பாரதியார் – பரப்பிரம்மம்
முன்னுரை
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்பார்
பாவேந்தர். பாரதியின் படைப்புவெளி என்பது இன்று வரையிலும் ஆய்ந்து அளக்க முடியாத வெளியாகும்.
பாரதியின் படைப்புகள் பல கோணத்தன்மையில் இயங்குதலுக்கு அடிப்படை அவரின் வாழ்வியல்
பிழிவாகும். அன்றன்றைய வாழ்க்கை அனுபவத்தை எழுத்து வடிவில் பாரதி பதிவு செய்தது
அவரது பன்முகத் தன்மைக்கு வித்தாக அமைகின்றது. அவ்வகையில் பாரதி பாடல்களில்
மறைந்துள்ள நிலைப்பாடுகள் மற்றும் படைப்பு வெளிகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
பாரதியார்
பாரதியார் கவிஞர் உலகில் ஒரு தனி வகையானவர்
ஆவார். தனிமனித வாழ்வில் முரண்கள் பல கொண்டு எந்தவொரு கட்டத்திலும் சமுதாயத்தோடு
தன்னைச் சமரசம் செய்துகொள்ளாதவர். சமகாலப் படைப்பாளிகள், உறவினர்கள்,
குடும்பத்தவர் என எவருடனும் பிடிப்பின்றி மனம்போன போக்கில் வாழ்ந்தவர் ஆவார்.
பொதுவாகப் புறச்சூழல்கள் படைப்பாளிகளை வெகுவாகப் பாதிக்கும். அதிலும் பாரதி
புறச்சூழல்களால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவராய் வாழ்ந்திருக்கிறார். பாரதியின்
படைப்புகள், சிந்தனைகள், பெரும்பாலும் வறுமையின் வார்ப்புகளாகவும் ஒரு
படைப்பாளியின் தார்மீகக் கோபமாகவே உள்ளன.
படைப்புகளும்
பொருண்மைகளும்
பாரதி படைப்பு வகைகள் புதிய சொற்களாலும்
தளங்களாலும் நிரம்பியவை. பாரதியின் உரைநடைகளும் சிற்சில சிறுகதைகளும்
மணிப்பிரவாளத் தன்மையிலே இயங்குகின்றன. இவற்றிற்கு அடிப்படை அவரது வாழ்வியல்
சிறிது காலம் காசியில் கழிந்ததும் இயல்பான சமஸ்கிருதப் புலமையுமே ஆகும். சமகாலப்
படைப்பாளிகள் அயல்நாட்டு வரவுகளான புதினங்களையும், தூய தமிழ் உரைநடை என்ற
மறுமலர்ச்சி உரைநடைகளையும் யாத்துக் கொண்டிருந்த காலத்தில் பாரதி மட்டும் சற்று
விலகி நின்று தன்னுணர்ச்சிப் படைப்புகளால் தன்னுடைய படைப்புவெளியை
நிரப்பியுள்ளார். தனக்கென்ற அடையாளமே அடையாளமின்மை தான் என்ற இயங்கியலே பாரதி
படைப்புகளில் காணலாகின்றது. புதுமைப்பித்தன் சில இடங்களில் நிகர நோக்கத்தக்கவர்
ஆவார்.
