பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Sunday, November 2, 2014

தமிழ் இலக்கியத்தில் வள்ளைப்பாட்டு

    உலகில் தோன்றிய இலக்கியங்கள் அனைத்திற்கும் தாய் நாட்டுப்புற இலக்கியங்களே ஆகும். ஹோமரின் இலியட், ஒடிசி, இந்திய தேயத்தின் மகாகாவியங்களான இராமாயணம், பாரதம் போன்றவையும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் வழக்கிலிருந்து கிளைத்தவைகளாகும். சங்க இலக்கியஙங்களும் நாட்டுப்புற இலக்கியங்களே என்ற கூற்றும் தமிழகத்தில் நிலவி வருகின்றது. இவ்வாறு பல்வேறு நாட்டுப்புற இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெற்றுத் தனி இலக்கிய வகையாகக் கருக்கொண்டுள்ளது. அவ்வகையில் வள்ளைப்பாட்டு எனும் இலக்கிய வகையும் நாட்டுப்புற வடிவத்தில் இருந்து ஏட்டிலக்கிய வடிவத்தினைத் தழுவியுள்ளது. இவ்வள்ளைப்பாட்டினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பல்வேறு பெயர்கள்
                வள்ளைஉலக்கை; வள்ளைப் பாட்டு என்பது பெண்கள் உலக்கை கொண்டு உரலில் ஏதேனும் பொருளினை இட்டு குத்தும் போது ஏற்படும் களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடப்படுவது ஆகும். இது உரற்பாட்டு, உலக்கைப் பாட்டு, அம்மானை வள்ளை, பொற்சுண்ணம், வள்ளைக் கூத்து எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பெற்று வருகின்றது. இப்பாட்டினை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் ~அவலிடி| என்று சுட்டுகின்றார்.

தொல்காப்பியத்தில் வள்ளைப்பாட்டு
                வள்ளைப்பாட்டு என்ற இலக்கிய வடிவத்தினைத் தொல்காப்பியர் நேரடியாகச் சுட்டவில்லை. ஆனால், உரையாசிரியர்களே வள்ளைப்பாட்டின் வடிவத்தைக் கூறுகின்றனர். வஞ்சித்திணைக்குரிய பதிமூன்று துறைகளில் ``குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளை’’ என்னும் ஒரு துறையினைத் தொல்காப்பியர் நவில்கின்றார். அதற்கு ``நெல் முதலியவற்றை உரலிற்பெய்து உலக்கை கொண்டு குற்றும் மகளிர், தாம் பாடும் பாடல்களில் வேந்தனது வெற்றித் திறத்தைப் போற்றியுரைக்கும் முறையில் அமைந்த புறத்துறையாகும்’’ என்று இளம்பூரணர் உரைசெய்கின்றார்.  தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை என்பதனையும் சுட்டுகின்றார். மொத்தத்தில் உலக்கையிடிக்கும் பெண்கள் வேந்தனின் சிறப்பைச் சொல்லிப் பாடுவதே கொற்றவள்ளை என்பது புலனாகின்றது.

சங்க இலக்கியத்தில் வள்ளைப்பாட்டு
                பல்வேறு இலக்கிய வடிவங்கள் தொல்காப்பியத்தில் கருக்கொண்டு சங்க இலக்கியத்தில் வளர்ச்சியும் வளமும் பெற்றன. அவ்வாறே இவ்வள்ளைப்பாட்டும் வளர்ச்சி நிலையினை எட்டியது.
               ``வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
       கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
       போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
       உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்’’
                                                                                    -              புறநானூறு, 22 (14–17)
என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டிக் அந்த இடத்தில் உலக்கையினை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கின்றனர்.   இது எதெற்கென்றால் நெல் குற்றுவதற்காக அல்ல. வள்ளைக் கூத்தினை அக்களத்தில் நிகழ்த்துவதற்காக என்று சுட்டப்பெற்றுள்ளது. இதன்வழி புறநானூற்றுக் காலத்தில் வள்ளைப்பாட்டு கூத்து வடிவில் இருந்துள்ளமையை அறியமுடிகின்றது. மேலும், வஞ்சித் துறைகளுக்கு உரையெழுதிய சோமசுந்தர பாரதியார் வள்ளை என்பதும் முருகன் மேல் வைத்து ஆடும் வள்ளி என்பதும் வௌ;வேறானது என்று இரு கூத்துக்களையும் இனம் பிரித்துக் காட்டுவதும் ஈண்டு சுட்டத்தக்கதாகும்.

