சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் எனும் சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார் முதலான பன்னிரண்டு ஆழ்வார்களும் முறையே தமிழக சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் நெடுந்தொலைவு நடந்தும் பல்லக்கிலும் பயணம் செய்து ஆங்காங்கு கோயில் உறையும் கடவுளரைப் பாடினர்.அவர் தம் பாடல்கள் பிற்காலத்துத் தேவாரங்களாகவும், திருவாசகமாகவும், திவ்வியப்பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டன. அக்காலச் சூழலில் இஃது அரும்பணியாகும். இவ்வாறு தொகுக்கப்பட்டத் தேவாரப் பாடல்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும், அவற்றை முதல் இராசராச சோழன் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு) மீட்டெடுக்க முயன்ற போது அவற்றுள் பெரும்பாலானவை கரையானால் அழிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் பக்தி இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. ஓலைச்சுவடிகளில் நானூறு ஆண்டுகளுக்கு மேல் அவை இருப்பது என்பது அரிய செயல். தேவாரப் பாடல்களைக் கோயில் தோறும் ஓதுவார் பாடுவதற்கு முதல் இராசராசனும் இன்னபிற பிற்காலச் சோழ மன்னர்களும் தத்தம் காலத்தில் ஆக்கம் செய்துள்ளனர்.
இவ்வாக்கம் பக்தி இலக்கியத்திற்குச் செய்யப் பெற்ற மிகப்பெரும் நன்றிச்செயல் என்பதில் ஐயமில்லை. இவ்வாக்கத்தின் ஊடே பாடல் பெற்ற தலங்களின் தனித்தமிழ்ப் பெயர்களும் அங்கிருந்த இறைவனின் தனித்தமிழ்ப்; பெயர்களும் இறைவியின் தமிழ்ப் பெயர்களும் தாம் பெற்றிருந்த தமிழ் வடிவத்தை இழந்து சமஸ்கிருத வடிவம் பெற்றன. இது தானே நிகழ்;ந்த நிகழ்வன்று. திருத்தலப் பெயர்களில் தமிழ் சமஸ்கிருத மாற்றத்திற்கு சோழர்காலத்தில் மிகுந்த ஆதிக்கம் பெற்றிருந்த உள்ளளுர்ப் பிராமணர்களும் வெளியூர்ப் பிராமணர்களுமே காரணம் ஆவர் என்பதை சோழர்கால அரசியல் வரலாறும் சமுதாய வரலாறும் உறுதிப்படுத்துகின்றன.
சோழர், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த பிராமணர்களை வட இந்தியாவில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் தம் ஆட்சி இடமான தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பிராமணர்கள் மட்டும் அல்லாமல் தொடர்ந்து தானாக வந்த பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறினர். சோழர்காலத்தில் அவர் காலத்திற்கு முன்பிருந்த செங்கற்கோயில்களும் மண சுவர்க் கோயில்களும் கருங்கற்களால் செய்யப்பெற்ற கற்றளிகள் ஆக்கப்பெற்றன. சோழ அரசர்கள் மட்டுமின்றி அவர்தம் அரசியரும் அவர்தம் குடும்பத்தாரும் இவ்வாறு கற்றளிகள் ஆக்கிய தொண்டில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல் இராசராச சோழனின் வளர்ப்புத் தாயான அவனது தமக்கை குந்தவை தேவி, பின் வந்த செம்பியன்மாதேவி ஆகியோர் இத்தகு பணியில் முன்னின்றனர். கோயில்கள் மிகப்பெரிய அளவில் சோழர்காலத்தில் எடுப்பிக்கப்பட்டன. முன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்றளிகள் ஆக்கப்பெற்றன. அக்கோயில்களில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்கு சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த சிவ பிராமணர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிவ பிராமணர்கள் சோழர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் பேசப்படுகிறது. சமஸ்கிரும் மட்டுமே அறிந்தவர்களும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் அறிந்தவர்களும் கோயிலுள் நுழைந்தமையால் இறைவனைப் பூசை செய்யும் மொழியாக சமஸ்கிருதம் சோழர்காலத்தில் எள்தாக இடம்பெற்றது. ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியார் கோயிலுல் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கருவறை மூலவரை அருகு இருந்து வழிபட அனுமதிக்கப்பட வில்லை என்பதற்குத் தில்லை சிற்றம்பலக் கோயிலில் நடராசரை வணங்க நந்தன் என்ற ஒடுக்கப்பட்ட குலத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சான்றாகும். நந்தனின் போராட்டத்தைப் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் திரு நாளைப் போவார் நயினார் வரலாறு எனும் புராணத்தில் வருணித்துள்ளார். ஆக, சோழர்காலத்தில் சிவள் கோயில்களில் கருவறை பிராமணர்களுக்கு மட்டுமே பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதும் இறைவனை வழிபடும் மொழியாக சமஸ்கிருதம் ஆயிற்று என்பதும் தெளிவு.