பின்நவீனத்துவவாதிகளும்
படைப்புகளும்
பொதுவாக, நவீனத்துவத்தின் நீட்சியாக பின்
நவீனத்துவம் என்ற தொடர் கையாளப்பட்டாலும் பின் நவீனத்துவத்தின் இயங்கியல்
வெகுவிரிவானது. படைப்புக் கூறு, எல்லைக் கோடு, வரையறைகள் என எவற்றோடும் பின்
நவீனத்துவம் இணைந்து இயங்காது. சொற்கட்டுமானமே இவ்வகையான படைப்புகளுக்குப் பொது
அடையாளம். வடிவக் கட்டுமானம் என்ற பேச்சுக்கே இடமில்லாத தன்மை இவ்வகைப்
படைப்புகளில் காணப்படுகின்றது. உள்ளடக்க மீறல், அறிதலில் ஒழுங்கவிழ்ப்பு இவர்களின்
தனித்துவ அடையாளம் ஆகும். படைப்புகளுள் படைப்பாளியின் பல்துறைப் புலமை, சமூகம்
மீதான தர்க்கரீதியான நிலைப்பாடு, எவரும் சந்திக்காத கோணங்கள் என்ற தன்மைகளே
இவ்வகைப் படைப்புகளில் மிளிரும். படைப்புகள் என்பவை இன்பகரமானவை. சமுதாயத்திற்கு
நலம்பயப்பவை என்பதை எல்லாம் மறுதலித்து குறிப்பிட சமூகத்தின் அவலக்குரல் பதிவு
என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. இத்தகு பதிவுகளிலும் பாரதியின் பதிவுகள் தனிவகை.
தன்னுடைய விளிம்புநிலை வாழ்வியலை எழுதுபலகையாக்கித் தனது கோபக்கணைகள் எனும் கூரிய
சொற்களினால் படைப்புகளை வடித்துள்ளார். பொதுவாகப் பின் நவீனத்துவப்
படைப்பாளிக்கும் தீவிரவாதப் பெண்ணியவாதிகளுக்கும் இத்தகு குணநலமே இருக்கும்.
பாரதியாரின்
பின் நவீனத்துவ வடிவங்கள்
பாரதியாரின் வசன கவிதை முயற்சியும்
புதுக்கவிதைகளும் அவரது இலக்கிய உலகில் மைல்கல் ஆகும். இலக்கியம் என்பது
வரையறைக்குள் கருத்துப்பொதிவுகளை கூறல் வேண்டா, தன்னுடைய அப்போதைய மனநிலையில்
கருத்துச் சட்டகத்தில் இயங்கினால் போதும் எனும் உட்பொதிவையே இப்படைப்புகள்
காட்டுகின்றன. பின் நவீனத்துவாதிகளுக்கென்ற உலகம் பல நிறங்களை உடையது. திறமைகளும் பன்னூல் புலமைகளும் நிலைத்த
கொள்கைகளும் எதுவும் இன்றி தற்காலிகத் தன்னுணர்வே பாரதியின் கவிக்கூறுகள் ஆகும்.
உளவியல் அடிப்படையில் தம் உள்ளக் குமுறல்களுக்குத் தன் கவித்துவத்தால் தனக்குத்
தானே மருந்திட்டுக்கொண்ட மனிதன் பாரதி ஆவார். பிரெஞ்சுக் கொள்கைகள் மீது
ஈடுபாடுடைய பாரதியின் பிரெஞ்சு தேசக் கோட்பாடான பின் நவீனத்துவப் பொதிவுகள் பொலிவுற்று இருப்பது தனிச்சிறப்பாகும்.
பாரதி புதினத்தில் பின் நவீனத்துவக் கூறுகள்
பாரதியின்
சிறுகதைகள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு பிற படைப்பாளிகளோடு ஒத்துப்போவதில்லை.
கதைக் களம், மொழிப் புலப்பாடு என்பவற்றில் பாரதி வேறுபடுகிறான். பூகம்பம் என்ற புதினத்தில்
பொதிய மலைச்சாரலில் இருக்கும் ‘வேளாண்குடி’ என்ற ஊரில் இருக்கும் ஒரு குடும்பம் பூகம்பத்தால் அழிகிறது. அத்தருணம் நிறைமாதக் கர்ப்பிணியாய் இருக்கும்
கோமதிக்கு மகப்பேறு ஏற்படுகின்றது. அவளுக்கு மரணமும் கிட்டுகின்றது. அப்போது அவள்
பிழைத்திருக்கும் நாத்தனாரான கைம்பெண் விசாலாட்சியிடம் குழந்தையை
அடைக்கலப்படுத்திவிட்டு அவளையும் மறுமணம் செய்யுமாறு கூறி இறப்பதாகக் கதையை
நிறைவுசெய்திருக்கிறார். சமூகத்தில் இருவகை நீதிகள் இருப்பதை பாரதி இவ்விடத்தில்
சாடுகிறார். மறுமணம் கைம்பெண்களுக்குக் கட்டாயமாக நடைபெற வேண்டும் என்ற
உறுதிப்பாட்டை இக்கதையில் கூறுகிறார். இக்கனத்த பொருளை,
‘‘…. நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான
சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரி அடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன்
சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்திற்கு உதவி செய்யும்
சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு.
