பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, January 2, 2020

புலமை செழுமை ஆவணம் ஐங்குறுநூறு


புலமை செழுமை ஆவணம் ஐங்குறுநூறு

 வாய்மொழிப்பாடல் தொடங்கி நகைத்துளிப்பா வரையிலான தமிழ் இலக்கண, இலக்கியங்களில் பயணம் தொலைவு உடையது. பொதுவாக உள்ளடக்கம், ஆட்சியாளர் அடிப்படையில் இலக்கியங்களை வகைப்படுத்துகிறோம். ஆட்சியாளர் ஆட்சிப்பணிகளுக்குள் இலக்கியப் பணிகளும் அடங்கிருந்தன. தம் செயல் விளம்பும் ஆவணமாக இலக்கியங்களை அவர்கள் பார்த்ததால் இலக்கியங்களும் வளர்ச்சியுற்றன. ஆட்சியாளர்கள் தம் ஆளும் பிரதேசங்களின் மொழி மாறினாலும் (களப்பிரர்) அவர்கள் விரும்பிய சொந்த மொழிப்படைப்புகளை உருவாக்கம் செய்வதில் முனைப்புக் காட்டினர். உள்ளடக்க அடிப்படையில் பார்தோமேயானால் சங்க இலக்கியம் என்று ஒரு காலமும் தவிர்க்க முடியாது. சங்கம் என்று ஒன்று இருந்ததது என்பதற்கு சில பாடல் அடிகளையும் இறையானார் களவியலுரையும் துணை நிற்கின்றன. சங்கம் நிலை பெற்ற ஆண்டுகளையும் அதன் உறுப்பினர் விபரங்களையும் வைத்து, அதனை இல்லை என்று மறுக்கும் அறிஞர் கூட்டமும் இருந்தது.அவர்களை நாம் பின்பற்றவுமும் இல்லை. அவர் தாம் எடுத்து வைக்கும் கருத்துக்களை எடுத்து கொள்ளவும் இல்லை. கடவுள் மறுப்பு போல் காலம் காலமாக அதுவும் ஒரு கொள்கை முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சங்கம்என்ற ஓர் அமைப்பு இருந்திருக்கும். புலவர்கள் மறுமலர்ச்சி காலமாக அது திகழ்ந்திருக்கும் என்பதே இக்கட்டுரையின் சாரம்சமாகும். அதனை தொகைப்பாடல்களான ஐங்குறுநூற்றின் வழி அறிய முனையும் முயற்சியே இக்கட்டுரையாகும்.
சங்க இலக்கியமும் சிறப்புக்கூறுகளும்

                சங்க இலக்கியங்களை முச்சங்க உருவாக்கங்களாகப் பார்க்கிறோம். முனிதனின் பரிணாம வளர்ச்சி போல் சங்கப்பாடல்களும் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன. கி.மு.,3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.,3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்க இலக்கிய உற்பத்திக்காலமாகப் பார்க்கிறோம். இயற்கையைப் பாடுபொருளாக்க முற்படவில்லை. பாடல்களில் பின்னணியாகவே சங்க இலக்கியம் பார்க்கிறது.

                இலக்கண மரபு என்பது சங்க இலக்கியங்களில் மிக உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டு அடி வரையறையில் நெகிழ்வுற்றுப் பரவியுற்றது. அகநானூறு திணை துறைக்குறிப்புகளுடன் எழுந்த நூல் என்பார் தமிழண்ணல்.