                வயலில் விளைந்த நெல்லின் கதிரினைக் முறித்து கரிய நிறமுடைய உலக்கையால் பச்சை அவல் இடிப்பதனை,
                           `கூழைக் கூந்த`ற் குறுந்தொடி மகளிர்
            பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
            பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்’’
                                                                        -              அகநானூறு, 141 (11–18)
என்ற அகநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகின்றன. இஃதேபோல் குறுந்தொகையும் ``பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை’’ (குறுந், 238) என்று பச்சை அவலினை இடிப்பதனைச் சுட்டுகின்றது. மேலும்,
                      ``பாஅடி உரல பகுவாய் வள்ளை
          ஏதில மாக்கள் நுவறலும் நுவல்ப’’
                                                           -              குறுந்தொகை, 89 (1–2)
என்று தலைவி வள்ளைப்பாட்டு பாடியதை குறுந்தொகை உணர்த்துகின்றது.
                     ``தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்’’
                                                                         - மலைபடுகடாம், 342
என்று வயலில் திணை அறுக்கும் மகளிர் பாடும் வள்ளைப் பாட்டின் இனிமையினை மலைபடுகடாம் புகழ்கின்றது. கலித்தொகையில் தான் வள்ளைப்பாட்டு குறித்து அதிகப் பாடல்களும் செய்திகளும் காணப்பெறுகின்றன. முற்றிய திணைக் கதிர்களைச் சந்தன மரத்தால் ஆன உரலில் இட்டு முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் குற்றியதனை,
                         ``முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின்
           வகைசால் உலக்கை வடான்வயின் ஒச்சிப்’’
                                                           -              கலித்தொகை, 40 (4–5)
என்ற பாடலடியும், மூங்கில் நெல்லினை பாறை உறலில் இட்டு யானைத் தந்தத்தால் குற்றியதை,
                        ``பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
           கோடுலக்கை யாகநற் சேம்பின் இலைசுளகா
           ஆடுகழை நெல்லை அரையுரலும் பெய்திடுவாம்
           பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபாடுற்று’’
                                                              -              கலித்தொகை, 41 (1–4)
என்ற பாடலடிகளும் உணர்த்துகின்றன. கலித்தொகையின் 42 வது பாடல் தலைவன் செய்த கொடுமையினை வள்ளைப்பாட்டாக பாடத் தோழியினைத் தலைவி அழைப்பதாக அமைந்துள்ளது. 43 வது பாடல் முருகனைப் பாடுவது போல் தலைவனை வள்ளைப்பாட்டால் பாடுவோம் வாவென்று தோழி தலைவியை அழைப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு காலமாற்றத்தால் வள்ளைக் கூத்து வள்ளைப்பாட்டாக மாறியுள்ளதற்குச் சங்கச் செய்யுள்கள் சான்று பகர்கின்றன.

காப்பியத்தில் வள்ளைப்பாட்டு
                வள்ளைப்பாட்டின் தன்மையினை உணர்ந்த இளங்கோவடிகள் மூவேந்தர்களின் தலைநகர்களிலும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடுவதாகச் சுட்டுகின்றார்.
                             ``தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
              பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்’’
             ``பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
              மாடமதுரை மகளிர் குறவரே’’
             ``சாந்துரல் பெய்து தகைசால் அணிமுத்தம்
              வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டாங்’’
என்று வாழ்த்துக் காதையில் (26, 27, 28) புகார் நகரத்து பெண்கள் கரும்பு உலக்கை கொண்டும், மதுரை நகரத்துப் பெண்கள் பவள உலக்கை கொண்டும், வஞ்சி நகரத்துப் பெண்கள் சந்தன உரலிலும் குற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.

