பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, November 11, 2014

பாரதியின் விகடசித்திரம்

‘‘தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
பைந்தமிழ்த் தேனீ......’’

என்று தன் தாசனால் பாடப்பெற்ற முண்டாசுக்கவி கதை, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, இதழாலன் எனப் பல்வேறு முகம்கொண்டவன். கதையிலும், கவிதையிலும், புதுமையினைப் புகுத்தியவன். அஃதே போன்று இதழியலில் புத்தெழுச்சி புதுக்கியவன். பாரதி பல்வேறு இதழ்களில் சேவை புரிந்திரிந்தாலும் ‘இந்தியா’ இதழிலில் செய்த தொண்டு மகத்தானது.  இந்திய தேயத்தின் விடுதலைக்கு எத்தகைய முனைப்போடு செயல்பட்டானோ அதேபோல் ‘இந்தியா’ இதழிலும் வீரியத்துடன் செயல்பட்டான். இவ்விதழிலில் கருத்துப்படம், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு பகுதிகள் அங்கம் வகித்தன. இவ்வங்கத்தில் முதன்மையிடமும் முக்கிய இடமும் பெறுபவை கருத்துப்படங்களே ஆகும். இக்கருத்துப்படங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையினை ஈண்டு நோக்கலாம்.

பாரதியின் விகடசித்திரம்

      இதழாசிரியனின் கருத்தினையும் இதழின் நோக்கத்தினையும் நிறைவேற்றும் பொருட்டு அமைவதே கருத்துப்படம் என்பதாகும். கருத்துப்படம் என்பதும் ஒரு தலையங்கமாகக் கருதப்பெறுகின்றது. பல சொற்கள் கூறுவதை ஒரு கருத்துப்படம் சில கோடுகளின் வழி எளிதில் உணர்த்திவிடுகின்றது. இவ்வகையில் நோக்கும் போது கருத்துப்படம் என்பது இதழில் முதன்மை பெறுகின்றது. இக்காரணத்தால் தான் என்னவோ பாரதி ‘இந்தியா’வின் முதல் பக்கத்தில் இதற்கு முதன்மை இடம் கொடுத்தான்.

      ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ என்று வழங்கப்பெறும் இது தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களில் குறிக்கப்பெறுகின்றது. பாரதியார் இதனை ‘விகடசித்திரம்’ என்றே சொல்லாடுகின்றார். முதலில் டில்லியில் வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ இதழும், ‘இந்தியன் பஞ்ச்’ என்ற இதழும், ‘அவத் பஞ்ச்’ என்ற இதழும் கருத்துப்படங்களை வெளியிட்டதாக அறியமுடிகின்றது. ஆனால், தமிழில் முதன்முதலில் இவ்விகடசித்திரத்தினை வெளியிட்டது ‘இந்தியா’ இதழே ஆகும். இதனைப் பாரதி, ‘‘புதிய அபிவிருத்தி’’ என்ற கட்டுரையில் (13.3.1909) ‘‘தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்’’ என்று குறிப்பதிலிருந்து உணரமுடிகின்றது. இவ்வாறு வெளிவந்த படங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்யும் ஆவணங்களாகவும், அதன் வரலாற்றைக் கூறும் மூலங்களாகவும் அமைகின்றன.

      மார்ட்டின் லூதர்கிங் தனது புரட்சிக் கருத்துக்களை ஜெர்மனி தேயத்தில் பரப்புவதற்குத் துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார். இப்பிரசுரங்களில் பல்வேறு கேலிச்சித்திரங்களை அமைத்து, அதில் தனது படத்தினையும் பங்கேற்கச் செய்து புரட்சி விதையினைத் தூவினான். அதேபோன்று பாரதியும் தனது விகடசித்திரங்கள் வழி அன்றைய அரசியல் சூழல்களையும், சமுதாயம் மீதான தனது மனப்பதிவுகளையும், மக்களின் நிலையினையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய செயல்களையும் சுட்டிக்காட்டி விடுதலை வேள்வியினையும் இவற்றின் வழி வார்த்தெடுத்தான். உணர்வில்லாத மக்களுக்கு உணர்வினை ஊட்டி அவர்களின் தேசிய உணர்வினை ஊக்குவித்தான். ‘இந்தயா’  இதழ் இந்தியாவில் தடைசெய்வதற்குக் காரணமாக ஆங்கிலேய அரசு கூறியது இதில் வெளியான கருத்துப்படமும் சில கட்டுரைகளுமே ஆகும். இவ்வாறு இதில் வெளியான சித்திரங்கள் ஆங்கிலேய அரசுக்குச் சிம்மசொப்பனமானது.