பரிணாம வளர்ச்சி
                சங்க இலக்கியங்களாவன தன் பெயரைக் கூட தெரிவிக்க விருப்பம் இல்லாத (அல்லது) எத்தனிக்காத புலவர் பெருமக்களின் கைகளில் புலமையை வெளிப்படுத்தும் ஆவணமாக, ஆட்சி அதிகாரத்திற்குப் பிடிபடாத காளைகளாகத் திகழ்ந்துள்ளது. எடுத்துக்காட்டு நற்றிணை, குறுந்தொகை.
அதன்பின், ஆட்சியாளர்கள் தங்கள் பெயர் சொல்லும் ஆவணமாக, புகழ் பாடும் பொதிவுகளாகக் கண்ட கலை வடிவமாகப் பாடல்கள் மாறிப்போனது. எடுத்துக்காட்டு; புறப்பாடல்களில் கொடைத்திறம் பற்றியன. வேந்தர் தம் வீரம் பற்றியன, பதிற்றுப்பத்து.

இதுவரை தாம் சிந்திக்காத பாதையில் பயணப்பட்டன. சங்க இலக்கியக்கூறுகளைத் தாங்கிய எச்சங்களான பரிபாடல். கடவுள், நதி என்ற ஒற்றுமையில்லாத அருவ, உருவக்கூறுகளை வேண்டுமளவு வர்ணித்து புலமைச் சூட்டில் குளிர் காய்ந்தன இலக்கியங்கள். இது இலக்கிய வீழ்ச்சிக்குப் பொருளாதாரம் பெருங்காரணமாகிப் போன தன் ஆவணமே ஆற்றுப்படை இலக்கியக் கூட்டங்கள் ஆகும். அக்கினிக் குஞ்சினை வார்த்து எடுத்த பாரதியையும் சீட்டுக்கவி எனும் இலக்கிய பிச்சைப்பாத்திரம் ஏற்க வைத்தப் பொருளாதாரம் என்ற பொல்லா அரக்கனின் கோர முகம் பற்றித் தமிழ் இலக்கிய உலகில் உள்ளோர்க்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விரிப்பின் அகலும்.

     வறிற்றுக்குச் சோறிட்டவனையும், வயிற்றுப்பசியையும் விதந்தோதிய பொழுதே இலக்கியம் செத்து விட்டது எனலாம். புதுமைப்பித்தனின் மரண வாக்குமூலமான,“‘இலக்கியம்பணக்காரர்களின் பொழுதுபோக்கு; அதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்காதீர்கள் உயிரைக் குடித்துவிடும்என்ற வாக்கியத்தின் நீண்ட பசி ஓலமே ஆற்றுப்படைகள் ஆகும். இவற்றில் திருமுருகாற்றுப்படை மட்டுமே விதிவிலக்கு. பரிபாடல் போன்ற கடவுள் துதி வடிவம் ஆகும். ஆற்றுப்படை வடிவத்தைக் கடவுளுக்கென்று அர்ப்பணிக்க எண்ணி, அது வயிறு கழுவிய காதையாகிப் போனது தான் சங்க இலக்கிய இருத்தலியல் கோலம் ஆகும்.
         அழகியல் பாடிய கவி வடிவம் வேந்தர் முடி புகழ்ந்து, அடி புகழ்ந்து, கடவுளைக் கொஞ்ச காலம் கொண்டாடி விட்டு, அக்கூட்டம் கஞ்சிக்கே வழியில்லாமல் திரிந்த அவலகாலத்தைப் பாடி மறித்தது சங்க இலக்கிய வரலாறு ஆகும். அது குற்றுயிரும் குலை உயிருமாக வாடிக்கிடந்து பின் இலையுதிர் காலம் கடந்து வரும் வசந்தம் போல் மறுதுளிர்களைத் தலை நீட்ட விட்டதன் ஆவணங்களே ஐந்திணை ஐம்பது, எழுபது, திணைமொழி, திணைமாலைகள் படைப்புகள் ஆகும்இவற்றை எல்லாம் உற்று நோக்கின் ஒரு செய்தியானது புலப்படும் புலவர் கூட்டத்தின் வளமை மாறி வறுமைக்கோலம் மீட்டெடுக்கப்பட்ட காலமே கி.மு., 3 முதல் கி.பி., 3 வரை ஆகும்.