இரண்டாவது,
நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச்
சந்திரிகை என்று பெயர் வை’’ என்றாள்.
இந்த ஒரு கூறை அமைப்பியல் அடிப்படையில் சிறுகதையாகக் கொள்ளலாம். ஆனால், இது சந்திரிகையின் கதைத் தொகுப்பு என்ற புதினத்தில் முதல் அத்தியாயமாக இப்பதிவை
பாரதியார் கூறியுள்ளார். பொதுவாகப் புதினம் என்பது நெடுங்கதை ஆகும். அதன் முடிவுக்
கட்டத்திலே கதை நிறைவு என்ற தன்மை இருக்கும். இப்புதினத்திலோ ஒவ்வொரு அத்தியாயமும்
ஒரு ஒரு முடிவைக் கொண்டதாக அமைந்துள்ளது. இப்படைப்பை எழுதி முடிப்பதற்குள்
பாரதியார் இறந்து விட்டதால் முற்றுப் பெறாத தன்மையிலும் இப்படைப்பு அமைந்துள்ளது.
இது வடிவ அமைப்பில் முழு மொத்தமாக ஒரு புதினமாகவும் தனித்தனியே கதை முடிவு காணும்
சிறுகதைகளாகவும் இடம் பெறுவதை வைத்து பாரதி உள்ளடக்க ஒழுங்கவிழ்ப்பு மற்றும்
நேர்கோட்டு வாசிப்பு முறை மீறலை இப்படைப்பினுள் பின் நவீனத்துவ அடிப்படையில்
கையாண்டிருப்பதைக் காணலாம்.
சிறுகதைகளில் பின் நவீனத்துவக் கூறுகள்
பாரதியின் சிறுகதைகள் வடிவ
அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு நிகழ்ச்சித் துண்டாக மட்டும் இயங்கி
முடிகின்றன. எடுத்துக்காட்டாக, கத்திச்சண்டை என்ற சிறுகதையில் அவர் என்ன சொல்ல
வருகிறார்?, உட்பொதிவு என்ன? என்பதெல்லாம் கண்டறிய முடியாது. ஒரு சாமியார் இன்னொரு
சாதுவிடம் பாவனை கத்திச் சண்டை செய்வதாக இக்கதை அமைகின்றது. சிறுகதை என்றால் சிறிய
அளவிலான பாத்திரக் கையாளல், பெரிய உரையாடல்கள் இல்லாமல், சுருக்கென குத்தும்படியான
முடிவு என்பதை எல்லாம் பாரதியின் சிறுகதைகளில் காணஇயலாது. இதிலிருந்து பாரதியின்
சிறுகதைகளில் மையமறுப்பு என்ற பின் நவீனத்துவக் கூறு பதிவாகியுள்ளது.