                பெண்கள் பாறையின்மேல் பவழத்தாலாகிய உரலில் புதிய மணிகளைச் செந்நெல்லாகப் பெய்து யானைத் தந்தமாகிய உலக்கையால் குற்றிக் கொண்டே வள்ளைப்பாட்டினையும் அம்மானைப் பாட்டினையும் பாடி திவிட்டநம்பியைப் புகழ்ந்ததாகச் சூளாமணி செப்புகின்றது. இதனை,
                      ``பைம்பொன் னறைமேற் பவழ முரலாக
          வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
          அம்பொன் மலைசிலம்ப வம்மானை வள்ளையுடன்
          கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினர்’’
                                                               -              சூளாமணி, (சுயம்வரச், 106)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. ஆனால் பெருங்கதையோ,

                     ``அரையுர னிறைய வைனப் பாசவல்
         இசையொடு தன்னைய ரியல்பு புகழ்ந் திடிக்கும்
         அம்மை வள்ளை…….’’
                                                              -              பெருங்கதை, 2.14(50–52)
என்று குறவரின மகளிர் வில்லால் வீழ்த்தப்பெற்ற யானைத் தந்தத்தினை உலக்கையாகக் கொண்டு மலைநெல்லினைப் பாறையில் இட்டுக் குத்தித் தனது தமையன்மார்களைப் போற்றிப் பாடியதாகக் கூறுகின்றது. சங்க காலத்திலிருந்து தலைவனையும், இறைவனையும் வாழ்த்திப் பாடிய வள்ளைப்பாட்டு பிற்காலத்தில் தமையன்மார்களுக்கும் உரித்தானதாக வளர்ச்சியடைந்துள்ளதனை பெருங்கதை உணர்த்தி நிற்கின்றது.

சிற்றிலக்கிங்களில் வள்ளைப்பாட்டு
                பாண்டிய மன்னன் மேல் காதல் கொண்ட ஒரு பெண், பக்கத்து வீட்டில் மணமான பெண்கள் எல்லாம் வள்ளைப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கின்றனர்; அதைப்போல  யானும் பாண்டியனின் கொடி, தேர், அவனது மணிமுடி போன்றவற்றைப் புகழ்ந்து வள்ளைப்பாட்டு பாடுவதோ என்று ஏங்குகின்றாள். இதனை,
                          ``கொடி பாடித் தேர்பாடித்
            கொய் தண்தார் மாறன்
            முடிபாடி முத்தாரம்
            பாடித் - தொடியுலக்கை
            கைம்மனையில் ஒச்சப்
            பெறுவனோ? யானும் ஓர்
            அம்மனைக் காவல்
            உளேன்!
                                                               -              முத்தொள்ளாயிரம், 69
என்ற பாடலடி சுட்டிநிற்கின்றது. இவ்வாறு வளர்ச்சியடைந்த வள்ளைப்பாட்டு பரணி இலக்கியத்தில் தனக்கெனத் தனியிடத்தினைப் பிடித்துக்கொண்டது. அனைத்துப் பரணி இலக்கியங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக,

