பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Sunday, September 18, 2016

மடல் பாடிய மாரங்கீரனார்


மடல் பாடிய மாரங்கீரனார்

                தமிழரின் இலக்கியக் கருவூலம் பாட்டும் தொகையுமாம். இவையே பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் பண்பாட்டினையும் பறைசாற்றி நிற்கின்றன. 2381 சங்கப் பாக்களில் 1862 பாக்கள் அகப்பாக்கள் ஆகும். இன்னபிற புறமாம். இதனைப் பாடியோர் 473 பேர். அதனுள் அகம்பாடியோர் 373 பேர். இதில் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர்கள் எடுத்தாண்ட உவமையால் குறித்தனர். பெயர்தெரிந்த புலவர்கள் சிலருக்கு அவர்கள் பயன்படுத்திப் பாடிய துறை முதலிய பிற வகையால் பெயருக்கு முன்னாள் அடைமொழி ஈந்தனர். வெறி பாடிய காமக் கண்ணியார், கோடை பாடிய பெரும்பூதனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், பாலை பாடிய பெருங்கடுங்கோ போன்றோரைச் சான்று பகரலாம். இவ்வரிசையில் வருபவரே மடல் பாடிய மாரங்கீரனார் ஆவார். இவ்வாறு இவர் அழைக்கப்பெறுதற்கான காரணங்களை இக்கட்டுரை ஆராயப்புகுகின்றது.

                மாரங்கீரனார் பாடிய பாடல்கள் மொத்தம் இரண்டு மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. அவை குறுந்தொகையின் 182 வது பாடல் மற்றும் நற்றிணையில் 377 வது பாடல். நம்முன்னோர் இவ்விரு பாடல்களை மட்டுமே வைத்து இப்பெயர் ஈந்திருக்க இயலாது. இவர் இத்துறையில் பல பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். மடல் துறைக்கு இப்பாடல்களே வெள்ளிடைமலையாய் இருக்கும் என்பதால் தான் தொகையைத் தொகுத்தோர் இரு பாடல்களை மட்டுமே எடுத்துள்ளனர் என்பது ஈண்டு புலனாகின்றது.

                மடல் குறித்துத் தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் சுட்டிய செய்திகள் மூன்றேயாம். அவை,
1.            மடல் கூற்று அன்பின் ஐந்திணைக்குரியது
2.            மடல் ஏறுதல் பெருந்திணைக்குரியது
3.            பெண் மடல் ஏறுதல் இல்லை; ஆண் மட்டுமே மடல் ஏறுதல் உண்டு
இதில் அன்பின் ஐந்திணையே சாலச்சிறந்தது. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் என்பர். மடல் கூற்றுப் பாடல்கள் குறுந்தொகையில் ஐந்தும் (பா.எண். 14, 17, 32, 173, 182), நற்றிணையில் நான்கு பாடல்களும் (பா.எண். 146, 152, 342, 377), கலித்தொகையில் நான்கு பாடல்களும் (பா.எண். 138, 139, 140, 141) அமைந்துள்ளன. மடல் துறையினைச் சுட்டாமல் மடல் குறித்த செய்திகள் இன்னும் சில பாடல்களில் வந்துள்ளன. இதில் முதலில் சுட்டப்பெற்ற ஒன்பது பாடல்களும் அன்பின் ஐந்திணையில் அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் ஐந்தும், நற்றிணையில் இரண்டும் (பா.எண். 146, 377) என ஏழு பாக்கள் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளன. நற்றிணையில் இரண்டு பாக்கள் (பா.எண். 152, 342) நெய்தல் திணையில் அமைந்துள்ளன. கலித்தொகையில் அமைந்துள்ள நான்கும் பெருந்திணையிற்பாற்பட்டது. மடல் ஏற்றத்திணைத் தொல்காப்பியர் பெருந்திணை வழக்காகத் குறித்தாலும் ஐந்திணைப் பாடல்களே அதிகம் உள்ளன. இதில் மாரங்கீரனார் பாடிய இரு பாடல்களும் குறிஞ்சித்திணையில் அமைந்துள்ளன. “அகப்பொருள் இலக்கணம் கூறியவர்கள் குறிஞ்சி முதலிய ஐந்திணை ஒழுக்கங்களில் குறிஞ்சித்திணைக்குரிய ஒழுக்கமாகவே மடல் ஏறுதலைக் குறித்தனர்என்ற முனைவர் .காந்தியின் (தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், . 16) கருத்தும் ஈண்டு சுட்டத்தக்கது ஆகும்.