வெள்ளையர்களைச் சாடல்
      ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 போடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்று (8.9.1906) அமைந்திருக்கின்றது. மேலும், இந்திய மாதா என்ற பசுவிடமிருந்து மார்லி ஒட்டப் பால் கறப்பது போலவும் கருத்துப்படம் பதிப்பித்திருக்கிறார். இப்படங்கள் இரண்டிலும் இந்தியர்களை எலும்பும் தோளுமாகவும் வெள்ளையர்களைக் கொளுத்த உடலுடனும் அமைத்து இந்தியாவின் இழிநிலையினை விளக்குகின்றார்.

      எங்கு உரிமை மறுக்கப்படுகின்றதோ அங்கு புரட்சி வெடிக்கும் என்ற கருத்திற்கேற்ப ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளால் இந்தியாவில் புரட்சிக்கனல் வீசியது. கொடூரச் சட்டங்கள் என்ற கோழி குப்பை மேட்டிலிருந்து கூவுகின்றது. இக்கோழியின் குரலைக் கேட்டவுனே ‘சுதந்திர சூரியன்’ உதிப்பது போன்ற (19.12.1908) சித்திரம் வரைந்தார். மேலும், பாரத தேசத்தின் அமைதி என்ற ஏரியானது நவீன உணர்ச்சி என்ற வெள்ளத்தால் உடைபடுகின்றது. ஆங்கிலேயே அதிகாரிகள் அதனை அடைப்பதற்கு ‘புதிய சட்டங்கள்’ என்ற கூடைமண் சுமந்து அடைக்கின்றனர் என்ற கருத்தை விளக்குவதாகவும் சித்திரம் அமைத்தார். இவ்வாறு சித்திரங்களின் வழி மக்களுக்கு அன்றை அரசியல் சூழலைத் தெளிவாக விளக்குகின்றார்.

பொருளாதாரம் சார்ந்த படங்கள்
      பாரதியை நாம் பன்முகம் கொண்டவராகக் கருதுகின்றோம். அதில் பொருளாதார மேதை என்பதும் ஒன்றாகும். ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தான் வருகின்றது என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இது இன்றும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதையும் சிந்தை கொள்ளவேண்டும். மேலும், 17.4.1909 நிதிநிலை அறிக்கை குறித்த சித்திரத்தில் மக்கள் நலனுக்குக் கொடுக்கும் பணம் குறைவு. ஆனால், மக்கள் மீது அடக்குமுறையினைப் பயன்படுத்த உதவும் போலீஸ் இலாகாவிற்குச் செலவு அதிகம் என்ற கருத்தில் அமைந்த படம் நிதிநிலை அறிக்கையினை விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றது.

மிதவாதிகளை விமர்சித்தல்
      பிரிட்டிஷ் ஏகாதிபத்ய  எதிர்ப்புப் பிரசாரம், காங்கிரஸ் மிதவாமிகளைக் குத்தலும் கிண்டலுமாகத் தாக்கும் பிரசாரம் முதலானவை பெரும்பான்மையாகக் கேலிச்சித்திரங்களில் இடம் பெறுகின்றன. நாடு விரைந்து சுதந்திரம் அடைவதற்காகத் தீவிர இயக்கத்தை நடத்தியவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளைப் பாரதி தயக்கமின்றித் தாக்கி எழுதினான். சித்திரம் ஒன்றில் அவர்களைச் ‘சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தான். இவர்களை நிதானக் கட்சியினர், பழைய கட்சியினர், நிதானஸ்தர்கள் என்று அழைத்தான். சுயராஜ்யம் நோக்கிச் செல்லும் காங்கிரஸ் என்ற மாட்டு வண்டியில் திலகர் (தீவிரக்கட்சி) என்னும் காளை பீடுநடை போட்டுச் செல்வதாகவும் மற்றொரு மேத்தா (பழைய கட்சி) என்னும் காளை தடுமாறி இடைவழியில் நகரமுடியாமல் படுத்துவிடுவதாகவும் விமர்சித்துப் படம் வரைந்தார். அஃதோடு அமையாது உலக அரசியல் நிகழ்வுகளைக் கூறியும் மிதவாதிகளை ஒறுத்தார். ‘‘கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’’ (23.3.1907) என்று அமெரிக்க, ஜப்பான் தேயங்களின் அரசியல் சூழ்ச்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளார். மேலும், இப்படத்தின் விளக்கத்தில் ‘கையாலாகாத ஜனங்களின் வாய்க் கூச்சல்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பயத்தில் நடக்கிற விஷயங்கள் நயத்தில் நடக்கமாட்டா’’ என்று மிதவாதிகளின் போக்கால் இந்தியா பயனடையாது என்பதைத் தெளிவுறுத்துகின்றார்.