ஐங்குறுநூறுபுதுமைப்படைப்பு
                புலவர்கள் தாம் மனதளவிலும், பொருளாதார நிலையிலும் வளப்பட்டு ஒற்றுமையுடன் இருந்த காலத்தில் குழுப்படைப்புகள் முகிழ்த்தன. அவ்வாறு முகிழ்த்த இலக்கியங்களைத் திட்டமிட்ட தொகுப்புகள் என்றுதொகையியல்என்ற நூலில் பாண்டுரங்கன் அவர்கள் கூறியிருப்பார். அவ்வகையில், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவைக் கச்சிதமாகக் கட்டமைக்கப் பட்ட இலக்கியத் தொகுதிகள் ஆகும். மேற்கண்ட மூன்றனுள் ஐங்குறுநூறு புலமைச் செழுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அதற்கான சான்றுகள் இதோ.

  • அடி வரையறையில் புதுமை
  • எண்ணிக்கையில் கலியை விட அதிக பாடல்கள்
  • நெறியாளுமை
  • பத்துப்பத்து எனத் திணைக்கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை
  • உரிப்பொருளை முதன்மைப்படுத்துதல்
  • கலைச்சொல்லாக்கம்
  • மரபு பேணல்

பொதுவாக செவ்வியல் கவிதை போன்ற கவிதைகளை தற்போது நாம் படைக்க முனைப்பு காடடுவதில்லை. போதும் என்ற சலிப்புணர்வு சுகித்தலில் வருவது இயல்பே. படைப்புகளுள் புதுப்புது வடிவம், வண்ணம் நாடுவது மனித இனத்திற்குள் பரிணாம வளர்ச்சி அடைவ பற்றிய உந்துதல் சற்றும் தணியாமல் இருப்பதே காரணம் ஆகும். அது எல்லா வகையிலான வளர்ச்சிகளுக்கும் பொருந்தும். ஓயாமல் ஏற்படும் மன உந்துதல்  மனித இனத்தை மட்டும் வளர்ச்சிக்குட்படுத்தி உலக ஜீவராசிகளை எல்லாம் ஊனமாக்கி நிற்கிறது. உள்ளத்துக் கிடக்கைகளைப் பாளைகளில் ஓவியமாக்கிப் பரிதவிப்பைத் தணித்து ஒரு வழித் தடத்தில் மடைமாற்றம் செய்த செயலிலிருந்து படைப்பு முயற்சி பிரசவிக்கின்றது.

          சங்க இலக்கியப் படைப்புகளுக்கு முந்தைய பழம் நாட்டுப்புறப்பாடல் வடிவங்கள், கதைப்பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்தப் பழம்பாடல்களே இலக்கணச் செழுமை மேலிட்டு நிற்கும் ஆசிரியப்பா வகையினவே ஆகும். இது ஒரு வகையில் குறையே ஆகும். கிரேக்கத் தேசத்து இலியட், ஒடிசி போன்றவற்றோடு நம் பாடல்களை ஒப்பிட முடியாது. தமிழ்க்கவிதைகள் தனிரகமானவை.
சங்கமும் திட்டமிட்ட தொகைப்பாடல்களும்