சோழருக்கு முன்பு நாட்டை ஆண்ட பல்லவர், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு குலத்தினர் எனினும் அவர் காலத்திலேயே வட இந்திய குப்தர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேதங்களும் வைதீக முறைகளும் தமிழ்க் கோயில்களில் நுழைந்துவிட்டன. இவை சோழர் காலத்தில் பேராதிக்கம் பெற்றன. சோழர் காலத்தில் வாழ்ந்த பிராமணர்கள் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதங்களைக் கற்கவும் கோயில் பணி செய்யவும் அரசர்களால் நிலங்கள், மானியமாக வளங்கப்பெற்றன. பிரம்மதேயம் எனும் அருட்கொடைக்குப் பெயரிட்டு பல ஊர்கள் வரியிலி நிலமாக ஆக்கப்பட்டு பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. பிரம்ம என்றால் பிராமணர். தேயம் என்றால் நாடு. பிராமணருக்கு உரிய நாடு என்பது பொருள். ஆரசன் தன் ஆட்சிக்கு உதவும் முகமாக நன்கு கற்ற பிராமணர்களைப் பிரம்மதேயத்திடம் கேட்டு பெற்றுக்கொள்ளவது உண்டு. எனவே அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் கணிசமாக இருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனை அமைச்சரவையில் பொறுப்பு வகித்த இரண்டு பிராமண அதிகாரிகள் கொன்று விட்டனர். அவர்களை அடையாளம் கண்டு பின்னாளில் அரசனாகப் பொறுப்பேற்ற முதல் இராசராச சோழன் மரண தண்டனை விதித்துள்ளான் என்பது வரலாறு. புpரம்மதேயங்களுக்கு அரசன் செய்யும் மிகக் கூடுதலான சலுகைகள் மக்களிடையே சீற்றத்தை உண்டாக்கி உள்ளன. மூன்றாம் இராசராசன் காலத்தில் (1223) தலைச்சங்காடு என்ற பிரம்மதேயக் கிராமத்தில் அவ்வூர் மக்களால் அங்கிருந்த நிலவுரிமைப் பத்திரங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டது.
தமிழ்க் கல்விக்குத் தம் நானூறு ஆண்டுகால ஆட்சியில் எந்தச் சிறு முயற்சியும் செய்யாத சோழ மன்னர்கள் நூற்று எழுபத்தோரு பிரம்ம தேயங்களை மானியங்கள் கொடுத்து உதவி செய்ததோடு ஆங்காங்கே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் முதலான நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் வியாகரணங்களையும் பிராமணப் பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருந்து கற்க கடிகை எனும் கல்லூரி வசதி செய்து தந்திருந்தார்கள். தமிழருடைய பண்பாடடிற்குப் பொருந்தாத திரௌபதி கதையைக் கொண்டுள்ள மகாபாரதத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார்கள். அம்மட்டுமின்றி ஊர் நடுவே உள்ள அம்பலத்தில் மகாபாரதத்தை நன்கு கற்ற வேத பிராமணர் ஒருவர் சமஸ்கிருத மொழி வழியே எடுத்துச் சொல்ல மானியம் வழங்கிஅ து தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுதலையாகத் தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள், திருக்குறள், திழுமந்திரம், சிலப்பதிகாரம் முதலானவற்றைக் கதையாகச் சொல்லவோ, சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கவோ எவ்வித முயற்சியும் செய்யப்பெறவில்லை. காஞசிபுரத்தில் கடிகை என்ற பெயருடைய ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகமே பல்லவர் காலத்தில் இருந்து நடத்தப்பட்டது.
