பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Saturday, February 25, 2012

தமிழர் இசைக்கருவிகள்


 தமிழர் இசைக்கருவிகள்

இசைக் கருவிகளை இரு கூறாகப் பிரிக்கலாம். பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.

ஆகுளி


இது தாளவிசைக்கருவியாகும். இது முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும் கருவியாகத் தோன்றுகின்றது.



 
 
எல்லரி


இது வலிய வாயைவுடையது. அகலமானதாக இருந்திருக்க வேண்டும் ‘‘கடிகவர் பொலிக்கும் வல்லாய் எல்லரி‘‘ (மலைபடுகடாம் 10) என்ற ஒரு இடத்தில் மட்டும் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ‘‘கடிகவர்பு ஒலிக்கும்‘‘ என்று கூறியிருப்பதனால் அதன் ஒலி மிகுதியான கவர்ச்சியுடன் எழுந்திருக்கும் எனக்கருதலாம்.




குளிர்


தட்டைகளைப் போன்று பறவைகளை ஓட்டத் தினைப்புனத்தில் பயன்பட்டதாகும். பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது.
‘‘பாடுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே‘‘
                                                - குறுந்தொகை 291 (2–3)
என்கிறது. குளிர் என்பதற்கு குடமுழவு என்று கழகத்தமிழ் அகராதி கூறுகின்றது. மண்குடங்களில் வாயில் தோலைக் கட்டி அடித்து ஒலி உண்டாக்கி விலங்குகளையும் பறவைகளையும் விரட்டியுள்ளனர்.





முழவு


இது தண்ணுமையைப் போன்ற கருவியாகக் கருதப்படுகிறது. முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும்.


முரசு


முரசு என்பது பெரிய உருவில் அமைந்த கொட்டாகும். குடைவுடைய மரத்தாலும் பரந்த கண்ணை மூடியுள்ள தோலாலும் இறுக்கிக் கட்டப்பெற்று தோல் வாராலும் துரசு செய்யப்பட்டிருக்கும். முரசு பலவகைப்படும். இதில் முக்கியமானது அரசவை முரசு ஆகும். இது பகை மன்னனின் காவல் மரத்தால் செய்திருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது. காளையின் தோலை மயிர் உரிக்காமல் இதற்குப் பயன்படுத்தியுள்ளதைப் புறநானூற்றுப் பாடல் பதிவுசெய்திருக்கின்றது.



 


பாண்டில்


பாண்டில் என்பது கஞ்சகக் கருவியாகும். தாளமிடுவதற்காகப் பயன்படுத்துவது. பாண்டில் என்பது வாத்தியத்தையும் கைத்தாளத்தையும் இசைத் தொடர்பாகக் குறிக்கும்.
 


பறை


தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்க்பட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர் கூறி சங்க இலக்கியத்தில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.




சங்கு


சங்கு ஓர் இயற்கையான இசைக்கருவி. அதனைக் கோடு, வளை என்று வேறு விதமாகவும் அழைத்துள்ளனர். சங்கி ஒலி மங்கா இசையாக சங்க காலத்தில் மதிக்கப்பட்டிருக்கின்றது. இதில் வலம்புரியானது சங்கு இனத்தில் மிகச் சிறந்தது. கிடைப்பதற்கு அரியது. இவ்விசைக் கருவி இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கோவில்களில் இறைவனை வழிபடும் போதும் இறந்தவர்களின் இறுதிச் சங்கிலும் இன்றும் இது இடம் பெறுகின்றது.



 தண்ணுமை


பண்டைத் தமிழ் நாட்டில் தண்ணுமை மிகச் சிறந்த தாளவிசைக் கருவியாக விளங்கியுள்ளது. தண்ணுமை இனிய குரலையுடையது. அமைப் போர்க்களத்தில் முழங்கியுள்ளனர். அந்த இசை முழக்கத்தைக் கேட்டுப் போர் வீரர்கள் வீறுகொண்டு வெற்றி வேட்கையுடன் போராடியுள்ளனர் சங்கப் பாடல்கள் தரும் விளக்கங்கள் தண்ணுமையிலிருந்து இன்றைய தாளவிசைக் கருவியான மிருதங்கம் சற்று சீர்திருத்திய அமைப்பில் உருவாகி இருக்க வேண்டும்.



துடி


துடி மரத்தால் செய்யப் பெற்றது என்றும் அதன் இரு கண்களும் தோலால் மூடப்பட்டுத் தோல் வாரால் இழுத்துக் கட்டப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இது உடுக்கே என்று கருப்படுகிறது. துடி அடிப்பவன் துடியன் என்று அழைக்கப்பட்டுள்ளான். துடியனட வன்மைக் குரலைக் கொண்டு துடியை வன்மைக்கருவி, இடைக்கருவி, புறமுழவு என்று தாழ்வாக இசை நூல்கள் குறிப்பிட்டுள்ளன.




 
தூம்பு


தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.
‘‘விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப
முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத
யாணர் வண்டினம் யாழிசை பிறக்க‘‘
                          - பரிபாடல் 21 (31–35)
என்று விரலால் தூம்பிலுள்ள துளைகளை மூடியும் திறந்தும் இசையெழுப்பும் முறையை விளக்கும்.




வயிர்


வயிர் என்ற துளைக்கருவி போர்க்களங்களில் பயன்படுத்தப்படடிருக்க வேண்டும். இது விலங்குகளின் கொம்பினால் செய்யப்படும். பதிற்றுப்பத்தில் ‘‘வயங்கு கதிர் வியிராமொடு வலம்புரி ஆர்ப்ப‘‘ (67) என்று கூறப்பட்டிருப்பதைக் காணின் மரங்களின் வைரப் பகுதியைத் துளைத்துச் செய்யப்பட்டிருக்குமோ என்று கருத இடமுளதுஇ அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருந்ததாகக் குறிஞ்சிப் பாட்டு குறிப்பிடுகிறது.


யாழ்
      சங்க கால உலகில் யாழுக்கு மிகச் சிறப்பான இடம் தரப்பட்டுள்ளது. நரம்புக் கருவிகளில் மிகச் சிறப்புக் கொண்டதாக யாழைக் கருதலாம். அதற்கு ஒரு நல்ல வரலாறும் உள்ளது. அழகான உருவும் இனிமையான இசையும் அதன் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணமாக அமைகின்றன. யாழைப் பற்றிய சிறப்பான செய்திகளை விபுலானந்த அடிகளின் யாழ் நூலில் காணலாம். இதன் இசை அமிழ்தம் போன்ற சுவையுடையது. மக்கள் அதன் இசை கேட்டு மயங்கினர். பாணர்கள் பேரியாழ், சீறியாழ் என்ற இருவகை யாழையும் பயன்படுத்தியுள்ளனர். நெய்தல் நில மக்களால் வில் யாழ் இசைக்கப்பட்டுள்ளது. கருங்கோட்டு யாழ், செங்கோட்டு யாழ் என்ற இருவகைகளும் யாழின் தண்டினுடைய வண்ண வேறுபாட்டால் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு யாழில் பல வகைகள் உள்ளன. பண்ணிசைக்கும் பாட்டிசைக்கும் ஏற்ற கருவியாக யாழ் சங்க காலத்தில் விளங்கியுள்ளது.

 

 

 


 

 

 

 

 

 

2 comments:

  1. நிரம்பப் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete