் தென்குமரி ஆயிடைநல் தமிழ்கூறு நல்லுலகத்து எனுமாறு தொல்காப்பியத்தில் கடல் எல்லையால் சுட்டப்பெற்றிருக்கும்.

          இவ்வுலகமே கடலினை எல்லைப்பரப்பாகக் கொண்டது என்று புறநானூறு சுட்டுகின்றது. அதனை, 

         ‘‘………………… இமிழ்திரைப்
          பௌவம் உடுத்த இப்பயம்கெழு மாநிலம்’’
                                                                                    -        புறம்.,58, 20 – 21

எனும் அடிகளில் வழித் தெளிய உணரலாம். புறநானூற்றின் பல இடங்களில் இக்கருத்தினை ஒத்த பாடல் அடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தமை குறித்து (புறம் - 9) பேசுகின்றது.

நீரின் ஆற்றல்
         
          பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கூறப்படும் நீரானது நிலம் என்னும் கூறுடன் இணைவுற்ற தன்மையில் உள்ளது. நீரின் தன்மை தண்மை ஆகும். எனினும் அதன் வலிமை மிகவும் பெரிய ஒன்றாகும். வெள்ளப்பெருக்குக் காலங்களில் அதன் வலிமையைக் கண்கூடாகப் பார்த்திருப்போம். அவ்வடிப்படையில், நீர்ப்பெருக்கு மிகுமானால் அதனை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது என்பதை,

         ‘‘நீரிமிகின் சிறையும் இல்லை………..’’
                                                                       -        புறம்.,51, 1

என்ற ஐயூர் முடவனாரின் அடியின் வழி உணரலாம். 

          நீர் நிலைகள் பழக்கமில்லாதவர்க்கு ஆபத்து நிறைந்ததாகும். அவற்றைக் கடப்பதற்குத் திறனும் துணிவும் இன்றியமையாமை ஆகும். அத்தகு ஆபத்துத் தன்மையுடைய நீர்த்துறை, வேந்தனது வீரத்திற்கு இணையாக நக்கண்ணையாரால் பேசப்பட்டதை,

         ‘‘ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
          உமணர் வெரூஉம் துறையன்னன்னே’’
                                                                                   -        புறம்.,84, 4 – 5 

என்ற அடிகளால் அறியலாம். உப்பு வாணிகம் செய்யும் உமணர்க்கு அச்சம் தரும் நீர்த்துறையானது இவ்விடத்தில் தலைவனுக்கு உவமையாக வந்துள்ளது.

நீர் - மருந்து

          பசியினைப் பிணி என்று மணிமேகலை பகரும். அப்பிணி தீர்க்கும் அரு மருந்தாக நீர் அமைகின்றது. நீரினையும் உணவினையும் ‘இரு மருந்து என்று சங்க காலத்திலிருந்து குறிப்பிட்டுள்ளமையை இக்கருத்தோடு பொருத்திப்பார்க்கலாம். தற்போது உடல் பிணி போக்கும் மருந்திற்கு நிகரான தன்மை உண்டு என மேலை நாட்டு மருத்துவமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், சர்.சி.வி.இராமன், ~~Water is the elixir of life||  என்ற கட்டுரையில் நீரின் தன்மைகளைக் கூறி வியப்பார்.  பழங்காலத்தில் இருந்தே நீரானது மருந்தாக மதிக்கப்பெற்றதை,

         ‘‘அடுதீ அல்லது சுடுதீ அறியாது
          இருமருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்’’
                                                                       -        புறம்., 70, 8 – 9

என்ற அடிகளால் அறியலாம். சோழன் கிள்ளி வளவனது நாடானது உணவிற்காக ஏற்படுத்தப்படும் நெருப்பினைத் தவிர வேறு நெருப்பினை அறியாதது, தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்துகளைப் பசிப்பிணிக்குத் தரும் தலைவன் என்று நீர்க்கொடையால் சோழன் புகழப்படுவதும் இங்கு சிறப்புடையதாகும்.

போர்க்காலத்தில் நீர்நிலை

          நீர்நிலைகள் நாட்டின் வளத்தினை முடிவு செய்யும் காரணியாக இருப்பதால் போர்க்காலங்களில் மிகுதியான ஆபத்துக்களைச் சந்தித்தன.
                   புறப்பொருள்வெண்பாமாலையில், ‘மழபுலவஞ்சி எனும் துறையில் எதிரி நாட்டை அழிக்கும் பொருட்டு  நீர் நிலைகளை அழிப்பது குறிப்பாகக் காட்டப்படும்.

          போர்க்காலத்தில் நீர்நிலைகள் யானைகளால் அழிக்கப்பட்டமை குறித்து,

          ‘‘ஒளிறு மருப்பின் களிறு அவர
          காப்பு உடைய கயம் படியினை’’
                                                                     -        புறம்., 15, 9 – 10 

என்ற அடிகளால் அறியலாம். இப்போர்க்கால நிகழ்வே ‘மழபுல வஞ்சி என்ற துறையினுள் பிற்காலத்தில் இடம்பெற்றமையை அறியலாம்.

நீர்நிலைப் பாதுகாப்பு

          புற அரசியலில் எல்லைகளாகக் கருதப்பட்ட நீர்நிலைகளைப் பராமரிக்கக் காவலர்கள் பணியமார்த்தப்பட்டிருந்தனர். அகநானூற்றில், ஓரிடத்தில் இரவுக்குறிக்குத் தடையாகத் துயிலாது இருக்கும் அன்னையைத் தலைவி, ‘குளக் காவலன் போன்று உறங்காதிருக்கிறாள் என்று கூறுவாள்.

          குளங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் கரை உடைப்பு போன்றவற்றைச் சரிசெய்ய  காவலர்கள் நியமிக்கப்பெற்று நீல்நிலைகள் பராமாpக்கப்பட்டதை,

         ‘‘எண்நாள் திங்கள் அனையக் கொடுங்கரைத்
          தெளிநீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ’’
                                                                              -        புறம்., 118, 2 – 3

என்ற அடிகளால் அறியலாம். ஊர்களில் நீர்த்தேவைக்காகக் கிணறுகள் வெட்டப்பட்டமையை (புறம் - 132) பாடலின் வழி அறியலாம்.

முடிவுரை

          நீர்நிலைகளானது மனிதனின் அகம், புறம் என்ற இருவேறுபட்ட வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகித்தமை, அவற்றைப் பராமரித்தமை, புலவர்கள் தம் கூர்த்த சிந்தை மற்றும் வெளிப்பாட்டினால் அவற்றை நுட்பமாகக் குறிப்பிட்டமை குறித்து இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.


நன்றி.

ம.பிரசன்னா.

1 comment: