பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, April 5, 2012

அகநானூற்றில் சுனைகள்

முன்னுரை

                தமிழர்களின் வாழ்வு இயற்கையோடியைந்தவை. இயற்கை நெறிக் காலத்து இலக்கியங்களும் அவை, பாடப்பட்ட காலத்தை ஆடி போல எதிரொளிக்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுள் காணப்படும் கூறுபாடுகள் முழுமையையும் ஆய்வதற்கு எத்தனிப்பின் இன்னும் பல்லாயிரம் சங்கம் கூட்டப்பட வேண்டும். அத்தகு சங்கக் கவிகளைச் சுவைத்தல் நமக்குக் கிடைத்த பேறு ஆகும். அவற்றுள் அகநானூறு களிற்றுயானை நிரை புலப்படுத்தும் சுனைகள் குறித்து ஆய்வதாக அமைகின்றது.

சுனைகள்

          இயற்கை நீர் நிலைகளுள் சுனையும் ஒரு வகையாகும். சுனைகள் மலைகளில் காணப்படும் நீர்நிலை வகையாகும். சுனைகள் மலைப்பகுதியில் வாழ்ந்த விலங்கினங்கட்கு நீராதாரமாக விளங்கி வந்துள்ளன. மலைநாட்டு மக்கள் அவற்றை குடிநீருக்காகப் பயன்படுத்தியதாக அகநானூற்றில் குறிப்பு இல்லை. அகநானூற்றில் களிற்றுயானை நிரையில் 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் அவைஇ வளமுணர்த்தவும் வறுமையுணர்த்தவும் கூறப்பட்டுள்ளன.

அமைவிடம்

          சுனைகள் குறிஞ்சி நிலத்து நீர்நிலைகளுள் ஒன்றாகும். இவை உருவாகும் சிறிய நீர்நிலை ஆகும். இதனை,

                     ‘‘ பாறை நெடுஞ்சுனை …………….’’
                                                                                       -        அகம் 2:4

எனும் அடியின் வழி அறியலாம்.

சுனை நீரின் தன்மை

          சுனை நீர் உண்ணத் தகுந்த நீர் ஆகும். இது சுவை மிக்க நீராகக் காட்டப்பட்டுள்ளது. இன்தீம் பைஞ்சுனை (59) என்றும் தீம்பெரும் பைஞ்சுனை (78) என்றும் குறிக்கப்கடுகின்றது.

சுனைகள் இலக்கியத்தில் பெரும் பங்கு

          நீருடைய சுனைகள் வளத்தினைக் குறிக்கவூம் (2, 38) நீரற்ற சுனைகள் நிலத்தின் கொடுமையை உணர்த்தவூம் (1, 119) எடுத்தாளப்பட்டுள்ளது. சுனையில் ‘சூர்எனும் பெயராலான வருத்தும் தெய்வம் உள்ளதாகவும் (91) வந்துள்ளன.

வளமுணர்த்தல்

          அகநானூற்றுப் பாடல்கள் (2,38,59) ஆகியவற்றில் வளமுணர்த்தும் விதமாகச் சுனைகள் வந்துள்ளன.
          பாறைகளிடையில் சுனைகள் அமைந்துள்ளன. அதன் நீரையும் பலாப்பழத்தின் சுனையையும் தேனையூம் சேர மாந்திய ஆண் குரங்குகானது களிப்புடன் கிடந்து உறங்கும். இதனை,

        ‘‘ஊழுறு தீங்கனி உண்ணுநார்த் தடுத்த
         சுராற் பலவின் சுளையொடு ஊழ்படு
          பாறை நெடுஞ்சுனை …………..
              ……………………………..
        நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்’’
                                                                                  -        அகம் 2: 2-7

எனும் பாடலடிகள் வழி அறியலாம்.

                    தலைவி ஒருத்தித் தன்னுடைய கண்ணைச் சுனையில் பூத்த மலருக்கு நிகராகச் சொல்கிறான். அதனை,

              ‘‘நீடு இதழ் தலைஇய கவின்பெறு நீலம்
              கண் என மலர்ந்த சுனையும்’’
                                                                   -        அகம் 38: 10-11

எனும் வரிகளால் அறியலாம்.

வறுமையுணர்த்தலில் சுனை

          பாலை நிலத்திற்கான புனைவுகளில் நீர் நிலைகளே முதலிடம் பெறுகின்றன. நீர் வறண்ட சுனையானது பாலை நிலக்கொடுமைகளை உணர்த்துகின்றன. மேலும், பாலை நிலத்துச் சுனைகளின் தன்மைகளை,

                 ‘‘……………………. ஆறை காய்பு
                 அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்’’
                                                                                 -        அகம் 1 - 11-12

எனும் அடிகள் உணர்த்துகின்றன.
         
          பாலைநிலத்துச் சுனைகள் காய்ந்த தன்மையில் இருக்கும். அந்நிலத்துப் பாறைகள் வெப்ப மிகுதியால் காய்ந்து கிடக்கின்றன அவ்வடிகள் உணர்த்துகின்றன. மேலும், நீரில்லாமல் யானை படும் துன்பத்தை,

                ‘‘…………….. வருத்தமொடு உணீஇய மண்டி
                 படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
               கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை’’
                                                                         -        அகம் 119 -  17-19

எனும் அடிகள் விளக்குகின்றன. யானை ஒன்று நீர் வேட்கை மிகுந்து நீர் உண்ண வேண்டி காலை மடித்துக் கொண்டு வற்றிய சுனையைத் தன் துதிக் கையால் துழாவ அங்கு நீரில்லாமல் போனதைப் பார்த்து பெருமூச்சு விட்டது.

சுனையின் வனப்பும் மக்கட் பயன்பாடும்

          சுனையில் நீலம், செங்கழுநீர் போன்ற பூக்கள் மலர்ந்திருந்தன. இவற்றில் தேன் உண்ண வண்டுகளும் வந்து சுனையை வனப்புறந் செய்துள்ளன. இதனை,

                        ‘‘…………………… வண்டினம்
                         சுனைப்பூ நீத்து, சினைப்பூப் படர’’
                                                                                   -        அகம் 71 - 4 – 5
எனும் அடிகளின் வழி அறியலாம்.

          மகளிர் தம் கூந்தலில் சுனையில் பூத்த மலர்களைச் சூடி மகிழ்ந்துள்ளனர் எனும் செய்தியை,

‘‘இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த துண்நறுங்
 கழுநீர்ச் செண்இயல் சிறுபுறம்’’
                                                                   -        அகம் 59 -  13 – 14

எனும் அடிகளால் அறியலாம்.

சுனையும் அணங்கும்

          சுனையில் ‘சூர்எனும் தெய்வம் இருந்ததாக சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்புகள் வருகின்றன. ‘சூர்என்பது தீண்டி வருத்தும் தெய்வம் ஆகும். இது பெண்டிரைத் தீண்டும் தன்மையது. சூர் தங்கியிருக்கும் சுனைனயினைச் சூர்ச்சுனை என்றே குறிப்பிட்டுள்ளனர். அதனை,

                  ‘‘அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
                  சூர்ச்சுனை துழைஇ…………….’’
                                                                          -        அகம் 91 -  3 – 4
எனும் அடிகளால் அறியலாம்.

முடிவுரை

          இதுகாறும் சுனையின் தன்மை, அதுதன் பயன்பாடு, அகவியல் இலக்கியங்களுள் பெறும் பங்கு குறித்து இக்கட்டுரை வழி விரிவாக அறியப்பட்டது.


நன்றி.
ம.பிரசன்னா

No comments:

Post a Comment