                மடற்கூற்று நிகழ்த்துவதும் அதைச் சேட்படுத்துவதும் தலைவனும் தோழியுமாம். எனவே மடற் கூற்று இவர்கட்கே உரித்தாக அமைந்தது என்ற தொல்காப்பியத்தின் வழி நின்றே தன் பாக்களைப் படைத்துள்ளார் மாரங்கீரனார். “தோழி குறைமறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்கு உரைத்தது” (குறுந்., 182), “சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது” (நற்., 377) என்று தன் பாடல்களைத் தொல்காப்பியக் கோட்பாட்டின் படியே கட்டமைத்துள்ளார். இதில் குறுந்தொகைப் பாடலை நச்சர்நெஞ்சொடு கிளத்தல்துறைக்குச் சான்று பகர்கின்றார். இரண்டாவது பாடல் தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழிகேட்பத் தன்னுள்ளே சொல்லுவதாய் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

                குறுந்தொகையின் 14 வது பாடலில் தலைவன் களவுக்காலத்தில் எவ்வாறு தோழியின் துணையின்றித் தலைவியைப் பெற்றானோ அஃதேபோல் இப்பொழுதும் மடலேறித் தலைவியைப் பெறுவேன் என்கிறான். காமம் முதிர்கின்ற போது ஊராத குதிரையை ஊரும் குதிரையாகவும், சூடாத பூவினைச் சூடும் பூவாகவும் எண்ணுவர் என்று உலகின் மேல் வைத்துத் தோழி கூறுவதாகக் குறுந்தொகையின் 17 வது பாடல் அமைகின்றது. காமமே மடல் ஏறுவதற்கு அடிப்படை (நற்., 152); விலை கூறி விற்கப்படாத பூளை, ஆவிரை, உழிஞை, எருக்கம் இவற்றைச் சூடிப் பலரும் நகைக்க நான் மடலேறுவேன் (நற்., 146) என்றும் பிற ஐந்திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

                ஆனால் பெருந்திணைப் பாடல்களோ மடலேறிய தலைவனைக் (கலி., 137, 138, 140) காட்டுகின்றது. மேலும், தலைவன் மடல் ஏறி வருவதால் ஊரில் தலைகாட்டமுடியாது என்ற நிலையில் தலைவியைச் சுற்றத்தாரே தலைவனுடன் சேர்க்கின்றதனைக் (கலி., 141) காணமுடிகின்றது. இத்தனைக்கும் மேல் தலைவன் மடல் ஏறி வரவேண்டும் என்று காமனை வழிபடும் தலைவி (கலி., 147) மடல் ஏற்றத்தின் பரிணாமம். இவ்வாறு பிற மடல் பாடல்கள் சுட்ட மாதங்கீரனாரின் பாடல்களோ தனித்துத் தனித்துவமாக நிற்கின்றது.

                சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற அனைத்து மடல் பாடல்களும் நாணத்தைத் துறந்து, உயிருக்கு ஒப்பாகக் கருதிய மானத்தினைத் துறந்து மடல் ஏறித் தலைவியை அடைய வேண்டும் என்ற நோக்குடனே அமைந்துள்ளன. ஆனால், மாரங்கீரனாரோ மடல் என்பது தான் தலைவிக்கு அனுப்பும் காதல் தூது என்றே மடல் ஏற்றத்தினை மடைமாற்றம் செய்கின்றார். இதனை,
                                விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்

                                 மணிஅணி பெருந்தார் மரபிற் பூட்டி

                                 …………………………………

                                 கலிழ்கவின் அசைநடைப் பேதை

                                 மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த தூதே

-              குறுந்., 182
என்ற பாடல் உணர்த்துகின்றது. இப்பாடல்தான் ~மடல்| என்பது தற்போது ~கடிதம்| (தன் கருத்தை, எண்ணத்தைப் பிறருக்குத் தெரிவிப்பது) என்று அழைக்கப்பெறுவதற்கு மூலமாக  அமைந்திருக்கலாம். மேலும் இவரின் நற்றிணையின் 377 வது பாடலில்,
                                மடல் மா ஊர்ந்து, மாலை சூடி

                                 கண் அகன் வைப்பின் நாடும் ஊடும்

                                 ………………………………

                                 பண்ணல் மேவலமாகி, அரிது உற்று

                                 அது பிணி ஆக, விளியம் கெல்லோ

-              நற்., 377
எனத் தலைவி மீதுள்ள காதலால் மடல் ஏறுவது நாணமற்ற செயல். அதனினும் உயிர் விடுதல் மேல் என்கிறார்

                பிற மடல் பாடல்கள் வேறாக அமைய இவரது பாடல்கள் மட்டுமே மடலின் மாண்பினைப் பறைசாற்றுவதாய் அமைகின்றது. மேலும் இலக்கண அமைப்பிலும் இலக்கிய் கருத்தியலிலும் மற்ற பாடல்களை விடத் தனித்தே நிற்கின்றன. மடல் ஏறுவது உலகியல் வழக்கல்ல. அஃதொரு இலக்கிய வழக்கு என்பர். உலகியல் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் இவரது பாடல்கள் புதுமையாய் அமைந்துள்ளன. மேலும் தமிழரின் காதல் வாழ்வினைச் சிறிதும் சிறுமைப்படுத்தாது தமிழர்க் காதலை தலைநிமிரச் செய்கின்றது. இத்தகைய காரணங்களால் தான் இவர்மடல் பாடிய மாறங்கீரனார் என அழைக்கப்பெறுகின்றார்.

.கந்தசாமி பாண்டியன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இராசபாளையம் இராஜூக்கள் கல்லூரி,

இராசபாளையம்.


No comments:

Post a Comment