       சங்கப்பாடல்கள் ஆசிரியம் என்ற ஒரு வகைப்பாவிலே எழுதப்பட்டிருப்பது, அது ஏறத்தாழ 300 ஆண்டுகள் நிலை பெற்றிருந்ததை நோக்கும் போது ஓர் உண்மையானது புலப்படும். பொதுமை பேணுவதற்காகவும் ஒருமித்த உணர்வுடையோரை வளர்த்தெடுப்பதற்காகவும் புலமைப் பயிற்சிக்கூட்டங்கள் உறுதியாக இருந்திருக்கும். அவ்வகை அமைப்புகளின் நெறியாளர்களாக மூத்த புலவர்கள் இருந்திருப்பர். மேலும், அரசின் உதவியுடன் அவை இயங்கியிருக்க வேண்டும். ஆரிய அரசன் பிரகத்தனிடம் தமிழர் அகமரபு குறித்துக் கபிலரிடம் கேட்டது வழிப்போக்கர் உரையாடலுக்கு நிகரான ஒரு செயல்பாடன். தமிழ்க்கவிதை மரபுகளைப் படித்துத் தமிழில் அழகான பாடலைப் பாடி அதனைக் குறந்தொகை இடம்பெறச் செய்துள்ள ஆரிய அரசன் யாழ் பிரம்மதத்தனின் செயலையும் ஆர்வக் கோளாறு என்ற ஒரு நிலையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. புலமையைப் பேணி வளர்க்கக் காலம் காலமாகப் புலவர்கள் சிரத்தை எடுத்திருப்பர். இவர்களால் தான் மதுரை எழுத்தாளனும் ஆவூர் மூலங்கிழாரும் தண்கால் பொற்கொல்லனாரும் புலவர் புகழ் புலவர் பெருமகன் புலனழுக்கற்று அந்தணாளனும் ஒரே இலக்கிய வடிவத்தைக் கைக் கொண்டுள்ளனர்.

கலித்தொகையும் ஐங்குறுநூறும்
                புலவர் கூட்டமைப்பில் அவர்களுக்குள் இணக்கம் உள்ளவர்களால் ஏற்பட்ட கூட்டு முயற்சியே கலியாகவும் ஐங்குறுநூறாகவும் மலர்ந்துள்ளன.
               கலித்தொகை                                                                ஐங்குறுநூறு
1. குறிஞ்சிகபிலர்                                                              குறிஞ்சிகபிலர்
2. முல்லைசோழன் நல்லுருத்திரன்                        முல்லைபேயனார்
3. மருதம் - மருதனிளகனார்                                             மருதம் - ஓரம்போகியார்
4. நெய்தல் - நல்லந்துவனார்                                            நெய்தல் - அம்மூவனார்
5. பாலைபெருங்கடுங்கோ                                             பாலைஓதலாந்தையார்
(பாண்டிய நாடு, பாரதக் கதைகள்)                               (சேரர் காலத்தொகுப்பு)

கலித்தொகை என்பது கூட்டு முயற்சியின் முதற்காலகட்டமாக இருக்க வேண்டும். இந்நூலின் தொகுப்பாசிரியர் குறித்த கருத்து அரிதியிட்டுக் கூறும் படியாக இல்லை. உரைகாரர் நச்சினார்க்கினியரின் கருத்தினை ஆமோதித்து தொகுத்தவர் நல்லந்துவனார் என்ற நிலைப்பாட்டிற்கு வருகிறோம். புhடல் எண்ணிக்கைகளும் அவர்களுக்குள் சீராக, சமமாகப் பகிர்ந்து கொண்டு பாடல்களை இயற்றியுள்ளனனர். முதன்முயற்சியை விட அடுத்த முயற்சி செம்மைப்பட்டு அது ஐங்குறுநூறு எனும் பெயரில் காட்சிப்படுகிறது. புதிக இலக்கியம் என்ற பக்திப்பனுவல் வடிவங்கட்கு இப்பத்துக்கள் வழிகாட்டியாய் நின்றன என்பது திண்ணம்.

     ஐங்குறுநூற்றைத்தொகையியல்எனும் நூலில் திட்டமிட்டத் தொகுப்பு எனக் கூறுவார் .பாண்டுரங்கன். அக்கூற்று தரும் மிகச்சரியான திட்டம் இங்கு அமைந்துள்ளது. அம்முயற்சியால்,
  1. ஆசிரியப்பா மரபு மீறாமை         
  2. குறைந்த அடிகளில் அதிகப் பாடல்களால் தமது கருத்தை நிறுவுதல்
  3. துணைகளின் பொருட்களை மிகுதியாகக் காட்சிப்படுத்துதல்           
  4. வனப்பு நிலை எய்தியுள்ளது.            
  5. கருப்பொருட்களால் பத்துக்களின் பெயர்கள் அமைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு புதுமை ஒன்று புலனாகின்றது. இயற்கையைப் பின்னணியாக்கி மாந்தர்களை முன்னிலைப்படுத்திய காலம் போய் குருகும் குரங்கும் எருமையும் கிள்ளையும் விவரணை செய்யப்படுகின்றன.
அரங்கேற்ற வாய்ப்புகள்