                        ``இந்த உரற்கண் இவ்வரிசி
            எல்லாம் பெய்து கொல்யானைத்
            தந்த உலக்கை தனை ஒச்சிச்
            சலுக்கு! மொலுக்கு எனக் குற்றீரே’’
                                                           -              கலிங்கத்துப்பரணி, 527
என்று முரசங்களாகிய உரலில் பற்களாக அரிசியினைக் கொட்டி, கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்களை உலக்கையாக்கி ~சலுக்கு மொலுக்கு| என்னும் ஒலி உண்டாகும்படி குற்றுங்கள் என்று பேய்கள் கூறுவதாக அமைந்துள்ளது. இதில் முதலில் காளியைப் பாடி பின் குலோத்துங்கனையும், அவனது சிறப்புக்களையும், அவனது படைத்தலைவன் கருனாகரனையும் இறுதியில் திருமாலையும் பாடுவதாக இடம்பெற்றுள்ளது. இரணியவதைப் பரணியில் இதைப்போல பதினைந்து பாடல்கள் இருக்கின்றன. ஒரு இலக்கியத்திற்குள் இருந்த வள்ளைப்பாட்டு மாணிக்கவாசகரின் கைபட்டுப் ~~திருப்பொற்சுண்ணம்|| எனும் பெயரில் தனி இலக்கியமாக வடிவெடுத்தது. இது இருபது பாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. நிலவுலகம் முழுவதும் உரலாகக் கொண்டு மேருமலையை உலக்கையாக்கிக் கொண்டு உண்மையென்னும் மஞ்சள் இட்டுத் தில்லை நாதனுக்குப் பொற்சுண்ணம் இடிப்போம் (திருப்பொற்சுண்ணம், 9) வாருங்கள் என்று மாணிக்கவாசகர் அழைக்கின்றார்.

நாட்டுப்புற இலக்கியங்களில் வள்ளைப்பாட்டு
                பாட்டிலக்கியமாக இருந்த வள்ளைப்பாட்டு ஏட்டிலக்கியமாக மாறியது. இருப்பினும் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறுகின்றது. தலாட்டு முதல் ஒப்பாரி வரை பல்வேறு பாடல்களில் இடம் பெறுகின்றது.
                               ``பள்ளிதனைக் கூட்டி
              புதமாக அவல் இடித்து
              இடைச்சிதனைக் கூட்டி
              இலைபோல அவல் இடித்து’’
என்ற தலாட்டுப் பாட்டினை இதற்குச் சான்று பகரலாம். மேலும்,

              ``கங்காணி ஐயாவே வாருமையா
               ஒரு காரியம் செல்லுறேன் கேளுமையா
               சில்லறை கங்காணி சேவுகமே நீங்க
               சீமைக்குப் போய்வாங்க அக்கரையா
               கங்காணி ஐயாவே பயப்படாத
               கப்பல் கடல்கர வந்து சேரும்
               ஆளுங்க அன்புக இல்லாட்டி தொரை
               வட்டிகள் வாசிகள் போட்டெடுப்பார்’’
என்று மலையகப் பெண்களின் உலக்கைப் பாடலினை சாரல்நாடன் சான்றாகக் காட்டுகின்றார். வள்ளைப்பாட்டில் மனதைப் பறிகொடுத்த பாட்டுக்கொருபுலவன் புலவன் பாரதி கூட தன் குயிற்பாட்டில் (37–38),
                        ``சுண்ண மிடிப்பார்த்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
            பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்’’
என்று வள்ளைப்பாட்டினைக் குறித்துச்சென்றான்.

வள்ளைப்பாட்டின் இலக்கணம்

Ø  உலக்கை ஒச்சி இடிப்பவரின் அன்பிற்குரியவர் இப்பாட்டின் தலைவராக அமைவர்
Ø  முதலில் தலைவனையும், மன்னனையும் பாடிய வள்ளைப் பாட்டு பின்னாளில் தெய்வத்திற்கும் (பொற்சுண்ணம்), தமையன்மார்களுக்கும் (பெருங்கதை) உரியதாக வளர்ச்சியடைந்துள்ளது.
Ø  போர்க்களத்தில் பேய்கள் கூழ் சமைப்பதற்கு முன் தலைவனை வாழ்த்தி வள்ளைப்பாட்டு பாடும் மரபு பரணி இலக்கியங்களில் முகிழ்த்தது.
Ø  ``சும்மேலோ சும்மலக்காய்’’ என்ற ஈற்றடியுடன் முடியுமாறு அமைந்து வரும்.
இவ்வாறு வள்ளைப்பாட்டு நாட்டுப்புற வடிவமாக இருந்து கூத்தாக மலர்ந்து பின்னர் தனி இலக்கியவகையாக வடிவெடுத்துள்ளது.

.கந்தசாமிபாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜூக்கள் கல்லூரி,

இராசபாளையம்.

No comments:

Post a Comment