பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Saturday, June 2, 2012

அகநானூற்றில் நீர்த் தேவைகளும் தீர்வுகளும்

அகநானூற்றில் நீர்த் தேவைகளும் தீர்வுகளும்

முன்னுரை

          அகநானூறு தமிழர் தம் வாழ்வியல் கருவூலம் ஆகும். பல்வேறு விதமான குறுநில மன்னார் வரலாறும் ஊர்ப் பெயர்களும் மானிட இயங்கியலும் அகநானூற்றினைச் செறிவுபடுத்தியுள்ளன. சங்க கால மனிதர்களில் பிற்காலத்தோரின் வாழ்வியல் குறித்த பல்வேறு செய்திகள் அகநானூற்றில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர்த் தேவையில் ஏற்பட்ட சிக்கல்களையூம் பழந்தமிழர் அதனைத் தீர்த்தமாற்றையும் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.
நீரும் மனிதனும்

          பஞ்ச பூதங்களுள் நீரும் காற்றும் மனிதனுள் நேரடியாக அடங்கியுள்ளன. காற்றும் நீரும் உட்கொள்ளப்படுவதால் மனிதனின் உயிர்ப்புக் காக்கப்படுகின்றது. இவை இரண்டில் காற்றினை நாம் தனியே சிரத்தையுடன் எடுக்கத் தேவையில்லை. அனிச்சையாகக் காற்று நம்முள் வருவதும் போவதுமாய் உள்ளது. நீர் அவ்வகைப்பட்டதன்று உணவுப் பொருட்களுடனும் தனியாகவும் நாமே அதனை உடலுள் சேர்த்துக் கொள்கின்றோம். மனித உடலில் ஏறத்தாழ அறுபது சதவீதம் நீருள்ளதாக அறிவியலார் கூறுகின்றனர்.

சங்க காலத்தில் நீர்

          சங்க காலச் சமுதாயம் நீர்நிலைகள் மிகுந்து செழிப்புடன் காணப்பட்ட சமுதாயம் ஆகும். பல இடங்களில் தலைவனை, ‘தண்துறை ஊரன்’, ‘துறைகேழ் ஊரன்’ என்னும் பெயரால் அடையாளப்படுத்தும் அளவிற்கு நீர் நிலைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. எனினும் வறண்ட நிலமான பாலை நிலத்தில் பண்டைக் காலத்திலே நீர்ப் பற்றாக்குறை நிலவியுள்ளது. இது உயிர்களுக்கான வாழ்வியல் சிக்கலாகும். அச்சிக்கலை மனிதன் அறிவால் எதிர்கொண்டு வென்றிருக்கின்றான் பல்லுயிர்ச் சமுதாயத்திற்கும் அது பயன்படுமாறு செய்துள்ளான்.

அகநானூற்றில் நீர்ப் பற்றாக்குறைச் சிக்கல்கள்

          பாலை நில வருணனையில் பெரும்பாலும் இடம்பெறுவது நீர்ல்லாச் சூழலும் மிகுவெப்பநிலையும் அறவுணர்வற்ற மாந்தர் செயல்களுமே ஆகும். சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியம் அன்று. அவற்றுள்ளே சிக்கல்களுக்கான தீர்வுகளையும் விதைத்திருப்பதே இலக்கியம் ஆகும். அவ்வழியே அகநானூறும் குடிநீர்த் தேவைகளைக் கூறுவதோடு அத்தேவைகளை மனிதன் எவ்வாறு போக்கினான் என்று பாடலடிகளால் தெளிவுறப் பதிவு செய்துள்ளது.

நீராதார நிலைப்பாடுகள்

          உலகத் தண்ணீர்ப் பேரவை, 1997 ஆம் ஆண்டில் இருந்தே மூன்றாண்டுகட்கு ஒருமுறை தண்ணீர்ப் பிரச்சனைகள் குறித்துக் கலந்தாய்கின்றது. ஆறாவது முறையாக அவ்வமைப்பானது கூடி நீர்வளத்தின் நிலைப்பாடு, உலக சமுதாய நுகர்வுப்போக்குகள், வளப்படுத்துவதற்கான செயலாக்கம் குறித்து விவாதிக்கின்றது. இப்பற்றாக்குறை சங்ககாலத்தில் இருந்தே இருந்துவருகின்றது. எனினும் சிறிய அளவில் நிலவியதாகப் பாலைநிலப் பாடல்கள் வழியே அறியமுடிகின்றது. அதற்கான மீட்பு நடவடிக்கைகள் அக்காலத்தில் செயற்கை நீர்நிலை ஆக்கங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ‘‘Necessity is the mother of invention’’ என்பார். நீர்த்தேவைகளே அக்காலத்தில் கூவல், படு என்னுமாறு செயற்கை நீர்நிலைகள் பிறக்கவும் அடிப்படையாய் அமைந்துள்ளது.