      வேந்தர் தம் அவையிலே நூல்கள் அரங்கேற்றம் செய்யப் பெற்று வந்துள்ளன. பிற்காலத்தில் பக்திப் பனுவல்கள் கோவில்களில் அரங்கேற்றம் ஆகியுள்ளன. கம்பராமாயணம் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ஐங்குறுநூறு சேர மன்னர்கள் காலத்து இலக்கியமாக இருக்கக்கூடும். அதில் இடம்பெற்றுள்ள முதல் பத்தான வேட்கைப்பத்து ஆதன் அவினி என்ற சேர மன்னனின் பெயர் கொண்டே வருகிறது. ஐங்குறுநூற்றின் உரையாசிரியர்கள் .வே.சா., பெருமழைப்புலவர் ஆகியோரும் சேர மரபின் மன்னனே இவர் என நிறுவுகின்றனர். ஆக, சோழ அரசன் அவைக்களத்தே ஐங்குறுநூறு இயற்றப்பட்டிருக்கலாம். தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆவான். சேரர் வாழ்த்து முதற்பத்து,‘வாழி ஆதன் அவினிஎன்றவாறு தொடங்கியுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். சேரர் தவிர, சோழன் கிள்ளி வளவனைப் பற்றி 2 பாடல்களிலும் பாண்டிய மன்னன், குறுநில மன்னர்களையும் தலா 1 பாடல்களால் பாடியுள்ளார். சேரர் பற்றி நெடியதாய் ஒரு போற்றிப் பத்துப்பாடியுள்ளார். மலைநாட்டுப் புலவர் தொகுக்க, மலை சூழ் சேர மண்டல வேந்தரால் இந்நூல் தொகுப்பிக்கப்பட்டது. சேரர் தம் இலக்கிய ஆவணப்படுத்தும் ஆர்வத்தை அழகுற உணர்த்துகிறது.
திணை வைப்புமுறை

                ஐந்திணை வரிசையைப் பொறுத்த அளவில் நடுவண் ஐந்திணை  என்ற ஒரு தொடரால் தொல்காப்பியர் முடித்துக் கொள்கிறார். மேலும், திணைப் பெயர்களைப் பொறுத்த அளவில்,“மாயோன் மேய காடுஉறை உலகமும்என்று தொடங்கும் நூற்பாவின் அடிப்படையில் முதலில் முல்லை நிலமும் தொடர்ச்சியாகக் குறிஞ்சி, மருதம், நெய்தல் என்றவாறு கூறுகிறார். இங்கு வைப்புமுறையானது, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்றவாறு பின்பற்றப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் கூறும் திணை வைப்பு முறை இந்நூலில் பின்பற்றப்படவில்லை.

ஆழங்கால்படுதல் - உத்தி
                ஒரு திணை குறித்து 100 பாடல்கள்ஃதிணைகளில் உள்ள ஒரு கூறினைக் குறித்துப் பத்து பாடல்கள் அக்கூறு குறித்த விவரணைகள் என்று படிப்படியாக இலக்கியங்களுக்குள் ஆழங்கால்பட்டு கிடக்கும் பாடல்களில் குறிப்பிட்ட திணை குறித்த அனைத்து வகைத் தரவுகளும்  குவிந்து கிடக்கின்றன.