சுதேசிக் கப்பல் சித்திரம்
      பாரதியின் விகடசித்திரங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம் பாரதி கண்டது தேசியம் என்பதால் தான். ஆனால், சுதேசிக்கப்பலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சுமார் நான்கு படங்களை வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை என்பதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் இதற்கு உதவுங்கள் என்று கூறுவதாகவும், மற்றொன்று தீபாவளித் தாய் பணம் வசூலித்துத் தருவதாகவும் அமைந்திருக்கின்றது. ஒருபடம் தென்இந்தியாவிலே சிலர் மட்டும் சுதேசிக்கப்பலுக்காக வேலை பார்ப்பதால் தான் அது நஷ்டத்தில் ஓடுவதாகவும் அமைத்திருக்கின்றது.

      துருக்கி சுதந்திரம் அடைந்தபோது அதனை விளக்கும் முகமாகவும் விகடசித்திரம் தீட்டினார். மேலும், ஐரோப்பாவில் வெளியாகும் ‘‘பஸ்கினோ’’ எனும் பத்திரிக்கையில் பிரசுரமான படத்தினையும் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளார். வேறு பல இதழ்களில் வெளியான கட்டுரைகளையும் கருத்துக்களையும் விளக்கும் விதமாகவும் சித்திரம் வெளியிட்டார். ஓயாமல் தற்காலச் சித்திரம் காட்டுவதில் ஜனங்களுக்குச் சலிப்பு உண்டாகியிருக்கும். அதனால் போக்குவதற்குப் பழைய புராதனச் சித்திரம் வரைந்து வாசகர்களின் சிந்தனை மேலும், மெறுகேற்றுதல் வேண்டும் என்ற எண்ணத்தில் (9.1.1909) பழைய வீரத்தினை விளக்குவதாக சித்திரம் வரைந்தார். இதே சித்திரத்தினை 2.10.1909 அன்று மீண்டும் வெளியிட்டார். அதில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனங்களுக்கு வீரத்தன்மைருக்கும். ராஜங்கம் சுயாட்சிமுறை தழுவியிருக்கும். அப்போது நமது வீரர்கள் பரதேசத்தாருடன் போர்செய்யப் புறப்படும் போது வாழ்க்கைத் துணைவியர்கள் வாள் கொடுத்து வழியனுப்புவர் என்று இந்தியாவின் சுதந்திரத்தை முன்பே கனித்துக் கூறியிருக்கிறான். அதனால் தான்,

‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’’

சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரப்பள்ளு பாடினான். ஒரே சித்திரத்தினைக் காலச்சூழலுக்கு ஏற்ப இருமுறை பயன்படுத்தி இருவேறு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

      ‘‘இந்தியாவின் குமாரர்கள் ஆனந்தமடைவதைப் பாருங்கள்’’ (20.10.1906) என்று இந்தியர்கள் பண்டிகை கொண்டாடும் போது அதனைச் சாடுகின்றார். மேலும், நம் சந்ததியினர் சந்தோஷத்துடன் பண்டிகை கொண்டாட வகை செய்ய வேண்டுவது நமது கடமை என்பதைனையும் நினைவுபடுத்துகிறார். தமிழ்ப்புத்தாண்டிற்குச் சித்திரம் வரைந்து வாழ்த்துத் தெரிவித்து கவிதை வரைந்து விடுதலை உணர்வினை விதைக்கிறார்.

பாரதி எண்ணிய புது யுக்தி
      முழுவதும் கேலிச்சித்திரம் அடங்கிய இதழையும் வெளியிடும் எண்ணம் பாரதிக்க இருந்தது. இதனை 4.12.1909 இதழ் தெளிவுறுத்துகின்றது. மேலும், ‘இந்தியா’ இதழில் முதல் பக்க சித்திரம் மட்டுமல்லாது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள முக்கிய நிகழ்வுகளை விளக்கும் பொருட்டும் சித்திரம் வரைவதற்குத் தான் எண்ணியுள்ளதாகவும் பாரதி பகர்கின்றார் (13.3.1909).


      இவ்வாறு பல்வேறு யுக்திகளைத் தனது விகடசித்திரத்தில் பாரதி பதித்தான். ‘‘இந்தியா இதழின் சுவையான பகுதி படங்கள் ஆகும். அந்தச் சித்திரம் தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம் தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று’’ என்ற பாரதிதாசன் வரிகளில் இருந்து பாரதியின் சித்திரத்திற்குக் கிடைத்த வெற்றியினை நாம் ஒருவாறு அறியலாம்.


க.கந்தசாமிபாண்டியன்,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
இராசபாளையம் ராஜூக்கள் கல்லுரி,
இராசபாளையம்.

No comments:

Post a Comment