பாலை நிலச் சிக்கல்களும் தீர்வுகளும்

          பாலை என்பது தனி நிலமா? அல்லது கோடை காலக் குறிஞ்சி, முல்லை நிலங்களின் மாற்றமா? என்பது பெரும் ஆய்வூக்குரிய ஒன்றாகும். ஆனால், சராசரியாக வரக்கூடிய மூன்று மாத காலக் கோடையில் நிலவளம் அவ்வளவு கெட்டுவிடுமா என்பது கேள்வியாகும். பாலை நிலைத்தை, வளம் ஒரு காலத்தில் இருந்து பின்னர் குன்றிய பகுதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அன்றி இயல்பிலே வளங்குன்றிய பகுதியாகவும் கொள்ளலாம். கருப்பொருள் கூற்றில் கூறப்படும் பாலை நிலத்திற்கான நீர்நிலையில் வறண்ட சுனை இடம்பெறுகின்றது. இதனைக் கருத்தில் கொள்ளும் போது மேற்கூறியவற்றுள் முதலாம் வகையானது பொருந்தும். இத்தகு பாலை நிலம் மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது. ஆநிரைகள் உணவெடுத்ததும் அவற்றிற்கான குடிநீர்த் தேவைகளுக்குப் பெரும் சிக்கல் நிகழ்ந்துள்ளது. ஆநிரைகளை அப்பகுதிகளுக்குக் கொண்டு செல்லாமல் இருத்தல் சரியான தீர்வாகாது. பழந்தமிழர் அவ்வாறு செய்யவும் இல்லை. புதிதாக நீர்நிலைகளைத் தம் உடல் முயற்சியால் ஏற்படுத்தியுள்ளனர். அவை, படு, கூவல் என்னுமாறு பெயர்பெற்றுள்ளன. அவை குறித்த செய்திகள் (பாடல் 21, 79, 155, 207) ஆகியவற்றுள் பாலைத்திணையில் பதிவுபெற்றுள்ளன. இவை, மனிதனின் அறிவியல் திறத்தினையும் பல்லுயிர் ஓம்பும் பாங்கினையும் உணர்த்துகின்றன.

             கூவல் என்னும் சொல்லிற்கு, ‘‘கிணறு’’ ‘‘பள்ளம்’’ என்னுமாறு நீர்நிலை சார்ந்த பெயர்களைத் தமிழ்மொழி அகராதி கூறுகின்றது.

          ‘படு’ என்னும் சொல்லிற்கு ‘நீர்நிலை’ எனப் பொதுவான பெயரினையும் தமிழ்மொழி அகராதி தருகின்றது.

தீர்வுகள்

படு சமைத்தல்

          மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற ஆநிரைகட்குக் குடிநீர்த் தேவை ஏற்பட்ட போது கொங்கு நிலத்தார் தீப்பொறி பறக்க, பாறைகளைத் தகர்த்து மிக்க உவர்த்தன்மை உடையதாயினும் ஆநிரைகட்கு பயன்படுமாற்றை ‘படு’ எனும் பெயரில் செயற்கை நீர்நிலையான கிணற்றினை ஏற்படுத்தியுள்ளனர். இதனை மேற்கூறியவாறு தமிழரின் அறிவியல் அறிவையும் பல்லுயிர் ஓம்பும் பாங்கையும் உணர்த்தும் வகைத்தாகும்.  இதனை,
            ‘‘தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
             கனைபொறி பிறப்ப நூறிஇ வினைப்படர்ந்து
            கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்
              பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
              வன்புலம் துமியப் போகிக் கொங்கர்’’
                                                                    -        அகம், 79: (1 – 5)
என்னும் வரிகளால் அறியலாம்.

கூவல் படைத்தல்

          பாலை நிலத்தில், கோவலர் தம் ஆநிரைகளில் குடிநீர்த் தேவைக்காகக் கூவல் படைத்துள்ளனர். ‘கணிச்சி’ என்னும் கருவி கொண்டு அதனை ஆக்கியுள்ளனர். இக்கருத்தினை,

            ‘‘பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
             வல்வாய்க் கணிச்சிஇ கூழார் கோவலர்
             ஊறாது இட்ட உவலைக் கூவல்’’
                                                   -        அகம், 21: (21 – 23)

என்னும் அடிகள் பதிவு செய்கின்றன. கோவலர் செய்த கூவலிலிருந்து யானை மற்றும் புலிகட்கும் நீர் கிடைத்தமையை,

             ‘‘………………… கோவலர் கூவல் தோண்டிய
             கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி
              நீர்காய் வருத்தமொடு சோர்விடம் பெறாது
              பெருங்களிறு மிதித்த அடியகத்து இரும்புலி’’
                                                              -        அகம், 155: (8 – 11)

எனும் அடிகளால் அறியலாம். மேலும்,

                  ‘‘…………….. நீடு மருப்பு ஒருத்தல்
                  பிணரழி பெருங்கை புரண்ட கூவல்
                    தெண்கண் உவர்க் குறைக்குட முகவை’’
                                                                  -        அகம், 207: (9 – 11)

எனும் அடிகள் கூவலானது விலங்குகட்கு மட்டுமன்றிப் பாலை நில மாந்தர்களுக்கான நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இருந்த மாற்றைப் பதிவு செய்கின்றது.

நிறைவுரை

          பழந்தமிழர் தம் வாழ்வியலில் எதிர்கொண்ட குடிநீர்த் தேவைகளுக்கான சிக்கல், அதனை எதிர் கொண்டு புதிய நீர்நிலைகள் அமைத்த விதம், பண்டைத் தமிழர்தம் பல்லுயிர் ஓம்பல் திறம் குறித்து அகநானூறு இயம்பிய செய்திகளை இக்கட்டுரையானது பதிவு செய்துள்ளது.

நன்றி.

ம.பிரசன்னா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.

No comments:

Post a Comment