ஆக, சோழஅரசியலும் சோழ அரசரிடமும் அருகு இருந்த பெரும் செல்வாக்கைப் பெற்று முன்பே கட்டப்பட்டிருந்த சைவக் கோயில்களுக்கு உள் பூசை செய்யும் உரிமையுடன் சென்ற சமஸ்கிருதம் மட்டும் அறிந்த பிராமணர்கள் அந்தக் கோயிலின் பெரையும் கோயில் மூலவர் பெயரையும் கோயில் இருந்த ஊரின் பெயரையும் மாற்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள் சமஸ்கிருதமாக்கப்பட்ட ஊர்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ்ப் பெயரைக் கொண்டிருந்தன என்பதும் இன்னும் சொல்லப் போனால் சைவ நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற அவ்வூர்ப் பெயர்கள் மூலவர்கள் பெயர்கள் தூய தமிழிலே இருந்தன என்பதும் அவை சோழர் காலத்தில் தான் மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் எளிதாக ஊகிக்கத்தகும். இவை இவ்வாறு மாற்றம் பெற்றன என்பதற்கு ஓரிரு சான்று: உலகப் புகழ்பெற்ற நடராசர் உருவத்தை மிகப் பழங்காலம் தொட்டுப் பெற்றிருக்கும் கோயில் திருநல்லம் என்ற பெயருடையதாகும். இந்த அழகான ஊர்ப்பெயர் பின்னர் கோனேரி ராஜபுரம் என்று மாற்றம் பெற்று இன்றுவரை தொடர்கிறது. காவிரி ஆற்றுத் தென்கரையில் உள்ள ஊர் திரு ஆவூர் என்பதாகும். இவ்வூர் பசுபதீஸ்வரம் என்று மாற்றப்பட்டு இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர் என்றும் இறைவி மங்கள நாயகி என்றும் மாற்றம் பெற்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருமுதுகுன்றம் எனும் பெயர் விருத்தாசலம் என்று ஆயிற்று. இறைவனின் பெயர் விருத்தகிரீஸ்வரர் என்றும் இறைவியின் பெயர் விருத்தாம்பிகை என்றும் என்றும் மாற்றம் பெற்றன. காவேரிளூ தென்கரையில் உள்ள சேரி நாட்டுத் திருமறைக்காடு வேதாரண்யம் என்று மாற்றப்பட்டது. திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் மறைவனம் என்றே இவ்வூர் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள இறைவனின் பெயர் வேதாரண்யீஸ்வரர். இறைவியின் பழந்தமிழ்ப் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. அப்பெயர் வேதாரண்ய ஈஸ்வரி என்று மாற்றப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பாண்டிய நாட்டு ஊர் திருப்புத்தூர். இவ்வூர் ஸ்ரீதலீஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் சிவகாமி அம்பாள் என்றும் மாற்றம் பெற்றன. சம்பந்தரின் தேவாரம் திருப்புத்தூர் இறையாரை (272) என்பதாகும். குhவிரித் தென்கரையில் உள்ள திரு சோற்றுத் துறை மாற்றம் பெற்று அவ்வூர் அம்மன் அன்னபுரணி என்று ஆக்கப்பெற்றார்.