புதிய படைப்பு முயற்சிகள்
பாரதியாரின் வேதப்பயிற்சி,
வடமொழி அறிவு, ஆங்கிலக் கல்வி, பிரெஞ்சு மொழியறிவு, பொதுவுடைமைக் கொள்கை மீதான
ஈர்ப்பு, சமுதாயப் பிரக்ஞை, கவித்துவம் ஆகியவையே அவரது புதுப்புதுப் படைப்பு
முயற்சிகளுக்கு வித்தாகும். இவை காரணமாகவே விநாயகர் நான்மணிமாலை எனும் யாப்பு
அடிப்படையிலான பாடல்களைத் திறம்படப் பாடிய பாரதியாருக்கு, புதிய கோணங்கி,
காலனுக்கு உரைத்தல் என்ற இலக்கிய வகைமைக்கு வேறுபட்ட படைப்புகளை உருவாக்கக்
காரணமாக அமைந்தன.
படைப்புவெளி
பகவத் கீதைக்கு ஆத்மார்த்தமாக
உரை எழுதிய பாரதியாரின் எழுத்துகளில் வைஷ்ணவப் பாஷ்யக்காரர்களின் உன்னதப்
பக்திநெறி புலப்படுகின்றது. மேலும்,
‘‘காக்கை குருவி எங்கள் சாதி உயர்
வானும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்’’
எனுமிடத்து ஒரு மிகைப் பொதுவுடைமையாளனைப் பாரதியிடம் பார்க்க முடிகின்றது.
பாரத நாட்டின் விடுதலைக்காக
அவர் பாடிய நாட்டு வணக்கம், பாரதமாதா, எங்கள் தாய், வெறிகொண்ட தாய், பாரதமாதா
திருப்பள்ளியெழுச்சி, நவரத்தினமாலை, திருத்தசாங்கம் முதலிய பாடல்களால் அவரைச்
சிறந்த விடுதலை விரும்பியாகப் பார்க்க முடிகின்றது. மேற்கண்ட படைப்புகளுள்
சிற்றிலக்கியக் கூறுகள் தத்தம் உள்ளடக்கங்களைப் பெறாமல் புதுவகை உள்ளடக்க
மாறுதலுக்குப் பாரதியார் உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம்
என்ற உள்ளீட்டினை உட்புகுத்தி அத்துக்களை மீறும் படைப்புகளாக இவை பிரவேசிக்கின்றன.
மேலும், சித்தாந்தசாமி கோயில், மனப்பெண், பரசிவ வெள்ளம், நான், உலகத்தை நோக்கி
வினவுதல், கற்பனையூர் ஆகிய படைப்புகள்
சித்தர் நெறிகளைக் கைக்கொண்டனவாக அமைந்துள்ளன.
குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய
படைப்புகளின் வாயிலாகப் பாரதி உருவகக் கவித்திறன் சிறப்பாகப் புலப்படுகின்றது.
பெண்விடுதலை, பெண்மை, புதுமைப் பெண் முதலிய படைப்புகளால் பாரதியின் முற்போக்குவாதி
முகம் நமக்குத் தெரிகின்றது.
முடிவுரை
பாரதி எடுத்துக்கொண்டப் படைப்புப்
பொருண்மைகளும் எழுத்துச் சித்தங்களும் ஓர் அமைப்பினுள் அடங்காது. தன்னை மிதித்த
திருவல்லிக்கேணி பாரத்தசாரதிப் பெருமாள் கோயில் யானையைப் பெருந்தன்மையுடன்
மன்னித்ததாக ‘கோயில் யானை’ எனும் தலைப்பினில் கட்டுரை வரைந்துள்ளார் பாரதி. இதுவே
அவரது இறுதிப்படைப்பு ஆகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது பாரதியை எந்தக்
கூட்டினுள் அடைப்பது? பாரதி வாழ்வியல் போலவே அவரது படைப்புகளும் வைரக்கற்கள்
போன்று பன்முகம் கொண்டவையாக இருப்பதன் வழி பாரதியையும் பாரதியின் படைப்புகளையும்
படைப்புலகின் பரப்பிரம்மமாகக் கருதுதல் நலம்.
ம.பிரசன்னா,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
கலசலிங்கம் பல்கலைக் கழகம்,
கிருஷ்ணன்கோவில்.
No comments:
Post a Comment