களவன்பத்து உப்புகல்
                சங்கப்பாடல்களில் நெய்தல் திணையில்அலவன்என்ற பெயரில் பல இடங்களில் நண்டுகள் குறித்த பதிவுகள் இருக்கும். நண்டுகளை வைத்து விளையாடும் விளையாட்டிற்குஅலவனாட்டுதல்என்று பெயர். நண்டுகள் பிரசவித்ததும் இறந்து விடும் என்பதையும் அறிந்திருப்போம். அதன் குணநலன்கள், வாழிடம் குறித்த செய்திகள் எல்லாம்களவன் பத்துஎன்ற ஒரு பத்தில் நிறைவுற்று நிற்கின்றன. நெற்கதிர்கள் நிறைந்து கிடக்கும் வயல் வெளிகளிலும் நண்டுகள் வாழும் தன்மையுடையன என்பதே இப்பத்து சொல்லாமல் சொல்கின்றன. அவற்றின் உணவு, இருப்பிடம், இயல்புகள், வாழ்க்கைச்சுழற்சி பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன.

நண்டின் தோற்றம்
    நண்டுகளின் உடல்களில் புள்ளிகள் நிறைந்துள்ளன. எனவே,‘புள்ளிக்களவன்என்றே 3 இடங்களில் குறிக்கப் பட்டுள்ளன. அவற்றின் கண்கள் நீண்டு வேப்பம் பூ போல் உள்ளன. (30)
நண்டுகள் உணவுகள்
    நண்டுகள் நெற்கதிர்களை உணவாக உண்கின்றன. மேலும், ஆம்பல்,வயலை, வள்ளை போன்ற கொடிகளை அறுத்து உணவாக மாற்றும் தன்மை கொண்டன.
இருப்பிடம்
      நீரும் சேறும் நிறைந்த வயல்களில் நண்டுகள் வாழும் தன்மையுடையன. அவை வளைகட்டி வாழும் தன்மையுடையன. அவற்றின் வளைகளும் நீர் பொதிந்த வயல்களுக்குள்ளே இருக்கின்றன. இதனை,
                அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
                 முள்ளி வேர் அளைச் செல்லும் (ஐங்., 22:1-2)
என்ற அடிகளால் அறியலாம். சேற்றில் நீர் முள்ளிச் செடிகளின் அடியுனில் வளைகளை அமைத்து நண்டுகள் வாழ்வது இங்கே புலனாகின்றது.

      இவ்வாறாகப் பல்லுயிரினச் சமூகம் வாழ்ந்துள்ளமை, ஒவ்வோர் உயிரியின் தனித்துவங்கள், இயல்புகள் குறித்து மிக நுட்பமாகப் பத்துக்கள் விவரிக்கின்றன.ஒரு துறைக்கோவை போன்ற தனி இலக்கிய உருவாக்கத்திற்கு இது மாதிரியான பத்துகள் துணை புரிந்துள்ளன.

                ஒரு குறிப்பிட்ட உயிரினம் எதிர் வரும் காலத்தில் அழிந்துபடினும் அதை நவீனத் தொழில் நுட்பங்கள் மூலமாக மீட்டுருவாக்கம் செய்வதைப் போல் ஐங்குறுநூறானது பல்லுயிர்ச்சமூகம் பற்றிய ஆவணப் பெட்டகமாக அமையும். தமிழ் இலக்கிய உலகு செழுமையும் செம்மாந்த நிலையும் அடைந்த காலமாக ஐங்குறுநூறு எழுதப்பட்டகாலத்தைச் சொல்லலாம். சேர அரசர்கள் இலக்கிய உருவாக்கங்களில் (தொகுப்பித்தல்) பேரார்வம் கொண்டு இயங்கியதனைப் பதிற்றுப்பத்து,ஐங்குறுநூறு வழி அறியலாம். சங்க இலக்கியங்களைக் கட்டமைப்பு நிலையில் சேரர்கள் தொகுத்தமையால் நமக்கு இலக்கியங்கள் சிதறாமல் கிடைத்துள்ளன என்பது திண்ணம்.

.பிரசன்னா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
கிருஷ்ணன் கோவில் - 626 126.


No comments:

Post a Comment