கண் கொடுத்த திருக்கண்ணீசுவரர்
சைவக் குரவர்கள் அறுபத்து மூவர் பாடிய பாடல்கள் பன்னிரெண்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகின்றது. இப்பன்னிரு திருமுறைகளில் முதல் பதினொரு திருமுறைகள் இறைவனை அடைவதற்கான வழிவகைகளையும் இறைப்போற்றுதல்களையும் நமக்குப் பகர்கின்றன. ஆனால், பன்னிரண்டாம் திருமுறையோ இறைவனை அடைந்தவர்களின் வாழ்வியலையும் அவர்களின் இறை அனுபவத்தையும் நமக்குத் தெற்றென விளக்குகின்றது. பதினொரு திருமுறைகளும் சம்மிதா மந்திரங்கள் பதினொன்றையூம் இப்பெரியபுராணம் சிவமூலமந்திரமாகிய பஞ்சாட்சரத்தையும் ஒத்தது. இதற்கும் மற்ற திருமுறைகளுக்கும் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு இடைவெளி இருக்கின்றது. இருப்பினும் இதுவே முதன்மையானதாகக் கொள்ளத்தக்கது. ஆனால், அதன்பின் தோன்றிய புராணங்களும் இறையனுபவத்தையும் திருவிளையாடல்களையும் நமக்குத் தெரிவுறுத்துகின்றது. இது மாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் காலத்தில் தான் (18 ஆம் நூற்றாண்டு) அதிகம் தோன்றியது. 1893 ல் சேறைச் சமஸ்தானத்தில் சமஸ்தான வித்துவான் இராமசாமிக்கவிராயர் அவர்களால் சேறைத்தலபுராணமும் வெளியிடப்பெற்றது. இதில் இறைவனே மன்னனுக்குச் சேவகம் செய்து கண்கொடுத்த வரலாறும் இடம்பெறுகின்றது.
‘‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற’’
- குறள்
என்பது வள்ளுவர் வாக்கு. மனத்துன்கண் மாசு இலன் ஆதல் அறம் ஆகும். அத்தகைய அறத்தோடு வாழ்ந்தவன் வீரபாகு என்னும் பாண்டிய வேந்தன். இவன் அந்தணனைக் கொன்றதனால் பிரம்மகத்தி பாவத்திற்கு ஆளாகின்றான். பின்பு சேறைச் சமஸ்தானத்துத் தேவதானம் பெரிய கோவிலை வழிபட்டுப் பாவம் போக்கினான். அன்றிலிருந்து சிவனேசச் செல்வனாய் வாழ்ந்தான். இவன் மீது விக்கிமசோழன் எனும் சோழ மன்னன் படைமேற்சென்றான். தோல்வியடைந்த பாண்டியன் பரமனைச் சரணடைந்தான். அப்போது இறைவனே பாண்டிய மன்னனின் படைத்தளபதியாகிச் சோழனை வெற்றி கொண்டான். இதனை,
‘‘சென்று நேரியன் சேனை புகுந்துநீ
யொன்று பூசலுடற் றுமவ் வேளையிற்
குன்று போலுங் குறட்டை யேவிநாம்
வென்று நல்குவம் வெற்றியுகை கென்றான்’’
- சேறைத்தலபுராணம்
என்று இறைவன் சேவகம் செய்த செய்தியைப் பகர்கின்றது. பாண்டியனின் பக்தித் திறத்தால் இறைவனே படை நடத்தி வெற்றி கண்டமையால் இவ்விறைவனுக்குச் ‘‘சேவகத்தேவர்’’ என்ற பெயர் உண்டாயிற்று. ஆனால், சோழ மன்னனோ கண் இழந்தான். இதனை,
‘‘விழிமறைத்தது கண்டஞ்சி வேந்தனு மீண்டபோதில்
இழிவுறச்சிவி கைதோளிலேந் துவோர்சுமை போகாமல்
வழியினிற் காறள்ளாடிமன் விழவளவன் வீழ்ந்தான்
அழிவுறச்சுமந் தான்வீழ வன்சுமைக் குடம் வீழ்ந்தென்ன’’
- சேறைத்தலபுராணம்
எனும் அடிகள் இயம்புகின்றன. சோழன் தன்கொடுஞ்செயலை எண்ணி மனம் வருந்தி இறைவனை இறைஞ்சி அன்பு செலுத்தினன். இதே போன்று தான் கண்ணப்பனாரும் அன்பு பூண்டார். அவருடைய அன்பினை என்புருகி மணிவாசகம் புகன்றவரான மாணிக்கவாசகப் பெருமானார்,