‘‘ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே''
என்பர் ஞானசம்பந்தர் (பா.294). புகழ் பெற்ற மயிலாடுதுறை இறைவன் மயூரநாதர் என்று மாற்றம் பெற்றார். அம்மனி;ன் பெயர் அபயாம்பிகை என்று மாற்றம் பெற்றது. சம்பந்தர் இவ்வூரில் உள்ள இறைவன் மேல் பாடிய தேவாரப்பா பல, மயிலாடுதுறை என்றே முடிகிறது. (பா. 404 – 413) சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள திருவேட்களம் எனச் சம்பந்தரால் பாடப்பெற் திருத்தலம். சம்பந்தர் இங்குள்ள இறைவனை வேட்கள நன்னகராரே எனத் தேவார எண் 415 முதல் 424 வரை பாடுகிறார். வேட்கள நன்னகரார் என்ற திருப்பெயர் பாசுபதேஸ்வரர் என்றும் அம்மன் பெயர் சற்குணாம்பாள் என்றும் மாற்றப் பெற்றன. திருமுதுகுன்றம் எனும் பெயர் ஞானசம்பந்தரால் பாடல் தோறும் முதுகுன்றே முதுகுன்றே என்று (570 இல் இருந்து 578) பாடப்பெற்றது. இப்பெயர் விருத்தாசலம் என்று இறைவனின் பெயர் வேதகரீஸ்வரர் என்றும் மாற்றப்பெற்றன. தொண்டை நாட்டில் உள்ள திருவோத்தூர் எனும் திருத்தலக் கடவைள ஓத்தூர் சடையீர் (581), ஓத்தூர் நாட்டீர் (583) எனத் திருப்பித் திருப்பி சம்பந்தர் பாடியிருப்பார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என்னும் அம்மையின் பெயர் பால குசலாம்பிகை என்றும் மாற்றம் பெற்றன. சென்னைக்கு அண்மையில் உள்ள திருவேற்காட்டு இறைவனை ஞானசம்பந்தர் ஷவேற்காடு உயர்ந்தார்' என்று பாடுவார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என இறைவனுக்கும் பாலாம்பிகை என்று இறைவிக்கும் பிற்காலத்து மாற்றப்பெற்றன. சிவஞான போதம் எழுதிய மெய்கண்டதேவரின் ஊர் திருத்தூங்கானை மாடம் என்பதாகும். இப்பெயரை ஒவ்வொரு பாடலிலும் சொல்லி சம்பந்தர் பாடியுள்ளார் (634-644). திருத்தலத்தின் பெயர் பிரள காளேஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் கடந்தைநாயகி என்றும் மாற்றம் பெற்றன.
கிட்டத்தட்ட பெரும்பான்மைத் தலங்கள் தேவார காலத் தமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை எய்தவைக்கப் பெற்றன. ஊர்ப் பெயரையும் உள்ளுர் இறைவனின் பெயரையும் இறைவியின் பெயரையும் நூற்றாண்டுகளாகச் சொல்லிச் சொல்லி வழிபட்ட தமிழ் மக்கள் முற்றும் வேற்று மொழியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது எப்படி பொறுத்துக் கொண்டார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமக்கு இழைக்கப்படும் ஆதிக்கச் செயல்களையும், தம் மொழிக்கு இழைக்கப்படும் அழிவுச் செயலையும் எதிர்க்க ஆற்றல் அற்ற கோழைகளாக இருந்தனர் என்பதையே இச்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவர்கள் இத்தகு அஞ்சி அடங்கும் அடிமைகளையும் பிரம்மதேயமாகப் பெற்றுத் துய்த்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. ஒரு சமயம் அரசன் அறிவித்த பிரம்மதேய கிராமங்களின் எல்லையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த உழுகுடிகளின் வீடும் நிலமும் இருந்தன. ஊரிமை பெற்ற அம்மக்களின் ஒப்புதல் பெறாமலே சோழ மன்னன் அவர்களது நிலத்தையும் வீட்டையும் பிரம்மதேய அந்தணருக்கு நன்கொடையாக வழங்கி ஊர்க்கோயில் கல்வெட்டிலும் வெட்டச் செய்துவிட்டான். ஆதனால் பாதிப்படைந்த அவ்வூர் மக்கள் வாய் திறக்கவே இல்லை. அப்படியே ஏற்றுக்கொண்டு அங்கு புதிய எஜமானர்களான பிராமணர்களின் நிலத்தில் உழுகுடியாக வேலை செய்தார்கள்.
நன்றி.
க.ப.அறவாணன்
முன்னாள் துணைவேந்தர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
பல்லவர்களை வடுகராக்க எத்தனை முயற்சி 😁😁😁😁😁
ReplyDeleteஅதில் உண்மை இல்லை. .