‘‘கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்ட பின்
என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
வண்ணப்ப பணித்தென்ன வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி’’
என்று தனது திருக்கோத்தும்பியில் பகன்றுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது. ‘‘அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே’’ என்ற மந்திரத்திற்கொப்ப அன்பைச் சிவமாகக் கொண்டதனால் இறைவனானவன் அன்பு வலையில் அகப்பட்டுச் சோழனுக்குக் கண் கொடுத்தார். இதனைச் சேறைத்தலபுராணம்,
‘‘நாதனருட்படி கோயினாடி முறைப்படி தேவும்
வேதவிதிப்படி யாகமேவ விருந்தின போது
பாதம் வழுத்திட வேயோர் பார்வைவரக் கனிவோரு
தீதற வூத்தர கீழ்பாற்சேர் திசையிற்றனியோகி’’
- சேறைத்தலபுராணம்
என்ற செய்யுள் வழி தெற்றென விளக்கி நிற்கின்றது. திண்ணப்பனென்பதோர் கண்ணப்பனார் இறைவனுக்குக் கண் கொடுத்தார். இதனை,
‘‘செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை யாண்ட
அங்கணர் திருக்கா ளத்தி
அற்புதர் திருக்கை அம்பால்
தங்கண்முன் இடக்கும் கையைத்
தடுக்கமுன் றடுக்கு நாக
கங்கணர் அழும வாக்குக்
கண்ணப்ப நிற்க என்ற’’
என்ற பாடல் பறைசாற்றி நிற்கின்றது. அதுபோலவ, திருமால் திருவீழிமிழலையில் ஆயிரம் தாமரை மலர்களால் நாள்தோறும் சிவநாமம் கூறிப் பெருமானைப் பூசித்தார். ஒருநாள் இறைவன் விளையாட்டால் ஒருமலர் குறைய திருமாலோ தனது கண்மலரைக் கொடுத்தார். அவருடைய அன்பிற்கு மகிழ்ந்து திருமாலுக்குக் கண் கொடுத்து ‘கண்ணன்’ எனும் திருநாமம் சூட்டிச் சக்கரத்தையும் கொடுத்தார். இத்திருவிளையாடலை,
‘‘நக்குலா மலர்பன் னூறு
கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபு சனைகள் செய்வான்
மென்மலர் ஒன்று காணா
தொக்குமென் மலர்க்கண் என்றால்
கொருகணை யிடந்தும் அப்பச்
சங்கரங் கொடுப்பார் போலுஞ்
சாய்க்காடு மேவி னாரே’’
என்று அப்பரின் அடிகளால் அறிமுடிகின்றது. இவற்றையெல்லாம் ஒருங்கே நோக்குங்கால் இறைவனுக்குக் கண் கொடுத்தோர் இருவர். ஆனால், இறைவனே தன் பக்தனுக்குக் கண்கொடுத்த நற்பேறு பெற்றவன் விக்கிரமச் சோழன். இவன் அன்பால் தான் இவன் இறைவனுக்கு இல் கட்டி வழிபட்டான். அந்த இல்லின் தலைவனுக்குத் ‘‘திருக்கண்ணீசுவரர்’’ என்னும் திருப்பெயர் பொறித்தான். இதனைச் சேறைத்தலபுராணம்,
‘‘ஆலயமொன்று புதுக்கியாள் சிவலிங்க நிறுத்தி
யேல்வழியொன்று பெறக்கண் ணீசரெனும் பெயரிட்டு
ஞாலம் விரும்பழகுக்கு நாயகியும் புவை வைத்துச்
சோலை வளந்தனை யுற்றுஞ் சோழனிந்தன் னிப்பால்’’
- சேறைத்தலபுராணம்
எனும் பாடல் செப்பி நிற்கின்றது. இறைவனுக்குக் கண்கொடுத்துத் திண்ணன் கண்ணப்பனானர். திருமால் கண்ணனானார். ஆனால், இறைவன் விழி கொடுத்துத் திருக்கண்ணீசர் ஆனார். சோழ பாண்டிய மன்னர்களின் இறை பக்திக்காகவே சோழபுரத்தில் ‘‘விக்கிரம பாண்டீஸ்வரர்’’ ஆலயம் அமைந்துள்ளமையை ஈண்டு அறியக் கிடைக்கின்றது. இவ்வாறு அன்பால் விழி கொடுத்தால் நாமும் இறைவன் ஆகலாம்.
No comments:
Post a Comment